Saturday, February 7, 2015

இஸ்லாம் பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் .

எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக!

20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பெண் ஆணுக்கு நிகரானவள், சமஉரிமை படைத்தவள், உரிமைகள் வழங்கப்பட வேண்டியவள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இப்போராட்டம் ‘பெண்களின் விடுதலைப் போராட்டமாக’ சித்தரிக்கப்பட்டதனால். ஆணாதிக்கம், சமயக் கோட்பாடுகள் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து கொண்டு பெண்கள் வீதியில் இறங்கினார்கள், இறக்கப்பட்டார்கள்.
இதன் மூலம் ஆண்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவித்து சமபங்கு வகித்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து ஆட்சி பீடம்வரை சென்ற அவர்கள் விண்ணில் உலா வந்தார்கள். ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பும் அவசியம், ஆண்களால் மட்டும் வளர்ச்சியைக் காணமுடியாது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றே ஆண் பெண் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
போராட்ட முழக்கம் எழுந்தது. சரிநிகர் சமத்துவ பயணம் தொடர்ந்தது. பிரபுத்துவ ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டு அனுபவிக்கப்பட்டவள் முதலாளித்துவ பிடியில் அனுபவிககும் பண்டமாக ஆபாச சின்னமாக (Sex Symble) அவிழ்த்துபோட்டு நடமாடும் ராணியாக விளம்பர பலகையாக ஆக்கப்பட்டாள். ஆண்களின் நுகர்வோர் சந்தையில் விளையாட்டு பொம்மையாக வடிவமைக்கப்பட்டாள். இறுதியில் ஆண், பெண் இரு பாலாரின் தனிப்பட்ட வாழ்வும் குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் வீழ்ந்தது. சூழல் மாற்றமடையத் தொடங்கியது. நிம்மதி தொலைந்தது. விரக்தி தொற்றிக் கொண்டது. சுகப்படுத்த முடியாத நோய் பரவ ஆரம்பித்தது. வரையறையற்ற வாழ்க்கை முறையினாலும், தெளிவற்ற உரிமைப் போராட்டத்தினாலும் உருவான விபரீதங்களைக் கண்டு உலகம் அஞ்சுகிறது. நாகரிகத்தின் பெயரால் நாதியற்றுப் போயிருக்கும் வாழ்வைச் சீர்படுத்துகின்ற சத்திர சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது இன்றைய உலகம்.
‘சமபங்கு, சமஅந்தஸ்து, சம உரிமை’ என்பவை சரிவரப் புரிந்து கொள்ளப்படாததனாலும் ‘சமத்துவ பணிகள்’ சரியாக வழங்கப்படாமையினாலும் பொறுப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்படாமையினாலும் மனித வாழ்வு புரையோடிய புற்றுநோயாக தோற்றம் பெற்றுள்ளது. பெற்றோர் முதியோர் இல்லங்களிலும் பிள்ளைகள் பாதுகாப்பு மையங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் குழந்தைகள் ஏங்கித் தவிக்கின்றன. அன்பையும் அரவனைப்பையும் வேண்டி பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழும் உரிமை கேட்டு பிள்ளைகள் வழக்குத் தொடுக்கின்றனர். கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொண்டு பார்கின்றனர். பொதுவாக மேற்கத்திய உலகில் மூன்று W களை நம்பமாட்டார்கள். 1. Weather காலநிலை 2. Women பெண் 3. Work தொழில். இந்த மூன்றும் எந்த நேரத்திலும் மாறிபோயிடலாம் என்பதே அவர்களது வாழ்வாகும்.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களின் நிலை பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், விவரணங்களையும் இஸ்லாத்திற்கு முரணாக ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
சர்வதேசமட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் பலம் வாய்ந்த ஊடகங்களான BBC,CNN போன்றவை யூத கிறிஸ்தவர்களின் கைவசம் உள்ளதனால் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவ்வப்போது தவறான செய்திகளைக் கொடுத்து இஸ்லாம் பற்றி அறியாத அப்பாவிகளை ஏமாற்றி வருகின்றன.
‘இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது பர்தா என்னும் ஆடையை அணிவித்து ஆயுட்காலக் கைதிகள் போல் வீட்டில் முடக்கி வைத்துள்ளது. கல்வியறிவு உட்பட அடிப்படை உரிமைகளைக்கூட வழங்குவதில்லை. முஸ்லிம் சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கிக் காணப்படுவதால் பெண்கள் அடிமைகள் போல் அடங்கி வாழ்கிறார்கள்’ போன்ற செய்திகளை இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்தைய ஊடகங்களின் ஊதுகுழல்களாக செயற்படும் ஏனைய ஊடகங்களும் அவைகளை அப்படியே வாந்தியெடுத்து விடுகின்றன. நம் நாட்டின் ஊடகங்கள் அண்மைக்காலமாக இவ்வாறான செய்திகளைக் கொட்டுவதில் தீவிரம் காட்டி வருவதையும் கண்டு வருகிறோம். ‘சகல சமூகங்களிலுமுள்ள பெண்கள் சுதந்திரமாகவும் முன்னேற்றமாகவும் செயற்பட்டு வரும்போது முஸ்லிம் சமூகம் மட்டும் பெண்களைத் தன்னிச்சையாக செயற்படவிடாமல் மூலையில் முடக்கி வைத்துள்ளது’ போன்ற மாயையை இந்த மீடியாக்கள் மீட்டுகின்றன.
மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை மீடியாக்கள் விவரணப் படுத்தும்போது உலக மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாகவே எண்ணுகிறார்கள். பேசுகிறார்கள். பெண்களுக்கு உரிமைகளே கொடுக்காத மார்க்கம் என்றால் அது இஸ்லாம் தான் என்று கருதக்கூடிய நிலைக்கு இந்த மீடியாக்கள் இட்டுச் செல்கின்றன.
தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை? அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறைநிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.
இஸ்லாத்தையும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் படித்து, அறிந்து, பெண்களின் நிலவரம் பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் விமர்சனம் செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம். மாற்றமாக கருத்துக் குருடர்களாக இருந்து கொண்டு புத்திஜீவிகள் போல் பேசுவதுதான் அசிங்கமாகத் தெரிகிறது.
மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
பொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை! அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.
இஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது. இன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. வேறு சில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதி செய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.
பெண்களின் கற்பு மானம், மரியாதை, கண்ணியம் ஆகியவற்றை இஸ்லாமிய சட்டங்கள் கண்டிப்பாக காப்பாற்றுகின்றன, உத்தரவாதப்படுத்துகின்றன. கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்று கூறி அதனை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டும், மலினப்படுத்தக் கூடாது என கட்டளையிடுகிறது. பெண் என்ற அந்தஸ்தையும் தாய் என்ற கௌரவத்தையும் கொடுத்து குடும்பத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் சமபங்காளியாக உயர்த்திக் காட்டுகிறது.
பெண்ணை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆணின் மீதுள்ள கடமை என்று கூறி பொருளாதாரச் சுமைகளை ஆணின் மீது சுமத்துகிறது. இஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.
பெண்:
ஆன்மா இல்லாதவள்,
பிறப்பால் இழிவானவள்,
ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள்,
விவாகரத்து உரிமையற்றவள்,
மறுமணத்திற்கு தகுதியற்றவள்,
வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள்,
வேதம் படிக்க அருகதையற்றவள்,
மாதத்தீட்டால் பிரசவத்தீட்டால் அசிங்கமானவள்,
ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.
இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூதகிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளின் உதிரிகள் தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உண்மையை எடுத்துக்காட்டுவதே இங்கே முக்கிய நோக்கமாகும். பெண்களின் உரிமைகளைப் பறித்து அடக்கியாளுகின்ற மதம் இஸ்லாமா? யூத கிறிஸ்தவமா? என்பதை வாசகர்கள் இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல் உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கும் யூத கிறிஸ்தவர்களின் பிடியிலுள்ள மீடியாக்களும் ஏனைய மீடியாக்களும் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமாக விவரணப்படுத்துமுன் அவர்கள் சார்ந்துள்ள மதங்களில் அவர்களுடைய பெண்கள் எப்படி மதிக்கப்படுகின்றனர் எவ்வாறான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து செயற் படமுடியும்.
ஏனைய மதங்களைச் சார்ந்த பெண்களும் தங்களுடைய உரிமைகளை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் மற்றுமொரு நோக்கமாகும்.
யூத கிறிஸ்தவ மக்களுக்கு அல்லாஹ் தவ்றாத் மற்றும் இன்ஜீல் வேதங்களை கொடுத்துள்ளான். அவைகள் கொடுக்கப்பட்ட அசல் வடிவில் அவர்களிடம் இல்லை. தவ்றாத்தையும் இன்ஜீலையும் உள்ளடக்கியதாகவே பைபிள் உள்ளதாக கூறினாலும் பைபிளை பொறுத்தமட்டில் அது முழுமையான இறை வேதமாக – பாதுகாக்கப்பட்ட வேதமாக இல்லை அதில் கூட்டல் குறைவுகள், திரிபுகள், முரண்பாடுகள், அசிங்கங்கள் மற்றும் அபத்தங்களும் உள்ளன.
இறைவார்த்தைகளுடன் மனித கையூட்டல்களும் கலந்துள்ளன. வேதத்திற்குரிய தரத்தில் பைபிள் இல்லை என்பதை இந்நூலின் ஆய்விலே கண்டுகொள்ள முடியும். இவர்கள் ஏற்படுத்திய முரண்பாடுகளையும் திரிவுகள் மற்றும் மறைவுகளை அல்குர்ஆன் முன்வைக்கிறது.
- M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி