Sunday, April 22, 2012

தம்புள்ளையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலை தணிந்து வழமைக்குத் திரும்பியது

தம்புள்ளையில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலை தணிந்து அப்பிரதேசம் வழமைக்குத் திரும்பியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இன்று காலை தம்புள்ள கந்தலம பகுதிக்கு விஜயம் செய்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச.எம்.பௌசி, கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர், பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களையும், மற்றும் பிரதேச சிங்கள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து இந்த நிலையேற்பட்டுள்ளது.

காலை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் பிரதி நிதிகள் அங்கு விசேட கூட்டமொன்றினை நடத்தினர். பிரதேச செயலாளர் திருமதி. ஹேவகே, பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதேச சிங்கள முக்கியஸ்தர்கள், மற்றும் பிரதேச முஸ்லிம் பிரதி நிதிகளும் இதி்ல் கலந்து கொண்டனர்.


பள்ளிவாசலின் உட்பகுதியில் உள்ள பிரசங்க மேடை மற்றும் அல்-குர்ஆன் வைக்கும் அலுமாரி உட்பட பல பொருட்கள் இங்கு சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.நகரப் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பள்ளி வாசலைச் சூழ பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


1962 ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளிவாசல் இங்கு மத வழிபாட்டுக்காக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டுவந்ததாகவும், சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகவும், தேவையற்ற இனப் பிரச்சினையொன்றைத் தோற்றுவிக்க சில சிங்கள கடும் போக்கு வாதிகள், வெளிமாவட்டங்களிலிருந்து அடியாட்களையும், மதகுருமார்களையும் கொண்டு வந்து வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் மதக் கடமையினைத் தடுத்தமை பெரும் அநியாயம் என பிரதேசத்தை சேர்ந்த வசந்த பண்டார என்பவர் இங்கு குறிப்பிட்டார்.


இந்தப் பள்ளிவாசல் இலங்கை சட்டத்தின் முஸ்லிம் சிறப்புரிமையின் கீழ் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதொன்று என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பள்ளி நிர்வாக சபை இக்குழு முன் சமர்ப்பித்தனர். இதனையடுத்து அமைச்சர் பௌசி, மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தவர்களின் கடைகள், மற்றும் வீடுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்து அவர்களது நிலைப்பாடு குறித்துக் கேட்டறிந்து கொண்டனர்.


முஸ்லிம்கள் தமது பள்ளிவாசலை இங்கு அமைப்பதில் அல்லது அதனை புனரமைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் தங்களுக்கு இல்லையென்பதைத் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் பூட்டப்பட்டிருந்த பள்ளிவாசலைத் திறந்து உள்ளே சென்று சிறிய கூட்டமொன்றினையும் நடத்தினர். அப்போது அமைச்சர் கள் இன்று ளுஹர் தொழுகை முதல் அனைத்து தொழுகைகளையும் நடத்துமாறும் , அச்சம் கொள்ளத் தேவையில்லையென்ற உறுதிப்பாட்டை மக்களுக்கு வழங்கினர்.


இந்த மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி , பிரதமர், அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை தலைமைத்துவம் என்பவற்றுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அம்மக்களிடம் தெரிவித்தனர்.


முஸ்லிம்களின் மதக் கடமைகளை அச்சமின்றி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பினர் அங்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments: