Saturday, July 14, 2012

வாழ்வை ஒழுங்கமைப்போம் பணிக்குப் பங்களிப்போம்!

Life Style என்பார்கள். Style லே இல்லாத Life ஐயும் இவ்வாறு சொல்லிக் கொள்வதில் பலருக்கு மகிழ்ச்சி. அதிகமானோரின் வாழ்க்கையில் இந்த Life Style ஐத் தீர்மானிப்பது பொழுது போக்குகள்தாம். அவற்றோடு, தொழிலும் வருமானங்களும் அவரவரது வாழ்க்கைத் தரங்களுக்கேற்ப பின்பற்றப்படும் நுகர்வுக் கலாசாரமும் இந்த Life Style ஐத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
காலையில் எழுந்து பரபரப்பாகத் தயாராகி தொழிலுக்குச் சென்று, உழைத்துக் களைத்து, சோர்வுடன் மாலை வீடு வந்தால் உறவுகள் வரண்டு விடாமல் நனைத்துக் கொள்வதற்குக் கூட ஆர்வமில்லை. அவர்கள் வீட்டில் இருப்பவர்கள்தானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம். களைத்துப் போன உடம்புக்கும் சோர்வுற்ற உள்ளத்துக்கும் ஒரு சிலிர்ப்பை வழங்கும் பொழுதுபோக் கொன்றில் கவனம் செலுத்துவோம் என டீவிக்கு முன்னால் அமர்ந்து விடுகிறார்கள். இவற்றுக்கிடையில் நண்பர்கள், உறவினர்களின் வருகை அல்லது வைபவங்கள், வார இறுதியில் ஒரு Outing, களியாட்டங்கள், விழாக்கள், பெருநாட்கள், என Life Style படும் பாடு...?!

ஒரு பெரு வாழ்வு வாழ்கிறோம் என்றே நினைத்து விடுகிறார்கள். இதற்கு நிகரான ஒரு வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைப்பது பெரும் பேறு என்று கருதுகிறார்கள்.

இந்த வாழ்க்கையில் பகட்டும் பரபரப்பும் தடல்புடல்களும் ஒய்யாரங்களும் செலவினங்களும் கவர்ச்சிகளும் பவனிகளும் பரிவாரங்களும் பொழுது போக்குகளும் நிறைந்தோ அல்லது அவரவர் வசதிக்கேற்ப குறைந்தோ காணப்படலாம். இவற்றோடு இந்தக் களேபரத்துக்கு மத்தியில் தொழுகை, நோன்புகள், ஹஜ், உம்ராக்களும் இடம்பெறுகின்றன. 

எனினும், இந்த வாழ்க்கையில் கொள்கைகளில்லை இலட்சியங்களில்லை. பணிகள் இல்லை அவற்றுக்கான திட்டங்களில்லை. இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாடு குறித்து தெளிவான தீர்மானங்கள் இல்லை. சமூகத்தின் தற்போதைய நிலை பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விழிப்புணர்வில்லை.

இத்தகைய வாழ்வு ஒரு பெரு வாழ்வா? இந்த வாழ்க்கையில் மயங்கிப் போயிருப்பது ஒரு சுகமா? இது ஒரு விடுதலையா?

இல்லை, இவ்வாறானதொரு வாழ்வை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தரவில்லை அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்து காட்டவுமில்லை. இறுதித் தூதரின் வாழ்க்கைக்கும் நாங்கள் மேலே கண்ட Life Style க்குமிடையிலான இடைவெளி பாரியது. ரமழான் வருவது இந்த Life Styleஇல் எந்த மாற்றத்தையும் செய்யாமல் பகலில் வழமையாக உட்கொண்ட உணவுகளை இரவில் உட்கொள்ள வைப்பதற்கல்ல. வழமையான இரவுகளை விட ரமழான் இரவுகளை சிறிது மாற்றி விட்டுச் செல்வதற்காக அல்ல.

ஆக, நோன்பு நோற்பவர்கள் தங்களது Life Styleஐயே மாற்ற வேண்டும். ரமழானின் பொழுதுகளை வழமையான பொழுதுகளை விட சிறிது மாற்றுவதல்ல ரமழானின் வருகைக்கான நோக்கம் என்பதை உணர வேண்டும். இதற்காக அவர்கள் தமது வாழ்வை ஒழுங்கு படுத்த வேண்டும். வாழ்வு பணியாகவும் பணி வாழ்வாகவும் மாறுமளவு இஸ்லாத்தின் Life Style ஐ நோக்கி அவர்கள் நகர வேண்டும்.

வாழ்வை ஒழுங்குபடுத்துவோம் என்றவுடனே இன்றைய முஸ்லிம்களுக்கு எழும் ஒரு சிந்தனையையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். சமூகம் கருதும் ஒரு சில நற்செயல்களை செய்வதும் சமூகம் வெறுக்கும் ஒரு சில பாவங்களை விடுவதும்தான் வாழ்வை ஒழுங்குபடுத்துதல் என இதற்குப் பொருள் கொள்கின்றனர். வாழ்வை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சத்தையும் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்வது கடமையே. எனினும், வாழ்வை ஒழுங்குபடுத்துதல் என்ற எண்ணக்கருவில் இடம்பெறும் ஒரே அம்சம் அதுவல்ல. வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்கு இவ்வாறானதொரு பொருளைக் கொண்டால் நாம் ஏற்கனவே கூறிய Life Style அதுவாகவே இருக்க, அதனோடு ஒரு சில நற்செயல்கள் ஒட்டிக் கொள்ளும் மாற்றத்தையே அதிகபட்சம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். முழுமையானதொரு மாற்றம் வாழ்க்கையில் ஒருபோதும் ஏற்பட மாட்டாது.

“வாழ்வை ஒழுங்குபடுத்துதல்” எனும்போது பின்வரும் அம்சங்கள் அதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் ஒன்றையேனும் தவற விட்டால் வாழ்வை ஒழுங்குபடுத்தும் முயற்சி தோல்வியடையலாம்.

அ. அவற்றுள் முதன்மையானது சிந்தனையை ஒழுங்கு
படுத்துவதாகும். சிந்தனையில் மூன்று விடயங்கள் ஆழமாகவும் ஐயங்களுக்கிடமின்றியும் பதிந்து விடுவதே சிந்தனையை ஒழுங்குபடுத்துவதன் ஆரம்பம். அவையாவன:
வாழ்க்கையின் அர்த்தம்
வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கையின் பொறுப்புக்கள்

வாழ்க்கையின் அர்த்தம்
சொந்த இடம் சுவனம் வந்த இடமே உலகம். மீண்டும் சொந்த இடம் செல்வதற்கான நிபந்தனைகளை விதித்து மனிதனை இப்பூமியில் அல்லாஹ் தனது பிரதிநிதியாக ஆக்கியிருக்கிறான். அவன் சொந்த இடம் செல்வதற்குரிய பாதையையும் காட்டியுள்ளான். அப்பாதையை தனது அறிவுப் பார்வையால் துல்லியமாகப் பார்த்துப் பயணிப்பதற்காக பகுத்தறிவும் வேத அறிவையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த அறிவுகள் இரண்டையும் உரிய முறையில் பயன்படுத்தத் தவறினால் ஆசைகளும் சொந்த விருப்பு, வெறுப்புகளும் அவனை வழிநடத்தத் துவங்கும். அது அவனை வேறு ஒரு பாதையில் கொண்டு போய் தோல்வியின் வாசலை (நரகத்தை) அடையச் செய்யும். அப்போது அவன் தனது வாழ்க்கையை இழந்து விட்டேன்  எனக் கைசேதப்படுவான்.

இதுவே வாழ்க்கையின் அர்த்தமாகும். இந்த அர்த்தத்தை ஆழமாக விளங்கி மனதில் கொள்ளும்போது சிந்தனை ஒழுங்குபடுத்தப்படுகிறது.

வாழ்க்கையின் நோக்கம்
சிந்தனையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அம்சம் வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவாக உள்ளத்தில் பதியச் செய்வதாகும்.

தன்னைப் படைத்தவனைத் திருப்திப்படுத்த வேண்டும் அவனது அன்பைப் பெற வேண்டும். அவனை தனது இரு கண்களாலும் காணும் இன்பத்தைப் பருக வேண்டும் அதற்காக அவனைச் சார்ந்து நின்று அவனையே வணங்கி வழிபட வேண்டும். அவனல்லாத ஒரு சக்தியை தனது விடிவுக்கான, விடுதலைக்கான ஒரு சக்தியாக நினைத்தும் பார்க்காதிருக்க வேண்டும். இதுவே வாழ்வின் நோக்கம்.

வாழ்க்கையின் பொறுப்புக்கள்
வாழ்க்கையின் உலக நோக்கங்கள் எனவும் இதனைக் குறிப்பிடலாம். உலகை அல்லது உலகின் முடியுமான ஒரு பகுதியை நன்மைகள் நிறைந்ததாகவும் பாவங்கள் குறைந்ததாகவும் நீதிமிக்கதாகவும் அனைத்து மனிதர்களும் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என்ற வேறு பாடின்றி நல்வாழ்வு வாழ்பவர்களாகவும் மனித குலம், சாதி, வர்க்க, மத, அதிகார பேதங்களின் அடக்குமுறைகளுக்குட்படாமல் சுபிட்சம் பெறுவதற்காகவும் தங்களை அர்ப்பணித்து உழைத்தல்.

இத்தகைய சிந்தனைகள் தெளிவாகவும் ஆழமாகவும் உள்ளங்களில் பதியாத ஒருவரின் சிந்தனை ஒழுங்கமையமாட்டாது. அதன் விளைவாக அவரது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதும் சிரம சாத்தியமானதே.

இத்தகைய சிந்தனையைத் தெளிவாகப் பெற்ற ஒருவரை அந்த சிந்தனைக்காக செயல்படுபவராகப் பயிற்றுவிப்பதே மனித வாழ்வை ஒழுங்குபடுத்துவதற் கான இரண்டாவது அம்சமாகும்.

இதில் இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மனப்பாங்கு மாற்றம்
செயற்திறன்
மனப்பாங்கு மாற்றம்

மனப்பாங்கு மாற்றத்தில் முக்கியத்துவம் பெறுவது உயர்ந்த குணங்களாகும். அன்பையும் உயர்ந்த பண்பையும் அணிகலனாகப் பெறாதவர்களால் தங்களது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியாது. எந்தவொரு கடினமான சூழலிலும் இழக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பெறுமதி மிக்க பொக்கிஷமே அழகிய நற்குணங்கள் என்பதை உணருமளவு ஒருவர் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லாதபோது அவரது வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்படுவது எப்படிப் போனாலும், குழப்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீள முடியாத அவலத்தில் அவர் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.

செயற்திறன்
செயலூக்கமும் தன்னார்வமும் கொண்ட நிலையில் எடுத்த கருமத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் வளர்க்கப்படுவது வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கிய அம்சமாகும்.
எனினும், இதற்கு மாறாக எமது சமூகத்தில் பிறர் செய்யும் ஆக்கப் பணிகளைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அதனைச் சாதிக்கும் நோக்கில் கீழ்த்தரமான நயவஞ்சகக் குணங்களை வளர்க்கிறார்கள். இரண்டுக்கும் சமூகத்தில் அமோக வரவேற்பிருக்கின்றது. இரண்டுக்குமிடையில் இருப்பவர்களோ எமக்கேன் இந்த வம்புகள் என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். இத்தகையவர்கள் தங்களையும் தங்களது குடும்பத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குக் கூட முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை. காரணம், ஒழுங்குபடுத்துவதற்கான சாதனங்கள் இவர்களிடம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது என்பது ஆடையையும் தோற்றத்தையும் ஒழுங்குபடுத்துவது அல்லவே!

இ. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் பங்களிப்புச் செய்யும் மூன்றாவது காரணி தலைமைத்துவமாகும். “ஆ” பகுதியில் கூறப்பட்ட பயிற்சிக்குட்படுத்தப்பட்டவர்களை இஸ்லாத்தின் இலட்சியங்களின்பால் வழிநடத்தும் ஒரு தலைமைத்துவம் பயிற்றப்பட்டவர்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்றது. தலைமைத்துவத்தை நன்கு விளங்கி அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒருவர், வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் ஒழுங்குகளைப் பேணப் பழகுகின்றார்.

அது வெறும் அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கான ஒழுங்கல்ல. ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கைதான் வாழ்க்கை. அது ஒழுங்குபடுத்தப்பட்டால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதனோடு கிடந்து வாழ்ந்து மடிந்து போவதுதான் அவரின் பிறந்த நோக்கம் என்றே கூறி விடலாம்.

எனினும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான முதலிரண்டு அம்சங்களோடு தலைமைத்துவமும் சேர்ந்தால் ஒரு மனிதனின் வாழ்வு பணியாகவே மாறிவிடுகின்றது. அல்லது பணிக்குரிய வாழ்வை நோக்கி அவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றான். காரணம், இப்போது அவன் “தன்னிலை” எனும் ஒருமையிலிருந்து “சமூக நிலை” எனும் பன்மைக்குள் நுழைகின்றான். அதனால், அவனது வாழ்வு சமூக வாழ்வாக மாறுகின்றது. அவன் இப்போது தனது குடும்பத்தின் நலனுக்காக உழைப்பது போல சமூகத்தினதும் நாட்டினதும் நலனுக்காக உழைக்கும் உழைப்பாளியாக மாறுகின்றான். அல்லாஹ்வின் தூதர் உருவாக்கிய மனிதர்களின் Life Style  இப்படித்தான் இருந்தது.

தெளிவான கொள்கைகளினதும் இலட்சியங்களினதும் அடிப்படையில் தலைமைத்துவத்தோடும் கட்டுப்பாட்டோடும் இவ்வாறானதொரு சமூக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், இந்த வாழ்க்கைக்குப் பாதிப்பில்லாத வகையில் தங்களது தொழில், வருமானம், செலவினங்கள், வசதிகள், பழக்கவழக்கங்கள், உறவுகள், வியாபாரம், வைபவம், பயணங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறார்கள். அதனால் அவர்களது வாழ்வு பணியாகின்றது. பணி வாழ்வாகின்றது.

கொள்கையையும் இலட்சியங்களையும் இழந்தவர்கள் அல்லது வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தொலைத்தவர்கள் தலைமைத்துவமும் கட்டுப்பாடும் இல்லாதவர்கள் வாழ்க்கையை வேறாகவும் பணியை வேறாகவும் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களுக்குப் பணி என ஒன்று இல்லை. சிலபோது அவ்வாறு ஒன்று இருந்தாலும் பணிக்காக வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கை பாதிக்கப்படாமலிருப்பதற்காக பணியை முன் பின் ஆக்கிக் கொள்வார்கள்.

அவ்வாறாயின் கொள்கையுமில்லை இலட்சியமுமில்லை வாழ்க்கையின் அர்த்தமோ நோக்கமோ புரியவுமில்லை. வழிநடத்துவதற்கு ஒரு தலைமைத்துவமுமில்லை கட்டுப்பாடுமில்லை என்ற நிலையில் ஒருவரது வாழ்வு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இஸ்லாத்தின் பார்வையில் அதை நினைக்கவே பயமாக இருக்கிறது. இத்தகையோரின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு ரமழானின் இரவு, பகல் மாற்றங்கள் போதுமா?

இந்த ஆக்கத்தில் கூறப்பட்ட அனைத்து அடிப் படைகளினூடாகவும் தங்களது வாழ்வைப் பணியாகவும் பணியை வாழ்வாகவும் ஒழுங்குபடுத்திக் கொண்ட ஒரு சமூகத்திற்குத்தான் அல்லாஹ் 15 வருடங்களின் பின் நோன்பைக் கடமையாக்கினான். நோன்பு அந்த ஒழுங்கு படுத்தப்பட்ட வாழ்வை மேலும் சீராக்கி, பண்படுத்தி, பக்குவப்படுத்தியது.

இன்றோ ஒழுங்குபடுத்துவதற்குரிய எந்த ஏற்பாடு மில்லாத ஒரு சமூகத்தில் ரமழான் வந்து போகிறது. ரமழானின் வரவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஷவ்வால் சொல்லும்.

யார் வாழ்வை ஒழுங்குபடுத்தினாரோ அவர் பணியின் பங்காளராக மாறலாம். ரமழான் அவரைப் புடம்போடும். யார் வாழ்வை ஒழுங்குபடுத்தவில்லையோ அவருக்கும் பணிக்கும் சம்பந்தமில்லை. ரமழான் அவர் மீது உரசிவிட்டுப் போகும், அவ்வளவுதான்!

(http://usthazhajjulakbar.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/132-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D)

No comments: