Monday, April 23, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்திலேயே அமைய வேண்டும்: அரசியல் கட்சிகள்

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் இன்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன. குறித்த பள்ளிவாசல் பழைய இடத்திலேயே அமைவதற்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என அரசியற் கட்சிகள் தெரிவித்தன.


தம்புள்ளை பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டமை எதிர்ப்பு தெரிவித்து பல அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து இன்று ஞாயிறுக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர் இங்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, "அநுராதபுரத்திலுள்ள புனித பூமியில் அமைச்சரொருவருக்கு சொந்தமான மதுபானசாலை உள்ளது. அப்படி அநுராதபுர புனித பூமியில் மதுபானசாலை இருக்க முடியும் என்றால் ஏன் தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்க முடியாது?


இந்த தம்புள்ளை புனித பூமியில் பிரபல ஹோட்டேல் மற்றும் கிரிக்கெட் மைதானம் ஆகியன உள்ளன. இவ்வாறான நிலையில் பள்ளிவாசல் இருப்பதனால் தம்புள்ளை விகாரையிலுள்ள பௌத்த பிக்குகளுக்கு என்ன பிரச்சினை?


இந்த பள்ளிவாசல் பிரச்சினையை பெரிதாக்கிய சமூகங்களிடையே பிரச்சினையை உருவாக்கியது ஒரு பிராந்திய வானொலி சேவை. நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் வானெலி சேவைகளை கண்கானிக்கு தொலைத்தொடர்புபடுத்தல் ஆணைக்குழு இந்த வானொலி சேவையை ஏன் கண்காணிக்கவில்லை? இப்பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள உடைக்கப்பட்டால் அதற்கு நான் எதிர்ப்பில்லை. ஆனால் குறித்த கட்டிட உடைப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், "குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் நான் மிக்க கவலைப்பட்டேன். தேங்காய் பறிப்பதற்க்காகவா முஸ்லிம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தனர். நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டியில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவன் என்ற வகையில் சிங்கள மக்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அத்துடன் அவர்களின் கலாசாரங்களை சிறுபான்மையினரான நாங்கள் மதிக்கின்றோம். அவ்வாறான நிலையில் இப்பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எந்தவொரு பௌத்த மகனும் ஏற்றுக்கொள்ளமாட்டார். இந்த பள்ளிவாசல் விவகாரத்தினை அரசாங்கம் தலையீட்டு உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அத்துடன் பௌத்த தேரர்கள் இவ்வாறான செயல்களில் ஒருபோதும் ஈடுபட கூடாது. மதம், இனம் மற்றும் சிறுபான்மையினர் இல்லை என்று தெரிவிக்கும் இந்நாட்டில் இந்த சம்பவத்தினால் பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளது" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, "புன்னிய பூமியில் பள்ளிவாசல் அமைக்க முடியாது என்றால் கதிர்காமம் மற்றும் கண்டி ஆகிய புனித பூமிகளில் பள்ளிவாசல் அமைய பெற்றுள்ளது. புனித பூமி என்றால் விகாரைகள், கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியன இணைந்து காணப்படுவதே ஆகும். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.


குறித்த பள்ளிவாசல் உடைப்பு தொடர்பில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஹிவளை – கல்கிஸை மேயர் தனசிறி அமரேசகவிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "எமது மாநகரத்தில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை விரட்டியத்துள்ளேன். இவ்வாறு யாரும் எதிர்காலத்தில் செயற்பட்டால் விரடியடிக்கப்படுவார்கள்" என்றார்.


இவ்வாறே முஸ்லிம் அமைச்சர்களும் இதற்கு எதிராக செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளை தொப்பியுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பரிசாகவே அரசாங்கத்தினால் இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடருமானல் மற்றுமொரு யுத்தம் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், "இந்த பள்ளிவாசல் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அமைதியாக இருக்கவில்லை. இப்பிரச்சினை தீர்ப்பதற்காக இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயத்தில் அமைதியை கடைப்பிடிக்கவில்லை. இந்த பிரச்சினையை சமாதானமாகவே தீர்க்க முற்படுகின்றோம். சமாதனமாக தீர்க்கு முயற்சி தோல்வியடையுமானால் அதற்கு மாற்றீடான நடவடிக்கையினை முஸ்லிம் கட்சிகள் மேற்கொள்ளும்" என்றார்.


ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இப்பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதேவேளை, இப்பள்ளிவாசலை அகற்றுமாறி வேறிடத்தில் பள்ளிவாசலொன்றை அமைக்க உதவுமாறும் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
- தமிழ் மிரர்

No comments: