Monday, May 28, 2012

'சிறியா' இனியும் சிரியா!!!



சிறியா தேசத்தில்
சிதறிய தேகங்கள்!
காலான்களைப் போல்
காலூன்றும் சோகம்!

பினந்திண்ணித்
தலைமைபீடத்தின்
நாற்காலிமோகம்
நாளாந்த இனஒழிப்பின்
இருக்கை!

ஓலங்களின் ஒன்று கூடல்
மயானத்தை வென்று - பின்
நிசப்தங்களால் மாத்திரம்
ஜெபிக்கப்படும்
மந்திர கோலமாய்
வெளுத்துப் போனது!

நீதி தேவதையின்
கண்கள் கபோதியாகிப்போனது
உலகத்திற்குத் தெறியாது
ஏனன்றால்
உலகத்தாரின் கண்கள்தான்
கருப்புத் துனியால் கட்டப்பட்டுக்
கிடக்கின்றதே!
 
அந்த மகுடத்தின்
அக்கினிச் சுவாலையால்
சுவாசத்தைத் தொலைத்த
சுதந்திரம்- இன்று
அஸ்தமனமாகிக் கொண்டிருக்கின்றது
அப்பாவி உள்ளங்களோடு!
 
குருதிச் சாயத்தின்
குபீர் வாடையை மறைக்க
குள்ள நரிகளின் கபடநாடகம்
அவ்வப்போது
மேடைபோடுகின்றன
ஊடக மண்டபத்தில்!
 
ஆர்ப்பாட்டக் காரர்களின்
அணிவகுப்பு!
நிசப்தம் தொலைத்த
மனித ஓலங்கள்!
மனக்குமுறல்களால்
மழுங்கிப் போன நாளை!
எரிமலையோவென
ஏக்கப் பெருமூச்சு!
இதுதான் அத்தேசத்தின்
நிகழ்ப்பிரதி!
 
உலக ரணங்கள் - இன்று
செய்தியாய் மட்டும்
வாசிக்கப்பட
தகவலுக்காய் மட்டும் - நாம்
காத்துக் கிடக்கின்றோம்
தொலைநகர்த்திக்கு முன்னால்!
 
செவிப்பறை கிழிந்து
சொட்டு இரத்தம்
கசிந்தாற் போல் - வலித்தது மனம்
என்னதான் செய்ய.......?!
வீரம் கொதித்து
விடையின்றி அஸ்தமனமாகும்!
 
நான் மட்டும்
ஆமையைப்போல்
பிரார்த்தனைகளைப்
புதைத்துக் கொண்டிருக்கின்றேன்
நாளைய விடியலில்
புதிய ஜனனங்களாய் ஜனிக்கட்டும்
மீண்டும் ஓர்
புலர்வை நோக்கி!

'சிறியா' இனியும் சிரியா!!!

                            - அபூ அரீஜ் (280512)

No comments: