Monday, March 18, 2013

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறா​ர்கள்?

எழுதியவர்:- எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப்
 
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம்.
· முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல்
· மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல்.
· இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல்.
· முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல்.
· ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல்.
· சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல்.
· முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல்.
போன்ற பல்வேறு திட்டங்களுடன் இந்த இனவாதிகள் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்படுகின்றனர்.
“இந்நாட்டு சட்டங்களை ஏற்று இருக்க முடியுமானால் இருங்கள். இல்லையேல் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று இப்போது பகிரங்கமாகப் பேசத் துவங்கி விட்டார்கள்.
முஸ்லிம்களை எதிரிகளாகவும் தீயவர்களாகவும் சிங்கள மக்களின் மனங்களில் பதிவுசெய்யும் காரியங்களில் இறங்கிவிட்டார்கள். பகிரங்கமாக எதிர்ப்புக் கோஷங்கள் மற்றும் சுலோகங்களை ஏந்திச் சென்று, முஸ்லிம்களை குழப்பி, வன்முறையை உண்டுபண்ண முயற்சிக்கிறார்கள். பௌத்த ஆலயங்களில் நடைப்பெறும் மதரீதியான நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வினியோகிக்கிறார்கள். சிஹ்கள சிறுவர் பாடசாலைகளில் முஸ்லிம்கடைகளை புறக்கணிக்குமாறு போதிக்கிறார்கள். முஸ்லிம்களின் வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களின் சுவர்களில் தகாதவார்த்தைகள் எழுதி குறிப்பாக பன்றியின் உருவங்களை வரைந்து அதற்கு பக்கத்தில் ஹலால் என எழுதிவிட்டுச் செல்கிறார்கள்.இவ்வாறாக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் எதிர்பார்த்த குழப்பங்கள் ஏற்படவில்லை என்பது இவர்களுக்கு பெரிய ஏமாற்றம். எனவே கடுமையான சொற்பிர யோகங்கள் காரசாரமான வார்த்தைகள் என்பவற்றைப் பயன்படுத்தி தூற்றுகிறார்கள்.
குர்ஆனுடைய சில வசனங்களை வாசித்து தப்பான விளக்கங்கள் கொடுக்கிறார்கள். காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு குர்ஆன் ஏவுகிறது என கூறி பயங்கரவாத மாரக்கமாக இஸ்லாத்தை காண்பிக்கிறார்கள்.
நிச்சயமாக இவர்களுக்குப் பின்புலமாக அரச சார்பு உதவிகள் உண்டு என்பது இப்போது நாட்டுக்கு தெளிவாகிவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மதவாதிகள் மேற்கொண்ட அதே பிரச்சர முனைப்பையும் செயற்பாட்டினையும் இங்கேயும் இவர்கள் மேற்கொள் கிறார்கள். சிவசேனா அமைப்பை விட நாம் பிரபல்யமடைந்து விட்டோம் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரர் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பர்மிய முஸ்லிம்கள் சுமார் 20,000 முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவதற்கும் இதுபோன்ற பிரச்சினைகளே காரணமாக அமைந்தன. பர்மாவும் பௌத்த நாடு என்பது இங்கே குறிப் பிடத்தக்கது.
தற்போது ஜெனீவா பிரச்சினை முடிவுறும் வரை தற்காலிகமாக முஸ்லிம்களுக்கு எதிரான இப்போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. ஹலால் பிரச்சினையைக் காட்டி உலமா சபையை தாக்குதலுக்கு உட்படுத்தி முஸ்லிம்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டுள்ளார்கள் என்பது நன்கு தெளிவாகியுள்ளது.
12வருடங்களாக அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைப்முறைப்படுத்பட்டு வந்த ஹலால் விவகாரத்தை ஒரு பிரச்சனையாக மாற்றி சிங்கள வர்த்தகர்களின் செல்வத்தை சுரண்டுவதாக கூறி ஹலாலை நிறுத்த வேண்டும் என்றார்கள். ஆனால் சிங்கள வர்த்தக அமைப்பு இதனை ஆதரிக்கவில்லை. ஹலாலை நிறுத்;தினால் பெரும் நட்டம் ஏற்படுவதாக இப்போது தான் இந்த வரத்தகர்கள் குறிப்பிடுகிறார்கள் . மூன்று மாதத்திற்கு முன்பே இதனை அவர்கள் குறிப்பிட்டிருந்தால் சிங்கள மக்கள் உண்மையை விளங்கியிருப்பார்கள். தற்போது உலமாசபை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்ஷ மற்றும் பௌத்த மகா நிகாய தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு கடந்த 11.02.2013 அன்று பத்திரிகையாளர் மாநாட்டில் தங்களது முடிவுகளை பின்வருமாறு அறிவித்தார்கள்.
“வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவதென்றும் உள்நாட்டுக்கு வேண்டுமானால் ஹலால் குறியீடு பதித்து கொள்ளலாம்” என்றும் சுமுக முடிவு காணப்பட்டது. இந்த முடிவினை மூன்று நிகாய பௌத்த தேர்களும் வரவேற்றதுடன் ஜம்மியதுல் உலமா சபைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியரி பெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிட்டதுடன் இந்த முடிவு பல கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவு என்றும் இது ஒருசாராருக்கு வெற்றியென்றும் மற்ற சாராருக்கு தோழ்வி யென்பதுமல்ல மாறாக நர்டுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். அத்துடன் பொதுபல சேனாவின் வற்புறுத்தலின் போரில் எடுத்தமுடிவா இது என் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது பொதுபல சேனா ஹலால் பிரச்சனையை கிளப்பியதற்கு நன்றி தெரிவிப்பதுட்ன் பொதுபல சேனா என்பது முற்றுமுழுதான பௌத்த நிகாய அல்ல என்றும் குறிப்பிட்டார்.
“இந்த முடிவு தேசத்தின் நலனுக்காக விட்டுக் கொடக்கப்பட்ட முடிவு” என ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நாட்டின் இறைமையை பாதுகதாக்க நாடு பிளவுபடுவதை தடுப்பதற்காகவும் முஸ்லிம்கள் செய்த தியாகங்களுடன் இந்த தியாகமும் இப்போது வரலாறாக மாறியுள்ளது.
ஹலால் முஸ்லிம்களின் மார்க்க உரிமை. அதனை உலமா சபை முற்றாக விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ஹலாலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த முடிவினையும் இனவாத மதவாத அமைப்புகள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழை வழங்கலாம் என கோரியவர்கள் தற்போது அத்தகைய சுமுகமான முடிவு வந்த போது அதனை ஏற்கமாட்டோம். முற்றிலுமாக நீக்கிக் கொள்ள வேண்டும் என கோருவது விஷமத்தனமான போக்கேயன்றி வேறில்லை. அதுமட்டுமன்றி முஸ்லிம்களுக்கெதிரான போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்.
எனவே முஸ்லிம்கள் இனவாதிகளின் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் அவசரப் படாமல் நிதானமாக பொறுமையுடன் காரியமாற்ற வேண்டும். ஈமானிய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டு, அல்லாஹ்விடம் கையேந்தி பாவமன்னிப்புக் கோரி, பிரார்த்திக்கவும் வேண்டும். எங்களது நல்லொழுக்கமும் நம்பிக்கையும் நாணயமும்தான் எமக்கு எதிராக வரக் கூடிய பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடியதாகவும் பெரும் பான்மை மக்களின் நல்லுள்ளங்களை வெற்றிகொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
இனிவரும் காலங்களில் சிங்களப் பாடசாலைகளில் எமது பிள்ளைகளை அனுமதிப் பதும் பிரச்சினைகளாகலாம். அவர்களுடைய கலாசாரங்களுக்கு உட்படுத்தப்படுவதும் பிரச்சினைகளாகலாம். எனவே முஸ்லிம் பாடசாலைகளில் முன்னேற்றங்களில் நாம் கவனம் செலுத்துவதோடு தனியார் வகுப்புக்கள் முஸ்லிம் பகுதிகளில நடாத்துவதற்கான வழிகளைப்பற்றி ஆராயவேண்டும்.
எமது வாலிபர்களை (ஆண்-பெண்) பண் படுத்தும் வழிகளை சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் அத்தியவசியமன்றி கடைகளுக்கு அல்லது சந்தைகளுக்கு போவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஊர் மட்டங்களிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகி கள் மற்றும் ஜமாஅத்களுக்கிடையில் சமூக நலன் கருதி ஒன்றுபட்டு பொது விடயங்களில் செயலாற்ற வேண்டும். எங்களது குத்பா மிம்பர்களை ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் வியாபாரிகள் அல்லாஹ்வுக்குப் பயந்து நீதமாகவும் அன்பாகவும் நடந்து கொள்வதுடன், குறைந்தளவுக்கேனும் (நட்டம் போகாத வகையில்) நல்ல பொருட்களை விற்பனை செய்து, எம்மை விட்டும் கைநழுவும் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

No comments: