|
மனிதன் குரங்கில்
இருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன்
விலங்கில் இருந்து மேம்பட்டவன் என்பது மட்டும் உண்மை. பகுத்தறியும் அறிவாகிய ஆறாவது
அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இதனைக் கொண்டு நல்லது, கெட்டதை ஆராயும் தன்மையை
மனிதன் பெற்றிருக்கிறான். அறிவியலின் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட பின்பு தனது
வாழ்க்கையை எளிமையாக்க எத்தனையோ கருவிகளைக் கண்டுபிடித்தான். இப்போது உலகில் உள்ள
மற்ற உயிரினங்களை அடக்கி ஆள்வது மட்டுமல்லாமல், வேறு கிரகத்தை ஆக்கிரமிக்கும்
பணிக்கும் ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பி வருகிறான்.
இதற்கெல்லாம் ஆறாவது அறிவு என்கிற வரப்பிரசாதம் தான் காரணம்.
உயிரனங்களில் மேலான அறிவைப்பெற்றிருக்கும் மனிதன், இயற்கையின், கடவுளின் பிரதிநிதியாக வர்ணிக்கப்படுகிறான். எல்லா வேதங்களிலும் மனிதனை உயர்ந்த ஒப்பற்ற படைப்பு எனவும், அவனுடைய அறிவே இயற்கையின் படைப்புகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாய் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய மனித நாகரீகம் ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருக்க மறுபக்கம் அச்சுறுத்துகின்றது. காரணம் நாடுகளுக்கிடையே, இனங்களுக்கிடையே போர், தீவிரவாதம், குற்றம், களவு என்று மனித பாதிப்புகளின் எல்லை நீண்டுக் கொண்டே செல்கிறது. இதற்கும் அறிவியல் துணை புரிகிறது என்பதை மறுக்க முடியாது. இது மட்டுமல்லாமல் இயற்கையும் மனித இனத்தை அவ்வப் போது ஒரு கை பார்த்துவிடுகிறது. பூகம்பம், சூறாவளி, புயல், மழை என்று அவ்வப்போது வந்து மக்களின் வாழ்க்கை சுழற்சியை ஒரு முறை ஆட்டிப் பார்க்கிறது. இயற்கையின் கொதிப்பை அடக்கவும் மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி வருகிறான். இதற்காக சில இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை படையெடுப்பை முன் அறிவிக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் இயற்கையின் மற்ற ஆபத்துகளை தடுக்கவும் அறிவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் மனிதன் இயற்கையை வெல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனாலும் மேற்கண்டவைகளிலிருந்து (போர், தீவிரவாதம், குற்றம் களவு, இயற்கைப் பேரழிவு) தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இன்றைய மனிதன் இருக்கின்றான். இதற்கான ஆய்வில் உருவானதுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகும் ரோபோக்கள். கண், காது, மூக்கு மற்றும் கை, காலுடன் நடமாட்டம் உள்ள இயந்திர ரோபோக்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்கான ரோபோ: ராணுவ நடவடிக்கைகளில், இது போன்ற ரோபோக்களின் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மறைந்திருக்கும் பொருட்களை கண்டிபிடித்தல், வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்தல், பதுங்கியிருக்கும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் என பலதரப்பட்ட ராணுவ மற்றும் புலனாய்வுத்துறைகளில் இவ்வகை ரோபோக்கள் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகின்றது. ஆனால், இவ்வகை ரோபோக்கள் முழுவதுமாக தங்களின் பணிகளை செய்கிறதா? என்றால், இல்லை என்றுதான் கூறமுடியும். காரணம், ரோபோக்களின் வடிவமைப்புகள், மற்றும் செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூறமுடியும். உதாரணமாக, ஆப்கனில், தாலிபான் பதுங்கி வசிக்கும், மலைக்குகைப் பகுதிகளில் இவ்வகை ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த ரோபோவின் பாதையில் ஏணிகளை வைத்து அந்த ரோபோவை கீழே விழச்செய்துவிட்டனர் தாலிபான்கள். ஏணிப்படிகளுக்கிடையே உள்ள இடைவெளியில் இந்த ரோபோ கீழே விழ நேரிட்டது. இந்த அதிநவீன ரோபோக்கள் செல்லும் பொழுது, இடையில் ஏற்படும் தடைகளில், சுவர்களில் முட்டி மோதிக்கொண்டு நின்று விடுகின்றன, மேலும், தரைவழியாக செல்லும் ரோபோக்கள், குப்பைகள், பாலிதீன் பைகள் போன்றவைகளில் சிக்குண்டு நகர முடியாமல் நின்று விடுகின்றன, பள்ளங்களில் விழுந்து விடுகின்றன. பறந்து செல்லக்கூடிய ரோபோக்கள், இடையில் உள்ள மின்கம்பம், விளம்பரப்பலகை போன்றவைகளில் மோதிவிடுகின்றன. ரோபோக்களின் இதுபோன்ற செயல்கள் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இதனின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, சுவர்களில். கூரைகளில் செங்குத்தாக ஏறக்கூடிய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் வெற்றியும் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.தேசிய தர மற்றும் தொழில்நுட்ப கழகம், கெய்தஸ்பர்க், மாரிலாண்டில் இந்த சோதனையினை மேற்கொண்டனர். ஆனால் இதில் பங்கேற்ற 16 ரோபோக்களில் 8 ரோபோக்கள் சரியான இலக்கை சென்றடைந்து தகவல்களை அனுப்பவில்லை. இதற்கான காரணம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைத்து ரோபோக்களையும் சோதனையில் ஈடுபடுத்தியதால், அதனுடைய ரேடியோ அலைகளில் ஏற்பட்ட இடையுறுகளின் காரணமாக இந்த சோதனை முழுமையாக வெற்றிபெறவில்லை என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த குறையினை சரிசெய்ய இன்னும் முழுமூச்சாக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனித்தனியாக ஒவ்வொரு ரோபோக்களின் செயல்பாடுகளை ஆராயும் பணியில் இறங்க தீர்மானித்துள்ளனர். ஈராக்கில் அவ்வப்போது குண்டுகள் வெடித்து பலநூறு உயிர்கள் பலியாகின்றன. இதனால் ஈராக்கிற்கு இந்த ரோபோக்கள் அனுப்பப்பட்டது. சந்தேகம் உள்ள பல இடங்களில் ஆய்வு கொண்ட நவீன ரோபோக்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டிபிடித்தது. உடனடியாக வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இவ்வகை ரோபோக்கள் காப்பாற்றியிருக்கின்றன என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வகை ரோபோக்கள், வீட்டுவேலைகளை கவனிக்கும் ரோபோக்கள் போன்றோ, மக்களை வரவேற்கும் ரோபோக்கள் போன்றோ அல்ல. வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய திறன் பெற்ற அதிநவீன ரோபோக்கள் ஆகும். இந்த ரோபோக்கள் பல உருவங்களில் உருவாக்கப்படுகின்றது. இடம், சூழல், சுற்றுப்புற அமைப்பு போன்றவைகளுக்கு ஏற்றவாறு இதன் உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. போலீஸ் வேட்டை நாய்கள் எப்படி மோப்பம் பிடித்து குற்றங்களை கண்டிபிடிக்க உதவுகின்றனவோ, அந்த அளவிற்கு ரோபோக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, என்று ஆராய்ய்சியாளர் ஜேஹேப் கூறுகின்றார். சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்ரினா, ரீட்டா போன்ற புயல் சூறாவளி இடிபாடுகளில் சிக்கித்தவித்த மனிதர்களை கண்டுபிடிக்க உதவியதில் மோப்ப நாய்களின் பங்கு மிகச்சிறப்பானது. அதே போன்ற பங்களிப்பினை ரோபோக்களும் செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. அதற்கான காலமும் வெகு தொலைவில் இருக்காது என்பதும் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. பெட்டி ரோபோ மனிதன் மற்றும் நாய் போன்ற உயிரினங்கள் புக முடியாத இடங்களில் கூட பாம்பு வடிவிலான ரோபோக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ரோபோவின் தலையில் கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் புகைப்படங்கள், மற்றும் தகவல்களை பெறப்படுகிறது. இதில் எங்களுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது என்று சார்லஸ் என்கிற விஞ்ஞானி கூறுகிறார். தற்பொழுது ஈராக்கில், வாகனங்களை நிறுத்தி சோதனைச் செய்யும்பொழுது, வெடிகுண்டுகள் இயக்கப்பட்டு அதன் மூலம் பல உயிர் சேதங்கள் ஏற்படுவதை நாம் அறிவோம். இந்த உயிர்சேதத்தை தடுப்பதற்காக ஈராக் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் இது போன்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனை செய்வதற்கும் பெட்டி வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை ரோபோக்கள் காரினை நிறுத்தி தன்னிடம் உள்ள கண்டுபிடிக்கும் கருவி மூலம், காரின் உள்ளே இருக்கும் பொருள்களை கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்புகின்றன. மேலும் நாடுகளுக்கிடையேயான எல்லைகள், ராணுவத்தின் ரகசிய இடங்கள் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆளே இல்லாமல் இந்த ரோபோக்கள் இயக்கப்பட்டு, இதன் மூலம் செய்திகளை உரிய இடத்தில் பெறுகின்றனர். இந்த வகை ரோபோக்களில் உள்ள குறைபாடுகளை களைந்து, இன்னும் உத்வேகமான ரோபோக்களை உருவாக்கும் முயற்சி ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு கணினி புரட்சியாக, தனி நபர் ரோபோவினையும் விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டுள்ளனர். தனி நபர் ரோபோ இவ்வகை ரோபோக்கள் மனிதர்களுக்கு உடல் ரீதியாக உதவும், உறவாடும் என்று கூறுகின்றார் ஹென்றிக் கிரிஸ்டன் என்கிற ரோபோ ஆராய்ச்சியாளர். இவர் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்தவராவார். வீட்டைச் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களை சுத்தம் செய்தல், காபி தயார் செய்தல் போன்ற செயல்களோடு, குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அதிகாரியை ஆயத்தப் படுத்துவது, சொல்வதை புரிந்து கொண்டு அதனை கணினியில் பதிவு செய்தல், வயதானவர்களை கைப்பிடித்து அழைத்துச்செல்லுதல், இதோடு மட்டுமில்லாமல், கிமி மூலமாக சில விஷயங்களுக்கு ஆலோசனைகளை கூறுதல் போன்ற செயல்களையும் இந்த தனி நபர் ரோபோ செய்யும். திரைப்படங்களில் மனிதர்களைப் போலவே செயல்படக்கூடிய ரோபோக்களைக் காண்பிக்கின்றனர். ஆனால் அவைகள் எல்லாம் எதிர்கால கற்பனைகளேயொழிய, அது போன்ற ரோபோக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று கூறும் கிரிஸ்டன், அது போன்ற ரோபோக்களை உருவாக்க எல்லாவிதமான ஆய்வுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார். இந்த புதிய வகை ரோபோக்கள், இயந்திரம் போல இல்லாமல், மிகவும் இயல்பாக மனித தன்மைகள் கொண்டதாகவும் புத்தி கூர்மையுடனும் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், இதற்காக ரோபோ விஞ்ஞானிகள் பாடுபடுவதாகவும் ஜேம்ஸ் காண்டர்ஸன் என்ற தென்வீர் காமா-2 என்ற மென்பொருள் பல்கலைக்கழக அதிகாரி கூறுகிறார். இன்றைய நவீன விஞ்ஞான இயந்திர உலகத்திற்கு ரோபோக்கள் அவசியம்தான்! அவை நாம் எதிர்பார்ப்பது போல் கற்பனையில் ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் உருவாகுமா? அதற்கு ரோபோ விஞ்ஞானிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளனரா? என்று கேட்கும் கிரிஸ்டன், இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனவுகள், கற்பனைகள் நிஜமாகும் என்கிறார்! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தொடரும்... எம்.ஜே.எம்.இக்பால் நன்றி: http://www.chittarkottai.com/mjmiqbal/adisayam45.htm |
Thursday, May 31, 2012
ஆறாவது அறிவை வெல்லும் ரோபோக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment