Showing posts with label தர்பிய்யா. Show all posts
Showing posts with label தர்பிய்யா. Show all posts

Monday, March 21, 2011

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும்। இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது।

இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது."நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது। முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்।" (பைஹகி).இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது।துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது।இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை। மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை। அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது।

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும்। ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்।தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும்.

அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பதுஉங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும்.

குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும்.

உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.கவனிப்பு அல்லது அக்கறைஉங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பதுதம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா? ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும். அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்॥! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்॥! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்॥!எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்.

Tuesday, March 15, 2011

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

எழுதியவர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது.குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.

  • இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
  • அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
  • ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
  • ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
  • தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும்குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
  • இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
  • அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
  • தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
  • உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
  • அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
  • பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
  • சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
  • குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
  • காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
  • ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
  • குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
  • விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
  • பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
  • மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
  • ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
  • அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
  • அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
  • பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
  • உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
  • அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
  • குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
  • பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
  • குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
  • குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
  • குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
  • பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
  • பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
  • அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
  • திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
  • நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
  • பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
  • இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
  • இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
  • இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
  • பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
  • உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
  • இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.

அல்லாஹ் அருள்புரிவானாக!

Thanks: http://www.islamkalvi.com/portal/?p=5263

Wednesday, November 24, 2010

உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்!
உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!
“ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

ஹஜ் கடமை:-
மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ்கடமைக்காக மக்காவில் அணி திரள்கின்றனர்.

தியாகம்:-
இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் சமுதாய விழிப்புணர்வு எனும் தாகத்துடன் கூடிய தியாகச் சிந்தனை ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களைக் காணலாம்.

கொள்கை உறுதி:-
இப்றாஹீம், இஸ்மாயில், அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ பணம் படைத்தவர்கள் தமது செல்வத்தை அநாகரிக அரசியலுக்காகவும், ஆபாசம் நிறைந்த “கலை-கலசாரம்” என்ற பெயரில் நடக்கும் கலாசாரக் கொலை நிகழ்ச்சிகளுக்கும் வாரி வழங்குவதைப் பார்க்கின்றோம். குர்ஆன்-ஸுன்னாவுக்கு எந்நிலையிலும் கட்டுப்படுவேன். அதற்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் உதவ மாட்டேன் என்ற உறுதி எமது செல்வந்தர்களிடம் உருவாக வேண்டும்.

இரக்கம் பிறக்கட்டும்:-
“ஹஜ்” என்பது மனிதனிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவேதான் அம்மாதங்களில் யார் தன் மீது ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டாரோ அவர் ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம்! தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.சமூகத்தில் பெரும் பெரும் குற்றச் செயல்களை சமூக அந்தஸ்த்து மிக்கவர்கள் துணிவுடன் செய்கின்றனர். பணம் இருக்கிறது என்ற திமிரில் அடுத்தவர்களை ஆள் வைத்து அடிப்பது, சட்டத்தையும் அரசியல் பலத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலவீனமானவர்களைப் பழி தீர்ப்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர்.ஹஜ் செல்வந்தர்களின் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்மை விடக் கீழானவர்கள் மீது அன்பையும், கருணையையும் பொழியும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டும்.
ஈகை மலரட்டும்:-
ஹஜ் பெருநாளை “ஈகைத் திருநாள்” என்று கூறுகின்றோம். இப்றாஹீம் நபி தனது மகனை அறுக்கத் துணிந்ததை நினைவூட்டும் முகமாகக் கால்நடைகளை அறுத்து வறியவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த ஈகைக் குணம் ஹஜ்ஜாஜிகளிடம் ஏற்பட வேண்டும். தமக்கு அல்லாஹ் வழங்கிய அருளில் வறியவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் பக்குவம் பிறக்க வேண்டும்.

உள்ளத்தின் கண்கள் திறக்கட்டும்:-
முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் பல. முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலை இஸ்லாத்தையும், முஸ்லிம் உம்மத்தையும் தப்பும் தவறுமாகப் பிற மக்கள் கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.இந்த சமுதாயத்தின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. சமூகத்தின் பண்பாடுகளும், பழக்க-வழக்கங்களும் மாறிக்கொண்டு செல்கின்றது. வறுமை சமூகத்தை வாட்டி வதைக்கின்றது. பாரிய பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள அடி மட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஏழைகளின் நடத்தைகளில் வறுமை பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைக்கும், ஆபாச சினிமாவுக்கும் அடிமைப்பட்ட இளம்சமூகம் உருவாகி வருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் முஸ்லிம் உம்மத்தின் அத்திவாரங்கள் ஆட்டங்கண்டு வருகின்றன; ஆணிவேர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையை நீக்கப் பாரிய சமூகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
குர்ஆன்-ஸுன்னா எனும் சத்தியப் பிரசாரம் சமூகத்தின் அடி மட்டம் முதல் அழுத்தமாகப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கல்வி விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.
கல்விக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும்.
கற்கும் ஆற்றலும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.
விதவைகள், அநாதைகள் போன்ற பலவீனமானவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
இந்தச் சமய-சமூக மாற்றத்திற்கும் நல்ல மனம் கொண்ட செல்வந்தர்களின் பணம் அர்ப்பணமாக வேண்டும்.
பணம் படைத்தவர்கள் தமது உள்ளத்தால் சமூகத்தைப் பார்க்க வேண்டும். உள்ளத்தின் கண்கள் திறந்தால் சமூகத்தின் அவலநிலை அவர்களுக்குப் புரியும். அதை நீக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவர்கள் இதயத்தில் பிறக்கும்.
இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்:-
இல்லாதவன் தன் வறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி வாழ வேண்டும். “இருப்பவன் இல்லாதவனுக்குப் “பொறுமையுடன் வாழ வேண்டும்!” என்று புத்தி சொன்னால் மட்டும் போதாது. இருப்பதில் கொஞ்சம் கொடுத்துப் பொறுமை பற்றியும் கூற வேண்டும்” என்று குர்ஆன் சொல்கின்றது.இல்லாதவன் பொறுமையைக் கடைப்பிடிப்பதும், இருப்பவன் இரக்கம்காட்டுவதும் சுவனம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே பணம் படைத்தவர்கள் இதயத்தில் இரக்கம் பிறக்க வேண்டும். அந்த இரக்கம்சமூகத்தில் உறக்கம் களைத்து உயர்வைத் தர வேண்டும்.ஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.எனவே இந்த ஹஜ், ஹாஜிகளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தின் உயர்வுக்கு அடித்தளமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போமாக!
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

Sunday, October 17, 2010

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது, ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்;
ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.


நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.


ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.


எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.


அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.


ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி)அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.
நூல்;புஹாரி,எண் 6073


அன்பானவர்களே! மனிதர்கள் என்றால் மனக்கசப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் சிலர் சிலரோடு பினங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனக்கசப்போடு வாழ்பவர்கள் சாமான்யர்கள் மட்டும்தான் என்று கருதி விடாதீர்கள். 'ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்ற நபிமொழியை மேடைதோறும் முழங்கும் தலைவர்களிலும் இவ்வாறானவர்கள் உண்டு. இவ்வாறான இவர்களின் மனக்கசப்பு நாள்கள் தாண்டி, மாதங்கள் தாண்டி வருடங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது.


இப்படி உறவுகளுக்கு மத்தியிலும், சமூகத்திற்கு மத்தியிலும் பிணங்கிக் கொண்டிருக்கும் சாமான்யர்களும் சரி, தலைவர்களும் சரி அதுகுறித்து கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது என்ற நபிமொழியை சில தலைவர்களிடம் நினைவூட்டினால், தங்களின் நிலையை மாற்றுவதற்கு பதிலாக 'அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதற்கு அனுமதி உள்ளது' என்று தங்களின் வார்த்தை ஜால பத்வாக்கள் மூலம் தங்களின் பகைமையை தொடர்கிறார்கள். இத்தகைய தலைவர்களை பின்பற்றும் சகோதரர்களும் தங்களது சக அமைப்பினரை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களை எதிரி போல் பார்க்கும் நிலையை நாம் பார்க்கிறோம். சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான்[!] என்று சஹாபாக்களுக்கும் மேலாக நம்மை நினைக்கும் நாம், அந்த சஹாபாக்கள் பகைமையை எவ்வாறு வென்றார்கள் என்பதை மட்டும் வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகிறோம்.


தனது சகோதரி மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்களோடு பேசமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த அன்னையவர்கள், பின்னாளில் சில சஹாபிகளால் நபிமொழியை நினைவூட்டி உபதேசம் செய்யப்பட்டபின், உடனடியாக தனது சத்தியத்தை முறித்து, சகோதரி மகனுடன் தனது உறவை புதுப்பித்ததோடு, தனது தவறான சத்தியத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்விட்டு அழுது கைசேதப்படும் அன்னையவர்களின் பண்பு எங்கே..? நாம் எங்கே..? சிந்திக்கவேண்டும்.


மறுபுறம் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், தனது சிற்றன்னை பேசாவிட்டால் என்ன..? அவர் வீட்டிலா நமக்கு சாப்பாடு..? என்று கண்டும் காணாமல் இருந்தார்களா என்றால் இல்லை. மாறாக தனது சிற்றன்னை தன்னோடு பேசாமல் இருப்பது ஒருபுறம் அவர்களுக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் தன்னோடு பேசாமல் இருப்பது சிற்றன்னைக்கு மார்க்கத்தில் ஆகுமானதில்லையே என்றும் கவலை கொண்டவர்களாக,
தனது சிற்றன்னையை தன்னோடு பேசிட பரிந்துரைக்குமாறு முஹாஜிர்கள் சிலரை நாடுகிறார்கள். முஹாஜிர்கள் சிலரின் பரிந்துரை அன்னையிடம் மாற்றத்தை உண்டாக்கவில்லை. தனது முயற்சி பலனளிக்காததை கண்டு இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், நம்பிக்கையிழந்து விடவில்லை. மீண்டும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவர் மூலமாக சமாதனம் பேசி அன்னையவர்களின் உறவை உயிர்ப்பிக்கிறார்கள் என்றால், இங்கே உயிர்ப்பிக்கப்பட்டது அன்னையவர்கள் மற்றும் இப்னு ஜுபைரின் உறவு மட்டுமல்ல. மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக் கூடாது என்ற மாநபியின் மணிமொழியும் தான்.


எனவே அன்பானவர்களே! சஹாபாக்களுக்கு அறிவுரை பலனளித்தது ஏனென்றால், மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்[51:55 ] என்ற இறைவாக்கின் படி, அவர்கள் முஃமின்களாக இருந்ததால் சஹாபாக்களுக்கு உபதேசம் பயனளித்தது. அத்தகைய சஹாபாக்கள் வழியில், நாமும் பகைமை மறந்து பாசம் காட்டி முஃமீன்களாக வாழ்வோமா..?

ஆக்கம் : முகவை அப்பாஸ்

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், ‘நாங்கள் நவநாகரீக மங்கைகள்’ எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ‘ஆடை அணிந்தும் அணியாதது’ போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் ‘நவநாகரீக மங்கைகள்’ என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து கண்ணியமான முறையில் ஆடை அனிந்து வெளியே செல்கிறார்கள்.

இறைவன் கூறுகிறான் : -
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்” (அல் குஆன் 33:59)
தேங்க்ஸ்: http://suvanathendral.com/portal/?p=486





Tuesday, June 1, 2010

மனதை இயக்கு, வாழ்வை உயர்த்து

Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன்)
அவர்களின் சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
நிகழ்ச்சி: சகோதரத்துவ மாநாடு
இடம்: G.C.T. Camp திடல், துறைமுகம், ஜித்தா
நாள்: 23.04.2010
இங்கே சொடுக்கவும்: http://www.islamkalvi.com/portal/?p=4815

Monday, May 31, 2010

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!

இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!
(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது.
இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).
இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).
நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.

(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)

அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?
ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.

(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை!
மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது. இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.

மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)

இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)

இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

Sunday, May 23, 2010

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப்போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது.


இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.


அந்நியன் எம்மை அழிக்கக் காத்திருக்க அதை எதிர்கொள்ளத் தயாராவதை விட்டு விட்டு எமக்கு நாமாக படுகுழி தோண்டிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் துர்ப்பாக்கிய நிலை நீங்கவேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களையும் வழிமுறையை குறித்தும், அதைக் கையாளும் விதம் குறித்தும், களைய முடியாத கருத்து வேறுபாடுகள் விடயத்தில் பிரிவினையாகவும் பிளவாகவும் மாறாத விதத்தில் செயற்படுவதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாக்கம் எழுந்தது.


வேண்டாம் கருத்து வேறுபாடுமுஸ்லிம் உம்மத்துக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்க்கப்பட்டமைக்கு அடிப்படையான பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவற்றை தெளிவுபடுத்திவிட்டு கண்ணியத்துக்குரிய நான்கு இமாம்கள், மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு எழ நியாயமான காரணங்கள் பல இருந்தன. அவற்றை நோக்கலாம்.

(1) கருத்து வேறுபாட்டை பொதுவாகவே ஆகுமானது என சித்தரிக்க சிலர் முற்பட்டனர். தம்மிடம் உள்ள தவறான கருத்துக்களைத் திருத்திக் கொள்ளும் எண்ணம் இல்லாதவர்கள் இதையே பெரும் சாட்டாக வைத்து வேறுபாடுகளை நியாயப்படுத்தி வந்தனர்.


“எனது உம்மத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொள்வது எனது உம்மத்திற்கு அருளாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என கருத்து வேறுபாட்டின் வளர்ச்சிக்கு நல்ல பங்காற்றியுள்ளனர்.


அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இது அறிவிப்பாளர் தொடர் அற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறே இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பின் கருத்து, “உமது இரட்சகன் அருள் புரிந்தோரைத் தவிர ஏனையோர் கருத்து முரண்பட்டோராகவே நீடித்திருப்பர். (11:118-119) என்ற குர்ஆன் வசனத்தின் கருத்துக்கு முரணாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (3:103)

“நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்”(2:176)

“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்” (8:46)

என்ற வசனங்களும் மற்றும் பல ஆயத்துக்களும் கருத்து வேறுபாட்டைக் கண்டிப்பதால், கருத்து ஒருமைப்பாடே ரஹ்மத்தாகும். எனவே, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒருமுகப்பட்ட நிலை தோன்றுவதே சிறந்ததாகும்.

மத்ஹபு, இயக்க வெறி சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் கால்பதித்து ஆளமாக வேரூன்ற தாம் சார்ந்த அமைப்பின் கொள்கைகளில் முரட்டுப் பிடிவாதம் காட்டுவதும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.


மத்ஹபு”வாதிகள் தமது இமாமின் தீர்ப்பைப் பற்றிப் பிடிப்பதில் ஒற்றைக் காலில் நிற்கின்றனர். இதற்கு சில சான்றுகள் கீழே தருகின்றோம்.


கர்கி என்பவர் கூறுகின்றார்: “எமது இமாமின் கூற்றுக்கு மாற்றமாக குர்ஆனோ, ஹதீஸோ இருக்குமென்றால், ஒன்றில் அவை மாற்றப்பட்டவையாக இருக்க வேண்டும். அல்லது அவற்றுக்கு எம் இமாமின் கூற்றிற்கேட்ப “தஃவீல்” விளக்கம் கொடுக்கப்படும்” (பிக்ஹுஸ் ஸுன்னா).


மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும் அபூஹனீபாவுடைய மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும். (துர்ருல் முக்தார்).

அவரது மாணவர்களிடமும் அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா(அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (துர்ருல் முக்தார், பா-1 பக்-52).


ஞானத்தையே நாம் குத்தகையெடுத்து விட்டோம். வேறுபாட்டுக்கு அதில் பங்கில்லை என்று எண்ணுபவர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்வு இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர். இந்நிலை தவறானதாகும். தன் கருத்தில் தவறு இருக்குமென்றோ, பிறர் கருத்தில் “சரி” இருக்கலாம் என்றோ, நம்பாதவர்கள் எப்படி சமரசம் செய்ய முன்வருவார்கள்?


நான்கு மத்ஹபுக்காரரிடம் இருந்த இமாம்கள் மீதுள்ள முரட்டு பக்தி தான் கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.


இமாம்கள் பார்வையில் “நான் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினேன் என்பதை அறியாதவர் எனது பேச்சைக் கொண்டு “பத்வா” வழங்குவது ஹறாமாகும். நாங்களும் மனிதர்கள், இன்று ஒன்றைக் கூறி விட்டு, நாளை அதிலிருந்து நாம் மீண்டு விடலாம் என்றும் ஹதீஸ் ஸஹீஹ் என்றாகி விட்டால், அதுவே எனது மத்ஹபு” என்றும் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


இவ்வாறே, இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் “நானும் சரியாகவும், பிழையாகவும் கூறக்கூடிய மனிதனே! எனது கருத்தைக் கவனமாக அவதானியுங்கள். அதில் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பட்டு வரக்கூடியதை ஏற்றுக்கொள்ளுங்கள். உடன்படாதவற்றை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.


“ஒரு விடயம் சுன்னா என்பது தெளிவான பின்னர், அதை எவருடைய கூற்றுக்காகவும் விட்டு விடுவது “ஹலால்” ஆகாது என்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர்” என இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


இது குறித்து இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் (றஹ்) அவர்கள் கூறும் போது, “நீங்கள் என்னைக் கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவ்வாறே (இமாம்களான) மாலிக்கையோ, ஷாபியீயையோ, தவ்ரீயையோ கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறே “நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை ரத்து செய்தவன் அழிவின் விளிம்பில் இருக்கின்றான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.


நான்கு இமாம்களும் தமது கூற்றுக்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால், தமது கூற்றை விட்டுவிட வேண்டும் என்பதில் ஏகோபித்த நிலையில் உள்ளனர். ஆனால், “மத்ஹப்” வெறி கொண்ட சிலர் இமாம்களின் இந்நிலைப் பாட்டுக்கு மாற்றமாக சுன்னாவை ஒதுக்கி விட்டு இமாம்களின் கூற்றில் தங்கி நிற்க முற்படுகின்றனர். கருத்து வேறுபாடுகள் நீங்காது நீடித்து நிலவ இது அடிப்படைக் காரணமாக உள்ளது.


தமது கூற்றில் தவறு இருக்கும் போது அல்லது பலவீனம் இருக்கும் போது அதை விட்டு விடுவோம் என்பதே இமாம்களின் தீர்ப்பாகும். இதை செயல் படுத்தாமல் இமாமின் கூற்றை இஸ்லாத்தை விட உயர்வாக மதிப்பது பெரும் குற்றமாகும். இவ்வாறே இயக்க வெறி கொண்டவர்கள் தமது இயக்க நிலைப்பாட்டிலும் தனி நபர்கள் மீது மோகம் கொண்டவர்கள் குறித்த நபரின் கருத்திலேயே நிற்க முற்படுகின்றனர்.


குர்ஆனின் பார்வையில் “முஃமீன்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன். நன்கறிபவன்” (49:1)


இவர்கள் அல்லாஹ்வையும் அதன் தூதரையும் விட தமது இமாமை முற்படுத்துகின்றனர்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (33:36)


இவர்கள் அல்லாஹ்வினதும், அவன் தூதரினதும் கூற்றுக்கு மாற்று அபிப்பிராயம் கொள்ள தமது இமாமுக்கு அல்லது இயக்கத்திற்கு அதிகாரம் இருப்பதாக நம்புகின்றனர்.


“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, முஃமீன்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (4:115).


இவர்கள் தமது இமாமுக்கு மாற்றமாக உள்ள நபி வழிகளை பின்பற்றாமல் முஃமீன்களின் வழியில் செல்லாமல் தவறான வழியில் செல்கின்றனர்.
“அவரது கட்டளைக்கு மாறு செயவோர் தம்மைத் துன்பம் பிடித்துக்கொள்வதையோ, அல்லது நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (24:63)


இந்த போக்கு இவர்களிடத்தில் நிபாக், பிஸ்க், குப்ர் என்பவற்றை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றோம்.
ஹதீஸின் பார்வையில் “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவை இரண்டையும் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள்” - அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.


இவர்கள் குர்ஆன்-சுன்னா அல்லாத அதற்கு முரண்பட்ட தமது இமாம்களின் முடிவுகளை மூன்றாவதொரு வழியாக எடுத்து வழிகெட்டுச் செல்கின்றனர்.
ஒரு முறை உமர்(ரலி) அவர்கள் “தவ்றாத்”தின் ஒரு பகுதியை எடுத்து வந்து “யா ரஸுலுல்லாஹ்! இது “தௌறாத்”தின் ஒரு பிரதியாகும்” எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கவே அதனை வாசிக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் மாறத் துவங்கியது. இது கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைப் பார்த்து “உமரே! உமக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா?” எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் கோபத்தில் இருந்தும், அவன் தூதரின் கோபத்தில் இருந்தும் அல்லாஹ்விடமே உதவி தேடுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை தீனாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நான் நபியாகவும் ஏற்றுக்கொண்டேன்” என்றார்கள். அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் “எவன் கையில் முஹம்மதின் உயிர் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக மூஸா இப்போது உங்கள் மத்தியில் தோன்றி நீங்கள் என்னை விட்டு விட்டு மூஸாவைப் பின்பற்றினாலும், வழிகெட்டு விடுவீர்கள். மூஸா உயிரோடு இருந்து எனது நபித்துவத்தையும் எத்தியிருந்தாலும், அவர் என்னைப் பின்பற்றியிருப்பார்” என்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) ஆதாரம் : தாரமி 435.


ஒரு நபி இருந்து முஹம்மத் (ஸல்) அவர்களை விட்டு விட்டு, அந்த நபியைப் பின்பற்றினாலும், வழி கெடுவோம் எனின், நபிக்கு மாற்றமாக ஒரு தனி நபரின் தீர்ப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், எம் நிலை என்ன எனச் சிந்தித்துப் பாருங்கள்.


எனவே, மத்ஹபு, இயக்க வெறி நீக்கப்பட்டு உண்மை எங்கிருந்து வந்தாலும், ஏற்கும் பக்குவம் ஏற்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியாது.


பொறாமை நீக்கம் கருத்து வேறுபாடுகள் எழ பொறாமை அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.
“தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக்கொண்டது மிகவும் கெட்டதாகும்.” (2:90)


“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்.”(2:213)


“நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இது தான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்” (3:19).


இயக்கங்களுக்கும் உலமாக்களுக்கு மிடையிலுள்ள பொறாமைக் குணம் தீய கருத்து வேறுபாடுகளை விதைத்து விடுகின்றன. பொது மக்கள் இதற்குப் பலியாகி விடக் கூடாது.


தான் சாராத, அல்லது விரும்பாத இயக்கமோ, மக்களோ மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் பிழையான தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதைக் காணலாம். உதாரணமாக கூட்டு துஆ கூடாது என்பது தெளிவான பின்னரும் இதை ஏற்றுக்கொண்டால், “தவ்ஹீத் ஜமாஅத்” மக்கள் மனதில் இடம் பிடித்துவிடும் என்பதற்காக “பித்அத்”தான இச்செயலில் சில இயக்கவாதிகள் பிடிவாதம் காட்டுவதை உதாரணமாகக் கூறலாம்.


தற்பெருமைசிலரிடம் இப்பண்பு இயல்பாகவே குடிகொண்டிருக்கும். நான் கூறும் அனைத்தும் சரி, அடுத்தவர்கள் கூறும் அனைத்தும் தவறானவை என்ற இறுமாப்பு இருக்கும். இதன் காரணமாக அடுத்தவர்களின் கருத்துக்களுக்கோ, ஆலோசனைகளுக்கோ இவர்கள் காதுகொடுக்க மாட்டார்கள். இதனால், கருத்து வேறுபாடு நீங்குவதற்கு மாற்றமாக அதிகரிப்பதையே காணலாம்.


அடுத்து, கர்வம் கொண்ட சிலர் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி சமூகத்தில் தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ள முற்படுவர். அரபியில் “நீ மற்றவர்களுக்குக் முரண்பட்டால் பிரபல்யம் பெறலாம்” என்று கூறுவர். இந்த அடிப்படையில் பிரபல்யத்தை விரும்பும் சிலரும் கருத்து வேறுபாடுகளை விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.


தப்பெண்ணம்: சிலரின் பார்வை எப்போதும் இருண்டதாகவே இருக்கும். அவர்களின் எண்ணங்கள் தீமையையே சிந்திக்கும். தம்மைத் தவிர அடுத்தவர்களின் நன்மைகள் ஏதும் கூறப்பட்டால், அதைப் பொய்ப்பிப்பர் அல்லது அதற்கு ஏதேனும் உள்நோக்கம் கற்பிப்பர். வெளிப்படையான விடயங்களை விட்டு விட்டு அந்தரங்கம் பற்றியும் எண்ணங்கள் பற்றியும் தீர்ப்புக் கூற முன்வருவர். இதன் காரணத்தினால் அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பித்து தமது கருத்தை முன்வைப்பர். இதனால், முரண்பாடு விளையும். இது ஆபத்தான நிலையாகும். இதனால் கருத்து வேறுபாடு மட்டுமன்றி குரோதமும் உண்டாகும்.


இத்தகைய தவறான அடிப்படைகளால் கருத்து வேறுபாடுகள் விளைவதுடன் அவை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்து வருகின்றன. இதேவேளை, கடந்த கால அறிஞர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அவை தோற்றம் பெற நியாயமான சில காரணங்கள் இருந்தன. அவற்றையும் நாம் புரிந்துகொள்வதினூடாக கடந்த கால அறிஞர்கள் பற்றிய நல்லெண்ணம் கெடாதிருக்க வழிபிறக்கும். அவற்றையும் சுருக்கமாக நோக்குவோம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Monday, May 3, 2010

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3

أحكام الغسل في الإسلام
கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை:

சென்ற தொடரில்... குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.
1) நிய்யத்:
கடமையான குளிப்பை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதியாக எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும். நிய்யத் இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
( إنما الأعمال بالنيات وإنما لكل امرىء ما نوى )
‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி) , நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நிய்யத் இல்லாமல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட சில அரபு வாசகங்களைப் பாடமிட்டு ‘நிய்யத்’ என்ற பெயரில் ஓதி வருகின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித முன்மாதிரியும் கிடையாது. எனவே, உள்ளத்தால் கொள்ள வேண்டிய நிய்யத்தை வாயால் மொழிவது ‘பித்அத்’ என்ற பாவமாகும்.

2) குளிக்கும் போது உடல் முழுவதும் நனைய வேண்டும்:
ஏனெனில் குளித்தல் எனும் போது அது உடல் முழுவதும் நனைவதையே குறிக்கும். குளிக்கும் போது உடலில் ஒரு சில பகுதிகள் நனையாமல் விட்டாலும் கடமையான குளிப்பு நிறைவேறமாட்டாது.

மேற்படி இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பின்வரும் அமைப்பில் குளிப்பது சன்னத்தானது:
முதலில் கைகள் இரண்டையும் மூன்று முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மர்மஸ்தானத்தைக் கழுவுவது.
பின்னர் தொழுகைக்காக வுழூச் செய்வது போன்று வுழூச் செய்து கொள்வது. வுழூவின் நிறைவில் கால்களைக் கழுவுவதைப் பொறுத்தவரை உடனே கழுவிக் கொள்ளவும் முடியும். அல்லது குளித்து முடிந்ததும் இறுதியாகக் கழுவிக் கொள்ளவும் முடியும்.
வுழூச் செய்து முடிந்ததும் தண்ணீரைத் தலையில் மூன்று முறை ஊற்றுவது. அப்போது முடியைத் தேய்த்து குடைந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் குளிப்பது. அப்போது வலதைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். குளிக்கும் போது அக்குள், காதுகள், தொப்புள், கால் விரல்கள் போன்ற தேய்க்க முடியமான பகுதிகளைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பார்க்க: புகாரி (265), (முஸ்லிம் (744) பாடம்: கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை).

பெண்களும் இவ்வாறு தான் தமது கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். குளிக்கும் போது அவர்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டி அவசியமில்லை.

ஒரு பெண்மணி நபியவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூந்தல் கட்டும் பழக்கத்தையுடையவள். கடமையான குளிப்பின் போது அதை அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ‘அதன்மீது மூன்று அள்ளு நீரை ஊற்றினால் போதமானது….’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி), நூல்: இப்னு மாஜாஹ் (603))

பெண்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டியதில்லை என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும் கூறியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் (773))

கடமையான குளிப்புடன் தொடர்பான சில நடைமுறைப் பிரச்சினைகள்:
A) ஜனாபத், ஹைழ் போன்ற பல காரணிகளால் குளிப்புக் கடமையாகி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமா?

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக நிய்யத்தை வைத்துக் கொண்டு ஒரு முறை குளித்தால் போதுமானது என்பதே மிகப் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இமாம் இப்னு ஹஸ்ம், ஷேய்க் அல்பானீ போன்றோர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்’ என்ற ஹதீஸின் அடிப்படையில் முதல் கருத்தே மிகச் சரியானது. அல்லாஹு அஃலம்.

B) கடமையான குளிப்பை நிறைவேற்றிய ஒருவர் தொழுகைக்காக மீண்டும் வுழூச் செய்யவேண்டிய அவசியமில்ல:
عَنْ عَائِشَةَ قَالَتْ :كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
‘நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்கள்: அஹ்மத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)

C) ஆண் குளித்து எஞ்சிய நீரில் பெண்ணும், பெண் குளித்து எஞ்சிய நீரில் ஆணும் குளிக்க முடியும்:
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى جَفْنَةٍ فَجَاءَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لِيَتَوَضَّأَ مِنْهَا – أَوْ يَغْتَسِلَ – فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى كُنْتُ جُنُبًا. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ الْمَاءَ لاَ يَجْنُبُ ».

நபியவர்களின் மனைவியொருவர் ஒரு பாத்திரத்தில் குளித்து விட்டுச் சென்றார். அதில் (எஞ்சியிருந்த நீரில்) வுழூச் செய்வதற்கு அல்து குளிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்க்ள. அப்போது அம்மனைவி, அல்லாஹ்வுடைய தூதரே! நான் பெருந் தொடக்குடன் இருந்தேன் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ‘ நிச்சயமாக தண்ணீர் தொடக்காவதில்லை’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்க்ள்: அபூதாவுத், திர்மிதீ. இப்னு ஹிப்பான்)

D) நிர்வாணமாகக் குளித்தல்:
அடுத்தவர்களின் பார்வைக்குப்படாத விதமாக மறைவான இடங்களில் நிர்வாணமாகக் குளிப்பதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் கிடையாது. மாறாக, நிர்வாணமாகக் குளிப்பதற்கு அனுமதி உண்டு என்பதைச் சுட்டிக்காட்டக் கூடிய வகையில் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. உதாரணமாக நபி அய்யூப் (அலை ) அவர்கள் நிர்வாணமாகக் குளித்தார்கள். (புகாரி (275)) , மூஸா (அலை) அவர்களும் நிர்வாணமாகக் குளித்துள்ளார்கள். (புகாரி (274) , முஸ்லிம் (339)) போன்ற ஹதீஸ்கள் இதை உறுதி செய்கின்றன.

E) குளித்து முடிந்த பின்னர் ஓதுவதற்கென்று பிரத்தியேகமான எந்த துஆவும் ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

F) குளிப்புக் கடமையானவர்கள் நோய், கடும் குளிர், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் குளிக்க முடியாவிட்டால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும். 4:43, 5:6 ஆகிய வசனங்கள் இதை வலியுறுத்துகின்றன.

தயம்மும் செய்யும் முறை:
நிய்யத் வைத்துக் கொண்டு தனது இரு கைகளையும் பிஸ்மில்லாஹ்ச் சொல்லி புழுதி கலந்த மண்ணில் அல்லது சுவர் போன்றவற்றில் அடித்து, பின்னர் கையின் உள் பகுதியை வாயால் ஊத வேண்டும். அதன் பின்னர் அக்கைகளால் முகத்தையும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் தடவ வேண்டும். (புகாரி, முஸ்லிம் , தாரகுத்னீ)

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது அனைத்து வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் செய்வதற்கு அருள் புரிவானாக!

எம்.எல். முபாரக் ஸலபி M.A,
mubarakml @ g m a i l . c o m

Wednesday, February 4, 2009

இன்ஷா அல்லாஹ்

'நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!' (அல்குர்ஆன்)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான். நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் 'அல்லாஹ் நாடினால்' என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் அன்புக்கு அதிகம் உரித்தானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளோம். இவ்வளவு உயர்ந்த தகுதியில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயானாலும் 'நாளை இதைச் செய்வேன்' என்று கூறக் கூடாது. அது மிகவும் அற்பமான காரியமானாலும் கூட அவ்வாறு கூறக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் நினைத்ததைச் செய்து விட முடியாது. ஏகத்துவக் கொள்கையின் இரத்தினச் சுருக்கமான சான்றாக இது அமைகின்றது.

திருக்குர்ஆனைப் பற்றியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் பற்றியோ எந்த அறிவும் இல்லாத ஒரு முஸ்லிம் இந்தச் சொற்றொடரை மட்டும் அறிந்திருந்தால் கூட அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வார். அல்லாஹ் நாடினால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) கூற வேண்டுமென்று கட்டளையிடப்பட்டு அவ்வாறு அவர்கள் கூறியும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் கால் தூசுக்குச் சமமாகாத மகான்கள் மற்றும் பெரியவர்களுக்கு எள்ளளவும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி முந்தைய நபிமார்களுக்கும் வழிமுறையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த அத்தியாயத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா நபியவர்களின் சம்பவம் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறும் போது அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள், என்று மூஸா நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். முந்தைய நபிமார்களிடம் இந்த வழிமுறை இருந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூறப்பட்ட கட்டளையாக இது இருந்தாலும் இதை நாமும் கடைபிடித்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் நாட்டமின்றி எதையும் செய்ய முடியாது எனும் போது மற்றவர்கள் நிச்சயமாக செய்ய முடியாது என்பதிலிருந்து இதை அறியலாம்.
இதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் இது பற்றி அவர்களிடம் சில அறியாமைகளும் நிலவுகின்றன. 'இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதைச் செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ் சாப்பிடுங்கள்' என்பது போல் சிலர் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். ஏனெனில் 'நான் செய்வேன்' என்று தன்னைப் பற்றிக் கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். கட்டளையிடும் போதோ பிறர் குறித்துப் பேசும் போதோ இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவது பொருளற்றதாகும்.
இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் மிகப் பெரிய காரியங்களுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள். சிறிய காரியங்களுக்குக் கூற மாட்டார்கள். 'நாளை பத்தாயிரம் தருகிறேன்' என்று கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறும் இவர்கள் 'நாளை பத்து ரூபாய் தருகிறேன்' எனக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவதில்லை. இது அடிப்படைக் கொள்கையைப் பாதிக்கின்ற மிகவும் மோசமான போக்காகும். பத்தாயிரம் தருவதற்குத் தான் அல்லாஹ்வின் நாட்டம் தேவை. பத்து ரூபாய் தருவதற்கு அவன் நாட்டம் தேவையில்லை. அவன் நாட்டமின்றியே என்னால் தந்து விட முடியும் என்ற எண்ணம் ஊடுறுவி இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றனர். இவ்வசனத்தில் இந்தப் போக்கு தடுக்கப்பட்டுள்ளது.

'லிஷையின்' 'எந்த காரியம் பற்றியும்' நாளை செய்வேன் எனக் கூறாதே என்ற கட்டளையில் பெரிய காரியம் மட்டுமின்றி சிறிய காரியமும் அடங்கும். அற்பமான காரியங்களும் இதனுள் அடங்க வேண்டும் என்பதற்காகவே இச்செயல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்றாவதாக அறிந்து கொள்ள வேண்டியதாகும். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறு கூற நாம் மறந்து விடலாம். பொதுவாகவே மறதிக்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஆயினும் நாம் மறதியாக இன்ஷா அல்லாஹ்வைக் கூறாதிருந்து விட்டோமே என்று நினைவுக்கு வந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்காக வழிமுறையையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஆனால் நமக்குத் தெரிந்து உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த வழிமுறையைக் கடைப் பிடிப்பதில்லை. 'ஒரு வாரத்தில் கடனைத் திருப்பித் தருகிறேன்' என்று நாம் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூற நாம் மறந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். சற்று நேரத்திலோ மறுநாளோ இது நமக்கு நினைவுக்கு வருகிறது. உடனே இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் ஒரு வாரத்தை விடக் குறைவான காலத்திலேயே கொடுக்கச் செய்யக் கூடும் என்று கூற வேண்டும். ஒரு நாளில் தருவதாகக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறத் தவறிவிட்டு சற்று நேரத்தில் நினைவுக்கு வந்தால் உடனே அல்லாஹ்வை மனதில் நினைத்து 'என் இறைவன் ஒருநாளை விடவும் குறைவாகவே இதை நிறைவேற்றித் தரக் கூடும்' என்று கூற வேண்டும். இதை 24 வது வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூற வேண்டும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தாலும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் கூட இதை நடைமுறைப் படுத்தாமல் இருக்கிறார்கள். இது நான்காவதாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
மறதிக்குப் பரிகாரமாக அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் வார்த்தையில் கூட அவன் நம்மீது கருணை மழை பொழிந்திருப்பது ஐந்தாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஒரு வாரத்தில் செய்வதாக ஒரு காரியத்தைப் பற்றி நாம் பேசி விட்டோம். இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். நாம் வாக்களித்த அந்த நேரத்துக்குள் கொடுக்கலாம். அல்லது அந்த நேரம் கடந்த பின் கொடுக்கலாம். அல்லது அறவே கொடுக்க முடியாமல் போகலாம். அல்லது வாக்களித்ததை விடக் குறைவான நேரத்திலேயே அதைக் கொடுக்கலாம். இந்த நான்கில் ஒவ்வொருவரும் நான்காவதையே விரும்புவோம். தேர்வு செய்வோம். மறதியின் காரணமாக இன்ஷா அல்லாஹ் கூறாதவரை மற்ற மூன்று விஷயங்களைக் கூறுமாறு கட்டளையிடாமல் 'நான் வாக்களித்ததை விட குறைவான காலத்திலேயே என் இறைவனால் முடிக்க முடியும்' என்று கூறச் செய்கிறான். இதன் மூலம் அடியார்கள் மீது அவன் காட்டும் அளப்பரிய கருணையை அறியலாம்.

Wednesday, October 22, 2008

தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை

ஹுதைபா (ரலி), அபூஃதர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், தான் படுக்கைக்கு வந்தால், ''பிஸ்மிக்கல்லாஹும்ம அமூது வஅஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்தால், ''அல்ஹம்துலில்லாஹில்லஃதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலய்ஹின் னுஷூர்'' என்று கூறுவார்கள். (புகாரி)

பொருள்: இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்றேன்.
பொருள்: எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்)

காலையிலும், மாலையும் அல்லாஹ்வை நினைவு கொள்வது!
அல்லாஹ் கூறுகிறான்: உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன்)
(நபியே) சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ, அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காலையிலும், மாலையிலும், '' சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி '' என 100 தடவை ஒருவர் கூறினால், இது போன்று கூறியவர், அல்லது இதைவிட அதிகம் கூறியவர் தவிர, மறுமை நாளில் எவரும் இவர் கொண்டு வந்ததை விட மிகச் சிறந்ததை கொண்டு வரமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இரவில் தேள் ஒன்று என்னைக் கொட்டி விட்டது'' என்று கூறினார். ''அறிந்து கொள்! மாலை நேரம் வந்ததும், ''அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அது உமக்கு இடையூறு தராது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வின் படைப்புகளின் தீமைகளை விட்டும் முழுமையான அவனது சொற்களால் பாதுகாப்புத் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1452)

அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: காலையிலும், மாலையிலும் ''குல்ஹுவல்லாஹுஅஹது'' அத்தியாயம், மற்றும் (குல்அஊது பிரப்பில் ஃபலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்ற) இரண்டு முஅவ்விததய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப் பொருட்களின் தீமையை விட்டும் (உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்'' என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)

Thanks: Alauddeen