கடந்த
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள், ஆகஸ்ட்
6 ஆம் தேதியன்று ஹிரோஷிமா நகரில் அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த ஒரே குண்டு வீச்சு தாக்குதலில் மட்டும்
1,40,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த மூன்று தினங்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி நகரில் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. இதில் சுமார்
70,000 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஹிரோஷிமா நகரில் அணு குண்டு வீசப்பட்டதன்
64 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று
06-08-2009 கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்று ஹிரோஷிமா நகரில் உள்ள நினைவிடத்தில், குண்டுவீசப்பட்ட நேரமான காலை 8.15 மணியளவில் அமைதி பிரார்த்தனை நடைபெற்றது.
குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டாரா அஸோ மற்றும்
50 க்கும் அதிமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட
50,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர் டாட்டோஷி அகிபா, எதிர்காலத்தில் உலகில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, அணு ஆயுதங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுள்ள கருத்துக்களை புகழ்ந்தார்.
அணுகுண்டுத் தாக்குதலின் நினைவு தினமான இன்றுகாலவாரியாகப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்!
அமெரிக்காவால் ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டு போடப்பட்டது ஏதோ ஓரிரு நாட்களில் எடுக்கப்பட்ட முடிவோ, தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ நிகழ்ந்தது அல்ல. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலப் பின்னணி இருக்கிறது. ஹிரோஷிமாவின் மீதான அணுகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை மட்டும் அதன் நினைவு தினமான இன்று காலவாரியாகப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்!
கி.பி
1853 20 ஆம் நூற்றாண்டின் நடுவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்தாலும், அதற்கான விதை விதைக்கப்பட்ட ஆண்டு
1853. இந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம்தான் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்பங்களில் அதிவேகமாக வளர்ச்சி அடையவும், ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் வழி செய்தது. அதுவரை, மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தக உறவுகளுக்குத் தடைவிதித்துத் தனக்குத்தானே விலங்குகளை மாட்டிக்கொண்டிருந்த ஜப்பான், தனது பலவீனங்களை உணர்ந்து, மற்ற நாடுகளுடன் இணைந்து செல்ல முடிவெடுத்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம்தான் மாத்தேயு சி.பெர்ரி (Matthew C.Perry) என்ற மாலுமி, டோக்கியோவிலுள்ள எடோ துறைமுகத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதியாக வந்து இறங்கினார். கனகவா ஒப்பந்தம் (Treaty of Kanagawa) நிறைவேற்றப்பட்டு, மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவு மலர்ந்தது.
கி.பி
1895சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தனது கலாச்சாரத்தின்மீது மிகவும் பற்று கொண்டிருந்த ஜப்பான், உலகிலேயே தலைசிறந்த கலாச்சாரம் தங்களுடையதுதான் என்ற மிதப்பில் இருந்து வந்தது. ஆனால், பொருளாதாரத்திலும் படைபலத்திலும் பின்தங்கி இருப்பதையும் உணர்ந்து இருந்தது. இவைதான் அதன் பலவீனமும் பலமும். உலக நாடுகளுடன் தொடர்பு ஏற்பட்ட
40 வருடங்களிலேயே, வியத்தகு மாற்றங்கள் காணப்பட்டன. தலைவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களும், இங்கிலாந்தின் கடற்படைப் பயிற்சியும், ஜெர்மனியின் தரைப்படைப் பயிற்சியும், தேசவெறியைத் தூண்டி இளைஞர்களைப் படையில் சேரவைக்கும் தலைவர்களின் பேச்சாற்றலும், வல்லரசு நாடாக உருவெடுக்கப் பெரிதும் காரணமாக இருந்தன. தன்னுடைய படைவலிமையைப் பரிசோதித்துப் பார்க்க எண்ணி, இந்த ஆண்டு தகுந்த காரணமே இல்லாமல் தன் அண்டைநாடான கொரியாவின் மீது படையெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றிக் கொண்டது.
கி.பி
1904 கொரியாவின் மீதான இத்தாக்குதல் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளித்தாலும்,
1904ல் இன்னொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. இன்னொரு அண்டைநாடான ரஷ்யாவின் மீது போர் தொடுத்தது. படைவலிமையில் ஜப்பானைவிட ரஷ்யா பலமடங்கு பலம் பெற்றிருந்த போதிலும், ஜப்பானியர்கள் கைக்கொண்ட கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது. யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சுமார் இரண்டு ஆண்டுகள் இழுத்துக் கொண்டே இருந்தது. பின்னர் 1906ல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் தலையிட்டு இரு தரப்புகளுக்கும் சாதகமான முறையில், ரஷ்யாவின் பகுதிகள் எதுவும் கைப்பற்றப்படாமலும், வல்லரசு அந்தஸ்தை ஜப்பானுக்கு வழங்கியும் போரை முடித்து வைத்தார்.
முதல் உலகப்போர்அதன்பின் சிலகாலம் போர் விவகாரங்களில் அடக்கி வாசித்துக்கொண்டு, உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த ஜப்பான், 1914ல் முதல் உலகப்போர் ஆரம்பித்த பின்னும் போரில் குதிக்கவில்லை. பின்னர் 1917ல் ஜெர்மனியின் தோல்வி தவிர்க்க முடியாதது என்ற நிலைமை ஏற்பட்ட பின்னர்தான் சில பல லாப நட்டங்களைக் கணக்கிட்டு, நேசநாடுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியது. பசிபிக் பகுதியில் ஜெர்மனி கைப்பற்றியிருந்த தீவுகளையும் துறைமுகங்களையும் கைப்பற்றி வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த ஜப்பானின் கணக்கு வேறுவிதமாக முடிந்தது. போரின் முடிவில், ஒரு சில தென்பசிபிக் தீவுகளை மட்டுமே தன்னுடன் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்ற தீவுகளும் துறைமுகங்களும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பித் தரப்பட்டன.
முதல் உலகப்போருக்குப்பின்போர் முடிந்த சில வருடங்களிலேயே, மற்ற உலக நாடுகள் தங்களுக்குள் அளித்துக்கொண்ட அளவு ஆதரவை ஜப்பானுக்கு அளிக்காததைத் தலைவர்கள் உணரத்தொடங்கினர். மீன்வளம் மட்டுமே உடைய இவர்களுக்கு மற்ற எல்லா வளங்களையும் வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டியிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வர்த்தகத் தடைகளின்போது பட்ட சிரமங்கள் மற்ற நாடுகளுடனான சுமுகமான உறவின் அவசியத்தை உணரவைத்தது. ஆனால் அதேசமயம், பெருகிவரும் மக்கள்தொகையைக் குட்டித்தீவு தாங்கமுடியாமல், பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கும் இயந்திரங்களுக்கும் வெளிநாடுகளை நம்பி இருந்ததால், தொழில்கள் நசியத் தொடங்கின. ஆகவே, சீனா, சிங்கப்பூர் முதலான மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, அங்கிருந்து செல்வங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் கி.பி
1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டது.
கி.பி
1939 இங்கிலாந்தும் பிரான்சும் போர் அறிவிப்பை வெளியிட்ட இந்த ஆண்டுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அதிபயங்கர விளைவுகளை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்தது.
1938ல் ஜெர்மனி அணுவைப் பிளக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. ஜெர்மனியின் நாஜிப் படையினரால் துரத்தப்பட்டு, அமெரிக்காவிடம் தஞ்சம் புகுந்த யூத விஞ்ஞானிகளுடன் லியோ ஸிலார்டு (Leo Szilard) என்பவரும் சேர்ந்து, ஐன்ஸ்டீனைச் சமாதானப்படுத்தி, அதிபர் ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுத வைத்தனர். உடனடியாக ஒப்புதலும் அளிக்கப்பட்டு, அணு ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்ற ஆய்வு தொடங்கப்பட்டது.
கி.பி
1941 போர் தீவிரமடைந்து விட்ட நிலையில், தாக்குதல்களும் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் மாறி மாறி நடைபெற்றன. ஜப்பான் பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்கு உதவுவதாகக் கூறியிருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜப்பானும் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தன. இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் ஹிரோஷிமா கடற்படை மையத்திலிருந்து சரமாரியாகப் போர் விமானங்கள் ஹவாய் தீவை நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. சங்கேத வார்த்தையான 'East Wind, Rain' (மேற்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என்று பொருள்) என்ற செய்தி கிடைத்ததும்,
359 விமானங்கள் பேர்ல் ஹார்பர் (Pearl Harbour) துறைமுகத்தின்மீது குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸைக் காப்பதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த கடற்படை சின்னாபின்னமாகியது. இதைச் சற்றும் எதிர்பாராத அமெரிக்கா ஒரு கணம் தடுமாறி, பின் சுதாரித்துக் கொண்டது.
ஹவாய் துறைமுகத் தாக்குதல்
கி.பி
1942 முதல் கட்ட ஆய்வு முடிவடைந்ததும், ஆயுதம் தயாரிக்கும் பணி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. நியூயார்க் நகரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதால், மான்ஹாட்டன் திட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்ட இப்பணிக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 200 மில்லியன் டாலர்கள். இவ்வணு ஆயுதங்களின் மூலம் போர் முடிவுக்கு வருமானால், ரஷ்யாவும் ஜப்பானும் இணைவதும், ரஷ்யாவின் அதிகாரப் பரவலும் தடுக்கப்படும். அது அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்ற காரணத்தை எடுத்துச்சொல்லி, அமெரிக்க மக்கள் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் இவ்வளவு பெரிய தொகைக்கு ரூஸ்வெல்ட் அனுமதி பெற்றார்.
கி.பி
1943 அணுகுண்டைத் தயாரித்தபின் அதை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆலோசனை நடத்தினர்.
ஜெர்மனியும் ஜப்பானும் பட்டியலின் முதலிடத்தில் இருந்தன. போரை நிறுத்த வேண்டுமானால், பின்வரும் மூன்று நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த வேண்டும்.
1. ஜப்பானைக் கைப்பற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது.
2. மன்னராட்சி முறையைத் தொடர அனுமதியளித்து, ரஷ்யாவை ஜப்பானுக்கு எதிராகப் போரில் ஈடுபடச் செய்வது.
3. அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது.
இதில், ஜப்பான் இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், முதலாவது நிறைவேறுவது மிகவும் சிரமம். வலுவான ஜப்பானிய விமானப்படையுடன் வான் வழியாகவோ, சீற்றங்கள் நிறைந்த ஜப்பான் கடல் வழியாகவோ போரிட்டு ஜப்பானை வெற்றி கொள்வதென்பது முடியாத காரியம். இரண்டாவது நடவடிக்கையைக் கைக்கொள்வதால் ரஷ்யாவின் அதிகாரப் பரவலை ஏற்றுக்கொண்டு பணிந்து போவதைப் போல் ஆகிவிடும். ஆகவே, முதல் மற்றும் மூன்றாவது நடவடிக்கைகளை ஒன்றிணைத்து, ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
கி.பி
1944 இந்தத் தாக்குதலுக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா ஜப்பானிய நகரங்களின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. டோக்கியோ நகரத்தில் மட்டும் ஒவ்வொரு 2 மீட்டருக்கும் ஒரு குண்டு வீதம் போடப்பட்டு, மொத்த நகரமும் தரைமட்டமாக்கப்பட்டது. இப்போதிருக்கும் டோக்கியோவின் அதீத வளர்ச்சி, கடந்த
60 ஆண்டுகளில் நன்கு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல,
60 ஆண்டுகளில் உலகின் முன்னணி நகரமாக, டோக்கியோ டவர் (பாரீசில் இருக்கும் ஈஃபில் டவரைப் போலவே, ஆனால் அதைவிடப் பதிமூன்று மீட்டர்கள் அதிக உயரத்துடன்) என்ற பிரம்மாண்ட நினைவுச்சின்னத்துடன் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது.
டோக்கியோ டவர் - உயரம்
333 மீட்டர்கள். ஈஃபில் டவரின் உயரம்
320 மீட்டர்கள்.
கி.பி
1945 ஏப்ரல்
12ம் தேதி ஜனாதிபதி ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றார். மான்ஹாட்டன் திட்டம் மிக ரகசியமாக நடந்து வந்ததால், இதற்கு முன் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ட்ரூமனுக்கு இதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்தார். போர் பற்றிய அமெரிக்க மக்களின் கவலை இந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எதிரொலித்தது. எப்படியாவது போரை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவுக்குப் புதிதாகப் பொறுப்பேற்கும் அதிபர் தள்ளப்பட்டார். எனவே, அணு ஆயுதத் தயாரிப்பு தொடர முடிவு செய்யப்பட்டது.
ஏராளமான பொருட்செலவுடன் மூன்றாண்டுகளில் தயாரான அணுகுண்டை இந்த ஆண்டு ஜூலை
16ம் தேதி அமெரிக்கா சோதனை செய்தது. Trinity என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, நியூ மெக்ஸிகோ மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனத்தின் மத்தியில் நடத்தப்பட்டது. அணுகுண்டின் வெடிதிறன் எவ்வளவு இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வெறும் ஊகங்கள்தான் உலவிக்கொண்டிருந்தன. அணுவிஞ்ஞானி எட்வர்ட் டெல்லர் அதிகபட்சமாக சுமார்
1,000,000 டன் டி.என்.டி அளவுக்கு இருக்கும் என ஊகித்திருந்தார். சோதனைக்குப்பின், ஒரு அணுகுண்டினால் சுமார்
20,000 டன் டி.என்.டி அளவுக்குச் சேதம் விளைவிக்க முடியும் எனக் கண்டறிந்தனர்.
ஏன் ஹிரோஷிமா மீது?
ஜூலை மாதம் சோதனை நடத்துவதற்கு முன்பே அமெரிக்கா குண்டு போடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தது. இதற்காக, ஓஸகா, கியோத்தோ மற்றும் டோக்கியோ உட்பட,
17 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நகரத்தின் மக்கள்தொகை மற்றும் ஏற்படப்போகும் பாதிப்புகளின் அடிப்படையில், மே 11ம் தேதி, அதிலிருந்து நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹிரோஷிமா, கொக்கூரா, நீகத்தா மற்றும் நாகசாகி.
1944 முதல் ஜப்பானின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வந்த அமெரிக்கா, அணுகுண்டின் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட, இந்த நான்கு இடங்களின் மீது மட்டும் குண்டு வீச்சை நிறுத்தி வைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த போர்முனையாக இருக்க வேண்டும் என்பதால், முதல் இலக்காக ஹிரோஷிமா தேர்வானது. அங்கு பிறநாட்டுப் போர்க்கைதிகள் சிறை வைக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
மற்ற குண்டுகளைவிட, அணுகுண்டை வீசும் முறை சற்று வித்தியாசமானது என்பதால், விமானிகளுக்குச் சற்று பயிற்சி தேவைப்பட்டது. இதற்காக அமெரிக்காவிலிருக்கும் பாலைவனத்தில், தேர்வு செய்யப்பட்ட இலக்குகளை மாதிரியாகச் செய்து வைத்து, அணுகுண்டின் அளவுள்ள பூசணிக்காய்களை வீசிப்பார்த்துப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சி வெற்றிகரமாக முடிந்தவுடன், ஆகஸ்டு முதல் வாரத்தில் ஹிரோஷிமா மீது குண்டு வீச அமெரிக்கா எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டது. ஆகஸ்டு 2ம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 'பால் டிபெட்ஸ்' (Paul Tibbets) என்ற விமானியும், 'எனோலா கே' (Enola Gay) என்ற B-29 ரக விமானமும், அணுகுண்டிற்கு 'சின்னப்பையன்' (Little Boy) என்ற பெயரும் தேர்வு செய்யப்பட்டன.
29 இன்ச் விட்டமும்,
126 இன்ச் நீளமும்
9700 பவுண்ட் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்ட சின்னப்பையன் எனோலா கே விமானத்தில் பொருத்தப்பட்டான்.
கி.பி
1945 ஆகஸ்டு
6ம் நாள் நள்ளிரவு/அதிகாலை 2 மணிக்கு ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வேற்று நாட்டுப் போர் விமானம் ஊடுருவியிருப்பது விமானப்படையின் ரேடார்களில் தெரிய வருகிறது. உடனே ரேடியோ மற்றும் ஒலி பெருக்கிகளின் மூலம் மக்கள் எச்சரிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைவரும் வீட்டிற்குள் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். பின்னர் மூன்று மணி நேரங்கள் கழித்து, அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபின், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது. சேதம் எதுவுமில்லை என்று சோதித்தறிந்தபின், நகரின் ஒவ்வொரு சாலையாக மக்கள் நடமாட்டத்திற்குத் திறந்து விடப்படுகின்றது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த நாளைத் தொடங்குகின்றனர். குழந்தைகள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பெற்றோர் அவர்களை அனுப்புவதிலும் தாங்கள் வேலைக்குச் செல்வதிலும் முனைகின்றனர்.
காலை
8:15 மணி மேலும் இரண்டு விமானங்கள் ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வருகின்றன. முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விடுகிறது. ஆனால் இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. போர்முனையில் இருக்கும் வீரர்கள் சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்க்கின்றனர்.
ரேடாரில் அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வீரர், தன் மேலதிகாரிக்குத் தகவல் சொல்லத் தன் இருக்கையை விட்டு எழுகிறார். அடுத்த வினாடி என்ன நடக்கிறது என்றே அறியாமல், அவரது உடம்பில் எரிச்சல் ஏற்பட்டு, இரத்தம் வழிகிறது. அங்கிருக்கும் ரேடார் உட்பட அனைத்துக் கருவிகளும் செயலிழந்து உருகி வழிகின்றன. கட்டடம் பற்றி எரிகிறது. நகரெங்கும் ஒரே மரண ஓலம். இத்தனைக்கும் அந்தக் கண்காணிப்பு மையம் அமைந்திருந்த இடம் ஹிரோஷிமாவுக்கு வெளியில் சில மைல்கள் தொலைவில். குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார்
28 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு
300000 (மூன்று லட்சம்) டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில்
280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு
5000 (ஐந்தாயிரம்) டிகிரி செல்சியஸ். எத்தனை மனிதர்கள் இறந்தார்கள் என்பதுகூடத் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துக் காணாமல் போனவர்களைக் கணக்கெடுத்து, அதிலிருந்து இத்தனை பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தனர்.
ஹிரோஷிமாவிலிருந்து சுமார்
3 கி.மீ தொலைவில் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. காலை
8 மணி முதலே குழந்தைகள் வர ஆரம்பித்திருந்தன. கனேகோ என்ற ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன், எப்பொழுதும் அவனது அக்காவுடன் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அன்று அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவன் தனியாகச் செல்லப் பயந்து அடம் பிடித்துக்கொண்டிருந்தான். அவனது அம்மா, டோக்கியோவிலிருந்து அவனது மாமா அனுப்பிய மூன்று சக்கர சைக்கிள் இன்று மாலை ஹிரோஷிமா வந்து சேர்ந்துவிடும் எனச் சமாதானப்படுத்தி, பள்ளிக்குக் கொண்டு வந்து விட்டார். பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் அவன் வெளியே ஓடி வந்து விடாமல் இருக்க, அங்கேயே காத்துக் கொண்டிருந்தார். 8:20 மணிக்குப் பள்ளி ஆரம்பிக்கும். மணி
8:10 ஆயிற்று. எல்லாச் சிறுவர்களும் உள்ளே சென்று கொண்டிருக்க, ஒரு சிறுவன் மட்டும் கதவருகில் நின்று அழுது கொண்டிருந்தான். என்னவென்று கேட்கலாம் என அருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது, அவன் தன் தோழியின் மகன் என்று. அன்று பள்ளியில் விட அவனது அப்பா வராததால் அழுது கொண்டிருந்தான். உடனே அருகிலிருந்த கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கிக் கொடுத்து விட்டு, அதை அவன் ஆசையாகச் சாப்பிடுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென வெப்பநிலை உயர்ந்தது. இந்த அம்மாவுக்கு உடலிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று தெளிய முற்படுவதற்குள், தசைகள் பிய்ந்து தொங்க ஆரம்பித்தன. குழந்தைகள் அனைவரும் அலறிக்கொண்டே வெளியே ஓடிவந்தனர். வரும் வழியிலேயே சில குழந்தைகள் கருகி விழுந்தன. எங்கு பார்த்தாலும் 'தண்ணீர்! தண்ணீர்! ஐயோ எரிகிறதே!' என்று ஒரே ஓலம். ஆனால் மகனை இன்னும் காணவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வெப்பம் தாங்காமல், தான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவோம் என உணர்ந்து கொண்டார். தானும் தன் மகனும் தன் மகளைப்போல் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ? வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை இழுத்து வந்து இப்படி நெருப்புக்குப் பலிகொடுத்து விட்டேனே என்ற கவலையுடனேயே கண்களை மூடினார்.
ஹிரோஷிமா நகரம் V வடிவில் அமைந்த நகரம். (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்) நகரை அணைத்துக்கொண்டு இரண்டு ஆறுகள் ஓடி, முனையில் ஒன்றாக இணையும். அணுகுண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்த ஆறுகளுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆழத்தைப் பற்றிய பயமே இல்லாமல் சரமாரியாகக் குதிக்க ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, உடலில் துணி இருக்கிறதா, இல்லையா, தனக்கு அடியில் இருக்கும் உடலில் உயிர் இருக்கிறதா, இல்லையா, யாருக்கும் எந்த நினைப்பும் இல்லை. வெப்பத்தை எப்படியாவது குறைத்தால் போதும் என்று எண்ணி, தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளுடன் ஆற்றில் குதித்த பிறகுதான் தெரிந்தது, ஆற்று நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று. சில மீட்டர்கள் தொலைவில் ஐந்தாயிரம் டிகிரி வெப்பம் பரவியபோது, நீர் கொதிக்கத் தொடங்கியதில் வியப்பில்லைதானே! இதை வியக்காமல், வலியால் துடித்துக் கொண்டு நீரில் குதித்தவை சதைகளும் ரோமங்களும் எரிந்து போன குதிரைகளும் நாய்களும் கூடத்தான்.
இவையனைத்தும் நடந்து முடிந்தது இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில். இதைவிடக் கொடுமையான விஷயம், அந்த இரண்டாவது விமானத்திலிருந்து, இந்நிலைமைகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. 16 mm பிலிமில் 3 நிமிடம் 50 வினாடி ஓடக்கூடிய அளவுக்கு, தரையிலிருந்து கிளம்பிய புகை விமானத்தை அடையும் வரை ஹிரோஷிமாவைச் சுற்றிலும் படம் பிடித்தனர். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்கே நமக்கு நெஞ்சு வலிக்கும்போது, படமெடுத்தவனின் இதயம் நிச்சயம் கல்லால் ஆனதாகத்தான் இருக்க வேண்டும். இதைக்கூட, கொடுத்த கடமையைச் செய்யும்போது மற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என நொண்டிச் சமாதானம் கூறலாம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகும்,
3 நாட்கள் கழித்து நாகசாகியின் மீது இன்னொரு அணுகுண்டைப் போட உத்தரவிட்ட அமெரிக்க அரசாங்கத்தை என்னவென்று சொல்வது?
சம்பவம் நடந்து இரண்டு மூன்று மணிநேரம் கழித்து அங்கு வந்த ஒரு பத்திரிக்கை நிருபர் சொல்கிறார். 'எத்தனை முயற்சித்தும் என் கேமிராவைச் சரியாக ஃபோகஸ் செய்யவே முடியவில்லை. கழற்றிப் பார்த்தால், லென்ஸ் வழியாகப் பார்க்கும் கண்ணாடி முழுவதும் என்னையறியாமலேயே, கண்ணீரால் குளிப்பாட்டப்பட்டிருந்தது'. இவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்பொழுது ஜப்பான் பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்பியலில் ஒரு பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு நிறம் வெப்பத்தை ஈர்க்கும் தன்மையுடையது என்ற கருத்தை விளக்கும் பாடம்தான் அது. இவர் எடுத்த புகைப்படத்தில், கறுப்புக் கட்டங்கள் கொண்ட மஞ்சள் நிறக் 'கிமோனோ' அணிந்த ஒரு பெண்ணின் முதுகில், கறுப்பு நிறக் கட்டங்கள் இருந்த இடங்களில் மட்டும் வெப்பம் ஈர்க்கப்பட்டுக் கட்டம் கட்டமாகக் கருகியிருந்தது.
அனைவரும், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதா, மற்றவர்களைக் காப்பாற்றுவதா எனக்குழம்பி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கையில், அதிக அளவிலான புகை காரணமாக, கருநிற அமிலமழை பொழியத் தொடங்கியது. இறைவன் அருளால் வெப்பத்தைத் தணிக்க மழையாவது பெய்கிறதே என மகிழ்ந்து மழையில் நனைந்தவர்கள் எல்லாம் இறைவனாலும் தாங்கள் கைவிடப்பட்டதை அறிந்து கொள்ளும் முன்னரே செத்து விழுந்தனர். மழைத்துளிகளில் கதிரியக்கத் துகள்கள் இருந்ததுதான் அமிலமழைக்குக் காரணம். இந்த மழைநீர் விழுந்த குளத்திலிருந்த மீன்களும் செத்து மிதந்தன. இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், முழுதாக உயிரும் போகாமல் ஒரு பெண் போராடிக் கொண்டிருந்தார். சில மணிநேரங்கள் கழித்து வந்த மீட்புக்குழுவினர் அப்பெண்ணை இழுத்தபோது மீட்க முடிந்தது அப்பெண்ணின் எலும்புக்கூட்டை மட்டுமே. என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் எனக் கதறிய அப்பெண்ணின் குழந்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் முன்பே அப்பெண்ணின் உயிர் பிரிந்தது.
சடாக்கோ (Sadako) இத்துடன் இதன் விளைவுகள் நின்று விடவில்லை. அணுக்கதிர்வீச்சு பல ஆண்டுகளுக்கும் தொடர்ந்தது. ஜப்பானியப் பெண்கள் தங்களின் நீண்ட கருங்கூந்தலின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அதைப் பெருமையாக நினைப்பவர்கள். சிறுவயது முதலே மிக்க கவனத்துடன் பராமரிப்பார்கள். அணுகுண்டு வெடித்துச் சில நாட்கள் கழித்த பின்னர், உறவினர்களையும் நண்பர்களையும் இழந்த துக்கம் ஓரளவுக்கு அடங்கிய பின்னர், ஒருநாள் காலையில் பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சடாக்கோ என்ற ஆறாம் வகுப்புச் சிறுமி, தலை பின்னிவிட, தன் அம்மா அனைத்து வேலைகளையும் முடித்து வரக் காத்திருந்தாள். முந்தைய நாள் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கியதையும், இந்த ஆண்டு மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க விருப்பப்படுவதாகவும் உற்சாகமாகக் கூறிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அதைக் கேட்டுக்கொண்டே வேலைகளை முடித்துவிட்டு, தலை பின்னிவிட வந்து அமர்ந்தார். சீப்பை எடுத்துத் தலையில் வைத்ததும், என்ன செய்வதென்றே புரியவில்லை. அம்மாவின் கண்ணிலிருந்து பொல பொலவெனக் கண்ணீர் கொட்டியது. பேசிக்கொண்டிருந்த அம்மா பாதியில் நிறுத்தியதும் திரும்பிப் பார்த்த சடாக்கோ, தன் தலைமுடி அனைத்தும் தாயின் கையில் இருந்ததைக் கண்டு பதறிப்போனாள். தலையைத் தடவிப் பார்த்தால், ஒரு முடி கூட இல்லாமல், மொட்டையாக இருந்தது. ஐயய்யோ! நேற்றுத்தானே, தன் அழகுக்கூந்தல் தேவதைபோல் ஆடிவர, ஓட்டப்பந்தயத்தில் பெருமையாக ஓடி வந்தோம்! மாவட்ட அளவிலான போட்டியில் மொட்டைத் தலையுடன் ஓடவேண்டுமா? எதிர்கால விளையாட்டு வீராங்கணைக்குத் தலை மொட்டையா? நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. அம்மாவும் என்னவோ ஏதோ என்று பதறியடித்து மருத்துவப் பரிசோதனைக் கூடத்தில் கொடுக்க, சடாக்கோவுக்குப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் அளவுக்கு நல்ல உடல்நிலை கொண்டிருந்தவள், தனக்குப் புற்றுநோய் இருப்பதைக் கேள்விப்பட்டதும், ஒரே இடத்தில் முடங்கிப்போனாள். ஒரே மாதத்தில் துரும்பாக இளைத்தாள். ஒருவேளை புற்றுநோய் இருப்பது தெரிந்திராவிட்டால், உற்சாகத்திலேயே இன்னும் கொஞ்ச நாடகள் சந்தோஷமாக இருந்திருப்பாளோ! கடைசிவரை அவளால் தான் இறக்கப்போகிறோம் என நம்பவே முடியவில்லை. புற்றுநோயின் வலியைவிட, சிறந்த விளையாட்டு வீராங்கணையாக ஆகாமல் இறக்கிறோமே என்ற நினைவே அதிக வலியைத் தந்தது. ஒவ்வொரு நாளும் 'நான் பிழைச்சுக்குவேன்ல! பிழைச்சா, முன்ன மாதிரி நல்லா ஓட முடியும்ல!' என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்த சடாக்கோவின் ஒரே பொழுதுபோக்கு, கலர் காகிதத்தில் கொக்கு உருவம் செய்வது மட்டுமே. மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவள் செய்து முடித்த கொக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இவை அனைத்தும் அங்கே அருங்காட்சியகத்தில் சடாக்கோவின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும், ஆகஸ்டு 6ம் தேதி, அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான கொக்கு உருவங்கள் இவளது நினைவிடத்துக்கு மாணவர்களால் அனுப்பப்படுகிறது.
1977 லேயே கதிர்வீச்சு நின்று விட்டாலும், ஹிரோஷிமாவில் வசிக்க மக்கள் அச்சப்பட்டனர். இதைமாற்ற, அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலிலிருந்து அந்நகரைப் புதிதாக நிர்மாணித்து, பள்ளிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் சீர்படுத்தப்பட்டன. மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கப் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது.>அணுகுண்டு வெடித்த இடத்தில், ஒரு புல், பூண்டு கூட முளைக்காது.>இனிமேல் மனிதர்கள் வாழவே முடியாது. >அணுக்கதிர்வீச்சு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.>ஹிரோஷிமாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் கருத்தரித்தவுடன் வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்.
என்றெல்லாம் இதுவரை முன்பு பலர் கூறக்கேட்டு நம்பியிருக்கிறோம். ஆனால், இவையத்தனையும் ஆதாரமற்றவை என்று இப்போது ஹிரோஷிமா சென்றால் தெரிந்து கொள்ளலாம். அணுகுண்டு வெடித்த இடத்தில் ஒரு பெரிய பூங்காவே அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்த பிறகுதான், மக்கள் மனதில் நம்பிக்கை பிறந்து, குடியேற ஆரம்பித்தனர். டோக்கியோ, ஓஸகா போன்ற நகரங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் வளர்ந்து நிற்கிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)