Tuesday, October 13, 2009

நபிவழியில் நம் ஹஜ்


எழுதியவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

“ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது.ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ்கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று “அன்று பிறந்த பாலகனை” போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.

உம்ராச் செய்யும் முறை

உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் “லப்பைக்க உம்ரத்தன்” என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்)இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.

லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.

பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு “ஹஜருல் அஸ்வத்” கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்துஉம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது. 2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது. 3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது. 4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி “அல்லாஹுஅக்பர்” என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).

இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் “ரம்ல்” செய்வது சுன்னத்தாகும். “ரம்ல்” என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. “ரம்ல்” செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.

ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ

“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்”

என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ

என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.

என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.

விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.

குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.

ஹஜ் செய்யும் முறைகள்

ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத்தமத்துஃ 2. ஹஜ்ஜுல் கிரான் 3. ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஃ :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கானஉம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான் :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத் :-

இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.

கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின்ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.

துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்

மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்

துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.

நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்) அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.

குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது. முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம். நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.

சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்) இன்னும் ஓர் அறிவிப்பில்:-

அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.

துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்

சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள். 1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது. 2- குர்பானி கொடுப்பது. 3- முடி எடுப்பது. 4- தவாபுல் இஃபாலா செய்வது.

சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

கல் எறிவது

பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.

பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக “அல்லாஹுஅக்பர்” என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.

“சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)

கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.

குர்பானி கொடுப்பது

தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. “நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்

குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்) குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.

தலை முடி எடுப்பது

குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.

தவாஃபுல் இஃபாலா

தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.

துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்

11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.

துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்

12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.

தவாஃபுல் விதா

ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!

இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்

1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது. 2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது. 3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது. 4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது. 5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம். 6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.

ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.

ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்

தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது. பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள் இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)

இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.

1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல். 2-அரஃபாவில் தங்குதல். 3-தவாபுல் இஃபாலா செய்தல். 4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.

ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)

(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல். (2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல். (3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல். (4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும். (5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது. (6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)

(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நன்றி: C.O.C.G வெளியீடு, ஜித்தா

அவளுக்கும்தான் புரியவில்லை..!

அழைப்பு மணியோசைக் கேட்டதும், ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள் ஜமீலா. டியூசனிலிருந்து திரும்பி வந்திருந்த மகளை அன்போடு அனைத்துக் கொண்டாள். “இன்றைக்கு என்ன ஸ்பெஷல் மம்மி?” கேட்டுவிட்டு, புத்தகப்பையைக் கொண்டு போய் மேசையில் வைத்தால் மகள் ஆயிஷா. அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. மின்விசிறியைச் சுழலவிட்டு, சோபாவில் போய்ச் சாய்ந்தால் ஆயிஷா. “கண்ண மூடிக் கொள்ளுங்கோ” தாயின் கட்டளைப்படி கண்ணை மூடிக் கொண்டாலும், வாயை மூடிக் கொள்ளவில்லை. தாய் ஏதோ தரப்போகிறாள் எனத் தெரிந்ததும் சந்தோஷத்தில் சிரித்தாள்…
ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்த சாக்லேட்டைக் கொண்டு வந்து கையில் திணித்தாள் ஜமிலா. “தேங்யூ மம்மி” கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சாக்லேட்டை சாப்பிடத் தொடங்கினாள். அதைச் சுவைத்துக் கொண்டே “டிவியைப் போடுங்களேன் மம்மி” என்றாள். “ஆ….. மறந்துட்டேன். வீடியோகேஸட் ஒன்று இருக்கிறது. பார்ப்போமா?” மகளிடம் கேட்டுவிட்டு உற்சாகமாக எழுந்து டிவியை ஆன் செய்தாள் ஜமிலா. “மம்மி அங்க பாருங்க! அப்பா, உம்மும்மா… அங்கிள்.... இது யாரோட வெட்டிங் மம்மி?” இது யாரோட வெட்டிங்குனு தெரியலையா? என ஆயிஷாவைப்பார்த்து சிரித்தாள் ஜமிலா. “மம்மி… இது உங்களோட வெட்டிங்கா? சா!... மம்மி நீங்க ப்ரின்ஸஸ் மாதிரி” தாயைக் கட்டிக் கொண்டு, கண்ணத்தில் முத்தமிட்டாள். மகளின் பாராட்டில் பூரித்துப் போனாள் அவள். இவ்வளவு நாளும் நான் பார்க்கவில்லையே. இந்த கேஸட் எங்கே இருந்தது? டேடியோட ஃப்ரென்ட்ஸ் கொண்டு போனாங்க. கைமாறிப் போனது. இத்தனை வருஷத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் வந்து சேர்ந்தது. விளக்கமளித்துக் கொண்டே அவளும் ரசிக்கத் தொடங்கினாள்.
மணக்கோலத்திலிருந்த தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது ஜமிலாவுக்கு. அப்படியொரு அழகு. சாதாரணமான அவளை அழகான உடையும், மேக்கப்பும், சிகை அலங்காரமும் அழகு ராணியாகக் காட்டியது. நேரிலும், வீடியோவிலும் எத்தனை நூறு பேர் அவளைப் பார்த்து ரசித்திருப்பார்கள்? கூசுவதற்குப் பதிலாக அவள் மனம் குதூகலித்தது. அந்த வெட்டிங் கேக்கப் பார்த்தீங்களா? மகள். அது மம்மி செஞ்சதுதான். மகளுக்கு விளக்கினாள் ஜமிலா. நேரம் போவது தெரியாமல் தாயும் மகளும் அதில் மூழ்கிப் போனார்கள்.
மறு நாள் மறு நாள் சமையல் மும்முரமாக இருந்தால் ஜமிலா. தேங்காயைத் துருவி மூடி வைத்துவிட்டு, வெட்டி வைத்திருந்த மரக்கறிகளை எடுத்து, சமைக்கத் தயாரானபோது எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்தால் ஆயிஷா. “இதுல ஒரு ஹதீஸ் வந்திருக்கு மம்மி” என்று கூறிவிட்டு, வாசிக்கத் தொடங்கினாள். “எவனொருவன்… வேறொரு… சமூகத்தைப்… பின்…பற்றுகின்றானோ… அவன்… அந்தச்… சமூகத்தைச்… சேர்ந்த…வனாவான்…” திக்கித் திணறி வாசித்து முடித்துவிட்டுக் கேட்டாள். “அப்படின்னா என்ன மீனிங் மம்மி? ஜமிலா தன்பாட்டில் வேலையைக் கவனித்தாள். சிறிது நேரம் நின்று கொண்டிருந்த ஆயிஷா ‘மம்மி….’ என்று நீட்டி முழக்கவும், சிறிது யோசித்துவிட்டு சொன்னாள். “முஸ்லிம்ஸ் அல்லாதவங்களைப் பார்த்து நடக்கிற முஸ்லிம்ஸும் அவங்களைப் போலதானாம்”. – அக்கறையின்றி சொல்லிவிட்டுத் தன்வேலையில் மூழ்கிப்போனாள்.
சாப்பிட்டு முடித்தபின் டிவியை ஆன் செய்தாள். காலையிலிருந்தே பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த ஆங்கிலப்படம் ஏற்கெனவே ஆரம்பமாகியிருந்தது. டிவிச் சத்தம் கேட்ட ஆயிஷாவும் ஓடி வந்து தாயின் அருகில் உட்கார்ந்தாள். படத்தில் சிறுவனொருவனின் பர்த்டே பார்ட்டி- அவர்களோடு ஆயிஷாவும் ஹேப்பி பர்த்டே பாடினாள். “மம்மி! இந்த முறை என்பர்த்டேக்கும் இதே மாதிரி கேக் செஞ்சி தரணும்” தாயின் கைகளைப்பிடித்து வேண்டினாள். சரியெனத் தலையாட்டினாள் ஜமிலா. அதே மாதிரி வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனவும், அதில் வந்த சிறுவன் உடுத்திருந்தது பொன்ற டைட் ஸ்கர்ட்டும் டீசர்ட்டும் தனக்கும் வேண்டுமெனவும் அவள் கெஞ்சிய போது, அதற்கெல்லம் உடன்பட்டாள் ஜமிலா. தனக்குள்ள ஒரேயொரு பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்காமல் வேறு யாருக்குத் தான் செய்வது? விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த குடும்பப் பாங்கான அந்தக் கதை ஜமிலாவை வெகுவாகக் கவர்ந்தது. “மம்மி உங்களைப் போலவே ஒயிட் மெக்ஸி போட்டு, அதே மாதிரி ஹேர்ஸ்டைல்… ம்… அதே மாதிரி வேல்…. பாருங்க மம்மி” அந்த மணப்பெண்ணைப் பார்க்க ஆயிஷாவுக்கு குதூகலமாக இருந்தது.
திடீரென்று மனதுக்குள் ஒரு கேள்வி. தாயிடம் கேட்டாள். “மம்மி இவங்களும் முஸ்லிமா?” “இல்லையே! அவங்க முஸ்லிமல்ல, நான்முஸ்லிம்ஸ் (Non-Muslims)” சொல்லிவிட்டு சிரித்தாள் ஜமிலா. படத்தைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள் ஆயிஷா. மீண்டும் மனதுக்குள் ஒரு கேள்வி. “ஓ அப்ப … உங்களுடைய வெட்டிங் நேரத்தில நீங்க முஸ்லிமில்லையா?” அமைதியாக கேட்டாள் ஆயிஷா. “ஸுப்ஹானல்லாஹ்”! இதென்ன கேள்வி! நாங்கள் எப்பொழுது நான்முஸ்லிமாயிருந்தோம். நாங்க பொறக்கற நேரமே முஸ்லிம்ஸ். எங்களுடைய வாப்பா, உம்மா முஸ்லிம்ஸ். நாங்களும் முஸ்லிம்.” மகள் தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டதாக நினைத்தாள் ஜமிலா. “இல்ல மம்மி. உங்களுடைய வெட்டிங்கும் இதே மாதிரி மெக்ஸி, ஹேர்ஸ்டைல், வேல், ஃப்ளவர் கேர்ள்ஸ், வெட்டிங் கேக்…. எல்லாம் இதே மாதிரிதானே!” “வெட்டிங்னா அப்படித்தான்” “பர்த்டே, வெட்டிங் எல்லாம் நாமும் அவங்களும் ஒரே மாதிரி செய்தால் அவங்க முஸ்லிமில்லை என்றால் நாம் மட்டும் எப்படி முஸ்லிம்” தாயிடம் கேட்டாள்.
பதிலில்லை. “அவங்க நான்முஸ்லிம்ஸ்.. சுவர்க்கம் போகமாட்டாங்க என்றால் அவங்களப்போல எல்லாம் செய்யிற நாம் மட்டும் சுவர்க்கம் போறதென்றால் அது எப்படி சொல்லுங்க மம்மி….
என்க்கு ஒன்றுமே விளங்கலை மம்மி…” என்ன பதில் சொல்வது? சிரித்தாள் ஜமிலா. அவளுக்கும்தான் புரியவில்லை.......
Thanks: to writer & Mr. Alaudeen

Monday, October 5, 2009

ஊடகங்களின் நன்மையும் தீமையும்

-ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.
ஊடகங்களின் நன்மையும் தீமையும்
பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும்
காரணம் உலகம் முழுவதும்இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது. ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு
தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.
பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?
நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்
முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன
3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்
நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்
நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.
எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?
நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்
சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்
கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்
ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும். ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்
டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப்

13.மக்கள் சக்திப் போராட்டம்
நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.
சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்
ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது. இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும். வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும். பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான ,அபூமுஹை,நல்லடியார்,இறைநேசன்,வஹ்ஹாபி,ஜீஎன்,இப்னுபஷீர்,மரைக்காயர்,அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்
மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு
பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்
பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை
உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.
நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும். இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

Thanks: for aouther