Thursday, March 29, 2012

‘அஸதின்’ சீற்றம்

பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் - எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!

காலைப் பொழுதில் - நம்
கண்ணத்தை அறைந்து செல்லும்
மெல்லிய தென்றலின் நீங்காத சுகம் - நம்மை
மெய்மறக்கச் செய்யும் ''மெகா கிப்ட்''.

சிட்டுக் குருவியின்
சின்னச் சின்ன கீதங்களும்
மழலைச் செல்வங்களின்
மறக்கமுடியா அறுந்த கவிதைகளும்
மாமறை தந்தோனின் மற்றுமொரு அருள்!

இவற்றையெல்லாம் இன்புற்றிருக்க நாமனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வேலாவேளைக்கு விரும்பிய உணவு, விதம் விதமாய் வாழ்க்கையின் அலங்காரங்கள் என்று எத்துனை கொடைகளை நாம் அனுபவிக்கின்றோம்! அனைத்தும் அல்லாஹ்வின் கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. உலக இன்பங்களில் நாம் மிதந்து கொண்டிருக்க அங்கோ ஒரு சமூகம்........?!!

ஆம், சிறியா மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்க்கையில் இவையனைத்தும் தொலைந்து போனதை நினைக்கும் போதே கண்கள் கசிகின்றன. உள்ளத்தின் ஆழத்தில் கவளையின் வேதனை.

காட்டையாளும் 'அஸதின்' சீற்றம் தேவைக்கேற்பத்தான்! ஆனால் சிறியாவையாளும் 'அஸதின்' இரத்த வெறி நாட்டின் மைந்தர்களை நாளாந்தம் மடியச் செய்து கொண்டிருக்கின்றன. நடப்புலகத்தின் பக்கங்களில் பதிவு செய்யப்படும் கதைகளில் 'அஸதின்' அட்டூழியங்கன் நிச்சயம் முதலிடம் பெரும். நீங்காத வடுக்களாய் முஸ்லீம்களின் உள்ளத்தில் மாறிப் போன ஒரு வரலாறு! இன்று சிறியா தேசத்தில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

ஈன்ற செல்வங்களை கழுத்து நெறித்து கொல்வதைவிட கொடூரமான ஈனவெறியாட்டம் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சொந்த நாட்டு மக்களின் உயிரைக் குடித்து தனது ஆட்சி பீடத்தை தக்காத்துக் கொள்ளும் ஒரு சுயநலவாதியின் வெறியாட்டம்!

லெனின், முஸோலினி, ஹிட்லர்..... போன்றவர்களின் சிகப்பு வரலாற்றில் இன்றளவும் இரத்தவாடை அகலவில்லை. இவர்களின் வரலாறுகள் கடந்த காலத்தின் சோகவரலாறு! ஆனால் நிகழ்காலத்தின் காட்டுமிரான்டி கதாநாயகனாய் உருவெடுத்த அஸதின் எதிர்காலம் அவஸ்தைப்படும் அந்த நாட்களைக் காண நாட்கள் இன்னும் தொலைவில் இல்லை என்பதை மட்டும் நன்றாய் உணர முடிகின்றது.

Thursday, March 15, 2012

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?


சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.


நபி முஹம்மத்(ஸல்)அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.


தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.


“உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.


எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாறும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.


ஆனால் வஸீய்யத் செயபவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)


இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத் தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.


மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி) (நூல்:புகாரி)


இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.


இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ(ரழி) என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது (ஸல்) அவர் களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.


இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.


இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.


1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.
- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.
- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.


2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)
- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6)பங்குண்டு.
- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
“இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)


3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.
- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.
- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.
- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.


4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)


இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஸஃத் இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.


இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் (ரழி) அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள்.(நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)


தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.


மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.


இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.


இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.


வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதுசம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.


உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக் காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிருவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.


ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி)


பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.


வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.


சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறிவருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.


எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.


தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.


இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.


முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.


அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது “உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).


“நபியே! உம்மிடம் அவர்கள் “கலாலா”பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். கலாலா குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.
பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.


அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இருபங்கு (2ஷ3)அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)


வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ(ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: புகாரி 4605)
வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.


“இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)


சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.


இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?


பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனைநிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.
பொருளீட்டுவதானது ஆண்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள கடமையாகும். பெண்கள் மீது அக்கடமை சுமத்தப்படவில்லை.


ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.


இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.


சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.


வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.
பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.


பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.


நான் நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் (ரழி) வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.


பிலால் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். “ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் (ரழி) கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி (ஸல்) கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் (ரழி) கூறினார்கள். அப்போது நபியவர்கள், “உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ (ரழி), (நூல்:புகாரி-1466, முஸ்லிம்-1000)


நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.


பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.

ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

எழுதியவர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்


இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புக்கள், கைதிகள் மீதான சித்திரவதைகள், வன்முறைகள், மத நிந்தனைகள் குறித்தெல்லாம் நியாயமான விசாரணை வேண்டும் என்று யாராவது அழுத்தம் கொடுப்பார்களா? இலங்கைக்கு ஒரு நீதி! அமெரிக்காவுக்கு வேறொரு நீதியா?


செப்டம்பர் 11 தாக்குதலை அல்-கைதாதான் செய்ததென்று எத்தகைய ஆதாரமும் இல்லாமல் கூறி ஆப்கான் மீதான போரை அமெரிக்கா ஆரம்பித்தது. அதற்குப் பாகிஸ்தான் பெரிதும் உதவியது. இப்படி உதவாவிட்டால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்ததே தெரியாமல் போய்விடும் என அப்போதைய அதிபர் கூறினார். ஆனால் இப்போது பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது.


நவம்பர் 26 ஆம் திகதி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கூட இந் நிகழ்ச்சிக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்கா பாகிஸ்தான் வீரர்களைக் குறிவைத்துக் கொன்ற முதல் சம்பவம் அல்ல இது! இருப்பினும் அமெரிக்க, பாகிஸ்தான் உறவில் விரிசல் விழும் சந்தர்ப்பத்தில் இது நடந்துள்ளது. இது தவறுதலாக நடந்தது என அமெரிக்கா கூறினாலும் இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என பாகிஸ்தான் சிரேஷ;ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அஸ்பெக் நதீம் குறிப்பிட்டுள்ளார்.


இந் நிகழ்ச்சியின் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக அமெரிக்கா பயன்படுத்தி வந்த ‘ஷhம்சி’ விமான நிலையத்திலிருந்து டிசம்பர் 11 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு உத்தரவிட்டது. இதனால் அமெரிக்கா தனது விமானங்களை ஆப்கானிஸ்தானுக்கு இடம் மாற்றியது.


பாகிஸ்தான் பிரதமர் ‘யூசுப் ரசா கிலானி’ அவர்கள் நேட்டோ படைகள் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும், தரைப் பகுதியைப் பயன்படுத்துவதையும் தடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.தனது இராணுவ வீரர்களுக்குப் பாதிப்பு என்றதும் குமுறுகிற இவர்கள் ஆப்கானுக்கு எதிரான போரின் போதும் இதே துணிவுடன் இருந்திருந்தால் ஆப்கானின் அழிவுக்குத் துணை போன குற்றத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.


பாகிஸ்தான் தரப்பில் இவ்வாறு இறுக்கமான நிலை நீடிக்கும் அதே நேரம் அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள அதே வேளை பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவிகளையும் நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றது.


இதே வேளை பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்ளும் நிலையில் தலிபான்களுடன் உறவை வளர்க்க அமெரிக்கா முயல்வதாக அறிய முடிகின்றது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ‘தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்லர்’ என்று டூயேட் பாட ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவின் நயவஞ்சகத்தனத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.


ஈராக், ஈரான் போரின் போது சதாமுக்கு உதவி செய்த அமெரிக்கா சதாமையே பின்னர் அழித்தது. ஆப்கான், ரஷ;யா போரின் போது ஆப்கானுக்கு உதவிளூ உஸாமாவை வளர்த்த அமெரிக்கா உஸாமாவையும், தலிபானையும் அழித்தது. ஆப்கான் போருக்கு உதவிய பாகிஸ்தானுடன் இப்போது பகைமையை வளர்த்து வருகின்றது. அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகள், தாம் ஒரு நயவஞ்சகனுடன்தான் நட்புறவு பாராட்டுகின்றோம் என்ற தெளிவினைப் பெறுவது அவசியமாகும்.


அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதல் இப்படியொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இதே வேளை, அமெரிக்கா தனது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரானிடம் இழந்து அவமான முத்திரையை முகத்தில் குத்திக் கொண்டுள்ளது.


RQ-170 உளவு விமானம் CIA இனால் உஸாமாவை உளவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் நிறைந்த விமானமாகும். இதன்படத்தைக் கூட அமெரிக்கா இரகசியமாக வைத்திருந்தது. இந்த விமானம் ஈரான் எல்லைக்குள் ஊடுருவியது! அதனை ஈரான் வெற்றிகரமாகத் தரையிறக்கி தம்வசப்படுத்தியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி தமது விமானம் ஈரானில் விழுந்துவிட்டது. அவர்கள் தர மறுக்கின்றனர் என ஒப்பாரி வைத்துள்ளார். ஆனால் விமானத்திற்கும், அமெரிக்க கட்டுப்பாட்டு நிலையத்திற்குமான நுன் அலைத் தொடர்பை துண்டித்த ஈரான் அதன் கட்டுப்பாட்டை தன்வசப்படுத்தி விமானத்தை இறக்கியுள்ளது. இந்தக் காட்சிகளை தற்போது இணையத்தில் வெளியிட்டுமுள்ளது.


இது அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அவமானமாகும். அதனை ஈரான் இறக்கியது என்று கூறாமல் ‘விழுந்தது’ என்று கூறி அசடு வழிகின்றது.
இதனைப் பார்வையிட்ட ஈரான் அதிகாரிகள் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி மிகக் குறைவானதுதான் என்று கூறியுள்ளனர்.


இந்த விமானத்தை ஆய்வு செய்து இதனைவிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானத்தை தயார் செய்யவும் ஈரான் முனைந்து வருகின்றது. தடியைக் கொடுத்து அடி வாங்குவது என்று இதைத்தான் கூறுவார்கள்.


ஒவ்வொரு முஸ்லிம் நாடும் தனது இராணுவ மற்றும் தொழில்நுட்பத் துறையை வளர்த்துக் கொண்டு, மற்ற முஸ்லிம் நாடுகள் தாக்கப்படுவதற்கு துணை போகாமல், தமக்குள் குடி கொண்டுள்ள தேசியவாத உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைத்தால் யுத்த வெறி பிடித்து ரத்தம் குடித்து வரும் அமெரிக்கப் பேயை அடக்கலாம்.


அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா?

எழுதியவர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்


அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.


சில வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ஹதீஸ்களை மறுத்தனர். இதனை அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த நல்லறிஞர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் மறுக்கவும் செய்தனர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை முஃதஸிலாக்கள் எனும் வழிகேடர்கள் மறுத்தனர். நவீன காலத்தில் அபூரய்யா எனும் வழிகேடனும் அவனது சிந்தனையால் தாக்கப்பட்ட சில சிந்தனையாளர்களும் இந்த தவறான வழிமுறையைக் கையாண்டு பல ஹதீஸ்களை மறுத்து வருகின்றனர்.


நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை முஃதஸிலாக்கள் மறுக்கும் போது “நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரைப் பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்” (25:8) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டினர். அநியாயக்காரர்கள்தான் நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸை ஏற்க முடியாது என்றனர். வழிகேடர்களான முஃதஸிலாக்கள் இப்படிக் கூறினாலும் நல்ல வழி நடந்த நல்லறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த ஆயத்தும், ஹதீஸும் முரண்படுவதாகத் தென்படவும் இல்லை. “அவர்களின் உள்ளங்கள் பொடுபோக்காக இருக்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லையல்லவா? நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயம் செய்தோர், தமக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர். (21:3)


இங்கே அநியாயங்கள் நபி(ஸல்) அவர்களை உங்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்தான் என்பதைக் குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கின்றது. “நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு (வஹி) அறிவிக்கப்படுகிறது என (நபியே) நீர் கூறுவீராக". (18:110)


“நான் உங்களைப் போன்ற மனிதர்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது என (நபியே!) நீர் கூறுவீராக!” (41:6)


அநியாயக்காரர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர் என்று கூறினார்கள் என்பதற்காக நபி(ஸல்) அவர்களை மனிதன் என்று கூறும் அனைவரும் அநியாயக்காரர்களாகிவிடுவார்களா? இந்தக் காபிர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து மனிதர் என்று கூறிய கூற்று சரியானது. ஆனால் அவரது தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே இப்படிக் கூறினர். எனவே தண்டிக்கப்படுகின்றனர். இது போன்ற வசன அமைப்புக்களைக் குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.


மக்கத்து இணைவைப்பாளர்களில் சிலர் கழா கத்ரை தமது இணை வைப்புக்குச் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தினர். அல்லாஹ் நாடியிருந்தால் நாம் இணைவைத்திருக்க மாட்டோம். ஹலாலானவற்றை ஹராமாக்கியிருக்கமாட்டோம் என்று கூறினர். அவர்கள் கூறிய கூற்று சரியானதே! அல்லாஹ் நாடியிருந்தால் இணைவைத்திருக்க மாட்டார்கள். எனினும் இந்த வார்த்தையைத் தவறான நோக்கத்தில் அவர்கள் பயன்படுத்தியதால் அவர்களைக் குர்ஆன் பொய்யர்கள் என்கின்றது.


“அல்லாஹ் நாடியிருந்தால் நாமோ, நமது மூதாதையர்களோ இணைவைத்திருக்கமாட்டோம். (ஆகுமான) எதையும் விலக்கியிருக்கவும் மாட்டோம்” என்று இணைவைத்தோர் கூறுவர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தோரும் நமது தண்டனையை சுவைக்கின்ற வரை பொய்ப்பித்துக் கொண்டேயிருந்தனர். “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? (இருந்தால்) அதை எமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (6:148) நபி(ஸல்) அவர்கள் குறித்து அந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னார்கள். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தை முழுமையாக நிராகரித்து சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதனால் உளறிய உளறலாக அவர்களது போதனையைச் சித்தரிக்க முற்படுகின்றனர்.


அவர்களது அந்தக் கூற்றுக்கும் ஹதீஸ் சொல்லும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை. எனவேதான் புஹாரி, முஸ்லிம் போன்ற பெரும் பெரும் மேதைகளுக்கெல்லாம் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தென்படவில்லை. ஒரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டால் அவற்றுக்கிடையே இணக்கம் காண வேண்டும். இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளன. இரண்டையும் நான் நம்புகின்றேன் என்று ஈமான் கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையே முரண்பாடு இல்லை. இருந்தாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி மௌனம் காக்க வேண்டும். இந்த உண்மையைத் தெளிவாக விளக்குவதற்காக நாம் குர்ஆனிலிருந்து சுமார் 10 உதாரணங்களை உங்கள் முன் வைக்கின்றோம். ஏனெனில் குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.


“இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அவர்கள் இதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:82)


குர்ஆனில் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் முரண்படுவது போல் தென்படலாம். ஆனால் அதில் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது. முரண்படுவதாகத் தோன்றினாலும் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டிருக்கும். எமக்கு முரண்பாட்டைக் களைய முடியாவிட்டாலும் இரண்டும் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும். குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்தப் போக்கு ஆபத்தானதாகும். இந்த சிந்தனை முற்றிப் போனால் ஈற்றில் இதே அணுகுமுறையில் குர்ஆனையும் அணுகி குர்ஆனையும் நிராகரிக்கும் அல்லது முழுமையாக நம்பாத நிலை ஏற்படும். பெரிய சிந்தனைச் சிக்கலில் மூழ்க நேரிடும். (நஊதுபில்லாஹ்) இன்று தவ்ஹீத் வட்டாரத்தில் பாமர மக்கள் கூட இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று வாய் கூசாமல் கூறிவருகின்றனர்.


முரண்பாடுகளைக் களைந்து இணக்கம் காண்பதென்பது துறைசார்ந்த அறிஞர்களுக்கே உரிய பணியாகும். இந்த சிந்தனையைப் பரப்புகின்றவர்கள் அளவுகோளைக் கூறிவிட்டோம் அதற்குப் பின்னர் நீங்கள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எனப் பாமர மக்களது கரங்களில் இந்தத் தவறான அளவு கோளைக் கொடுத்தவர்கள் நீச்சல் தெரியாதவனை ஆழ் கடலில் தள்ளிய துரோகத்தைச் செய்துள்ளனர். இது கரையேற முடியாத கடல் போன்ற ஆழமான அம்சம் என்பதைப் பாமரர்களும் புரிந்து கொள்ள இந்தப் பத்து உதாரணங்களும் உதவும் என்று நம்புகின்றேன். 01. மறுமையில் காபிருக்கு பார்வை உண்டா? “மறுமை நாளில் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தமது முகங்களால் (நடந்து வருபவர்களாகவும் அவர்களை) நாம் ஒன்று சேர்ப்போம்” (17:97) இந்த வசனம் வழிகேடர்கள் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்பதை உறுதி செய்கின்றது.


மார்க்கப் போதனைகளை புறக்கணித்தவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது. இந் வசனங்களைப் பார்கும் போது காபிர்கள், வழிகேடர்கள், வேத போதனையைப் புறக்கணித்தவர்கள், குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பது உறுதியாகின்றது. ஆனால், மற்றும் பல வசனங்கள் மறுமையில் காபிர்கள் பார்ப்பார்கள் என்று கூறுகின்றது. “குற்றவாளிகள் நரகத்தைப் பார்த்து, “நிச்சயமாக தாம் இதில் விழக்கூடியவர்களே என்பதை அறிந்து கொள்வர். அதை விட்டும் தப்பித்துக்கொள்ளும் எந்த இடத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.” (18:53)


குற்றவாளிகள் நரகத்தைப் பார்ப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. “மேலும், பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றினால் அஞ்சியவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர். இன்னும் அவர்கள், “எமக்கு ஏற்பட்ட கேடே! இப்பதிவேட்டிற்கு என்ன ஆனது! (எங்கள் செயல்களில்) சிறியதையோ, பெரியதையோ அது பதிவு செய்யாமல் விட்டு வைக்கவில்லையே! என்று கூறுவர். மேலும், தாம் செய்தவற்றை தம் முன்னால் கண்டு கொள்வர். இன்னும் உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.” (18:49) குற்றவாளிகள் தமது பதிவேட்டைப் பார்ப்பர் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.


குற்றவாளிகள் நரகத்தைக் கண்டது மட்டுமன்றி மறுமையில் அவர்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள், பேசுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது. “குற்றவாளிகள் தமது இரட்சகன் முன்னிலையில் தலை குனிந்தவர்களாய் நிற்பதை நீர் பார்ப்பீரானால், “எங்கள் இரட்சகனே! நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் செவிசாய்த்துவிட்டோம். நீ எங்களை (உலகிற்கு) மீட்டிவிடு (அவ்வாறு செய்தால்) நாங்கள் நல்லறம் புரிவோம். நிச்சயமாக நாம் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்” (என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.)” (32:12) இங்கே குற்றவாளிகளே பார்த்தோம்ளூ கேட்டோம் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் பார்த்தார்கள்ளூ கேட்டார்கள்; பேசினார்கள். ஆனால், ஆரம்பத்தில் கூறிய (17:97) ஆம் வசனம் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர் என்று கூறுகின்றது. இரண்டும் நேருக்கு நேர் முரண்படுவதாகத் தென்படுகின்றது. “அவர்கள் நம்மிடம் வரும் நாளில் எவ்வளவோ தெளிவாகக் கேட்பார்கள்! எவ்வளவோ தெளிவாகப் பார்ப்பார்கள்! ஆனால், இன்றைய தினம் அநியாயக்;காரர்கள் மிகத் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.” (19:38) இந்த வசனம் மறுமை நாளில் அவர்கள் தெளிவாகப் பார்ப்பார்கள், தெளிவாகக் கேட்பார்கள் என்று கூறுகின்றது. அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்ற வசனத்தை மறுப்பது போன்று இவ்வசனம் அமைந்துள்ளது.


(நஊதுபில்லாஹ்) இப்போது நாம் என்ன செய்வது? இரண்டில் ஒன்றை மறுத்து மற்றதை ஏற்பதா? அல்லது முரண்படுகின்றது என்று கூறி இரண்டையும் மறுப்பதா? அல்லது இரண்டுக்கும் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதா? என்று கேட்டால் மூன்றாவதாகக் கூறியதுதான் சரியான முடிவாக இருக்கும். ஒரு வேளை இரண்டையும் இணைத்து எம்மால் இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. இரண்டும் அல்லாஹ்வின் வார்த்தை என்று நான் ஈமான் கொள்கின்றேன் என்று கூறி நம்ப வேண்டும்.


இந்த அடிப்பiயில் இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் வசனங்களையும் சில அறிஞர்கள் பின்வருமாறு இணக்கம் காண முயல்கின்றனர்.

1. அவர்கள் எழுப்பப்படும் போது குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர். பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் பார்வையையும், பேச்சையும் செவிப்புலனையும் கொடுப்பான். அப்போதுதான் நரகத்தைப் பார்த்து அஞ்சி கத்திக் கதறி அவர்கள் முழுமையாக வேதனையை அனுபவிக்க முடியும். இது அருள் அல்ல தண்டனையை முழுமையாக அடைவதற்கான வழியாகும். அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சந்தர்ப்பம். பார்ப்பார்கள், பேசுவார்கள் என்பது வேறொரு சந்தர்ப்பம். எனவே, முரண் இல்லை என்ற அடிப்படையில் அறிஞர் அபூஹய்யான்(ரஹ்) போன்றவர்கள் விளக்க மளிக்கின்றார்கள்.

2. அவர்கள் தமக்கு மகிழ்வளிக்கும் எதையும் காணவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்! தமக்குப் பயனளிக்கும் எதையும் பேசவும் மாட்டார்கள்! உலகத்தில் இருக்கும் போது சத்தியத்தைப் பார்க்காமலும், கேட்காமலும், பேசாமலும் இருந்தது போல் மறுமையில் இப்படி இருப்பர். சத்தியத்தைக் காணாதவர்கள் குருடர்களாகவும், சத்தியத்தைக் கேட்காதவர்கள் செவிடர்களாகவும், கூறப்படுவதுண்டு ஒன்று இருந்தும் அதன் மூலம் பயன்பெறாமல் இருப்பது இல்லாமல் அவை இருப்பதற்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் அவர்கள் குருடர்கள், ஊமையகள், செவிடர்கள் என்று கூறப்படுவதாக இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன் அல் ஆலூஸி(ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.

3. மற்றும் சிலர் இதனை வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர். நரகவாதிகள் நரகத்திற்குப் போன பின்னரும் பேசுவர். அப்போது அல்லாஹ் அவர்களைப் பேசாமல் தடுத்துவிடுவான். “அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23:108 “அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்துவிடும். எனவே, அவர்கள் பேசமாட்டார்கள்.” (27:85) அல்லாஹ்வின் ஏற்பாடு இருக்கும் வரை பார்ப்பர்ளூ பேசுவர்ளூ கேட்பர். அல்லாஹ்வின் தடை வந்த பின்னர் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் மாறிவிடுவர்.


இந்த வசனங்களை ஒருவர் சாதாரணமாகப் பார்க்கும் போது நேருக்கு நேர் முரண்படுவது போன்று தோன்றலாம். ஆனால் முரண்பாடு இல்லை என்பதை அறிய ஆழமான ஆய்வுப் பார்வை தேவைப் படுகின்றது. இதனால் பாமரர்கள் புரிந்து கொண்டு ஆழமறியாமல் காலை விடும் ஆபத்தான வேலையை விட்டும் ஒதுங்கிக் கொள்வது அவரவர் அவரவரது ஈமானையும் மார்க்கத்தையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.


02. மறுமையில் விசாரிக்கப்படுவார்களா? “எவர்களுக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ, அவர்களை நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், அத்தூதர்களையும் நாம் விசாரிப்போம்.” (7:6) இந்த வசனம் தூதர்களும், தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகங்களும் அதாவது அனைத்து மனிதர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றது. “உமது இரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நாம் விசாரணை செய்வோம்”(15:92-93) இந்த வசனத்தில் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்று சத்தியம் செய்து கூறப்படுகின்றது. “மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24) “அவன் அவர்களை அழைக்கும் நாளில், “தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” எனக் கேட்பான்.” (28:65) இந்த வசனங்கள் அனைத்தும் மறுமையில் கேள்வி கணக்கு, விசாரனை இருக்கின்றது என்று கூறுகின்றது.


ஆனால் பின்வரும் வசனங்கள் இதற்கு மாற்றமாக அமைந்திருப்பது போன்று தோன்றுகின்றது (நஊதுபில்லாஹ்). “வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள்.” (55:39) முரண்படுவது போல் தோன்றுவதை இங்கே குறித்த முரண்பாட்டை நீக்குவதற்காக தெளிவு பெறுவதற்காக) என அடைப்புக் குறி போடப்பட்டுள்ளது. அடைப்புக்குறி போட விரும்பாதவர்கள் மனிதனிடமும், ஜின்னிடமும் அவனது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது என மொழியாக்கம் செய்துள்ளனர்.


“குற்றவாளிகள் தங்களது பாவங்கள் குறித்து (தெளிவு பெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.” (28:78) இந்த வசனம் குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றது. அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் மனிதனோ, ஜின்னோ விசாரிக்கப்படமாட்டார்கள் என்றும் குர்ஆனே கூறுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே நேருக்கு நேர் முரண்படுவதாகவே தோன்றும். ஆனால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதுதான் உண்மையாகும். நாம் உடன்பாடு கண்டாலும், காணாவிட்டாலும் கூட இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதும் இரண்டும் இறை வார்த்தைதான் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.


இந்த இருவித கருத்தைத் தரும் வசனங்களுக்குமிடையில் பின்வருமாறு இஸ்லாமிய அறிஞர்கள் இணக்கம் காண முனைந்துள்ளனர்.

1. கேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தகவலை அறியச் செய்வதற்காகவும், செய்திகளைச் சொல்வதற்காகவும் கேட்கப்படும் கேள்வி. இந்தக் கேள்வி குற்றவாளிகளிடம் கேட்கப்படமாட்டாது. அடுத்து கேட்பதன் மூலம் கேட்கப்படுபவர்களைக் கேவலப்படுத்தும் கேள்வி. இது குற்றவாளிகளிடம் கேட்கப்படும் என்று கூறப்படும் வகையைச் சார்ந்த கேள்வியாகும். குற்றவாளிகளிடம் கேட்கப்படுவதாகக் கூறப்படும் கேள்விகளை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம்.


“மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24-55) “இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்க முடியாதவர்களா?” (52:15)


“நிராகரித்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவர். அவர்கள் அங்கு வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். “உங்களது இரட்சகனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டி, உங்களது இந்நாளின் சந்திப்பை உங்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பர். அ(தற்க)வர்கள், “ஆம். (வந்தனர்) எனக் கூறுவர். எனினும் வேதனையின் வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது.” (39:71)


“அது கோபத்தால் வெடித்துவிடப் பார்க்கின்றது. அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்.” (67:8)


இந்தக் கேள்விகள் தகவல் பெறுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. இவை கேட்கப்படுபவர்களை இழிவுபடுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும்.


நபிமார்களும் விசாரிக்கப்படுவதாக குர்ஆன் கூறுகின்றது. இது தகவல் பெறுவதற்கோ, கேட்கப்படுபவரை இழிவு படுத்துவதற்காகவோ கேட்கப்படமாட்டாது. இது அவருடன் சம்பந்தப்பட்ட சமூகத்தில் உள்ள கெட்டவர்களை இழிவு படுத்துவதற்காகவே கேட்கப்படும் கேள்வியாகும். உதாரணமாக, உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகள் என்ன குற்றத்திற்காக நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று விசாரிக்கப்படுவர். (81:9) இது அவர்களுக்கு எதிரான விசாரணை அல்ல. இது அவர்களைக் கொன்ற அவர்களது பெற்றோர்களை இழிவுபடுத்தக் கேட்கப்படும் கேள்வியாகும். இந்த அடிப்படையில் நபிமார்களும் பின்வருமாறு விசாரிக்கப்படுகின்றனர்.


“தூதர்களை அல்லாஹ் ஒன்று சேர்க்கும் நாளில் “நீங்கள் என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான். அ(தற்க)வர்கள், “எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” எனக் கூறுவார்கள்.” (5:109) எனவே, கேள்வி உண்டு என்பது அவர்களை இழிவுபடுத்தும் கேள்வி உண்டு என்கின்றது. கேள்வி இல்லையென்பது தகவல் பெறுவதற்காக எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய தேவை இருக்காது என்பது குறித்துப் பேசுகின்றது. இரண்டும் வெவ்வேறு விடயம் பற்றி உண்டு, இல்லை என்று பேசுவதால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை. நபிமார்களிடம் கேட்கப்படும் கேள்வி அவர்களுடன் சம்பந்தப்பட்ட சமூகத்திலிருந்த கெட்டவர்களை இழிவுபடுத்துவதற்கான கேள்வியாகும்.


2. மற்றும் சிலர் இதனை இப்படி விளக்குகின்றனர். மறுமையில் பல கட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் விசாரிக்கப்படுவர், சிலவற்றில் விசாரிக்கப்படமாட்டார். எனவே, இதில் முரண்பாடு இல்லை என்று கூறுகின்றனர்.


03. கேள்வி உண்டு என்று கூறப்படுவது அடிப்படையான அம்சங்கள் தொடர்பானவை. கேள்வி இல்லையென்று கூறப்படுவது மேலோட்டமான சாதாரணமான அம்சங்களுடன் தொடர்புபட்டவை என்று மற்றும் சில அறிஞர்கள் பிரித்து நோக்குகின்றனர். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு நீங்கிவிடுவதைக் காணலாம். இந்த இணக்கம் காணும் வழியை ஒருவர் அடைந்தாலும், அடையாவிட்டாலும் குர்ஆனின் வசனத்தை மறுக்க முடியாது! இவ்வாறே குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்படுவது போல் தென்பட்டாலும் இணக்கம் காண முயல வேண்டும் முடியாவிட்டால் இரண்டுமே வஹி என்பதால் இரண்டையும் ஏற்கின்றேன் என ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஆக்கத்தில் முரண்பாடு போல் தோன்றும் ஆனால் முரண்பாடு இல்லாத சுமார் பத்து அம்சங்களை குர்ஆனிலிருந்து முன்வைப்பதாக நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.


இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை முன்வைத்துள்ளனர். இது ஆழம் காண முடியாத கடல் போன்ற ஓர் அம்சம். சாதாரண பொது மக்கள் தமக்கு அறிவோ, ஆற்றலோ, விபரமோ இல்லாத இது போன்ற அம்சங்கள் விடயத்தில் நிதானமான போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன். மற்றும் சில உதாரணங்கள் தொடர்ந்து வரும்…இன்ஷா அல்லாஹ்!