இந்த ஆட்சியாளர்கள் தமது மக்கள் தம்மை வெறுக்கிறார்கள் என்பதை உலகுக்கு மறைத்து வைக்க பெரு முயற்சி செய்தார்களோ இல்லையோ, இன்று அந்த உண்மை வெட்ட வெளிச்சமாக உலகுக்குத் தெரியவந்து விட் டது. தமது மானத்தை மறைப்பது போல தமது முகத்தை உலகுக்கு மறைத்து எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை அத்தலைவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
அவ்வாறாயின், நீங்கள் பல தசாப்தங்களாக செய்தது நல்லாட்சியா? உங்களது ஊதுகுழல்களாக இருந்த அரபு மீடியாக்கள் அனைத்தும் இவ்வளவு காலம் உங்களைப் புகழ்ந்து தள்ளியது நாடகமா?
உலகில் எங்கெங்கு, யார் யார் முஸ்லிம்களின் தலைவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய தலைவர்கள் அனைவரும் பாடம் கற்க வேண்டிய தருணம் இது. தங்களைச் சூழ பக்கவாத்தியம் பாடுவோரையும் தங்களைப் புகழும் ஊதுகுழல்களையும் வைத்துக் கொண்டதால் தாங்கள் தான் உலகத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற மமதை தலைக்கேறி தலை, கால் தெரியாமல் தாண்டவமாடும் தறுதலைகள் ஒரு நாள் இருந்த இடம் தெரியாமல் அனைவராலும் இழிந்துரைக் கப்பட்டு, மறைவுக்கு முன்பே மறைந்து போக வேண்டிய பரிதாபம் வரும் என்பதை அவர்கள் உணர வேண்டிய தருணம் இது.
முஸ்லிம்களின் தலைவர்களே! நீங்கள் ஏன் அல்லாஹ் விரும்புவதையும் முஸ்லிம் சமூகம் விரும்புவதையும் புறக்கணித்துவிட்டு, அமெரிக்கா விரும்புவதையும் இஸ்ரேல் விரும்புவதையும் செயற்படுத்துகிறீர்கள்? உங்களை உங்கள் மக்கள் வெறுக்கும் போது, உங்களுக்கெதிராக உங்களது மக்கள் கிளர்ந்தெழுந்து உங்களைத் துரத்தும்போது உங்களது மேற்கு நண்பர்கள் உங்களைக் காப்பாற்ற வந்தார்களா?
நீங்கள் ஏன் உங்களது சொந்த மக்களின் அன்பைப் பெற முயற்சி செய்யாதிருக்கிறீர்கள்? உங்களது சொந்த மக்களுக்கு நன்மை செய்ய விடாமல் உங்களைத் தடுத்தவர்கள் கயவர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அந்தக் கயவர்கள் தங்களது நாடுகளில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வைத்துக் கொண்டு நீங்கள் உங்களது மக்களுக்கெதிராக சர்வதிகாரம் பண்ண வேண்டுமென்று வேதமோதியதன் விளைவு உங்களுக்குப் புரிகிறதா? உங்களது பாத்திரத்தில் அவர்கள் போடும் வருடாந்தப் பிச்சை உங்களுக்குப் பெரிதாகி, உங்களது மக்களும் உங்களது மார்க்கமும் உங்களுக்கு அற்பமாகிப் போனதை இப்போதாவது உணர்கிறீர்களா?
அவர்கள் தங்களது சமூகத்தில் இருந்த வரலாற்றுப் பகைமைகள் அனைத்தையும் மறந்து ஒன்றுபட்டி ருக்கையில், உங்களை உங்களது சமூகத்தோடு மோதவைத்து கோழிச் சண்டை பார்ப்பதுபோல் உங்களையும் உங்களது சமூகத்தையும் பார்த்து ரசித்துக் கெண்டிருந்தார்கள் என் பதை நீங்கள் ஒருபோதும் விளங்க வில்லையா?
ஈராக்கையும் ஈரானையும் மோத விட்டார்கள் சூடான் அரசோடு தார்பூர் மக்களை மோத வைத்தார்கள் குவைத்தோடு சதாமை மோத விட்டார்கள் கிழக்குத் தீமோரையும் தென் சூடானையும் முஸ்லிம்களிட மிருந்து பிரித்தெடுத்தார்கள் காஷ்மீரின் சுதந்திரம் தொடர்பில் கண்டும் காணாதவர் போலிருக்கிறார்கள்!
முஸ்லிம் தலைவர்களே! நீங்கள் பாடம் படிக்கிறீர்களா? அல்லது கண் தூங்கி விட்டீர்களா? நீங்கள் வாழும் உலகில் அரங்கேறிக் கொண்டிருக் கும் இந்தக் காட்சிகள் உங்களது சிந்தனைகளைக் கிளறவில்லையா? அல்லது உங்களது தலைகளுக்கு சுயமாக சிந்திக்கவே தெரியாதா?
நவீன உலகில் நீண்ட காலம் நாடுகளை ஆட்சி செய்தவர்கள் நீங்கள்தான். இத்தனை காலம் உங்களது நாட்டையும் மக்களையும் எந்த சாதனைகளின்பால் வழிநடத்திச் சென்றீர்கள்? நவீன உட்கட்டமைப்பு வசதிகள் பலவற்றை நகர்ப்புறங்களில் செய்து விட் டால் அதன் பொருள்தான் அபிவிருத்தியா? இன்றைய நவீன, விஞ்ஞான, தொழில்நுட்பயுகத்தில் உங்களது நாட்டின் பங்கும் சாதனையும் எத்தகையவை? விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் நேற்று உலகுக்கு ஆசான்களாக இருந்த உங்களது சமூகத்தை இன்று நீங்கள் எங்கே வைத்துவிட்டுச் சென்றுள்ளீர்கள்? நேற்று உங்களது மக்கள் அற்புதமான ஒரு நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் மனித சமூகத்திற்குக் கற்றுக் கொடுத்திருக்க, இன்று நீங்கள் அந்த சமூகத்தின் தலைவர்களாக நின்று உலகிற்குக் கற்றுக் கொடுத்தவை என்ன?
தனது சமூகத்தை தன் சொந்தக் கரங்களாலேயே அடக்கியொடுக்குவது எப்படி என்ற பாடத்தையா நீங்கள் உலகுக்கு இதுவரை கற்றுக் கொடுத் துள்ளீர்கள்?
உங்களோடு நீண்ட காலமாக பொறுமை சாதித்த உங்களது மக்களை நீங்கள் ஏமாளிகள் என்று தப்புக்கணக்குப் போட்டு வந்தீர்கள். அநீதிகளும் அநியாயங்களும் நீண்ட காலம் வாழ முடியாது. அவ்வாறு வாழ நினைப்பது இறை நியதிக்கும் இயற்கை நியதிக்கும் முரணானது என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். எனினும், உங்களைச் சூழ இருந்த மாயைகள் உங்களது கண்களுக்கு அத்தகைய வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டன. அசத்தியம் உலகில் சிறிது காலம்தான் தலைநிமிர முடியும். மறுகணமே அது தலைகவிழ ஆரம்பித்துவிடும் என்பதை உங்களது காலத்தில் உங்களது சான்றுகளால் நீங்களே நிரூபித்துக் காட்டி விட் டீர்கள்.
தலைவர்களே! மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நல்லபிப்பிராயமும் உங்களுக்காக அல்லாஹ்விடம் கரமேந்திச் செய்யும் பிரார்த்தனையும் தான் நீங்கள் உலகில் சம்பாதிக்கும் மிகப் பெரிய செல்வம் என்ற உண்மையை விளங்கும் ஆற்றல் உங்களுக்கிருக்கவில்லை போலும். நீங்கள் அல்லாஹ்விடம் நற்பெயர் வாங்குவதற்கு மக்களிடம் முதலில் நற்பெயர் வாங்கியிருக்க வேண்டும். அந்த செல்வத்தைத்தான் அதிகமதிகம் சம்பாதித்திருக்க வேண்டும். உலக மக்கள் உங்களை நல்லவரென்று கூறும் சாட்சியே அல்லாஹ்விடமும் நீங்கள் நல்லவர் என்பதற்கு சாட்சியாகும். அந்த சாட்சியை சம்பாதிக்க அருகதையற்றவர்களாக உங்களுக்கு அல்லாஹ் தந்த ஆட்சி, அதிகாரத்தை வீணடித்து விட்டீர்கள்.
உங்களது ஆட்சியில் பல தசாப்தங்கள் வாழ்ந்த மக்கள் இன்னும் பல தசாப்தங்கள் நீங்களே உங்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, துஷ்டனே வெளியேறு! என்று வீதிகளில் இறங்கி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து உங்களது மானத்தை அவமானமாக்கி விட்டார்கள். தலைவர்களே! உங்க ளது பதவி விலகல் உங்களது நாட்டு மக்களிடம் ஏற்படுத்திய மட்டற்ற மகிழ்ச்சியை வெள்ளிடை மலையாக நீங்கள் கண்டு கொண்டீர்களல்லவா? உங்களது பதவி விலகல் தொடர்பாக உங்களது ஒரு குடிமகன் தொலைக் காட்சி நிருபர் ஒருவருக்கு அளித்த பதிலைப் பாருங்கள்: “நான் ஒரு எகிப் தியன் என்று சொல்லிக் கொள்வதில் இப்போது பெருமைப்படுகிறேன்.”
உங்களது ஆட்சியில் நாடு இருந்த போது நான் எனது மண்ணின் மைந்தன் என்று கூறுவதற்கு உங்களது குடி மக்கள் வெட்கப்பட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறான் எனின், உங்களைப் பற்றி உங்களது மக்களின் எண்ணங்கள் எவ்வாறிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களை உள்ர சபித்துக் கொண்டும் உங்களது அடக்கு முறைகளை வெறுப்போடு சகித்துக் கொண்டும் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை ஆட்சியதிகாரம் கையில் இருந்தபோது ஒரு கணமாவது நீங்கள் சிந்தித்திருப்பீர்களா?
இன்று உங்களது நிலை என்ன? அடக்கியாளப்பட்டவர்களுக்கு அவமானமா? அடக்கியாண்டவர்களுக்கு அவமானமா? உலக அரங்கில் தலை குனிவை ஏற்படுத்திக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியும் பரிதாபம் ஏன் உங்களுக்கு வரவேண் டும் நீங்கள் நல்லவர்களாய் இருந்திருந்தால்?
நீங்கள் அதிகாரக் கட்டிலில் இருந்து இறங்கியபோது முஸ்லிம் உலகமோ முஸ்லிமல்லாத உலகமோ யார் உங்க ளைப் பற்றி நல்லது பேசினார்கள்? உங்களை ஆட்சிக் கட்டிலில் வைத்து உங்கள் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நசுக்க விரும்பிய சதிகாரக் கூட்டம் ஒன்று மட்டுமே உங்க ளது பதவி விலகலை அதிர்ச்சியோடு பார்த்திருக்கக் கூடும். அந்த சதிக் கும்பல் உங்களுக்காக முதலைக் கண்ணீர்கூட வடிக்கவில்லை. அவர்கள் தீர்மானித்திருக்கக் கூடும் பழைய பொம்மையை அகற்றிவிட்டு ஒரு புதிய பொம்மையைக் கொண்டு வருவோம் என்று.
முஸ்லிம் உலகின் தலைவர்களே! இன்று உலகம் முழுவதும் உங்களைச் சாடுகிறது, சபிக்கிறது. இதைவிட நன்றாக இருந்திருக்குமல்லவா உங்களது மக்களுக்கு சுதந்திரம் கொடுத்து, உங்களது குறைகளை அவர்கள் மூலமாகவே நீங்கள் கேட்டறிந்திருந்தால்...? நீங்கள் உங்களது குறைகளை எழுதுவோரின் கைகளுக்கு விலங்கிட்டீர்கள் பேசுவோருக்கு தடை விதித்து தண்டனையும் கொடுத்தீர்கள். உங்களது குறைகளை நிறைகளாகக் காட்டி, போலியாகப் புகழ்ந்தவர்களை நீங்கள் அரவணைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டீர்கள். களம் மாறும் காலம் மாறும் என்பதை நீங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இன்று உங்களது அந்திம காலத்தை மக்களின் சாபத்தோடு கழிக்க வேண் டிய பரிதாபம் உங்களுக்கு!
முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் அனைவரும் பாடம் படிக்க வேண்டிய தருணம் இது. ஒரு குக்கிராமத்தின் பள்ளிவாசல் ட்ரஸ்டி முதல் அகில உலக முஸ்லிம் மாநாட்டுத் தலைவர்கள் வரை ஏன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறோம் என்று சிந்திக்க வேண் டிய தருணம் இது. அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் தலைமைப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்துவதற்கல்ல. அந்த முனைப்பில் நீங்கள் செயற்பட்டால் உலகிலேயே இழிவை சுமக்க நேரிடும் என்பதை ஓடி ஒளிந்த தலைவர்களிடத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
தலைவர்களே! உங்களுக்கு முன் மூன்று பொறுப்புகள் இருக்கின்றன.
01. சிதைந்துபோன இஸ்லாமிய உம்மத்தை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய மறுசீரமைத்து ஒன்றை ஒன்று பலப்படுத்தும் ஒரு கட்டிடத்தின் கற்களைப் போல் முஸ்லிம் உம்மத்தை நிர்மாணம் செய்வது.
02. இஸ்லாத்தின் மகிமையை வாழ்வின் சகல துறைகளினூடாகவும் மேலோங்கச் செய்து அதன் நிழலில் மனிதர்களின் உலக, மறுமை வாழ்வை வெற்றிபெறச் செய்வது.
03. உன்னதமான ஒரு வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் முழு மனித சமூகத்திற்கும் வழங்குகின்ற சமுதாய அமைப்பொன்றைக் கட்டி யெழுப்புவது.
இந்தப் பொறுப்புக்கள் இன்றைய அதிகமான தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய மட்டத்திலாவது ஒரு தலைமைத்துவம் கிடைத்து விட்டால் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் விற்றாவது தமது தலைமைத்துவத்தைப் பாதுகாக்கும் முனைப்பிலேயே தற்கால முஸ்லிம் தலைவர்கள் செயல்படுகிறார்கள்.
எகிப்து, டியுனீசியா, யமன், அல்ஜீரியா மட்டுமல்ல, மஹகொடயும் திகனயும் நுவரெலியாவும் இதற்கான உதாரணங்களே. குக்கிராமங்களின் தலைவர்கள் முதல் சர்வதேசத் தலைவர்கள் வரை தங்களது பொறுப்புகளைப் புறக்கணித்துவிட்டு எகிப்து களையும் டியுனீசியாக்களையும் உரு வாக்கவே முயற்சிக்கிறார்கள்.
தலைவர்களே! நீங்கள் அஞ்சுவது விமர்சனத்தையா, விசனத்தையா? தோல்வி மனப்பான்மை கொண்ட வர்கள்தான் விமர்சனத்துக்கு அஞ்சுவார்கள் ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர்களை அடக்கியொடுக்குவார்கள். ஏன்? விமர்சனமே இல்லாமல் நற்பணிகள் செய்து மக்களின் அன்பை யும் ஆதரவையும் பெறுகின்றவர்களைக் கூட அடித்துத் துரத்துவார்கள் நமது தலைமைக்கு அவர்களால் ஆபத்து வந்துவிடுமே என்றஞ்சி...!
களத்தின் யதார்த்தத்தை எடுத்துக் கூறும் இந்தக் கட்டுரையைக் கூட சகிக்க முடியாத தலைவர்கள் சமூகத்தில் இருக்கவே செய்வார்கள், ஆச்சரியமில்லை! தமது தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் பண்பாட்டைத்தான் இன்றைய அதி கமான தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். மார்க்கத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் பண்பில் வேறுபாடு கிடையாது. அவர்கள் தமது சமூகத்தையும் தமது மார்க்கத்தையும் தங்களது சொந்தக் கரங்களாலேயே நசுக்கும் பண்பாட்டைக் கற்றளவு தங்களது சமூகத்தை தங்களது கரங்களால் கட்டியெழுப்பும் கலையைப் படிக்கவில்லை.
தலைவர்கள் தங்களது குறைகளை மறைத்து, குறை கூறுபவர்களையும் ஒழித்து, தங்களது அதிகாரத்தையும் தலைமையையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அந்த அதிகாரமும் தலைமையும் அவர்கள் அறியாவண்ணம் மெல்ல மெல்லக் கரைந்து செல்வதை அவர் கள் உணருவதில்லை. அதை உணரும் ஒரு நேரம் வரும். அப்போது அவர்கள் விசனப்பட்டுப் போவார்கள். நேற்று விமர்சனத்துக்கஞ்சியவர்கள் இன்று விசனத்தக்கு ஆளாகிறார்கள். இதுதான் ஓடி ஒளிந்து கொண்ட தலைவர்கள் கற்றுத் தரும் பாடம்!
நாளை ஓடி ஒளிந்து கொள்ள இருப்பவர்களே! உங்களது சமூகத் தையும் சன்மார்க்கத்தையும் நோக்கி உங்களது பொறுப்புகளின்பால் திரும்பி வாருங்கள். உங்களது சமூகம் உங்களைத் தோள் மேல் சுமந்து கொள்ளும் உங்களது நெற்றியிலே முத்தமிடும்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
No comments:
Post a Comment