நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது.
பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு வந்தது. முஹம்மது நபியை எப்படியாவது கொலை செய்தால் தான் ஆட்சி நம் கைக்கு மீண்டும் வரும் என்று யூதர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள்.
இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதீனாவுக்கு வெளியே ஒரு பள்ளி வாசலைக் கட்டினார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தங்களின் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து தாக்கி அவர்களைக் கொல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.
பள்ளிவாசலுக்குள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிக் கொண்டு நபிகள் நாயகத்தை அழைத்தார்கள். தங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து முதல் தொழுகை தொழுது ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஊருக்கு வெளியே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதால் இதன் பிண்ணணியில் உள்ள சதித்திட்டம் நபிகள் நாயகத்திற்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவர்களின் சதித் திட்டத்தை அறியாமல் அந்தப் போலிப் பள்ளிவாசலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வரும் வசனங்களை இறைவன் அருளினான்.
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். திருக்குர்ஆன் 9.107,108
அல்லாஹ் அறிவித்தவாறு அப்பள்ளிவாசலைச் சோதனையிட்ட போது சதிகாரர்களின் சதி அம்பலமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பது இதன் மூலம் நிரூபனமானது.
நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்
இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு திருக்குர்ஆன் எவ்வாறு ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மரணிக்கும் வேளையில் பாரசீகம் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. இந்த வல்லரசை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், இந்த வெற்றி மிகவும் குறுகிய காலத்தில் கிட்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டால் நிச்சயம் காண்பாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். நூல் : புகாரி 3595
பாரசீகப் பேரரசு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அந்த வெற்றியைத் தம் கண்களால் காண்பார் என்பதையும் கூறுகிறார்கள்.
பலநுறு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உன் வாழ்நாளிலேயே அதைக் காண்பாய் என்றும் அதீ பின் ஹாதிமிடம் தெரிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகத்தை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதன் கருவூலங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள்.
பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று அதீ பின் ஹாதம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல் : புகாரி 3595
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பும் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக நிறைவேறியது.
No comments:
Post a Comment