Sunday, July 1, 2012

கோக், பெப்சியில் ஆல்கஹால் இருக்காம்...!


கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் பல்லி மிதக்கும், மூடி கிடக்கும், பூச்சி இருக்கும் என்பதெல்லாம் போய் இப்போது அதில் ஆல்கஹாலும் கலந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் பாட்டிலில் 10 மில்லிகிராம் அளவுக்கே இது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 19 விதம் விதமான  கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.
இதுகுறித்து கோக கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.

ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது. இது மென் குளிர்பானம்தான். இந்த குளி்ர்பானத்தை அருந்தலாம் என்று பாரீஸைச் சேர்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்று சான்றிதழ் அளித்துள்ளது.

பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.

கோக் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோக்கில் பெரிய அளவில் ஆல்கஹால் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட மது அருந்துவதை தடை செய்யும் இஸ்லாமிய நாடுகளில் இனி கோக்குக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: ThatsTamil oneindia.com

No comments: