டைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை
மக்களின் மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலான கட்டுரை வெளியாகியுள்ளதற்காக "டைம்' பத்திரிகையின் விற்பனையை தடை செய்த இலங்கை அரசு, அப்பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்தது. மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான கலவரம் குறித்த செய்தியை "டைம்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்பத்திரிகையின் ஜூலை 1-ம் தேதி பதிப்பில் புத்த மதத்தினரை விமர்சித்து கட்டுரை வெளியாகியிருந்தது. இலங்கையில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்நிலையில், அப்பத்திரிகையில் வெளியான கட்டுரை சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால், அதன் விற்பனைக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. விமானத்தில் வந்த அப்பத்திரிகையின் 4,000 பிரதிகளை கொழும்பு சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அக்கட்டுரை இருப்பதால், "டைம்' பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனை என்ற அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.