Thursday, July 19, 2012

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும்

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனே சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள், இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் அதிகாலை பல நாளிதழ்களில் இதுதான் தலைப்புச் செய்தி. ‘ஆபத்து ஆபத்து’ என்று, எங்கும் கூப்பாடுகள். அமெரிக்காவே மன்னிப்பு கேள் என்றும், மறுபுறம் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது என்றும் அரசு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் இருந்து அறிக்கைகள் பறந்தன. எஸ்.எம்.கிருஷ்ணா மாஸ்கோவில் இருந்தபடி வாளைச் சுழற்றினார். ஷாருக்கானை நடத்தியது போல் நாம் இனி அமெரிக்க அதிகாரிகளை இங்கு நடத்த வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் கிளம்பின. இதனைக் கண்டித்து ‘அப்படி அமெரிக்கர்களை நடத்த வேண்டும் என்பது தவறு., அபிஷ்டு அபிஷ்டு’ என்றது தி ஹிந்து தலையங்கம். அமெரிக்காவை, அமெரிக்க அரசை இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பதுவே மகாபாவம் என்று தலையங்கம் கண்ணீர் வடித்தது. வாசிக்கும் இந்திய நகர அதிகாரவர்க்க முட்டாள்கள் அனைவரின் மூளையும் பற்றி எரிந்தது. தீ தீ தீ எட்டுத் திக்கும் தீ.
இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் ஷாருக்கான் உள்பட பல ஹிந்தி நடிகர்கள் பல முறை இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்கள். ‘எனக்குத் தலைக்கனம் ஏற்படும்போது எல்லாம் நான் அமெரிக்கா செல்வேன். அவர்கள் நான் ஒரு பெரும் நட்சத்திரம் அல்ல, ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிரூபித்து எனக்குப் பாடம் புகட்டுவார்கள், என்று ஷாருக்கானே இந்த சம்பவத்திற்கு மாணவர்கள் மத்தியில் உரையாடுகையில் விளக்கமளித்தார். சினிமா நடிகர்கள்தான் அப்படி நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை, பலரும் இப்படி அமெரிக்க விமான நிலையங்களில் நடத்தப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயமே. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நிர்வாணப்படுத்தி பரிசோதிக்கப்பட்ட போதும் நமக்குப் புத்திவரவில்லை. அதன் பிறகு அப்துல் கலாம் ஒருமுறை எல்லா சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறிய பிறகு அவரது ஷூவைக் கழட்டிக் காண்பிக்கச் சொல்லி சில அதிகாரிகள் பணித்தனர். இப்படி நம் ஊரில் பல பில்டப்புகளுடன் வலம் வருபவர்களின் டவுசர்கள் அமெரிக்காவில் கழற்றப்படுவதும் அவர்கள் வடிவேல் போல அப்படியே அதை மெயின்டெய்ன் செய்து வண்டியை ஓட்டுவதும் நமக்கும் சகஜமாகிப் போச்சு.

இது போல் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும்தான் நடத்தப்படுகிறார்களா? இல்லை, இந்தியாவுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்யும் அனைவரையும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கி பீதியுறச் செய்வதுதான் பல வளர்ந்த நாடுகளின் மோஸ்தராகவே உள்ளது. சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அங்கு கூலி வேலை, வீட்டு வேலை செய்ய இந்தியாவில் இருந்தும், தெற்காசிய நாடுகளில் இருந்தும் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பல மணி நேரம் விமான நிலையத்தில் பேச, அவர்கள் நடத்தப்படும் விதத்தை நெருங்கி இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு கணமும் அவர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் வளைகுடா நாடுகளில் விமான நிலையத்தில் பணி புரியும் இந்தியர்களாலேயே துன்புறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கிய சில நிமிடங்களில் எங்கு செல்வது என்று கூட அறியாது கண்ணீருடன் திசைகள் தொலைத்து நிற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால் சினிமா நடிகர்கள், பாடகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் இப்படி நடத்தப்படும்போது அறிக்கை போர் நடத்திவிட்டு, சில வார்த்தைகள் மன்னிப்பைப் பெற்றுவிட்டு அதன் பின் அமைதியாக இருந்து விடுவது சரிதானா என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த Racial Profilingஐத் தொடங்கியவர்கள், இப்படி சில வெற்று வார்த்தைகளில் மன்னிப்பு கேட்பது போதுமானதா? இந்த சம்பவத்தில் ஷாருக்கான் சோதிக்கப்பட்டதற்குக் காரணம் அவரது இஸ்லாமியப் பெயர்தான் என்பது உலகம் அறிந்த விஷயம். என் நோக்கம் இஸ்லாமியப் பெயர் உடையவர்களை நாம் இந்தியாவில் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பற்றி விவாதிப்பது மட்டுமே.

1990கள் முதல் பொடா சட்டம், 1999கள் முதல் தடா சட்டம் இந்தியாவில் யாருக்கு எதிராகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது? அந்த சட்டங்களை அதிகாரத்தில் இருந்தவர்கள் நியாயமாகத்தான் பயன்படுத்தினார்களா? இந்த இரு சட்டங்களிலும் நீங்கள் யாரையும் கைது செய்யலாம், எத்தனை ஆண்டுகளும் சிறையில் அடைக்கலாம், அவர்களின் வாக்கு மூலங்களைச் சாட்சியங்களாக ஏற்கலாம்... இப்படி இன்னும் இந்த சட்டத்தின் சிறப்புகளைப் பல புத்தகங்கள் நமக்கு விளக்குகிறது. குஜராத்தில் நரேந்திர மோடி இந்த சட்டத்தை வைத்து என்ன என்ன செய்தார்? நரோடா பாட்டியாவில் 95 பேர் உயிருடன் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்றவர்கள் மீது ஏன் எந்த சட்டமும் பாயவில்லை? உயிருடன் வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரியை எப்படிக் கொன்றோம் என்று அவர்களே விவரித்தும் இன்று வரை ஏன் எந்த சட்டமும் பாய மறுக்கிறது?
1970களில் அமெரிக்கா தொடங்கி வைத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் 1980களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங் பரிவாரங்கள் மிக வெளிப்படையாகவும், காங்கிரஸ் அதனை அப்படியே கைகளில் மதசார்பற்ற உறையை மாட்டிக் கொண்டும் இந்திய சூழலில் உள்வாங்கிக் கொண்டன. இந்தியப் பெரும் ஊடகங்களும் முழுக்க அரசின் ஊதுகுழலாக, அமெரிக்க அடிவருடிகளாக, மேற்கில் இருந்து வரும் அனைத்தையும் அப்படியே ரகம் பிரிக்காமல் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களாக மாறின. 1970களின் இறுதியில் பனிப்போரின் பொழுது சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களை யார் உருவாக்கியது? ஆப்கானில் எல்லைப் பகுதியில் இருந்த மதரசாக்களின் பாடத் திட்டங்களில் மாற்றம் கொணர்ந்தது யார்? 1989 வரை நீடித்த இந்தப் போரின்பொழுது ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு யார் நிதி உதவி, ராணுவ தளவாட உதவிகள் அளித்தது? இந்தப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், இந்தோனேசியா, சீனா மற்றும் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசின் பங்கு என்ன? யார் இந்த ஒசாமா பின்லேடன்? ஒசாமா எந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டின் தலைவர் போல் அமெரிக்காவின் பெண்டகன் படைகள் பாதுகாக்க அமெரிக்கா முழுவதும் உலா வந்தார்? இப்படி அடுக் கடுக்கான கேள்விகளை உருவாக்குவதும் அதன் விடைகளைக் கண்டடைவதும்தான் அறிவார்ந்த மக்கள் ஊடகங்கள் நாட்டுக்குச் செய்யும் தொண்டாக இருக்க இயலும்.

1990களில் பெர்னார் லூயிஸ் எழுதிய The Roots of Muslim Rage என்கிற புத்தகத்தில் தான் இந்த நாகரீகங்களின் மோதல் சொல்லாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 1992களில் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் முன்வைத்த நாகரீகங்களின் மோதல் சித்தாந்தத்தின் பின்னணி என்ன? அவர் 1992ல் நிகழ்த்திய ஒரு கல்லூரிப் பேச்சை எப்படி 1993ல் அமெரிக்க வெளியுறவு துறை தத்தெடுத்தது. அது எப்படி 1996ல் The Clash of Civilisations and the Remaking of the World Order - Samuel P. Huntington என்கிற பெரும் நூலாக விரிவாக்கப்பட்டு வெளிவந்ததன் பின்னணி என்ன?
இந்த சித்தாந்தங்களின் பின்னணியில் அமெரிக்கப் பிரச்சார ஊடகங்களும், ரூபர்ட் முர்டாக் வசம் உள்ள உலக ஊடகங்களும் மேற்குலக மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கின. இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஏற்கனவே ஹிந்து அபிமான உணர்வை விதைத்து அதில் இஸ்லாமிய எதிர்ப்பை பல தளங்களில் விதைத்து கச்சிதமாக இங்குள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை மூளை சலவை செய்துகொண்டிருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு ஹிந்து நாடு என்கிற விஷமும் சமமாக இங்கு விதைக்கப்பட்டே வந்தது. இஸ்லாமியர்கள் இங்கு இரண்டாம் பிரஜைகளே என்கிற உணர்வை மூர்க்கத்துடன் முன்வைத்தார்கள். அவர்கள் விரும்பிய இஸ்லாமியராக இருந்ததால்தான் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவியைச் சூட்டி மகிழ்ந்தார்கள். கீதை வாசிப்பவராக, சங்கராச்சாரியார் காலில் விழுபவராக சாட்ஷாத் அப்துல் கலாம் விளங்கினார். ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை வேட்டையாடிய பொழுது அவர் தனது கண்களை மூடிக்கொண்டார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதி மீனவ சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது அந்தத் துயர ஓலம் கேட்காது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டார்.

ஹிந்து அபிமானிகள் தொடர்ந்து இந்த தேசம் இஸ்லாமியர்களால் துண்டாடப்படவிருக்கிறது என ஒரு பயத்தை சதா விதைத்துக் கொண்டு அதில் தங்களின் அரசியல் அறுவடைகளைச் செய்தவண்ணம் இருந்தனர். இந்தியா உடைபடும் என்ற ஓலத்திற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, இதை எழுதுபவர்கள் இந்தப் பயத்தைக் காட்டி வெளி நாட்டுவாழ் இந்தியர்களிடம் (NRI) பணத்தைக் கறந்த வண்ணம் உள்ளனர். இவர் களைப் பொறுத்தவரை உடையும் இந்தியா ஒரு பணம் காய்க்கும் மரம்; தங்க முட்டையிடும் வாத்து.

ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை இடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் அவர்களின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இங்கு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. யூதவெறியும் ஹிந்து மதவெறியும் தங்களின் பொது எதிரியாக இஸ்லாத்தைக் கருதித்தான் கைகோர்க்கிறது. இந்தக் கூட்டுதான் அணிசேரா நாடுகளின் தலைமையில் இருந்த இந்தியாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் அளவிற்கு வெளியுறவுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க வழிவகுத்தது. 1992 தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். இந்தக் கூட்டணியின் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்திற்கு இவை எல்லாம் நல்ல தீனியாக அமைந்தது.
இந்தியா முழுவதும் உள்ள எல்லா மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிரவாதம் என்கிற பெயரில் நம் மீது பிம்பங்கள் தொடர்ந்து வீசப்பட்டன. பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமியர்களின் தெருக்களில் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பதான சித்திரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பதிக்கப்பட்டது. நான் லாகூர் நகரத்தில் தெருத் தெருவாக சில தினங்கள் திரிந்தேன். ஆயுதம் ஏந்திய காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைக் கூட காண இயலவில்லை. பாகிஸ்தானில் உள்ள வறுமையை சொற்களால் சித்தரிக்க இயலாது. அதை விட அங்கும் தினசரி குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது. பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, RAW என்றுதான் விரிவாகக் கூறுகிறது. இங்கு நம் நாளிதழ்களில் ISI புராணம். இரு நாடுகளும் அப்பாவி மக்களைப் பிணையமாக வைத்து ஆடும் ஒரு சதுரங்க விளையாட்டில் ஈடுபடுகின்றன.

மிக சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் ஒருவர், மீன் கடை வைத்திருப்பவர், கறிக்கடை வைத்திருக்கும் பாய், ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு அத்தா என நமக்கு அறிமுகம் இல்லாத இஸ்லாமியர்கள் அனைவரையும் நகரங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்க பழக்கி வருகிறது. நல்லவேளை, எங்கள் கிராமங்கள் இந்தக் கிருமியால் இன்னும் பீடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியர்களின் மூளையைச் சலவை செய்ய காஷ்மீர், தீவிரவாதம் என்று படம் எடுக்கும் இயக்குநர்களுக்குப் பல இடங்களில் இருந்து பணம் பெட்டிகளில் கைமாறியது. உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், இந்திய முதலாளிகள் என ஒரு பெரும் கூட்டு நிதி மூலதனம் இஸ்லாமிய வன்முறை பிம்ப உருவாக்கத்திற்குப் பின்னணியில் இயங்குகிறது.

2004 முதல் 2009 வரை நடந்த பல குண்டு வெடிப்புகள் இதே மனநிலையை இன்னும் இறுக்கமாக்கவே உதவியது. இந்தியாவில் ஒரு நவீன மோஸ்தர் உருவாக்கப்பட்டது. ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதன் செய்தி வெளியாகும் போதே அது இஸ்லாமியர்களின் கைவரிசை என எல்லா செய்தி ஊடகங்களும் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவிக்கும். அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்து சில இளைஞர்களை வரிசையாக உட்காரவைத்துக் காட்டுவார்கள். இதில் இரட்டை ஆதாயம். ஒன்று, இப்படி நடந்தாலே அது இஸ்லாமியர்கள் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவது, அடுத்து, பாருங்கள், நாங்கள் நொடிப் பொழுதில் கயவர்களைப் பிடித்துவிட்டோம் என மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. இந்த நடை முறைகள் எதையாவது நீங்கள் கேள்வி கேட்க முயன்றால் நீங்களும் தீவிரவாதிகள்தான் என எழுத சில ஹிந்துத்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் தயார் நிலையில் இங்கே.
நாந்தேடு குண்டு வெடிப்புகள், தானே குண்டு வெடிப்புகள், மேலாகாவ் குண்டுவெடிப்புகள், மெக்கா மசூதி வெடிப்புகள் என தொடர் வெடிப்புகள் இந்தியாவை உலுக்கியது. எல்லா வெடிப்புகளிலும் ஒரே நடைமுறைதான். உடனே 20 - 25 இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்வதும் அவர்களை சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என காவல் துறை பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதும் அச்சு பிசகாமல் நிகழ்ந்தது. இவை எல்லாவற்றுக்கும் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தியாவில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல்பாடு. அவர்தான் ஹேமந்த் கர்கரே. அவர் மாலேகாவ் குண்டிவெடிப்பு முழுவதும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதிவேலை என்பதைக் கச்சிதமாக நிறுவினார். அவர் தாக்கல் செய்த 4000 பக்க அறிக்கை அபிநவ் பாரத், சாத்வி பிரக்ஞயா தாக்கூர், பிரசாத புரோஹித் ஆகியோரின் வரலாற்றை விவரித்தது. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைப் போலவே நாந்தேட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்குச் சொந்தமான கிட்டங்கி ஒன்றில் சங் பரிவார் ஊழியர்களுக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சி நடந்தபோது ஏற்பட்ட விபத்தால் குண்டு வெடித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் போலவே தானே குண்டு வெடிப்பின் முடிச்சுகளும் அவிழ்ந்தது. ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் மும்பை தாக்குதல்களின் பின்னணியில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். Who killed Hemant Karkare என்கிற நூலை மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.முஷ்ரில் எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வாறு ஹேமந்த் கர்கரேயின் மீது சங் பரிவார் ஒரு கண் வைத்திருந்தது என்பதை விளக்கியுள்ளார்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் முதலில் பழி பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் மீதுதான் போடப்பட்டது. ஆனால் விசாரணையில் மெல்ல ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் உள்ள ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களின் செயல் இதில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் இந்தக் குண்டு வெடிப்பு எப்படி எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பதை சுவாமி அசீமானந்தா விரிவாக நாட்டிற்கு எடுத்துரைத்தார்.
அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள்தான் இதன் பின்னே உள்ளது என அரசு வாய்கிழிய அறிக்கைகள் விட்டு நம் மூளைகளைச் சலவை செய்தது. ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப் பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர்.

இதே அபிநவ் பாரத் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியைக் கொலை செய்ய தீட்டிய திட்டத்தை ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம் ஆதாரங்களுடன் வெளியிட்டது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் நிகழ்ந்த உரையாடல்களின் எழுத்து வடிவை தெகல்கா இதழ் வெளியிட்டது. செப்டம்பர் 16, 2011ல் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில் உளவுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் துணையுடன் நடத்தப்பட்ட 16 குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைகளின் பட்டியலை வெளியிட்டார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல் ஊடகங்களில் புழக்கத்திற்கு வந்தவுடன் சங் பரிவார் மற்றும் அதன் வெகுஜனத் தலைவர்கள் அத்வானி உட்பட தீவிரவாதம் என்று ஒன்றுதான் உள்ளது, அதில் ஹிந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பிரிக்க இயலாது என்றார்கள். அமெரிக்கா தனது எண்ணெய்க்கான யுத்தத்தில் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளாக அப்பட்டமாக ஒரு போரை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் பல நேரங்களில் இதனை சிலுவைப் போர் (crusade) என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இருப்பினும் இதனை கிறிஸ்தவ தீவிரவாதம் (christion terrorism) என்று ஒருமுறை கூட எந்த ஊடகமும் அறிவிக்கத் துணிந்ததில்லை. இதுவரை இஸ்லாமியத் தீவிரவாதம், கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல்லை மிக சகஜமாகப் புழங்கியவர்களுக்கு ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பொத்தாம் பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற போர்வையில் சாமானியர்களைத் தான் இதுவரை பலியாடுகளாக மாற்றியுள்ளோம். தீவிரவாதிகளைப் பிடிக்க இயலாதபோது நாம் அப்பாவிகளை பிடித்து வழக்கை முடிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளோம். மாவோயிஸ்டுகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் பழங்குடிகளைப் பிடித்து சித்திரவதை செய்து வழக்கை முடிக்கிறோம். ஆனால் இந்தக் காலகட்டங்களில் சுவாமி அசீமானந்தா, சாத்வி பிரக்ஞயா தாக்கூர், புரோஹித் ஆகியோர் நரேந்திர மோடி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த முகமத் ரயீசித்தின், மெக்கா மசூதி வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளன்றே அவனது வேலை பறிபோனது. சில தினங்கள் சித்திரவதை, அதன் பின் சில ஆண்டுகள் சிறைச்சாலை, அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுதலை. இந்திய நீதிமன்றமே இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தும் ஹைதராபாத்தில் உள்ள எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. நீங்கள் இன்றும் ஹைதராபாத் சென்றால் முகமத் ரயீசித்தினை சந்திக்கலாம். அவர் பிளாட்பாரத்தில் வெயிலுக்குத் தண்ணீர் பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இவரைப் போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரின் கண்ணீர் கதைகள் உள்ளிட்ட அறிக்கையை ஆந்திர சிறுபான்மையினர் ஆணையர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்.

முகமத் ரயீசித்தின்னைப் போல் ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் கதைகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே கதையாகவே உள்ளது. எல்லா கதைகளின் நீதி ஒன்றே: இஸ்லாமியப் பெயர் ஒன்றே இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம். ஷாருக்கானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன? இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கி வாழ்வது தவிர வேறு ஏதும் செய்யாத இந்த இந்திய இளைஞர்களில் யாரிடமேனும் இந்திய அரசு என்றாவது மன்னிப்பு கோருமா?
- அ. முத்துக்கிருஷ்ணன் (நன்றி: உயிர்மை)

No comments: