இரத்தக் கறைபடிந்த
நறைத்த சிங்கமொன்று
சிறியா தேசத்தை
வேட்டையாடும்
அகோரக் காட்சி!
உலுத்துப் போன
கதிரையின் கால்களை
மனிதக் குருதியூற்றி
ஸ்திரப்படுத்த
அமெரிக்கத் தொனியில்
ஆயுதப் பூஜை!
அகோரத் தாண்டவத்தின்
அராஜகத்தை
தாங்கமுடியா உயிர்கள் மட்டும்
தம் கூடுகளை விட்டும்
விரண்டோடிக் கொண்டிருந்தன!
தேகத்தைப் போல்
தம் தேசத்தையும் விட்டு
விடைபெரும் உயிரை
மனிதங்கள் மட்டும்
கண்ணீரில் குளிப்பாட்டி
வழியனுப்பிவைத்த
வரலாறு மறக்காத
சோகவடுக்கள்!!
வடித்த கண்ணீரும்
வடிந்த இரத்தமும்
புதிய தலைமுறையின்
வேர்களில் தஞ்சம் புக
கிளைவிரித்து வளரும்
நாளைய புருஷர்களின்
குருதியில் அமைதியை
நிலைநாட்டி நீடூடிகாலம்
'சாந்தி' ஊர்வலம் நடத்தட்டும்!
யுத்தம் கால்பதித்த
நாள் முதல்
மரண ஓலம் எழுப்பிய சத்தம்
அத்தேசத்தின்
பல சகாப்தங்களுக்கு
ஒலித்துக் கொண்டேயிருக்கும்!
பால்வடியும் பச்சிளம்
மலர்களில் மரணப்பயம்!
காகிதப் பூக்கள்
என்றெண்ணியா
அவர்களை - ரவைகள்
துளையிட்டுப்பார்த்தன!?
கிஞ்சிற்றும்
நெஞ்சமிருந்தால்
அதில் சொட்டேனம்
மனிதமிருந்தால்
மலராமலே வாடிப்போன
பிஞ்சு மொட்டுக்கள்
எத்தனை ரம்யத்தோடு
மலர்ந்திருக்கும்!
'சிறியா' நந்தவனப் பூக்கள்
இதழ்விரிக்கு முன்னே
இதழிதழாய்
உதிர்ந்து போன - அந்நாட்கள்
இரத்த வரிகளால் எழுதப்படட்டும்
இனியும் எழுதப்படாமலிருக்க!
- அபூ அரீஜ் (06.05.12)
No comments:
Post a Comment