இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்.
பலர் நினைத்திருப்பது போன்று இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமன்று. ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறைவன் மனதர்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பிய நோவா எனப்படும் நூஹ் (அலை), ஆப்ரஹாம் எனப்படும் இப்ராஹீம் (அலை), மோஸஸ் எனப்படும் மூஸா (அலை), இயேசு எனப்படும் ஈஸா (அலை) போன்ற அனைத்து தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் தான் இஸ்லாம். இந்த இறைத் தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.
முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?
அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து பரிபாலித்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ் என்றும் அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான வேறு இறைவன் யாரும் இல்லை என்றும் அவனுடைய படைப்பினங்களான மனிதர்களுக்கு சத்திய நேர்வழி காட்டிட அவன் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதல் தொடராக இறைவன் அனுப்பிய தூதர்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்றும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.
ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறைவன் சூட்டிய பெயர் முஸ்லிம்கள் என்பதாகும். மாற்று மதத்தவர்கள் அழைப்பது போல முஹம்மதியர்கள் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் இம்மார்க்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புதிதாக உருவாக்கவில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குவது போன்று முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவது இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரின் வரிசையில் வந்த இறுதி தூதரே அன்றி வேறில்லை என முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் நம்பிக்கைகள் யாவை?
முஸ்லிம்கள்,
1. எவ்வித ஒப்புவமையற்ற ஒரே இறைவன் அல்லாஹ் மீதும்,
2. அவனுடைய படைப்பினமான மலக்குகள் (வானவர்கள்) மீதும்,
3. அவனுடைய தூதர்கள் மீதும்,
4. அவன் அந்த தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட
இறக்கியருளிய வேதங்கள் மீதும்,
5. நியாயத் தீர்ப்பு நாள் மீதும், அந்நாளில் மனிதர்கள் இவ்வுலகில் தாங்கள்
செய்த வினைகளுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவார்கள்
என்றும்,
6. நன்மை தீமையாவும் இறைவன் விதித்த விதியின்படியே நடைபெறுகின்றன
என்பதன் மீதும், நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இறைவனின் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாக்கோபு, மோஸஸ், ஆருன், டேவிட், சாலமன், ஜோனாஹ் மற்றும் ஜீஸஸ் (அலை) ஆகியோர் மீதும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இந்த தூதர்களின் தொடரில் இறைவனால் அனுப்பபட்ட இறுதி தூதராக முஹம்மது நபி (ஸல்)அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் கடவுள் கொள்கை: -
Ø அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வருபவன்
ஒரே இறைவன் - அவன் தான் அல்லாஹ்.
Ø அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.
Ø அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்பதாகும்.
இந்த ஏக இறைவனையே ஆதி மனிதர் ஆதாம் முதற்கொண்டு, நோவா, ஆபிரஹாம், மோஸஸ், இயேசு போன்ற இறைத்தூததர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் வணங்கினர்.
அல்லாஹ் என்ற அரபி சொல்லிற்கு இறைவன் என்பது பொருள். அரபி மொழியைத் தாய் மொழியாக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.
இறைவன் தன்னுடைய இலக்கணங்களாக அவன் இறுதியாக அருளிய வேதம் அல் குர்ஆன் அத்தியாயம் 112 ல் கூறுகிறான்: -
(நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை".
இந்த நான்கு வரிகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கையாகும்.
இயேசு நாதர் பற்றி முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஆதி மனிதர் ஆதாம் அவர்களின் காலத்திற்கு பின்னர் வந்த மக்கள் நாளடைவில் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளில் சிக்கி அவர்களைப் படைத்த ஒரே இறைவனை வணங்குவதற்குப் பதிலாக சிலைகளையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மரணித்த நல்லவர்களையும் வணங்கலாயினர். அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவ்வப்போது இறைவன் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான்.
இவ்வாறு இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளில் நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் போன்றவர்களின் வரிசையில் வந்தவர் தான் இயேசு நாதர் ஆவார். அரபியில் ஈஸா (அலை) என்றைக்கப்படும் இயேசு நாதர் மீது முஸ்லிம்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். ஏனென்றால் கர்த்தராகிய இறைவன் இயேசு நாதர் குறித்து அவர் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர் என கூறுகிறான்.
இறைவன் அருளிய இறுதி வேதத்தில்: -
"இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே". (இறுதி வேதம் அல்-குர்ஆன் 6:85)
"இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப் படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது". (இறுதி வேதம் அல்-குர்ஆன் 5:46)
மேலும் இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் கூட நம்பிக்கைக் கொள்ளாதவற்றை இறைவனின் உதவியோடு இயேசு நாதர் பின் வரும் அற்புதங்களை செய்ததாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
- குழந்தையாக இருந்தபோதே பேசினார்.
- களிமண்ணினால் பறவை செய்து அதை பறக்க விட்டார்.
- பிறவிக் குருடரை சுகப்படுத்தினார்.
- வெண்குஷ்டக் காரரை சுகப்படுத்தினார்.
- இறந்தவரை இறைவனின் உத்தரவினால் உயிர்பித்தார்.
முஹம்மது நபி (ஸல்) போதித்தது என்ன?
இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிய அனுப்பி வைத்த தீர்க்க தரிசிகளில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவார்கள். நோவா, ஆப்ரஹாம், தாவீது, இயேசு போன்ற தீர்க்க தரிசிகளுக்கு இறைவன் எந்த மார்க்கத்தை போதிப்பதற்காக அருளினானோ அதே மார்க்கத்தையே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளினான். பலர் தவறாக எண்ணியிருப்பது போல முஹம்மது நபி அவர்கள் எந்த ஒரு புதிய கொள்கையையோ அல்லது மதத்தையோ தோற்றுவிக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட இறுதிவேதமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டி முஸ்லிம்கள் அனைவரும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.
எனவே ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின் படியும், அந்த இறுதி தூதருக்கு அவன் அருளிய இறுதி வேதத்தின் வழிகாட்டுதல்களின் படியும் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
முஹம்மது (ஸல்) எவ்வாறு இறைத்தூதரானர்?
முஹம்மது நபியவர்கள் (ஸல்) ஹிரா குகையில் தனிமையில் தங்கி தியானித்துக் கொண்டிருக்கும் போது கேப்ரியேல் எனும் ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் அவர் முன்னிலையில் தோன்றி இறைவனிடமிருந்து வந்த தூதுச் செய்தியை படித்துக்காட்டி நபியவர்களையும் படிக்குமாறு கூறினார். அது முதல் தொடர்ந்தார்போல் 23 ஆண்டுகள் சிறுக சிறுக அல்குர்ஆனின் வசனங்கள் வானவர் கேப்ரியேல் (அலை) அவர்கள் மூலமாக இறைவன் நபியவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தான்.
இறைவனின் வசனங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவுடன் நபியவர்களின் தோழர்கள் மூலமாக எழுத்து வடிவில் எழுதி பாதுகாக்கப்பட்டது.
குர்ஆன் எதை போதிக்கிறது?
தாவீது, மோஸஸ், இயேசு போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் வேதங்களை அருளியது போன்றே அவனுடைய இறுதி தூதரானமுஹம்மது நபிக்கும் தன்னுடைய இறுதி வேதமான அல்குர்ஆனை இறக்கி வைத்தான்.
மேலும் இறுதிவேதமாகிய அல்குர்ஆன் இதற்கு முன்னாள் வந்த தீர்க்க தரிசிகளுக்கும் வேதங்கள் அருளப்பட்டது என்று நம்பிக்கைக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.
இறைவன் அல்குர்ஆன் அத்தியாயம் 2, வசனம் 136 ல் கூறுகிறான்: -
"(முஃமின்களே!) நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.
ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்ட பின்னரும் அந்தந்த தூதர்களுக்குப் பிறகு வந்த சமூகத்தினர் அந்த வேதங்களில் தமது சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் சேர்த்து அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்தி விட்டனர். இதை இறைவன் அருளிய இறுதிவேதம் உறுதிபடுத்துகிறது: -
"அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!"
ஆனால் திருக்குர்ஆன் அது அருளப்பட்டு 1425 ஆண்டுகளுக்கும் மேலாகியும் எவ்வித மாற்றத்திற்குள்ளும் உட்படாமல் அது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவாறே இன்றும் இருக்கிறது. இறைவன் தான் அருளிய வேதத்தை தாமே பாதுகாப்பதாக கூறியுள்ளான்.
ஹதீஸ் என்றால் என்ன?
இறைவனின் கட்டளையான ‘அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரியிருக்கிறது’ என்ற கட்டளைக்கிணங்க முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழக்கையின் ஒவ்வொரு கூற்றுக்களையும், அசைவுகளையும் அவர்களுடைய தோழர்கள் மற்றும் குடும்பத்தார்கள் உண்ணிப்பாக கவனித்து முஹம்மது நபியவர்களை (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தனர். நபியவர்களின் (ஸல்) மறைவழற்குப் பின்னர் அவர்களுடைய சொல், செயல் அங்கீகாரம் ஆகியவை தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதையே ஹதீஸ் என்பர்.
முஸ்லிம்கள் நபியவர்களின் சொல், செயல் மற்றும் அஹ்கீகாரமான ஹதீஸ்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் யாவை?
இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து. அவைகளாவன:
ஏகத்துவ நம்பிக்கை கொண்டு அதற்கு சான்று பகர்தல்.
தொழுகையை நிலை நாட்டுதல்.
ஸகாத் வழங்குதல்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றல்.
வசதி பெற்றிருப்பின் ஆயுளில் ஒருமுறையேனும் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்தல்.
கஃபா என்றால் என்ன?
ஒரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறை ஆலயம் கஃபா ஆகும். இறைவனின் கட்டளைக்கிணங்க இறைத்தூதர் ஆபிரஹாம் அவர்களால் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் மக்கா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு வசதியிருப்பின அவ்வாலயத்தை தரிசித்து ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும்.
மனிதனின் மரணம் மற்றும் மறுமை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?
இவ்வுலகில் பிறந்த அனைவரும் மரணிக்கக் கூடியவர்களே என்றும், இந்த வாழ்க்கை ஒரு முறை மடடுமே என்றும் மரணத்திற்குப் பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அனைவரையும் உயிர்பித்து எழச்செய்வான், பின்னர் விசாரணை நடத்தி அவரவர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப தண்டனை அல்லது நற்கூலி வழங்குவான்.
இது தான் மரணம் குறித்து இஸ்லாம் கூறும் கருத்தாகும்.
- நன்றி: சுவனத் தென்றல்.காம்