Wednesday, September 24, 2008

தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -“யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” (அல்-குர்ஆன்).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.
யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.” இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி)
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
அல்லாஹ் நம்மனைவரையும் ஜகாத்தை முறைப்படி கொடுத்து வரக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.
Article taken from சுவனத்தென்றல் - http://suvanathendral.com/portal

இறையச்சம் ரமழான் மாதத்திலும், பிறமாதங்களிலும், ஒரு பார்வை

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இறைநம்பிக்கையாளர்களே! இறையச்சமுடையவர்களாவீர்கள் என்ற ஆதரவுடன் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது நானே நேரடியாக கூலி வழங்குவதாக சொல்லும் இறைவன்; இங்கு நோன்பு கடமையாக்கப்பட்டதின் முழு நோக்கமுமே இறையச்சம் ஏற்படுவதேயாகும் என்கிறான். அப்படியென்ன இறையச்சத்திற்கு முக்கியத்துவம் என நாம் சிந்தித்ததுண்டா?
1) சஹர் உணவு ஹலாலாக இருக்கவேண்டும் என்பதிலிருந்து ஓவ்வொரு நாளின் ஆரம்ப உணவும், ஹலாலான உணவைக்கொண்டு நோன்பு திற என்பதிலிருந்து ஓவ்வொரு நாளின் இறுதி உணவும் ஹலாலாக அனுமதிக்கப்பட்ட விதத்திலேயே இருக்கவேண்டும் என்பதையும், இடைப்பட்ட நேரங்களில் தடுக்கப்பட்ட விஷயங்களை விட்டு ஒதுங்கியிருப்பதைப் போல் வாழ்நாள் முழுதும் அதையே பேணி நடக்கவேண்டும் என்பதையும், இம்மாதத்தில் தொழுகையைப் பாதுகாத்து வருவது போல் மற்ற மாதங்களிலும் பாதுகாக்க வேண்டும் என்பதையும், ஏழைஎளியோர் மீது இம்மாதத்தில் ஒரு கவனம் இருப்பதுபோல் மற்றமாதங்களிலும் இருக்கவேண்டும் என்பதையும், குர் ஆனின் பக்கம் தொடர்பு இருப்பது போல் எல்லா மாதங்களிலும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ளவே இறைவன் ஆண்டு தோறும் இப்பயிற்சி பெறுவதை கடமையாக்கியிருக்கிறான்.
2) உன்னை ஏசியவனுக்கு நீ கைநீட்டி அடிப்பது இறையச்சத்திற்கு முரணாகும், அவனை மன்னித்துவிடுவது உன் இறையச்சத்தை அதிகரிக்கும்.
3) உன்னை ஒரு அடி அடித்தவனுக்கு அவனது அடியைவிட பலமாக அடிப்பதும், இரு அடி அடிப்பதும் இறையச்சத்திற்கு முரணாகும்.
4) உன் அலுவலகப் பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தொலைபேசியை, கைபேசியை, ஊர்திகளை, இன்னும் அதுபோன்றவைகளை சொந்த உபயோகங்களுக்கு பயன்படுத்துவது இறையச்சத்திற்கு முரணாகும். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் அரசுப்பப்பணிகளுக்கு ஒரு மெழுகுவர்த்தியும், தன் சொந்தப்பணிகளுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
5)ஹராமா? ஹலாலா என சந்தேகத்திற்குரிய உணவை உண்ணுவது இறையச்சத்திற்கு முரணாகும்.
6) பிறரிடமிருந்து புகழையோ, பெயரையோ எதிர்பார்த்து செய்யும் அனைத்து காரியங்களும் இறையச்சத்திற்கு முரணானதாகும்.
7) குர்ஆன் போன்றவற்றை சுத்தமின்றி தொடுவதும் இறையச்சத்திற்கு முரணாகும், ஒருநாட்டு தலைவனின் உருவபொம்மைகளை எரிப்பதில் அத்தலைவனுக்கு ஏதாவது வலிக்கிறதா? பின்னர் ஏன் அம்மக்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். உனது, அல்லது நி வசிக்கின்ற நாட்டின் ஒரு ரூபாய் நாணயத்தைகூட பொது இடங்களில் கிழித்து வீசு பார்ப்போம், அங்குள்ள காவல்துறை உன்னையும் கைது செய்து தக்க சன்மானங்களை தாராள மனசோடு தரும், ஏன் ? அதில் அந்நாட்டையோ, அந்நாட்டின் தலைவனையோ அவமானப்படுத்துவதாக கருதப்படுகிறது, இறைவார்த்தைகள் எழுதப்பட்டுள்ள காகிதங்கள் அதை விட எத்தனையெத்தனையோ மடங்குகள் மதிக்கத்தக்கவையென நமக்கு தெரியாதா?
8) அந்நிய ஆடவர்களின் பக்கம் பெண்கள், அந்நிய பெண்களின் பக்கம் ஆண்கள் தன் பார்வைகளை செலுத்துவதும் கூட இறையச்சத்திற்கு முரணானதாகும்.
9) ஒருவனுக்கு கடனுதவி செய்துவிட்டு, அதைகாரணமாக வைத்து தனக்கு சாதகமாக அவனது பதவி, மதிப்பைவைத்து பல பணிகளை கடன் பெற்றவனிடமிருந்து வாங்கிக்கொள்வதும் கூட இறையச்சத்திற்கு முரணானதாகும். இமாம் அபூஹனிபா அவர்கள் கடன் பெற்றவனின் வீட்டு நிழலில் கூட நிற்கமாட்டார்கள் ஏனெனில் அது வட்டிக்கு சமமாக கருதியதாக வரலாறு கூறுகிறது.
10) இன்னும் சற்று மேலே சென்றால்: கணவனின் பொருளை மனைவியும், மனைவியுன் பொருளை கணவனும் அவர்களுக்குள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவர்கள் உபயோகிப்பதும், பிறருக்கு சன்மானமாக வழங்குவதும் இறையச்சத்திற்கு முரணானதாகும். இதில் ஒரு சிலவற்றையே கூறப்பட்டுள்ளது, ஆனால் முழு வாழ்க்கையும் இறையச்சத்தோடு ஒருங்கிணைந்ததாகும் ஏனெனில் குர்ஆன் இறையச்ச முடையவர்களுக்குத்தான் வழிகாட்டும் என குறிப்பிடுகிறது, இறையச்சமுடையவர்களுக்கே பல உயர்தர சுவர்க்கங்கள் இருப்பதாக குர் ஆன் கூறுகிறது. மறுமைநாளின் பயங்ககரத்தை விட்டு காப்பாற்றுவதாக இறையச்சமுடையவர்களுக்கே குர் ஆன் குறிப்பிடுகிறது, ஒருசில இடங்களில்தான் ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கங்கள் இருப்பதாக குர் ஆன் சொல்கிறது அதுவும் இறையச்சத்துடன் கூடிய அமல்கள்தான் எனப்பொருள்படும், எனவேதான் குர்ஆன் ஹஜ்ஜின் விஷயத்தின் குறிப்பிடும்போது “கட்டிச்சாதம் கட்டிக் கொள்ளுங்கள், கட்டிச்சாதங்களில் சிறந்தது இறையச்சமாகும்” என்கிறது, எனவே இறையச்சம் என்பது நோன்பு காலத்தில் மட்டும் தேவையானது அல்ல, மாறாக மரணவாயிலை தன்னுயிர் அடையும் வரை அனைவருக்கும் தேவையான முதலீடாகும். அப்பொழுதுதான் வெற்றி.
Thanks: மௌலவி முஹம்மது இப்ராஹீம்

Monday, September 8, 2008

இறைவனுக்காக இழப்போம் கொஞ்சம்!

மதீனாவெங்கும் ஒரே விழாக்கோலம்.
இறைத்தூதர் வரப்போகிறார்கள் அல்லவா?
தலஅல் பத்ரு அலைனா
மின் ஸனிய்யதில் வதாஇ
வ ஜபஷ் ஷூக்ரு அலைனா
மா தஆ லில்லாஹி தாஇ
என்று சிறுமிகள் எல்லாம் பாடிக் கொண்டுள்ளார்கள்.

உக்பா இப்னு ஆமிர் இதைப் பற்றி எதனையும் தெரிந்துகொள்ளாமல் அவர் பாட்டுக்கு மலைச் சாரலில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

தங்களுடைய ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் உடனே மதீனாவுக்கு ஓடோடி வந்தார். இறைவனின் தூதரிடம் பைஅத் செய்துகொண்டார். ஆனாலும் அவரால் அல்லாஹ்வின் தூதருக்குப் பக்கத்திலேயே இருக்கமுடியவில்லை.

என்ன செய்வது?
வாழவேண்டுமென்றால் சம்பாதிக்க வேண்டும்!

அவரிடம் இருக்கும் கொஞ்சம் ஆடுகளை மலைப் பள்ளத்தாக்குகளில் சென்று மேய்த்தால் தான் சாப்பாட்டுக்கே வழிபிறக்கும்.
சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது இஸ்லாமைப் பற்றி சிந்திக்க முடியுமா?
வேறுவழி இல்லாததால் அவர் இரண்டுநாட்களில் ஆடு மேய்க்கக் கிளம்பிவிட்டார்.

அங்கே அவர் மாதிரியே பன்னிரண்டு பேர் ஆடுமேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அனைவருக்குமே ஒரே கவலையாக இருந்தது கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள் தினந்தோறும் ஓர் ஆள் மதீனாவுக்குப் போவது
அல்லாஹ்வின் தூhருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவர் சொல்லதை எல்லாம் கேட்டுக்கொள்வது
அதை மாலையில் தோழர்களிடம் வந்து கூறிவிடுவது.
இதுதான் அவர்களுடைய திட்டம்!
இந்தத்திட்டத்தில் உக்பாவும் உடன்பாடில்லை.

தன்னுடைய ஆடுகளை நண்பர்களிடம் விட்டுவிட்டுப்போக அவர் மனது இடம் தரவில்லை.
நீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆடுகளை என்னிடம் விட்டுச் செல்லுங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் நான் போக மாட்டேன்!
என்று கூறிவிட்டார்.

இப்படி தினமும் ஒரு சகோதர் மதீனா போவார். அல்லாஹ்வின் தூதர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கெண்டுவருவார். உக்பா மட்டும் போகவே மாட்டார். மலையிலேயே உட்கார்ந்திருப்பார்.

ஒருநாள் தனியாக தன்னுடைய ஆடுகளை உக்பா மேய்த்துக் கொண்டு இருந்தார். தன்னுடைய மனதைப் பார்த்து கேள்வி கேட்டார்:
ஏன் நீ மட்டும் இஸ்லாமைக் கற்றுக் கொள்ள போகவே மாட்டேன் என்கிறாய்?
இப்படியே ஆடுகளை மேய்த்து சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டால்
நாளை மறுமையில் என்ன செய்வாய்?
அங்கே உன்னை யார் காப்பாற்றுவார்கள்?
உன்னுடைய இந்த ஆடுகளா?
இல்லை நீ சம்பாதிக்கும் பணமா?
வருக்கு மிகவும் பயமாக இருந்தது.
அப்போதே அவர் தீர்மானித்துவிட்டார்.
நான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திப்பேன்
அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இஸ்லாமைப் படித்துக் கொள்வேன்.
அல்லாஹ்வின் அன்பைச் சம்பாதிக்க முயற்சி பண்ணுவேன்!
இன்ஷா அல்லாஹ்!

மதீனாவுக்குச் செல்லும் பாதையில் அவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பின்னால் நடக்கப் போவது அவருக்கு எதுவும் தெரியாது.

ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞராக தாம் மாற போகிறோம்!
குர்ஆனை ஓதும் காரியாக மாறப் போகிறோம்!
மிகப் பெரிய இஸ்லாமிய வெற்றி வீரராக மாறப் போகிறோம்!
உலக்தின் மிகப்பெரிய பண்பாட்டுச் சிகரமான டமாஸ்கஸ் நகரையே தாம் வெற்றிக் கொள்ளப் போகிறோம்!
வரலாற்றில் என்றென்றும் இடம் பிடிக்கப் போகிறோம்!
எதுவுமே அவருக்குத் தெரியாது.
இஸ்லாமை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் மதீனா நகரை நோக்கி போய் கொண்டிருந்தார்.
தனக்காக தியாகம் செய்து வரும் உக்பாவை அல்லாஹ் கைவிட்டு விடவில்லை.
அவர் பெயரை பொன் எழுத்துகளால் எழுதினான் வரலாற்றில்!!
அல்ஹம்துலில்லாஹ்!

ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும்.
சொர்க்கம் வேண்டுமென்றால்
அல்லாஹ்வின் அன்பு வேண்டுமென்றால்
நாமும் கொஞ்சம் இழக்க வெண்டும்!
Thanks: /islamiyappaarvai.blogspot.com

Sunday, August 3, 2008

இஸ்லாம் பற்றி தந்தை பெரியார்

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! - (தந்தை பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931) நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.
அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான்..
இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாதவன், குளத்தில் இறங்கக் கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.
ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

பெரியார் பற்றி கொடிக்கால் செல்லப்பா:
தமிழ்நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் ஒரு 63 ஆண்டுகளுக்கு முன்னால சீலயம்பட்டி கிராமம்தான். இந்தக் கிராமத்திற்கு அய்யா பெரியார் போகிறார். மதமாற்றம் நடந்தது பற்றி கேள்விப்பட்டு, அந்த மக்களை எல்லாம் கூட்டிவைத்துப் பெரியார் பேசுகிறார். ரொம்ப உணர்வுப்பூர்வமாகப் பெரியார் பேசுகிறார்:
"நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்ததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கிவிட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டுத்தான் பேசுவதற்குப் போவேன். ஆனால், இப்போது என்னுடைய சொந்தச் செலவில் நான் உங்களை வந்து பார்த்துப் பாராட்டிவிட்டுப் போக இங்கு வந்திருக்கிறேன்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். பெரியார், மனந்திறந்து பேசக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானி அல்லவா! சமூக விடுதலை பெற்ற அந்த மக்களைப் பார்ப்பதற்காகத் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மாமனிதன் தன்னுடைய சொந்த செலவிலேயே அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்றால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரைத்தான் சொல்ல முடியம்.
-பிறைநதிபுரத்தான்
Thanks: TAFAREG
இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஸயீத் (ரலி), அபூஹூரைரா(ரலி) இருவரும் அறிவிக்கின்றார்கள்:
''ஒரு பயணத்தில் மூன்று பேர் சென்றால், அவர்களில் ஒருவரை அவர்கள் தலைவராக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினாhர்கள்.(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நாங்கள் ஒரு பயணத்தில் இருந்த போது, தன் வாகனத்தில் இருந்த ஒருவர், வலதுபுறமாகவும் - இடதுபுறமாகவும் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''(வாகனத்தின்) முதுகில் மேல் மிச்ச - இடமுள்ளவராக ஒருவர் இருந்தால், வாகன வசதி இல்லாத ஒருவருக்கு அதை ஒதுக்கட்டும்! ஒருவரிடம் பயண உணவில் மீதம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு என அதைக் கொடுக்கட்டும்! என்று ஒவ்வொரு பொருட்களின் தனித்தனி வகைகளாக நபி (ஸல்) கூறினார்கள். மேல் மிச்சமாக உள்ள எதுவும் நமக்கு உரிமையானது அல்ல'' என்று நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 969)

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''