Tuesday, April 20, 2010

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2

எழுதியவர்:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி
أحكام الغسل في الإسلام
இஸ்லாத்தைத் தழுவுதல்:
இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.

‘கைஸ் பின் ஆஸிம் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தபோது அவரைக் குளித்துவிட்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்’ (அபூதாவுத், திர்மிதீ, நஸாஈ)
அத்துடன் துமாமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னர் குளித்த நிகழ்ச்சியையும் தமது கருத்துக்கு ஆதாரமாக் குறிப்பிடுகின்றனர்.

மற்றும் சில அறிஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வருகிறவர்கள் குளிப்பது கடமையல்ல. மாறாக அது சுன்னத்தாகவே அமையும் என்று கூறுகின்றனர். இஸ்லாத்தை ஏற்க வந்த அனைத்து ஸஹாபாக்களையும் குளிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை என்பதே இவர்களின் வாதமாகும். ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் நிலைப்பாடும் இதுவேயாகும்.

மரணித்த முஸ்லிமைக் குளிப்பாட்டுவது:
ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவரைக் குளிப்பாட்டுவது கடமையாகும். ஏனெனில் இதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் குளிப்பாட்டவும் செய்துள்ளார்கள்.

அதேவேளை மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளிப்பது கடமையா? இல்லையா? என்பதில் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பின்வரும் ஹதீஸைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணமாகும்.
‘மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளித்துக் கொள்ளட்டும். அதைச் சுமந்து செல்பவர் வுழூச் செய்யட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா)

இது ஒரு பலவீனமான ஹதீஸ் என்று இமாம் நவவீ போன்ற அறிஞர்கள் குறிப்பிட்ட போதிலும் இது ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்தான் என்று ஷேய்க் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பகால அறிஞர்களில் பலர் மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளிப்பது சுன்னத்தானது என்ற கருத்தையே முன்வைத்துள்ளனர். ஷேய்க் அல்பானீ, யூசுப் அலகர்ழாவீ போன்றோரும் அது சுன்னத் என்ற கருத்தையே ஆதாரிக்கின்றனர்.

மாதவிடாயிலிருந்து (Menses) சுத்தமாகுதல்:
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிலிருந்து சுத்தமாகும்போது அவர்கள் குளிப்பது கடமையாகும்.
‘மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விட்டுவிடு. அது நின்று விட்டால் சுத்தமாகிக் கொண்டு தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி), நூல் : புகாரி)

இந்த ஹதீஸையும் சூரத்துல் பகராவின் 222-ம் வசனத்தையும் ஆதாரமாகக் கொண்டு மாதவிடயாயிலிருந்து சுத்தமாகும்போது பெண்கள் குளிப்பது கடமையாகும் என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாக நோக்குவது பொருத்தமானதாகும்.
தொழக்கூடாது
நோன்பு நோற்கக் கூடாது
தவாப் செய்யக் கூடாது
இம்மூன்றும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

அல்குர்ஆனை ஓதுவதும் தொடுவதும்
இவ்விஷயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாம் தொடக்கூடாது என்பது வேறு சில அறிஞர்களின் கருத்தாகும். இவர்களுக்கு குர்ஆனை ஓதுவதும் தொடுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் சில அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

மேற்படி கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுஅவற்றில் மூன்றாவது கருத்தே பலமானதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் கூடாது என்று சொல்வோர் முன்வைக்கும் அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவையாகக் காணப்படுகின்றன. (அல்லாஹு அஃலம்)

பள்ளிவாசலில் தரிப்பது:
இதுவும் கருத்து வேறுபாட்டுக்குரிய ஒரு விஷயமாகும். மாதவிடாயுள்ள பெண்கள் பள்ளிவாசலில் தரிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஒரு சில அறிஞர்கள் கூறுகின்ற அதேவேளை வேறு சிலர், அவர்கள் பள்ளிவாசலினுள் தாராளமாகத் தங்கலாம் என்று கூறுகின்றனர். இமாம் இப்னு தைமிய்யா போன்ற சில அறிஞர்கள் நிர்ப்பந்தம் மற்றும் தேவைகள் ஏற்படும்போது அவர்கள் பள்ளியில் தரிக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இக்கருத்துக்குச் சான்றாக மேறகூறப்பட்ட இரு சாராரின் ஆதாரங்களையும் ஒன்று சேர்த்து அவற்றுக்கிடையில் இணக்கம் காண்பதுடன் மஸ்ஜிதுன் நபவியில் கூடாரம் அமைத்து அதில் ஒரு பெண்ணை நபியவர்கள் தங்க வைத்த ஹதீஸையும் முன்வைக்கின்றனர். இது ஸஹீஹுல் புகரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் முன்வைக்கின்ற கருத்தே நடுநிலையானதாகக் காணப்படுகின்றது. (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)

பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்வது:
மாதவிடாயுடன் உள்ள பெண்ணை அனுபவிப்பது அவளது கணவனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவளது பெண் உறுப்பில் உறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும்வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!’ (2:222)

‘யார் மாதவிடாயிலுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்கிறானோ அல்லது பெண்ணை அவளது பின் துவாரத்தில் புணர்கிறானோ அல்லது ஒரு ஜோஷியனிடம் சென்று அவன் சொல்வதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்டதை நிராகரித்தவனாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதீ, இப்னு மாஜா)

‘பெண்ணுறுப்பில் உறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் (மாதவிடாயுள்ள பெண்களுடன்) நீங்கள் செய்யுங்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மாதவிடாயுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதாக இருந்தால் அவள் அதிலிருந்து சுத்தமாகி குளித்த பின்னரே அனுமதிக்கப்படும்.

தலாக் சொல்வது:
மாதவிடாயுடனுள்ள பெண்ணைத் தலாக் சொல்வதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சொல்லப்படக்கூடிய தலாக் ‘பத்அத்தான தலாக்’ ஆகும்.
பிரசவ ருது வெளியாகக்கூடிய பெண்களுக்கும் மாதவிடாயுள்ள பெண்களுக்குரிய அனைத்து சட்டங்களும் பொருந்தும்.

மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் குளிப்பது கடமையாகும்.

சுன்னத்தான குளிப்பு:
பொதுவாகக் குளிப்பது சுன்னத்தாக்கப்பட்ட சில சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

- வெள்ளிக்கிழமை குளிப்பது. (புகாரி, முஸ்லிம்)
- மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிப்பது. (அஹ்மத்)
- இரு பெருநாளைக்காகக் குளிப்பது. (இது தொடர்பாக ஸஹீஹான ஹதீஸ்கள் எதுவும் காணப்படாத போதிலும் ஸஹாபாக்கள் குளித்திருப்பதற்கான ஆதாரங்க்ள காணப்படுகின்றன)
- இஹ்ராம் அணிவதற்கு முன்னர் குளிப்பது. (தாரகுத்னீ, பைஹகீ , திர்மதீ)
-ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொள்ள விரும்புகிறவர் ஒவ்வொரு முறைக்கும் இடையில் குளிப்பது. (அபூதாவுத்)
- ‘முஸ்தஹாழா’ ஒவ்வொரு தொழுகைக்கும் முன்னர் குளிப்பது (அபூதாவுத்)
- மயக்கமுற்றவர் மயக்கத்தில் இருந்து எழுந்ததும் குளிப்பது. (புகாரி , முஸ்லிம்)
- முஷ்ரிக்குகளின் பிரேதங்களைப் புதைத்தவர் குளிப்பது. (நஸாஈ)
- மக்காவில் நுழைவதற்காகக் குளிப்பது. (புகாரி, முஸ்லிம்)
- ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் அரபாவில் தரிப்பதற்காகக் குளிப்பது. (இப்னு உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஆதார பூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.)
(இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் குளிக்கும் முறை பற்றிப் பார்ப்போம்.)
எம்.எல். முபாரக் ஸலபி M.A.

Monday, April 19, 2010

"அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்"

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை (க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

Sunday, April 18, 2010

நபிமொழி

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ''பாத்திரத்தில் தூசியை நான் பார்க்கிறேன்'' என்று ஒருவர் கேட்டார். ''அதை எடுத்துப் போடுவீராக'' என்று நபி(ஸல்)கூறினார்கள். ''ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்க முடிவதில்லை'' என்று அவர் கூறினார். ''உன் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக (விட்டு, விட்டுக் குடிப்பீராக)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'நபி(ஸல்) அவர்கள், பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், அல்லது அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களுக்கு ''ஸம்ஸம்'' தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தேன். அவர்கள் நின்ற நிலையிலேயே குடித்தார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் எவரும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டாம். மறந்து (குடித்து) விட்டால் அவர் வாந்தி எடுக்கட்டும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் வேட்டியைத் தரையில் பட இழுத்து நடப்பவனை, மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வேட்டியில் இரண்டு கணுக்கால்களுக்கும் கீழிறங்கி இருப்பின், அது நரகில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி, முஸ்லிம்)

Monday, April 12, 2010

ஒற்றுமை




உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய்

நம் குரல்களும் ஒலிக்கின்றன - ஒற்றுமைக்காய்!

சாதித்தவர்கள் அவர்கள் - சருக்கி விழுந்தோர் நாம்தான்!!

பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்

பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறோம் - நம்மை

படித்த பாமர்களாய் ஆகிவிட்டோம் படிப்படியாக!

என் சமூகத்திற்கு நேர்ந்ததென்ன?

என் சமூகம் ஏன் தற்கொலை செய்யப்பார்க்கின்றதா?!

நானும், நீங்களும் சமூகத்தின் அங்கத்தவர்கள்!!

என் சமூகமே!

உன் எதிர்காலம் செழிக்க உனக்கு வேண்டும் இரு தகமைகள்:

1- இம்மையின் இன்னல்கள் அகல - ஒற்றுமையும்

2- மறுமையின் வளங்கள் செழிக்க - ஏகத்துவமும்.

இவ்விரண்டுக்கும் அர்ப்பணமாகட்டும் எம் எதிர்காலம்

சகோதரர்களே, கைகோர்ப்போம் நம் உருக்குளைந்த ஒற்றுமையை நிலைநாட்ட.

நாம் உண்மையான முஃமின்களா?

அன்பு சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் பின்வரும் கேள்வி-பதில், http://www.islamhelpline.com/ என்ற தளத்திலிருந்து எடுத்து, அவர்களது அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டது. சமுதாய நலனில் அக்கரையுள்ள முஸ்லிம்கள், இதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடந்தால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் இழந்த கண்ணியத்தை வல்ல அல்லாஹ் மீண்டும் நமக்கு தந்தருள்வான்.
அன்புடன், புர்ஹான், சவூதி அரேபியா.
நாம் உண்மையான முஃமின்களா?
கேள்வி: -நம்முடைய முஸ்லிம் சகோதரர் ஒருவர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்: -ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா? நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!! இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும், வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே!
அவர்கள் நம்மைவிட விலிமை மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை நாம் வெற்றி கொள்ள முடியாது என்ற சிந்தனை நமக்கு மேலோங்குகிறதே!!இந்நிலையில், நாம் வல்லமை மிக்க இறைவனின் நம்பிக்கயாளர்கள் தானா?
பதில்: -இறைவனின் பெயரால், அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு (சிலைகளோ, மனிதர்களோ, சமாதிகளோ, நபிமார்களோ, இமாம்களோ, குருவோ) யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
என தருமை சகோதரரே, நாம் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்து, நமது பொறுப்புகளை அவனிடமே பறைசாற்றி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளை பற்றிப் படித்துக்கொண்டு அவைகளுக்குக் கீழ்படிந்து நடப்போமேயானால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை உலகில் உள்ள மற்ற மதங்களை விட மேலோங்கச் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) வசனம் 33 ல் கூறுகிறான்: -“அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்)” (அல்குர்ஆன் 9:33)
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்) வசனம் 22 ல் கூறுகிறான்: -“அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்”.
கடந்த கால வரலாற்றையும் நாம் சற்று உற்று நோக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களிலிந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கமாக, பலரால் விரும்பக் கூடிய மார்க்கமாக இருந்து வந்திருக்கிறது. கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாகத் தான் இணை வைப்பாளர்கள் முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் அவர்களுடைய ஆதிக்கம், அவர்களுடைய உலக வங்கி, மற்றும் அவர்களின் வட்டி சார்ந்த நிறுவனங்களின் கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஏன் இப்படி? அதுதான் உங்களுடையதும் மற்றும் ஒவ்வொரு முஃமினின் சிந்தனையிலும் எழக்கூடிய கேள்வி.
“எல்லா மார்க்கங்களையும் விட இஸ்லாத்தை மிகைக்குமாறு செய்வேன்” என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மைதானா? ஆமாம் சகோதரரே! அல்லாஹ்வின் வாக்கு முற்றிலும் உண்மை. நாம் தான் நம்முடைய அமல்களிலும், செயல்களிலும் குறைபாடுகளையுடைய முஸ்லிம்களாக, முஃமின்களாக இருக்கிறோம். நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:
-நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்” நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில், நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது, தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது, மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது, ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது, அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது… அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான். ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில், மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.
தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது. இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும். இஸ்லாம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காமல், நாம் இஸ்லாத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்கவேண்டும். நம்முடைய மனசாட்சி கூறும் உண்மை நமக்கு விருப்பமானதாக இல்லாமல் இருந்தால், நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு பணிந்து ஸுஜுது செய்தவர்களாக பாவமன்னிப்பு கோரவேண்டும். நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை இவ்வுலகில் நிலை நிறுத்த, நம்முடைய சக்திக்கேற்றவாறு பாடுபடுவேன் என்று அல்லாஹ்விடம் உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். மேலும் இதை முதலில் நம்மிலிருந்தும் பின்னர் நமது குடும்பத்தார்களிடமிருந்தும் ஆரம்பம் செய்யவேண்டும்….
ஆமாம், இதற்கு 50 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் அல்லது ஏன் 500 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி நிலையானது, உண்மையானது, என்றுமே மாறாதது. நாம் இவ்வுலக வாழ்வைவிட மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் தந்து, மரணத்தை வெறுப்பதை விட நேசிக்க ஆரம்பித்து, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றினால் இன்ஷா அல்லாஹ் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மார்க்கமே மேலோங்கி நிற்கும். நானும், நீங்களும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நிலையை அடையும் நாளில் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 24, ஸூரத்துத் நூர் (பேரொலி), வசனங்கள் 55-57 ல் கூறுகிறான்: -“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ‘அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்; (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்”.
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக!
யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.

யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக.
ஆமீன் அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் கருணை புரிந்து நம் அனைவருக்கும் இஸ்லாத்தின் நேரான பாதையைக் காட்டுவானாகவும்!
நன்றி : http://www.islamhelpline.com/ FREE TO DISTRIBUTE, EMAIL OR PUBLISH IN YOUR WEBSITES. PLEASE REFER TO: http://suvanathendral.com/portal/?p=65