எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம்
மாதஇதழ்
குர்ஆன்,
சுன்னா
இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து
பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு
இருக்க முரண்பாடு
இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து
கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே,
குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல்
தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும்.
முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது.
எனவே,
இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என
நம்ப வேண்டும்.
சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கின்றனர். அவற்றை நம்புபவர்களை வழிகேடர்களாகவும்
சிலபோது முஷ;ரிக்குகளாகவும் பார்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளும்
போது நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஸஹீஹானது. அது அவர்களது நபித்துவத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது
என ஏசினர், பேசினர். அப்போது நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது
என்ற ஹதீஸை ஏற்பவன்தான் தவ்ஹீத்வாதி. இநத நிலையிலிருந்து மாறி நபி(ச)
அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு
முரண்படுகின்றது என்று கூறினர். அவர்கள்
இன்று ஒன்றை மறுத்தார்கள் என்றால் நாளைக்கு அவர்கள் மறுத்த ஹதீஸை
நம்புபவன் முஷ;ரிக்காகிவிடுகின்றான். ஆக மார்க்கத்தை
நம்புவதற்கு அவர்கள் எதை விளங்குகின்றார்களோ அதையே அடுத்தவர்களும் விளங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
குர்ஆன்,
ஹதீஸை அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நபித்தோழர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினால்
அவர்கள் வழிகேடர்களாம். ஆனால் குர்ஆன்,
ஹதீஸை இவர்கள் எப்படிப் புரிந்து கொள்கின்றார்களோ அதே போன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் நாம்
வழிகேடர்களாம். ஏன் இந்த முரண்பாடான நிலை
என்று புரியவில்லை.
இந்த வழிகெட்ட போக்கை இனம்காட்டவும்,
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை நிராகரிப்பது தவறான போக்கு. அது குர்ஆனையே
நிராகரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்
என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் முரண்படுவது போல் தோன்றக்கூடிய
பத்துக் குர்ஆன்
வசனங்களை உதாரணத்திற்குத் தருவதாக நாம் கூறியிருந்தோம். ஏற்கனவே ஆறு உதாரணங்களை நாம் பார்த்துள்ளோம். மீதி நான்கு
உதாரணங்களையும் இந்த இதழில் நோக்குவோம்.
07. அல்குர்ஆனின் ஆயத்துக்கள் முஹ்கமானவையா? முதஷாபிஹானவையா?
“அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத்
தெளிவுள்ள) “முஹ்கமாத்” வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு
இடம்பாடான) “முதஷாபிஹாத்களாகும்.” (3:7)
இந்த வசனம் அல் குர்ஆனில் தெளிவான வசனங்களும் இருக்கின்றன. பல கருத்துக்கு இடம்பாடான “முதஷாபிஹ்”
ஆன வசனங்களும் உள்ளன என்று கூறுகின்றது.
“அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு
பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன.”
(11:1)
இந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்குர்ஆனில் எல்ல வசனங்களும்
தெளிவுபடுத்தப்பட்டவை என்ற கருத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
பின்வரும் வசனங்கள் அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவானவை என்ற கருத்தைத் தருகின்றன. (2:99, 10:15, 19:73, 22:16,72, 24:1,
29:49, 34:43, 45:25, 46:7, 57:9, 58:05)
இன்னும் இதே கருத்தைத் தரும் பல வசனங்களைக் காணலாம். இந்த வசனங்களைப் பார்க்கும் போது குர்ஆனில் “முதஷாபிஹா”
வசனங்களே இல்லையென்று எண்ணத் தோன்றும்.
ஆனால், 39:23
ஆம் வசனத்தைப் பார்க்கும் போது முதஷாபிஹான வேதம் என்று
கூறப்படுகின்றது. இந்த வசனத்தின் அடிப்படையைப் பார்த்தால் குர்ஆன்
முழுதுமே முதஷாபிஹத்தான வசனங்களைக் கொண்டது என்ற கருத்துத் தென்படும்.
குர்ஆனில் முஹ்கமும் இருக்கிறது. முதஷாபிஹும் இருக்கிறது.
குர்ஆன்
முழுவதுமே முஹ்கம்தான். முதஷாபிஹ் இல்லை.
குர்ஆனே முதஷாபிஹானதுதான் என்ற மூன்று கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்போலத் தோன்றலாம். ஆனால் அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நிலைப்பாட்டில் கூறப்படுவதால் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை
ஆழமாக அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
குர்ஆனின் வசனங்கள் எல்லாமே தெளிவானவை என்ற ஆயத்துக்கள்.
குர்ஆன்
சொல்லக்கூடிய சட்டங்கள் அனைத்துமே உறுதியானது,
நீதியானது,
சரியானது. அதன் வார்த்தைகள்,
அதன் கருத்துக்கள்
அனைத்துமே அற்புதமானவை. அது சொல்லக்கூடிய அனைத்துச்
செய்திகளும் உண்மையானது,
உறுதியானது. அவற்றின் வார்த்தைப் பிரயோகத்திலோ
அல்லது கருத்திலோ எந்தக் குறைபாடும் இல்லாதது என்ற கருத்துக்களைத்
தரும். இந்த அடிப்படையில் நோக்கும் போது குர்ஆனின் ஆயத்துக்கள்
அனைத்துமே தெளிவானவை,
தெளிவுபடுத்தப்பட்டவை என்ற நிலையை அடைகின்றது.
குர்ஆனே முதஷாபிஹானது என்ற வசனம் தரும் அர்த்தம் அதன் ஆயத்துக்கள் அனைத்தும் ஒன்றையொன்று கருத்திலும், வார்த்தை
அமைப்பிலும், நோக்கத்திலும், உண்மைத் தன்மையிலும், உறுதித்
தன்மையிலும் ஒன்றையொன்று ஒத்தது என்ற கருத்தைத் தரும்.
அதன் சில வசனங்கள் முஹ்கமானது. சில வசனங்கள் முதஷாபிஹானது என்பதன் அர்த்தம்.
முஹ்கமானது என்பது அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்கள் என்ற
கருத்தாகும்.
“(இவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்குக்)
கட்டப்பட்டு நடப்போராகவும், (நல்லறங்களில்) செலவிடுவோராகவும்,
இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாகவும்
இருப்பர்.” (3:17)
“எவர்கள் “தாகூத்” (அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவை)களை வணங்காது தவிர்ந்து, அல்லாஹ்வின்பால் மீளுகிறார்களோ அவர்களுக்கு நன்மாராயம்
உண்டு! எனவே, என் அடியார்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!”
(39:17)
போன்ற வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
முதஷாபிஹான வசனங்களும் இருக்கின்றன என்பது அல்லாஹ் மட்டும் அறிந்த வசனங்களும் அல்லது அறிஞர்கள் மட்டும் முறையாகப் புரிந்து
கொள்ளக்கூடிய வசனங்களும் இருக்கின்றன என்ற கருத்தாகும்.
இதில் எந்தக் கருத்துடைய வசனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் அடுத்த
கருத்துள்ள வசனங்களை மறுப்பதாக அமைந்துவிடும். குர்ஆன்
விடயத்தில் எப்படி அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்கின்றோமோ அதே போன்று குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறப்படும் ஹதீஸ்களையும்
இணைத்து பொருள்கொள்ள முயல வேண்டும். முடியாத போது குர்ஆனில் ஒரு
ஆயத்தை ஏற்று மறு ஆயத்தை மறுக்காது இரண்டையும்
ஏற்றுக்கொள்வது போல் தோன்றும் ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
08. அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டும்:
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில்
அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி
மரணித்து விடவேண்டாம்.” (3:102)
இந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்லாஹ்வை முறையாக அஞ்ச வேண்டும். அணுவளவும் பிசகாமல் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி நடக்க
வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.
“உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்ளூ
செவிசாயுங்கள்ளூ இன்னும், கட்டுப்படுங்கள்ளூ (நல்லறங்களில்) செலவு செய்யுங்கள். (அது) உங்களுக்கு சிறந்ததாகும். எவர்கள் தமது
உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.” (64:16)
இந்த வசனம் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற கருத்தைத் தருகின்றது. இரண்டும் முரண்படுவது போல் தோன்றுகின்றது. இது
குறித்து அறிஞர்கள் விளக்கும் போது இரண்டு விதமான விளக்கங்களைத்
தருகின்றனர்.
1. முடிந்தவரை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனம் முழுமையாக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனத்தை மாற்றி விட்டது. என்ற விளக்கத்தை
ஸயீத் இப்னு சுபைர், அபுல் ஆலியா, ரபீஃ இப்னு அனஸ்,
கதாதா, முகாதல் இப்னு ஹையான், ஸைத் இப்னு அஸ்லம்
போன்ற அறிஞாகள் கூறுகின்றனர்.
2. மற்றும் சிலர் முதல் வசனத்தை இரண்டாம் வசனம் தெளிவுபடுத்துகின்றது. அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்றால் எவ்வளவு
முடியுமோ அவ்வளவுக்கு அதிகமதிகம் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என விளக்கப்படுத்துகின்றது என விபரிக்கின்றனர்.
09. ஆயிரமா? மூவாயிரமா?
பத்ர் போரின் போது முஃமின்களுக்கு உதவுவதற்காக வானவர்கள் வந்தார்கள். வந்த
வானவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி குர்ஆன்
கூறுவதை மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடு
இருப்பது போல் தோன்றும்.
“மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது
உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர்
கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக!)” (3:124)
இந்த வசனத்தைப் பார்க்கும் போது 3000 மலக்குகள் உதவிக்கு வந்துள்ளனர் என்பதைப்
புரியலாம்.
“உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது, “நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு
உதவுவேன்” என்று அவன் உங்களுக்குப்
பதிலளித்தான்.” (8:9)
இந்த வசனத்தில் 1000 மலக்குகளைக் கொண்டு நான் உங்களுக்கு உதவுவேன் என அல்லாஹ் கூறுகின்றான். பத்ருப் போரின் போது முஃமின்களுக்கு
உதவ வந்த வானவர்களின் எண்ணிக்கை ஆயிராமா? மூவாயிரமா?
இதில் ஒன்று சரியென்றால் மற்றொன்று
பிழையாகத்தான் இருக்க வேண்டும். இரண்டுமே சரியாக இருக்க முடியாது. எனவே,
ஏதோவொன்று பிழையாக இருக்க வேண்டும். பிழையான கருத்தைத் தந்த வசனம்
எதுவென்பது தெரியாது. எனவே, இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என வாதிட்டால் ஒருவன்
முஸ்லிமாக இருக்க முடியுமா?
இதை முரண்பாடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. முஃமின்கள் பாதுகாப்புத் தேடிய போது ஆயிரம் மலக்குகளை அவர்களுக்கு
உதவியாக அனுப்புவேன் எனக் கூறிய அல்லாஹ் முஃமின்களின் மன
ஆறுதலுக்காக மூவாயிரமாக உயர்த்துகின்றான்.
ஆயிரம் மலக்குகள் என்பது கூட ஒரு நற்செய்திக்காகவும், மன ஆறுதலுக்காவும் கூறப்படும் செய்திதான். இருப்பினும் தான்
அளித்த வாக்கை விட அல்லாஹ் முஃமின்களுக்கு அதிகமான
உதவியாளர்களை அனுப்பி அருள் புரிந்தான்.
மூவாயிரம் பற்றி கூறிய வசனத்திற்கு அடுத்த வசனத்தில் நீங்கள் பொறுமையுடனும், தக்வாவுடனும் இருந்ததால் பத்ரில்
மூவாயிரம் மலக்குகளை அனுப்பி அருள் புரிந்த அல்லாஹ் இன்னும்
அதிகப்படுத்தி ஐயாயிரம் மலக்குகளை உதவிக்கு
அனுப்பியிருப்பான் என்று கூறப்படுகின்றது.
“ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது
அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான)
அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன்
உங்களுக்கு உதவுவான்.” (3:125)
எனவே,
தக்வாவுக்கும்,
பொறுமைக்கும் ஏற்ப உதவி அதிகரிக்கப்படும்
என்ற உண்மை உணர்த்தப்படுகின்றது. ஆயிரம் என வாக்களித்த அல்லாஹ்
முஃமின்களின் தக்வா,
பொறுமையைப் பொறுத்து அதை மூவாயிரமாக அதிகரிக்கின்றான்.
இதில் முரண்பாடு
இல்லை.
மூவாயிரம்பேர் வந்தனர் என்று கூறிவிட்டு இல்லையில்லை ஆயிரம் பேர் வந்தனர் என்றால்தான் முரண்பாடாகும். ஆயிரம் பேரை உதவிக்கு
அனுப்பினேன் என்று கூறிய அல்லாஹ் மூவாயிரம் பேரை அனுப்பியது முரண்பாடு
அல்ல. அருள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். ஆயிரம் பேர் வந்தனர்
என்று கூறப்படாததும் கவனிக்கத்தக்கதாகும்.
10. நீதமாக நடக்க முடியுமா? முடியாதா?:
பலதார மணத்தின் போது மனைவியருடன் நீதமாக நடக்க முடியும் என்று ஒரு வசனமும் எவ்வளவுதான் முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது என
மற்றுமொரு வசனமும் கூறுகின்றது. மேலாட்டமாகப் பார்க்கின்ற
போது இது முரண்பாடாகவே தென்படும். ஆழமாகப்
பார்க்கும் போது இரண்டும் இரு வேறுபட்ட அம்சங்கள் குறித்துப்
பேசுவதைப் புரிந்து கொள்ளலாம்.
“அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என
நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில்
இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நந்நான்காக மணம் முடியுங்கள்.
நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால்,
ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.)
நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.” (4:3)
இந்த வசனம் நீதமாக நடக்க முடியுமென்றால் பலதார மணம் முடியுங்கள். உங்களால் நீதமாக நடக்க முடியாது என்று நீங்கள் பயந்தால்
ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது. இதன் மூலம்
நிதமாக நடக்கவும் சாத்தியம் இருக்கின்றது என்பதை அறியலாம்.
மனைவியரிடையே நீதமாக நடக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது.. ..
“நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீதமாக
நடந்துகொள்ள உங்களால் முடியாது. நீங்கள் ஒருத்தியின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து அடுத்தவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவள் போல்
விட்டு விடாதீர்கள். நீங்கள் உங்களைச் சீர்செய்து, (அல்லாஹ்வை) அஞ்சி
நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற
அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:129)
முன்னைய வசனம் நீதமாக நடக்க முடியும். அது சாத்தியமானதுதான் என்கின்றது. இந்த வசனம் நீங்கள் முயன்றாலும் முடியாது என்று
கூறுகின்றது. வழிகெட்ட பிரிவினர் ஹதீஸை
அணுகுவது போல் அணுகினால் குர்ஆனில் முரண்பாடு
என்று கூறவேண்டியேற்படும். ஆனால் இரண்டு வசனங்களும் இரு வேறு அம்சங்கள்
பற்றிப் பேசுகின்றன.
நீதமாக நடக்க முடியும் என்று கூறும் வசனம் மனைவிமார்களுக்குரிய உரிமைகளை வழங்குவது தொடர்பானதாகும். உணவு, உடை, இருப்பிடம்,
பாதுகாப்பு, உடல் சுகம் இதையெல்லாம்
மனைவியரிடையே அநீதமில்லாமல் நீதமாக நடந்து கொள்ள முடியும். அப்படியும் நீதமாக
நடக்க முடியாது என அஞ்சுபவர்களுக்கு பலதார மணம் தடையாகும்.
நீதமாக நடக்க முடியாது எனக் கூறும் வசனம் அன்பு செலுத்தும் விடயத்தில் ஒருவரை நேசிக்கும் அதே அளவுக்கு அடுத்தவரை நேசிக்க
முடியாது. ஒருவர்பால் இயல்பாக ஏற்படும்
ஈடுபாட்டின் அளவுக்கு அதிகமாக அடுத்த மனைவியுடனும் ஈடுபாட்டுடன்
நடக்க முடியாது! முடியாது எனக் கூறும் வசனம் இதைத்தான் கூறுகின்றது.
முடியும் எனக் கூறப்படுவது ஒரு அம்சத்தை முடியாது என்று கூறப்படுவது மற்றுமொரு அம்சத்தையாகும். இதே போன்று குர்ஆன் ஒரு
விடயத்தையும், ஹதீஸ் மற்றுமொரு
விடயத்தையும் பேசும் போது சிலர் இரண்டையும் ஒன்றாகப் பார்த்து ஒன்றுக்கொன்று முரண்படுவதாகக் கூறி ஹதீஸை மறுப்பது வஹியின்
ஒரு பகுதியை மறுப்பதாகவே அமையும்.
10. மறுமையில் மறப்பார்களா? மறக்கமாட்டார்களா?
“நிராகரித்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் பூமி தம்மைக் கொண்டு தரைமட்டமாக்கப்படக் கூடாதா? என்று அந்நாளில்
விரும்புவார்கள். அவர்களால் அல்லாஹ்விடம் எந்தச்
செய்தியையும் மறைத்;துவிட முடியாது.” (4:42)
இந்த ஆயத்தைப் பார்க்கும் போது மறுமையில் காபிர்கள் தமது செய்திகளில் எதையுமே மறக்கமாட்டார்கள் என்று புரிந்து கொள்ள
முடிகின்றது. ஆனால் பின்வரும் வசனங்கள் அவர்கள் மறப்பர்கள்
என்று கூறுகின்றது.
“அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணைவைத்தவர்களிடம்,
“நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த உங்கள் இணை தெய்வங்கள் எங்கே?” என்று நாம்
கேட்போம்.”
“பின்னர், “எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத்
தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.”
“எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, நாம் எவ்வித
தீங்கும் செய்து கொண் டிருக்கவில்லையென
சமாதானம் கோருவார்கள். “இல்லை! நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருப்பவை
பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்” (என்று கூறுவார்கள்)” (16:28)
“பின்னர் அவர்களிடம், அல்லாஹ்வை யன்றி நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவைகள்
எங்கே எனக் கேட்கப்படும். அ(தற்க)வர்கள், “அவை எங்களை விட்டும்
மறைந்துவிட்டன. மாறாக இதற்கு முன்னர் எந்தவொன்றையும் அழைப்பவர்களாக
நாம் இருக்கவில்லை” என்று கூறுவர். இவ்வாறே அல்லாஹ், நிராகரிப்பாளர்களை
வழிகேட்டில் விட்டு விடுகின்றான்.” (40:74)
இந்த வசனங்களின் கருத்து முன்னைய வசனத்தின் கருத்துடன் நேரடியாக முரண்படுகின்றது. இப்போது இரண்டையும் மறுப்பதா?
அல்லது இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வதா?
எது சரியான வழி?
என்று சிலர் ஹதீஸிற்கும்,
குர்ஆனுக்கும் முரண்பாடு
கற்பிக்க மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களின்
போக்கு குர்ஆனிலும் சந்தேகத்தை உண்டுபண்ணிவிடும்.
இந்த வசனங்கள் பற்றி இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் கூறும் போது அவர்களது நாவுகள் தாம் இணை வைக்கவில்லை என்று சொல்லும். அல்லாஹ்
அவர்களது நாவுகளுக்கு சீல் குத்திவிடுவான். அப்போது அவர்களது கைகள்
பேசும், கால்கள் சாட்சி சொல்லும்.
இப்போது அவர்கள் எதையும் மறைக்கமாட்டார்கள் என்ற வசனம் செயல்படுத்தப்படுவதைக்
காணலாம்.
“இன்றைய தினம் அவர்களது வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அவர்கள்
செய்து கொண்டிருந்தவை குறித்து, அவர்களது கைகள் எம்முடன் பேசும். மேலும்,
அவர்களது கால்கள் சாட்சி கூறும்.” (36:65)
இந்த வசனமும் இந்தக் கருத்தைத்தான் தருகின்றது.
முரண்படுவது போல் தோன்றும் பல குர்ஆன் வசனங்களை உதாரணமாகக் குறிப்பிட்டோம். இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட
வசனங்களுக்கு அல் குர்ஆன் விளக்கவுரையில் தேர்ச்சி பெற்ற
அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுப்பது தவறான அணுகுமுறையாகும். இந்த சிந்தனைப் போக்கு வளர்ந்துவிட்டால்
குர்ஆன் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டவை
போன்ற வசனங்களைக் கூறி குர்ஆனையும் நிராகரிப்போர் உருவாகிவிடுவர்.
இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே இவற்றை உதாரணமாகத் தந்தோம். குர்ஆனுக்கு
முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்த ஆபத்தான
போக்கு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது என்ன
என்பதை அடுத்து நோக்குவோம்.