Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Saturday, July 14, 2012

ரய்யான் எனும் சுவன வாசல் நோக்கி...

Ramadan 1427 e Card version by mekaகண்ணியமிக்க பேரருள்களைச் சுமந்து மீண்டும் ஒருமுறை எங்களை நோக்கி வந்திருக்கிறது
, அல்ஹம்துலில்லாஹ். அந்த அருள்நிறைந்த மாதத்தை எவ்வாறெல்லாம் கண்ணியப்படுத்த வேண்டும் எத்தகைய செயல்களால் அந்த மாதத்தின் பரிசுத்தத் தன்மைக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது என்பதை இம்மாதத்தில் நீங்கள் கேட்கப் போகும் ஒவ்வொரு மார்க்க விளக்கமும் உங்களுக்கு விளக்கத்தான் போகின்றது.
அந்த விளக்கங்களுக்கு மத்தியில் ரமழான் எங்களை எங்கே அழைத்துச் செல்ல விரும்புகிறது அதன் அழைப்பை கௌரவித்து நாம் பதில் சொல்வோமா அல்லது அதன் அழைப்புக்கு பதில் சொல்லாமலே அதனை வழியனுப்பி விடுவோமா என்பது பற்றிய ஒரு சிந்தனையை இந்த இதழின் தஃவா களத்தினூடாக பகிர்ந்து கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
குர்ஆன் ஓர் அழைப்பை விடுக்கிறது. கூர்ந்து நோக்கினால் அதுதான் குர்ஆன் இறங்கிய மாதத்தின் அழைப்பாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
குர்ஆனின் அழைப்பு என்ன?
வானம் பூமியளவு விசாலமான சுவனத்தின்பாலும் உங்கள் இரட்சகனது மஃபிரத் (பாவமன்னிப்பு)தின்பாலும் விரைந்து வாருங்கள். (அந்த சுவனம்) இறையச்சமுள்ளவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
குர்ஆனின் இந்த அழைப்பில் மூன்று விடயங்கள் இருக்கின்றன.
  • வானம், பூமியளவு விசாலமான சுவனம்
  • உங்கள் இரட்சகனது பாவமன்னிப்பு
  • பாவமன்னிப்புக்கு ஒரு மனிதனைத் தயார் செய்து சுவனத்தைப் பெற்றுக் கொடுக்கும் இறையச்சம்
இம்மூன்றையும் நினைவில் வைத்துக் கொண்டு நோன்பின் பக்கம் கவனத்தை சிறிது திருப்புவோம். அங்கும் இதோ மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம்.
  • நோன்பு நோற்றவர் ரய்யான் என்ற பிரத்தியேக வாயிலால் சுவனம் நுழைவார் என்றும்
  • நோன்பு மாதத்தை அடைந்ததும் எந்த மனிதரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ, அவர் நாசமாகட்டும் என்றும்
  • உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது, நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக என்றும்
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன செய்திகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.
ஆக, எதன் பக்கம் விரைந்து வாருங்கள் என்று குர்ஆன் அழைப்பு விடுக்கிறதோ, அதன் பக்கமே குர் ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழானும் அழைப்பு விடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
இங்கு நாம் படித்துணர வேண்டிய பாடம் என்ன? குர்ஆனும் ரமழானும் விடுக்கும் அழைப்பின் அர்த்தம் என்ன? இந்த அழைப்பின் பக்கம் நோன்பு நோற்கும் சமூகமும் செல்ல முயற்சிக்கிறதா அல்லது அழைப்பையும் புரியாமல் அழைப்புக்கு பதிலும் சொல்லாமல் ரமழானை நாம் கழித்து விடுகிறோமா?
முதலில் அழைப்பின் அர்த்தத்தை விளங்குவோம்.
  • சுவர்க்கத்தை நோக்கி விரையுங்கள்.
  • சுவனம் வேண்டுமாயின் உங்கள் இரட்சகனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெறுங்கள்.
  • பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமாயின், உங்கள் வாழ்வு முழுவதையும் இறையச்சத்தால் சீர்செய்து நெறிப்படுத்துங்கள்.
  • இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பு நோற்றுப் பயிற்சி பெறுங்கள்.
  • இறையச்சத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குர் ஆனையும் சுன்னாவையும் படியுங்கள்.
இவ்வாறு சங்கிலித் தொடராக பிணைக்கப்பட்ட ஒரு பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று சுவர்க்கத்தை அடைந்து கொள்ளுங்கள் என்பதே குர்ஆனினதும் ரமழானினதும் அழைப்பின் அர்த்தமாகும்.
இந்த அர்த்தம் புரியப்பட்டுள்ளதா? நோன்பு நோற்பவர்கள் இவ்வாறானதொரு நீண்ட பாதையில் தமது பயணத்தை ஆரம்பித்து சுவனம் நோக்கிச் செல்கிறார்களா அல்லது நீண்டு செல்லும் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பாதையில் ஒரு செயலை (நோன்பு) மட்டும் செய்துவிட்டு, அடுத்த ரமழான் வரை ஓய்வெடுத்துக் கொள்கிறார்களா? அல்லது ரமழானில் நோன்பும் ஷவ்வாலிலிருந்து ஓய்வும் எடுத்துக் கொண்டால் சுவனம் கிடைத்துவிடும் என்று வேறு ஓர் அழைப்பை விளங்கியிருக்கிறார்களா?
அன்பர்களே, சுவனத்துக்கு ஒரு பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ச்சியாகப் பல வேலைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதொரு வேலை தான் நோன்பு நோற்றலாகும்.
நோன்பு இறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி அல்லது பெற்ற இறையச்சத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு கேடயம்.
அவ்வாறாயின், நோன்பின் மூலம் பெற்ற இறையச்சத்தை வாழ்வு முழுவதிலும் செயற்படுத்த வேண்டும். அந்த இறையச்சமிக்க வாழ்க்கைக்கு குர்ஆன், சுன்னாவின் போதனைகள் அவசியமாகின்றன.
எனவே, அப்போதனைகளைக் கற்க வேண்டும்.
அவ்வாறு கற்ற போதனைகளால் அலங்கரிக்கப்படும் வாழ்க்கைதான் பாவங்கள் குறைந்த வாழ்க்கையாகும். அது மட்டுமல்ல, பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பட்ட வாழ்க்கையும் அதுதான்.
எந்த மனிதனின் வாழ்க்கை பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறதோ அவனுக்கு சுவனம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் ஆணித்தரமாகக் கூறுகிறான். இந்த அல்குர்ஆன் வசனத்தை உற்று நோக்குங்கள்.
நபியே! நரக வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு வியாபாரத்தைக் காட்டி (கற்றுத்) தரட்டுமா என்று கேளுங்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்து, அல்லாஹ்வின் பாதையில் உங்கள் உயிர் உடைமைகளை அர்ப்பணித்து கடுமையாக உழையுங்கள். (நீங்கள் அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பான். சதாவும் நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனச் சோலைகளில் உங்களை நுழைவிப்பான். நிரந்தர சுவனத்தில் அதிசிறந்த வசிப்பிடங்களில் உங்களை வாழவைப்பான். அது மகத்தான் வெற்றியாகும். (61: 21)
ஆக, அர்ப்பணங்களும் தியாக உழைப்புகளும் மிக்க வாழ்க்கைதான் பாவங்கள் மன்னிக்கப்பட்ட வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்குப் பரிசாகவே சுவன பாக்கியம் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது அல்லவா?
இவ்வாறு ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்து தான் சுவனத்தை அடைய வேண்டும்.
இன்றைய நோன்பாளிகள் பாதையை மறந்து விடுகிறார்கள். அதில் சுவனம் நோக்கிய ஒரு பயணம் இருப்பதையும் மறந்து விடுகிறார்கள். ரமழானோடு கடமைகள் முடிந்துவிட்டதாகவும் சுவனம் வாஜிபாகி விட்டதாகவும் நினைக்கிறார்கள்.
இவ்வாறு இலேசாக சுவனம் செல்ல முடியுமானால், இறுதித் தூதரோடு இணைந்திருந்த அந்த ஸஹாபிகள் சமூகம் 23 வருடங்களும் ரமழானை மாத்திரம் கொண்டாடியிருக்கலாமே! ரஸூலுல்லாஹ்வுடன் இணைந்து ரமழானைக் கொண்டாடக் கிடைப்பது அது எத்தனை பெரிய பாக்கியம்! ஏன் அந்த உத்தமத்தூதரோடு வாழ்ந்த சமூகம் அப்படியொரு விளக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
ஆம், அவர்களுக்குத் தெரிந்திருந்தது சுவனப் பாதையில் இருக்கின்ற பிற வேலைகளையும் செய்து பயணித்தால்தான் சுவனத்தை அடையலாம் அவ்வாறு செய்யாத போது நோன்பில் எஞ்சிவிடுவது பசியும் தாகமும் மாத்திரமே என்று
எத்தனை நோன்பாளிகள் நோன்பு நோற்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களது நோன்பில் பசியையும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், நோன்போடு தமது வேலையை நிறுத்திக் கொண்டு அதற்கடுத்த வேலையைத் தொடராதவர் நோன்பின் நன்மைகளை இழந்து விட்டார். அவரது நோன்பு அல்லாஹ்வுக்கு அவசியமற்றது என்ற கருத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.
கெட்ட வார்த்தைகளையும் கெட்ட நடத்தைகளையும் யார் விடவில்லையோ அவர் உணவையும் குடிப்பையும் விட வேண்டும் என்ற அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை.
வார்த்தையும் நடத்தையும் தான் வாழ்க்கை. அந்த இரண்டிலும் கெட்டவற்றை விடாதவர் உணவையும் குடிப்பையும் மாத்திரம் விட்டுவிட்டால் சுவனம் செல்ல முடியுமா?
நோன்பு நோற்றவர் நரகம் செல்லக் கூடாது. அவர் ரய்யான் என்ற சுவன வாயிலை நோக்கிச் செல்ல வேண்டும். அது ஒரு பயணம் பாய்ச்சல் அல்ல. நோன்பு நோற்பவர் ஒரே பாய்ச்சலில் ரய்யான் என்ற வாயிலை அடைந்துவிட முடியாது. அவர் நோன்பு காலத்திலும் சரி, நோன்பு முடிந்த பின்னும் சரி, ரய்யான் நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின் இடைநடுவில் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவும் வேண்டும். பயணப் பாதையில் சறுக்கும் இடங்களை அவர் அவதானமாகக் கடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு மருங்கிலும் முன்னாலும் பின்னாலும் சூழ்ந்திருந்து வழிகெடுக்கக் காத்திருக்கும் ஷைத்தானின் தீங்குகளை அறிந்திருக்க வேண்டும். ஷைத்தான் அல்லாஹ்விடம் சபதம் செய்துள்ளான்.
இறைவா! நான் உனது நேரான பாதையில் அவர்களை எதிர்கொண்டு அமர்ந்திருப்பேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும் வருவேன் பின்னாலும் வருவேன். வலதாலும் வருவேன் இடதாலும் வருவேன்.(அவர்களை சூழ்ந்து வழிகெடுப்பேன்.) அவர்களுள் அதிகமானோரை நன்றியுள்ளவர்களாக இருக்க நீ காண மாட்டாய். (7: 16)
இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டித்தான் ரய்யான் எனும் சுவனவாயிலை நோக்கிய பயணம் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரும் அன்னாரின் தோழர்களும் நோன்புகளை நோற்றுவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் என்று வாளாவிருக்கவில்லை. அவர்கள் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களது பயணத்தில் பெரும் சவால்கள் காத்திருந்தன. பத்ரும் உஹதும் ஹந்தக்கும் சாமான்ய சவால்களா?
ரமழான் மாதத்தில்தான் பத்ரையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது, ஏன் இத்தனை சிரமம்? எங்களைப் போன்று நோன்புகளோடு கடமைகளை முடித்துவிட்டு ரய்யான் திறந்து கொள்ளும் எனக் காத்திருந்திருக்கலாமே! ரமழானில்தானா மக்காவை வெற்றி கொள்ளப் புறப்பட வேண்டும்? மக்கா திறந்து கொள்ளாவிட்டாலும் ரய்யான் திறந்து கொள்ளும் என்று அவர்கள் இருந்திருக்கலாமே!?
அன்பர்களே! நாம் விளங்கிய மார்க்கம் வேறு நபிகளார் விளக்கி, செய்து காட்டிய மார்க்கம் வேறு. அவர்கள் காட்டிய மார்க்கத்தில் ஒரு தெளிவான பாதையும் பயணமும் இருந்தன. அந்தப் பயணத்தில் ஆரம்பம் எது, முடிவு எது பாதையில் மேடு எது, பள்ளம் எது சவால் எது, சாணக்கியம் எது பயிற்சி எது, பண்பாடு எது? போன்ற அனைத்தும் தெளிவாக இருந்தன.
நாங்கள் விளங்கிய மார்க்கத்தில் அப்படியொன்றும் இல்லை. ஸஹர் உணவை எதுவரை சாப்பிடலாம்? பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறப்பதா? பழம் இல்லாமலே நோன்பு துறக்கலாமா? நோன்பாளி ஊசி மருந்து ஏற்றிக் கொள்ளலாமா? இரவில் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும்? பிறை சர்வதேசத்துக்கா, நம் தேசத்துக்கா? ரமழானில் (வாழ்க்கையிலல்ல) செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை?
இப்படியான சில பல விடயங்களோடு நாங்கள் அறிந்து வைத்திருக் கிற மார்க்கம் முடிவடைந்து விடுகிறது. நாங்கள் அறிந்த மார்க்கம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கம் அல்ல ஷவ்வாலோடு கரைந்து விடும் மார்க்கம்.
அவ்வாறு கரைந்து செல்லும் மார்க்கத்தினுள் மனிதர்களை வைத்துக் கொள்ளத்தான் நாம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறோம் ரய்யான் வரை பயணிக்கும் மார்க்கத்தில் மனிதர்களை ஒன்று சேர்ப்பதற்கல்ல.
இந்நிலை ஆபத்தானது. இதன் பாரதூரத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரமழானில் அதிகமாக நன்மைகளில் ஈடுபடுங்கள். வணக்க வழிபாடுகள், கற்றல் கற்பித்தல், ஸதகா, தருமங்கள், பயான்கள், ஒன்றுகூடல்கள்... என நன்மைகள் இம்மாதத்தில் அதிக ரிக்கட்டும். எனினும், ஒரு பயணத்துக்காக அன்றி ஷவ்வாலுடன் விடைபெறுவதற்காக அல்ல!
நீண்டு செல்லும் பயணத்தில் நிலைத்து நிற்கும் உள்ளங்களை வல்ல நாயன் நோன்பாளிகளுக்கு வழங்கு வானாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Thursday, April 17, 2008

நோன்பாளியின் கவணத்திற்கு!

நோன்பு என்றால் என்ன?
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உணவு, குடிபானம், உடலுறவு போன்றவற்றிலிருந்து விலகியிருத்தலாகும்.

நோன்பின் நேரம்: -சுப்ஹுக்கு அதான் சொன்னது முதல் சூரியன் மறையும் வரையாகும்.
நோன்பின் சட்டம்: -
ரமலான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால் புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண்-பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
நிய்யத்து வைத்தல்: -
எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
நிய்யத் என்றால் மனதால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். இன்று மக்கள் செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது.
நிய்யத் எப்போது வைக்க வேண்டும்?
கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.
நபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.
“ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம்: நஸயி
ஸஹர் உணவு: -
நீங்கள் ஸஹர் செய்யுங்கள், ஏனெனில் அந்நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி
ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் இருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: அஹ்மத்
ஸஹர் செய்யும் விடயத்தில் நம் நாடுகளில் சில தவறுகள் நடக்கின்றன. உதாரணமாக, மூன்று மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் தூங்கி விடுகின்றனர். இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனென்றால் சுப்ஹுக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.
அதே போல் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரணானதாகும்.
நோன்பு திறக்கும் போது: -
நோன்பு திறந்த பின்னர், “தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூற வேண்டும்.
பொருள்: தாகம் தீர்ந்தது, நரம்புகள் குளிர்ந்தன அல்லாஹ் நாடினால் கூலி கிடைத்து விடும். ஆதாரம்: அபூதாவுத்.
நோன்பு திறக்கச் செய்தவருக்காக செய்யும் பிரார்த்தனை: -
“அஃப்தர இந்தகுமுஸ் ஸாயிமூன் வஅகல தஆமகுமுல் அப்ரார் வஸல்லத் அலைகுமுல் மலாயிகா”

பொருள்: உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்தனர், நல்லவர்கள் உங்கள் ஆகாரங்களை உண்டனர், மலக்குகள் உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தனர். ஆதாரம்: அபூதாவுத்.
நோன்பாளிகள் கவணத்திற்கு:
நமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா?
பொய்யுரைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும் விட்டுவிடாமல் அவர் பசித்திருப்பதோ, அல்லது தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி.
நாம் நல்லவர்களாக வாழ்வதற்காக அல்லாஹ் நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் இந்த ரமலான் மாதம். ரமலானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!
நோன்பை விட அனுமதியுள்ளவர்கள்: -
1) தள்ளாத வயதுடையவர்.
2) தீராத நோயுள்ளவர்.

விடுபடும் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
நோன்பை தற்காலிகமாக விட அனுமதியுள்ளவர்கள்: -
1) பயணிகள்.
2) மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்று (நிபாஸ்) விலக்குடையோர்.
3) கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
4) தற்காலிக நோயாளிகள்.

இவர்களுக்கு நோன்பை விட அனுமதி உண்டு. இருந்தாலும் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு கழாச் செய்ய வேண்டும்.
நோன்பை முறிக்கக் கூடியவைகள்: -
1) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்.
2) நோன்புடன் பகலில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு பாலாகிவிடும். குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்).
3) மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்.
4) வேண்டுமென்றே வாந்தி எடுத்தல் (தானாக வெளியேறினால் நோன்பு முறிய மாட்டாது).
5) மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்).

கீழுள்ள விடயங்களால் நோன்பு முறியாது: -
1) மறந்த நிலையில் உண்ணுதல், பருகுதல் (புகாரி).
2) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல் (புகாரி).
3) கடுமையான வெப்பத்தில் குளித்தல் (அஹ்மத், அபூதாவுத்).
4) நறுமணம் வாசனை சோப்புகளை உபயோகித்தல்.
5) பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்.
6) வாய் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்.
7) இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியமேற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை. (சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்றவற்றினால் நோன்பு முறிந்து விடும்)
8)நோன்புடன் சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்.
9) தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தல்.

இது போன்ற விடயங்களால் நோன்பு பாதிக்கப்படாது என்பதனை கவனத்தில் கொள்க.
பின்வரும் தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்: -
1) ஷவ்வால் மாத ஆறு நாட்கள்.
2) ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன்.
3) ஒவ்வொரு மாதமும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 13, 14, 15 ஆகிய நாட்கள்.
4) துல்-ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளாகிய அறபா தினம்.
5) முஹர்ரம் மாதம் 9, 10 ம் நாட்களில் நோற்கப்படும் ஆஷுரா எனப்படும் நோன்புகள்.

நோன்பு நோற்பதற்கு தடை செய்யப்பட்ட நாட்கள்: -
1) சந்தேகத்திற்குறிய நாள் (ஷஃபான் 30 ம் நாளன்று சந்தேகத்துடன் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது).
2) நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்கள்.
3) அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ம் நாட்கள் (தமத்துஃ மற்றும் கிரான் வகையான ஹஜ் செய்பவர்களுக்கு பிராணி அறுத்துப் பலியிட வசதியில்லாவிட்டால் இவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்பர்).
4) வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் குறிப்பாக்கி நோன்பு நோற்றல்.
5) பெண்கள் கணவனது அனுமதியின்றி நபிலான நோன்பு நோன்புகளை நோற்றல்.
ஆகிய சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பக்கங்களில் முக்கியமான சில செய்திகள் மட்டும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் போது அறிந்தோர்களை அணுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். அல்லது எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

யா அல்லாஹ்! உண்மையான விசுவாசத்தோடும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எம் அனைவருக்கும் அருள் செய்வாயாக!!
-ஆக்கம்: நிர்வாகி

ஆஷூரா நோன்பின் அழகிய சிறப்புகள்

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.
ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.
ஆஷுரா நோன்பின் சிறப்பு: -
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அறிந்ததும் இது ஏன் என்று வினவினார்கள். அதற்கு யூதர்கள் “இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தான். எனவே அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். “மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நான் உங்களை விட அதிக உரிமையுள்ளவன்” என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பு நோற்குமாறு மக்களை ஏவினார்கள். (ஆதாரம்: புகாரி)
ஆஷுரா தினத்தன்று அண்ணலார் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோற்குமாறு ஏவினார்கள். அப்போது தோழர்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினத்தை யூத கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்துகின்றனரே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியாயின் அடுத்த ஆண்டு அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள்.
மற்றுமொரு அறிவிப்பின்படி, ‘அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வரு முன்பே மரணத்தைத் தழுவி விட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஆஷுரா நோன்பின் பலன்: -
ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பது, கடந்த ஆண்டு செய்த பாவங்களை அழித்து விடும் என்பது நபி மொழியாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதன் நோக்கமாவது, பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதுவே. பத்தாம் நாள் நோற்பதன் காரணம் அந்நாளில் நல்ல காரியங்கள் பல நடந்திருக்கின்றன. அதாவது அல்லாஹ் தன் நேசர்களான மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் மூழ்கடித்தது இந்நாளில் தான்.
இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும். ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.
ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: -
ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கமாட்டார்கள் என நம்புவது. சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என எண்ணுவது.

மேலும் வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல், புத்தாடை அணிதல், ஆடம்பரமாக செலவழித்தல், விஷேச தொழுகை ஏற்படுத்துதல், துக்கம் அனுஷ்டித்தல், ஆடைகளைக் கிழித்தல், மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல் போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சத்திய பாதையில் வாழ்ந்து சத்தியவான்களாக மரணிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
-ஆக்கம்: நிர்வாகி