நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்.
”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
ஒருவர் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமளான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.
இப்படிப்பட்ட மிக சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை, ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது சிரமமான ஒன்றல்ல. இந்த ஆறு நோன்புகளையும் தொடர்ந்து நோற்க முடியாதவர்கள் விட்டுவிட்டாவது நோற்கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடிவதற்குமுன் நோற்க வேண்டும். யார் ரமலான் மாத விடுபட்ட நோன்பை நோற்க இருக்கின்றார்களோ அவர்கள், அவர்களின் கடமையான ரமலான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்க வேண்டும்.
*எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்கமுடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணைபுரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)*
No comments:
Post a Comment