Sunday, April 22, 2012

புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்

- எஸ்.எம்.எம்.பஷீர்
"அன்பினால் கோபக்காரனை வெல்,நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்)


சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது.

அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகள் தம்புள்ளையில் சுமார் ஐம்பது தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் பௌத்த மத கலாச்சார நகரங்களில் ஒன்றாக திகழும் தம்புள்ளயில் புனிதப் பிரதேசத்தில் இப்பள்ளிவாயல் அமைந்துள்ளது என்பதை " கண்டுபிடித்து " இப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று தீவிர பிரச்சாரங்கள் சில வாரங்களுக்கு முன்னர் முடுக்கிவிடப்பட்டன. அப்பிரச்சாரங்களை முன்னின்று நடத்திய சிறி சுமங்கல தேரர் பள்ளிவாசல் தகர்க்கப்படல் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்துக்கு தனது ஆளுமைக்குட்பட்ட ரஜ மக விகாரையின் பௌத்த குரு குல மாணாக்கர்களையும், தம்புள்ளையின் தனது பிரச்சாரத்தால் தூண்டப்பட்ட கிராமப்புற சிங்கள தீவிரவாத மக்கள் பலரையும் துணைக்கழைத்து பல்லாண்டு தம்புள்ளையில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை மத உரிமையை பறித்தெடுக்க முயற்சித்துள்ளார்கள்.


இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் போல் தம்புள்ளை ரஜ மக விகாரையை அதன் மறு பெயரான “பொற்கோயில்” எனும் அடையாளத்தை முதன்மைப்படுத்தும் செயலிலும் சிறி சுமங்கல தேரர் அக்கறைகாட்டி வருவதும் , தம்புள்ள பௌத்த மத ஆதிக்கத்தினை நிலைபெற செய்யும் ஒரு முயற்சியுமாகும்.


பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்தப்படாமலே அங்கிருந்து தொழுகைக்கு கூடிய முஸ்லிம் மக்களை பாதுகாப்புக்கு வந்த பொலிசாரும் விஷேட அதிரடிப்படையினரும் பிரதேச செயலாளரும் வெளியேறுமாறு கூறி பள்ளிவாசல் மீதான ஆர்ப்பட்டக்காரர்களின் உக்கிரமான தாக்குதலிலிருந்து பள்ளியை தற்காலிகமாக சிறிய சேதத்துடன் பாதுகாத்துள்ளார்கள். ஆயினும் தொழுகைக்கு வந்திருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிசாரும் அதிரடிப்படியினரும் அங்கிருந்த நிலையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசலுள் சென்று அங்குள்ள மின்விளக்குகளை உடைத்துள்ளார்கள் , அங்கிருந்த குர்ரான்கள் அவைகள் இருந்த இடத்திலிருந்து இடம் மாற்றி வேறிடங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்த பள்ளிவாசலுடன் தொடர்புபட்ட நபர் இன்று மாலை இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்துக்கு அழைப்பு வானொலியில் மட்டுமல்ல துண்டுப் பிரசுரம் மூலமும் விடுக்கப்பதுடன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட நேரத்துக்கு தம்புள்ளை பஜாரிலுள்ள கடைகளை மூடி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட ஜமாஅத்தினரும் கூடி ஆலோசனை செய்ததுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட ஜனாதிபதிக்கும் இச்சூழ்நிலை குறித்து அறிவித்ததாகவும் அது தொடர்பில் சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. எனினும் கடந்த வியாழக்கிழமை மாலையில் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஜமாஅத்தினரும் அது தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கையினை மெதுமெதுவாக இழக்கத் தொடங்கினர் . ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததுடன் , அது தொடர்பில் தேசிய ஊடகங்கள் யாவும் மவுனமாக இருப்பதையும் , தங்களின் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர், ஜானக பண்டார , இந்த விவகாரம் தொடர்பில் சுமங்கல தேரருடன் கருத்து முரன்பட்டிருந்ததாலும் , தங்களுக்கு ஆதரவாகவிருந்தும் மிக முக்கிய பொவுத்த மதகுருவுக் கெதிராக செயற்படும் திராணி அவரிடமிருக்கவில்லை.


இலங்கையில் பௌத்த குருமாரின் தாள் படியும் சமூக ஒழுங்கு முறையில் சுயாதீனமாக செயற்படும் நிலையில் பல சிங்கள அரசியல்வாதிகள் , ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுவது சாதாரண நிகழ்வே.


பௌத்த தரப்பினரை இது தொடர்பில் தொடர்பு கொண்ட பொழுது , அவர்கள் பள்ளிவாயல் அமைந்திருக்கும் இடம் ராஜ மலைக் கோயில் என்றும் “பொற் (பாறைக்) கோயில் “ என்றும் அழைக்கப்படும் ராஜ மகா விகாரையின் புனித கோயில் எல்லைக்குள் இப்பள்ளிவாசல் அமைந்திருப்பதாகவும் , அதனால் அப்பள்ளிவாசல் அதிகாரமற்ற முறையில் , உரித்துடைமை ஆவணமின்றி அங்கிருப்பதாகவும் ,; அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்றும் , மாறாக பிறிதோரிடத்தில் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளலாம், ரஜ மகா விகாரையின் (தங்கக் கோயிலின்) நிலவுடைமையில் சுமார் மூன்ன்று ஏக்கர் காணி இருந்ததென்றும் , அதிலிருந்தே அரசாங்கம் தம்புள்ள கிரிக்கட் மைதானத்துக்கும் மேலும் சில அபிருத்தி செயற்பாடுகளுக்கும் என , கோயில் நிலங்களை , கோயில் சம்மதத்துடன் பெற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். ஆனால் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த பள்ளிவாசல் அதிக வணிக தொடர்பாடல்கள் காரணமாக அதிகரித்து செல்லும் முஸ்லிம் பயணிகள் வியாபாரிகள் காரணமாக பள்ளிவாசல் மீள் நிர்மாணம் செய்யப்படுவதுடன் , தாங்கள் ஒருபுறம் காணிகளை எதோ ஒருவிதத்தில் (அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பினும் ) சுமங்கல தேரருக்கும் , அவரால் தூண்டப்பட்ட சிங்கள தீவிரவாத சக்திகளுக்கும் , பாரம்பரிய பௌத்த புனித பூமியில் பள்ளிவாயல் கண்ணுக்குள் விழுந்த கங்குளாய் உறுத்துவதால் ஏற்பட்ட மத விரோத உணர்வின் செயற்பாடுதான் இந்த பள்ளியுடைப்பு முயற்சி.


பள்ளியை உடைக்கச் சென்றவர்கள் இன்று போய் மீண்டும் திங்கட்கிழமை வருவதாக சொல்லியே சென்றிருக்கிறார்கள். செல்லவும் வேண்டப்பட்டிருக்கிரார்கள் . பள்ளிவாசல் இப்போது அதிகாரபூர்வமாக பூட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேரர் இது "எங்கள் நாடு" என்று கோஷமிட்டு , சகோதர முஸ்லிம் இனத்தினரின் வணக்கத்தலம் மீது தாக்குதல் நடத்த அணிவகுப்பு செய்ததும் தமது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை "பௌத்த உறுமய" ( பௌத்த உரிமை ) என்ற தலைப்பில் காணொளியாக்கி ஒளிபரப்பு செய்ததும் , மதிப்புக்குரிய மதகுருவுக்குரிய செயலே அல்ல.


"அன்பினால் கோபக்காரனை வெல்,; நன்மையால் தீய குணத்தோனை வெல்" - தம்மபதம் (பௌத்த நீதி நூல்) என்ற போதனையிலுள்ள உண்மையை யார் யாருக்கு சொல்வது? இந்த இடைவெளியில் இப்பள்ளிப் பிரச்சினை பற்றி ஒரு சமரசப் பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற உள்ளது. ஆயினும் இந்த பள்ளி தொடர்பில் முஸ்லிம் தரப்பினர் தங்களிடம் இப்பல்லிவாசளுக்கான காணியை ஒருவர் ஆரம்பத்தில் வழங்கியதாகவும் , பின்னர் மேலும் இருவர் அப்பள்ளிவாசலை தேவைகருதி விஸ்தரிக்கும் நோக்கத்துடன் பள்ளியை அடுத்தமைந்த இரண்டு காணிகளை வாங்கி பள்ளிவாயலுக்கு நன்கொடை செய்ததாகவும் , அவை முறையே முஸ்லிம் பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபையில் வக்பு செய்யப்பட்ட நம்பிக்கை ஆதனங்களாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.


தொண்ணூறாம் ஆண்டில் தம்புள்ளை நகர கண்டி யாழ்ப்பான வீதியில் மறைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்,எம்.அஸ்ரபுடனும் இன்னும் சிலருடனும் இக்கட்டுரையாளர் பயணித்த பொழுது அப்பள்ளிவாசலில் வணிகர்களுடன் நட்புடன் கலந்துரையாடிய நினைவுகளை இன்று அப்பள்ளிக் கெதிராக நடைபெறும் மனித உரிமை மீறும் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு மீட்டுப் பார்க்கும் போது மனது சங்கடப்படுகிறது. அப்போது தம்புள்ள பள்ளிவாசல் என்று பெரிதாக அறியாமல் செயற்பட்ட ஒரு சிறு பள்ளிவாசல் , புனித பூமியில் நிலைகொண்டதாக உரிமை கோரப்படாத பள்ளிவாசல் இப்போது ஏன் புதிதாக மத விரோதத்துடன் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று கோரப்படுகிறது. இதன் பின்னணியிலுள்ள மத விரோத செயற்பாடுகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தைக்காக்கள் என்பவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல , கிறிஸ்தவ மத தேவாலயங்களுக்கும் மின்னேரியா போன்ற இடங்களில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.


மத சகிப்புத்தன்மை இன்மையே இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாகும். இவ்வாறான மத விரோத நிகழ்வுகள் இலங்கையில் ஒன்றும் புதிதல்ல, இவை தொடர் கதையாகவே உள்ளன . கிழக்கில் ,. மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு பள்ளி அபகரிக்கப்பட்டதும் , அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டதும் , சென்ற மாதம் பங்குடாவளி தைக்கா தரைமட்டமாக்கப்பட்டு , தைக்கா இருந்த இடம் கபளீகரம் செய்யப்பட்டதும் என மத வழிபாட்டுத்தலங்கள் ஒரு சமூகத்தினரால , தன்னோடு வாழும் பிற சமூகத்தினர் மீதான ஆதிக்க செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஹிந்துக்கள் பௌத்தர்கள் மீது கொண்டிருப்பதும் மத இன விரோத செயற்பாடுகள் மூலம் இலங்கையில் வாழும் மக்களை துருவப்படுத்த தொடராக நடைபெற்று வருகின்றன. எனினும் இந்த நெருக்கடிகள் , அடிப்படை மத உரிமை மீறல்கள் எல்லாவற்றையும் தாண்டி சகல சமூகங்களும் பயணிக்க இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டி உள்ளது. மதத்தின் பெயரால் , அதிகாரத்தின் பெயரால் சட்டத்தை தனது கையிலெடுக்கும் சமுதாய முறைமையை தகர்த்தெறிய , இந்த சம்பவத்தை சமரசமாக தீர்ப்போம் அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவோம்.


உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கானிப் பிரச்சினை ஒன்று கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சமரச பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது , மறுபுறம் மாளிகாவத்தை (சிங்கள-முஸ்லிம்) மையவாடி பிரச்சினை சட்ட மூலமாக தீர்க்கப்பட்டது. இந்த பள்ளிவாயல் பிரச்சினை எப்படி தீர்க்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடக்கு முறையும் உரிமைப் பறிப்பும் தொடர் கதையாகாமல் இருக்க சமூக அரசியல் பலத்தை மட்டுமல்ல சட்டப் பலத்தையும் பரிசோதிப்போம்.
http://www.bazeerlanka.com/2012/04/blog-post_21.html

No comments: