Sunday, October 17, 2010

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது, ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்;
ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.


நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.


ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.


எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.


அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.


ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி)அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.
நூல்;புஹாரி,எண் 6073


அன்பானவர்களே! மனிதர்கள் என்றால் மனக்கசப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் சிலர் சிலரோடு பினங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனக்கசப்போடு வாழ்பவர்கள் சாமான்யர்கள் மட்டும்தான் என்று கருதி விடாதீர்கள். 'ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்ற நபிமொழியை மேடைதோறும் முழங்கும் தலைவர்களிலும் இவ்வாறானவர்கள் உண்டு. இவ்வாறான இவர்களின் மனக்கசப்பு நாள்கள் தாண்டி, மாதங்கள் தாண்டி வருடங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது.


இப்படி உறவுகளுக்கு மத்தியிலும், சமூகத்திற்கு மத்தியிலும் பிணங்கிக் கொண்டிருக்கும் சாமான்யர்களும் சரி, தலைவர்களும் சரி அதுகுறித்து கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது என்ற நபிமொழியை சில தலைவர்களிடம் நினைவூட்டினால், தங்களின் நிலையை மாற்றுவதற்கு பதிலாக 'அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதற்கு அனுமதி உள்ளது' என்று தங்களின் வார்த்தை ஜால பத்வாக்கள் மூலம் தங்களின் பகைமையை தொடர்கிறார்கள். இத்தகைய தலைவர்களை பின்பற்றும் சகோதரர்களும் தங்களது சக அமைப்பினரை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களை எதிரி போல் பார்க்கும் நிலையை நாம் பார்க்கிறோம். சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான்[!] என்று சஹாபாக்களுக்கும் மேலாக நம்மை நினைக்கும் நாம், அந்த சஹாபாக்கள் பகைமையை எவ்வாறு வென்றார்கள் என்பதை மட்டும் வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகிறோம்.


தனது சகோதரி மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்களோடு பேசமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த அன்னையவர்கள், பின்னாளில் சில சஹாபிகளால் நபிமொழியை நினைவூட்டி உபதேசம் செய்யப்பட்டபின், உடனடியாக தனது சத்தியத்தை முறித்து, சகோதரி மகனுடன் தனது உறவை புதுப்பித்ததோடு, தனது தவறான சத்தியத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்விட்டு அழுது கைசேதப்படும் அன்னையவர்களின் பண்பு எங்கே..? நாம் எங்கே..? சிந்திக்கவேண்டும்.


மறுபுறம் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், தனது சிற்றன்னை பேசாவிட்டால் என்ன..? அவர் வீட்டிலா நமக்கு சாப்பாடு..? என்று கண்டும் காணாமல் இருந்தார்களா என்றால் இல்லை. மாறாக தனது சிற்றன்னை தன்னோடு பேசாமல் இருப்பது ஒருபுறம் அவர்களுக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் தன்னோடு பேசாமல் இருப்பது சிற்றன்னைக்கு மார்க்கத்தில் ஆகுமானதில்லையே என்றும் கவலை கொண்டவர்களாக,
தனது சிற்றன்னையை தன்னோடு பேசிட பரிந்துரைக்குமாறு முஹாஜிர்கள் சிலரை நாடுகிறார்கள். முஹாஜிர்கள் சிலரின் பரிந்துரை அன்னையிடம் மாற்றத்தை உண்டாக்கவில்லை. தனது முயற்சி பலனளிக்காததை கண்டு இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், நம்பிக்கையிழந்து விடவில்லை. மீண்டும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவர் மூலமாக சமாதனம் பேசி அன்னையவர்களின் உறவை உயிர்ப்பிக்கிறார்கள் என்றால், இங்கே உயிர்ப்பிக்கப்பட்டது அன்னையவர்கள் மற்றும் இப்னு ஜுபைரின் உறவு மட்டுமல்ல. மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக் கூடாது என்ற மாநபியின் மணிமொழியும் தான்.


எனவே அன்பானவர்களே! சஹாபாக்களுக்கு அறிவுரை பலனளித்தது ஏனென்றால், மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்[51:55 ] என்ற இறைவாக்கின் படி, அவர்கள் முஃமின்களாக இருந்ததால் சஹாபாக்களுக்கு உபதேசம் பயனளித்தது. அத்தகைய சஹாபாக்கள் வழியில், நாமும் பகைமை மறந்து பாசம் காட்டி முஃமீன்களாக வாழ்வோமா..?

ஆக்கம் : முகவை அப்பாஸ்

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், ‘நாங்கள் நவநாகரீக மங்கைகள்’ எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ‘ஆடை அணிந்தும் அணியாதது’ போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான் முஸ்லிம்கள் ‘நவநாகரீக மங்கைகள்’ என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து கண்ணியமான முறையில் ஆடை அனிந்து வெளியே செல்கிறார்கள்.

இறைவன் கூறுகிறான் : -
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்” (அல் குஆன் 33:59)
தேங்க்ஸ்: http://suvanathendral.com/portal/?p=486





நபிமொழி

அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்: 'பெண்களான எங்களைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். (அபூதாவூது) திர்மிதீயில் வரும் ஹதீஸ் : ''நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் பள்ளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்களில் ஒரு கூட்டம் அங்கே அமர்ந்திருந்தது. உடனே அவர்கள் தன் கையால் சைகை மூலம் ஸலாம் கூறினார்கள்.'' (ரியாளுஸ்ஸாலிஹீன்: 864) உஸாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்: 'முஸ்லிம்களும், இணை வைப்போரும், சிலை வணங்கிகளும், யூதர்களும் கலந்து இருந்த ஒரு சபையை கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.'' (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 868)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர் அவைக்கு வருவாரானால், அவர் ஸலாம் கூறட்டும். (அங்கிருந்து) புறப்பட விரும்பினாலும் ஸலாம் கூறட்டும்! (புறப்படும் போது ஸலாம் கூறுதல் எனும்) பிந்தியதை விட, (வந்தபோது ஸலாம் கூறுதல் எனும்) முந்தியது ஒன்றும் அதிக முக்கியத்துவம் பெற்றதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 869)

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். இத்தாக்குதலுக்கு முதல் குறியாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை எடுத்துக் கொண்டு இஸ்லாம் பெண்களை பர்தா அணியுமாறு செய்து கேவலப்படுத்துகின்றது என்று மேற்கத்திய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும், உலகில் பிரபலமாக உள்ள இஸ்லாத்தின் எதிரிகளுடைய மீடியாக்களின் வாயிலாகவும் பகிரங்கமாக பொய் குற்றம்சாட்டி வருகின்றனர். இறைவனருளால் நமது மாக்கத்தின் அறிஞர்கள் பலர் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.


இனி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் யார்வை என்று பாப்போம். இஸ்லாத்திற்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே பெண்களை: -
கண்ணியப் படுத்தி கௌரவித்தது
சொத்துரிமை வழங்கியது
சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்:-
பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசியத்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணியவேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்குகின்றான்.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக:
அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;
தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;
இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)


பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்?
பெண்கள் பர்தா அணிவதற்கான காரணத்தையும் அல்லாஹ்வே விளக்குகின்றான்.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;
அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59)


பெண்கள் பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள்:
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் பர்தா அணிவதன் பயன்களாக கூறுகிறான்: -
பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும்.
நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.


பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.
பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய காலகட்டத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும், மேலும் கற்பழிப்பு, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கின்றது. இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.


இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.

தேங்க்ஸ்: http://suvanathendral.com/portal/?p=39