Wednesday, December 15, 2010

முஹர்ரம்!!

“முஹர்ரம்”
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.
“சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம், இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக் கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது, என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

(உ-ம்: தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் “தக்பீர் தஹ்ரீம்” என்றும், உம்ரா, ஹஜ்ஜ’க்கு முன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் “இஹ்ராம்” என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை -விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் “ஹரம்” -புனித எல்லை- என்றும், ”மஸ்ஜிதுல்ஹராம்”- புனிதமான பள்ளி வாசல்- என்றும் சொல்லப்படுகிறது)।

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும்। அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல। ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது. இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்।

ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை, கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள். இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்।

குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது। இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.

இந்த மாதத்தில் தான் “ஆஷூரா” என்னும் நாள் வருகிறது। இந்த ‘ஆஷூரா’ என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது “பத்தாவது நாள்” என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் “திஷ்ரி” மாதமும் அரபிகளின் “முஹர்ரம்” மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர்। நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர்। அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர்। அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், ”அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்।

அது மட்டுமன்றி “வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்றும் கூறினார்கள். {ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).

இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது।

அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன। அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.

இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று, முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள்। ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது।

இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்।

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)


என்பது நபிமொழி। எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, 'யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே' என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், 'அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.

தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்।எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல).

தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல)।

முஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர்। (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).

இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே। அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர்। அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.

முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது। அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.

இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு। நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும்। இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்।

முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை, முழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது। அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.

இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, 'யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்' என்று குறிப்பிடுகின்றான்। அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.

அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,
'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)
'முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)
'முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)
'முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்। (நூல்: முஸ்லிம் 2088)

ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்।

வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக।

Source; albaqavi.com

Sunday, December 12, 2010

மழலைச் செல்வங்கள்


குழந்தைச் செல்வங்கள் - அவர்கள்
குழுகுழுவென இதயத்தை நனைக்கும்
மழலைச் செல்வங்கள்!

கலகலவெனப் பேசி - மனசுகளை
பளபளவெனப் பூசும் கலைஞர்கள்!

குழந்தையின் அழுகை - ஒரு
இசையற்ற காவியம் - அது
இதயத்தைத் துளைத்து
கல்லையும் உருகச் செய்யும்!

குருகுருவென ஓடியாடி விளையாடும்
சிட்டுக் குருவிச் செல்வங்கள் - அவர்கள்
மனக்காயத்தின் தழும்புகளைக் கூட
புன்சிரிப்பின் பூரிப்பில் மாறச்செய்பவர்கள்!
- அபூ அரீஜ்

Wednesday, December 8, 2010

'மெத்தக் கூர்மை மழுமொட்டை'அனாச்சாரங்களைச் சுமந்து வரும்
மேற்கத்தேயப் புயல் - இன்று
மனித இதயங்களை ஆபாசத்தால் நனைத்துவிட்டதால்
துவட்ட முடியாமல் தடுமாறுகின்றது இளைய சமூகம்!

ஆபாச அழுக்குகளில் சருக்கி விழுந்தோர் ஏறாலம்
போதனை ஊற்றுக்களில் கூட - அவர்களை
சலவை செய்ய சானாக்கிய மற்ற நிலை!

ஆடைக்காய் அலைந்து ஆலைகள் பல கண்டு
கோடைகளில் கூட ஆடைகளகற்ற பலகியோர் - இன்று
குத்தூசியாய்க் குத்தும் குளிர்காலத்தில் கூட
ஆடைகளகற்றி அலையும் மானிடர் பாரீர்!!

மேலெலுந்து செல்லும் மேற்கத்தேய ஆசானே!
'மெத்தக் கூர்மை மழுமொட்டை' என்பதைப் போல்
எல்லை கடந்த எழுச்சிதான் - உன்னை
எளிலற்ற பன்பாட்டின் ஏழ்மைக்குத் தள்ளியதோ?!

மனிதன் வளம் பெற - அங்கே
மனிதமன்றோ செழிக்க வேண்டும்
பாவம் அந்தோ மனதர்காள்!
போலியாய்ப் புனையப்படும் பகட்டுக்குள்
புரையோடிவிட்டது அவர்கள் எதிர்காலம்!

கிஞ்சிற்றும் வெற்கமில்லா தோரனையில்
கிழடுகள் கூட அரவணைக்கும்
கிழிந்த பன்பாடொன்றை - அவர்கள்
எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்!

மனிதத்தைத் தொலைத்துவிட்டு
மடமையை மட்டும் அறுவடைசெய்யும்
மட்டரகக் கலாச்சாரம் - மேற்கத்தேய
சித்தாந்தத்தில் செதுக்கப்படுகின்றன!

ஆபாசக் கலைஞன் செதுக்கும் சிற்பங்களுக்கு
சதைவியாபாரிகளின் சந்தைகளில் அமோக வரவேற்பு!
சஞ்சலம் கொண்ட உள்ளங்கள்
சானாக்கியமாய் கொள்வனவு செய்கின்றன!

வலைப் பூக்களின் வராந்தாக்களில்
வகைவகையாய்ப் பூத்திருக்கின்றன
வயது வந்தோர்க்கு மட்டுமாய் - அங்கே
இளசுகளில் எதிர்காலம் திருடப்படுகின்றன!

நாளையைத் தொலைத்து விட்டு
நறைத்த சிந்தனைகளை மட்டும்
மண்டைகளிலேற்றி மனிதங்களை மட்டும்
திருடிக் கொள்ளும் மடமைச் சமூகம்! - அவர்கள்தான்
வாழத்தெறிந்தவர்களாம்!!!
- அபூ அரீஜ்
வாகைகள்

மனிதன் வாழ்க்கையில்
மாற்றங்கள் நிகழும்போது
புதிய தேடலின் அரும்புகள்
புன்னகைக்கின்றன!

சிறிது சிறிதாய் - நாம்
சூடிக்கொள்ளும் வாகைகள்தான்
திடகாத்திரமான - நாளைய
சாம்ராஜ்யத்தின் அரன்கள்!

Saturday, December 4, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.

(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)

2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.

பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.

3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?

உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.

சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.

திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.

சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.

எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.

5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.

ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.
எனவே, மணப் பெண்களே! உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!

7. அறிந்துகொள்ளுங்கள்!
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!

திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.

எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!
தேங்க்ஸ்: http://www.islamkalvi.com/portal/

உணர்வோமாக!

அளவற்ற அருளாளன் திருநாமம் போற்றி....
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
இஸ்லாத்தின் எதிரிகள் வேற்றுமைக்குள் ஒற்றுமையைப் புனைந்து கொண்டு இந்த ஏகத்துவச் சமூகத்தைக் குதறிக்கொண்டிருக்கின்றன. நாமோ இன்னும் ஒற்றுமைக்குள் வேற்றுமையத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இது ஆரோக்கியமான நம் சமூகத்தின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கவல்லது என்பதை ஏனோ நாம் மறந்து விட்டோம்.

குழுவாதங்களில் குதறப்படும் - ஓர் அப்பாவிச் சமூகம்
குற்றுயிரும் குறையுயிருமாய் துடிதுடிக்கும் துக்கம் நிறை காட்சி!?

இயக்கங்கள் இன்று நோக்கம் மறந்த நிலையில் பரிதாபமாக பயணிப்பதாய் உணரவேண்டியுள்ளது. நல்ல எண்ணத்துடன் களமிறங்கும் எந்த அமைப்பும் குழுவாதம், இயக்கவாதம் போன்றவற்றை கண்டிப்பாக களைந்து தங்களை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் 'குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டவர்க'ளைப் போன்றாகிவிடும்!

இலக்கு மறந்த இயக்கங்கள் ஒருபுறம்
இயங்க மறந்த இயக்கங்கள் மறுபுறம்!

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
ஒரு சமூகத்தின் வெற்றிப்பயணத்தில் அதன் 'தடுமாற்றமில்லா கொள்கையும்', 'ஸ்திரமிக்க ஐக்கியமும்' மிக முக்கியமான இரு காரணிகளாகும். இந்த இரண்டிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்ததன் காரணத்தால் தான் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்குள் ஒரு அரசை நிருவ முடிந்தது. இன்றளவிலும் மேற்கத்தேய ஆராய்ச்சியாளர்கள் அதற்கான இரகசியத்தைத் தேடி வருகிறார்கள்.

எமது சமூகத்தின் வெற்றியானது எமது ஐக்கியத்திலும், சகோரத்துவத்திலும் தங்கியிருக்கின்ற அதே நேரம் இஸ்லாத்தின் அச்சானியாகத் திகழ்கின்ற அதன் கொள்கையை சரியாகப் புரிந்து கொள்வதிலும்தான் கானப்படுகின்றது என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

ஏகத்துவமுண்டு, ஏகன் தந்த வான்மறையுமுண்டு - அதேநேரம்
ஏக்கம் தனைச் சூழ, ஏளனங்களையும் சுமத்தல் தகுமா?!

நேற்று இருந்ததைவிட இன்றைய இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சியானது கொடூரமானதாகும். இன்றைய கெடுபிடிகளை விட நாளைய நடவடிக்கைகள் நம்மை இலகுவாக ஆக்கிரமிக்கவல்லது. எதிர்வரக் கூடிய நவீன யுகத்தின் நாளைய நடப்புக்கள் நம் சமூகத்தை சுக்கு நூறாக உடைக்கவள்ளது! எனவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.

குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்தவரை, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் இச்சமூகத்தின் ஐக்கியத்திற்காகவும் செயற்படுவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மாறாக அரசியலமைப்புக்களைப் போன்று தங்களை வளர்த்துக் கொண்டு சமூகத்தைத் துண்டாடும் தீய சக்கியாக விஸ்வரூபம் எடுக்காமல் தம்மைக் காத்தக் கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதனை நாம் கவணத்திற் கொள்வோம்.

அதேபோன்று கீழ்வரும் சில விடயங்களை நாம் கவணத்திற் கொண்டு செயலாற்றினால் எமது சமூகத்தின் விடிவுக்கு காரணமாக அவை அமையும் என்பது அடியேனின் எதிர்பார்ப்பாகும்:
1- ஒரே கொள்கையின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அல்லாஹ்வுக்காகவென விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயற்படல்.
2- சாத்தியக் கூறுகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக (இரு இயக்கங்கள் அல்லது அமைப்புக்கள்) இனைந்து செயற்படுதல்.
3- அடிப்படை அம்சங்கள் தவிர்ந்த கிளை அம்சங்களில் நெகிழ்வு மனப்பான்மையோடு தம் கருத்தக்களை முன்வைத்தல்.
4- பிரர்கருத்தை தரவறாக கருதும் பட்சத்தில் லாவகமாகவும், ஹிக்மத்தாகவும் ஆதாரத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டல்.
5- முடியுமானவரை நமக்குள் தோன்றும் வாத-பிரதிவாதங்களை அம்பலமாக்கி அந்நிய மதத்தினர் எள்ளி நகைக்குமளவிற்கு கொண்டு செல்லாது பக்குவமாக தீர்வு காண முற்படுதல்.
6- எந்த இயக்கத்தினரும் சகோதர இயத்தினரை சாடாது தமது அடக்கத்தையும், பெருந்தன்மையையும் காத்துக் கொள்ளல்.
7- முஸ்லீம்களுக்கென ஓங்கி குரல் எழுப்பக் கூடிய ஊடகங்களை உருவாக்குதல், நிறுவுதல்.
8- ஊடகத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் ஊடகவியளாலர்களை ஊக்குவித்தல், வளர்த்தல்.
9- நமது சமூகத்திலுள்ள கல்வித்தாகமுள்ள இளைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைசார்ந்த கல்வி மேம்பாட்டிற்காக உதவுதல்.
10- சமூக எழுச்சிக்கான முன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு செயற்திட்ட அமுலாக்களை நடைமுறைப்படுத்தல்.
11- சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், ஊக்குவிப்பு முகாம்கள், சிறு சிறு சீர்திருத்த மற்றும் புத்துனர்ச்சி மையங்களை நிறுவி தொடர்ந்தேர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள் வீழ்ந்து கிடக்கும் நம் சமூகத்தை எழுப்பி நிறுத்த வல்லவைகளாகும். எனவே இவ்வாறான செயற்திட்டங்களில் படித்தவர்கள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் மற்றும் உலமாக்களின் பங்கானது இன்றியமையாததாகும்.

எனவே நம் எதிர்காலத்தை செப்பனிட்டு செம்மையாக்குவதற்கு நம் ஒவ்வொருவரினாலும் இயலுமான பங்களிப்பை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
யா அல்லாஹ்! இந்த சமூகத்தை ஈமானிலும், ஐக்கியத்திலும் உறுதிப்படுத்தி ஈருலக வெற்றியை அடையக் கூடிய ஒரு தன்னிகரற்ற சமூகமாக மாற்றியருள்வாயாக!
- ஆக்கம்: அபூ அரீஜ்