Showing posts with label ஏகத்துவம். Show all posts
Showing posts with label ஏகத்துவம். Show all posts

Sunday, September 28, 2014

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் மார்க்கம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلاَّ مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ {130}

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.அல்குர்ஆன். 2:130.



ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி(அலைஅவர்களின் மார்க்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி.8/7.

இன்று நாம் நிலை கொண்டிருக்கின்ற ஏகத்துவ மார்க்கத்தை (ஓரிறைக்கொள்கையை) அன்று இப்ராஹீம் நபி(அலை) அவர்களே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலை நாட்டினார்கள்.

அல்லாஹ்வின் ஆற்றல் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் (அலை)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மிகப் பெரும் பாவச் செயல் என்பதை மக்களுக்கு விளக்குவதிலும், இவ்வுலகை படைத்து இயக்கும் அல்லாஹ் ஒருவனே ஆற்றலுடையவன் அவனுக்கு நிகராக உலகில் கற்பனை செய்யப்படும் அனைத்தும் ஆற்றலற்றவைகள் என்பதை விளக்குவதிலும் முழு மூச்சாக செயல் பட்டார்கள்.  

அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு யாருடைய உதவியும் அன்று அவர்களுக்கு இருக்கவில்லை, தனித்து நின்றே அனைவருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டார்கள் எதிர்ப்புகளுக்கு பயந்து வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்கள்.

முட்டாள்களைத் தவிர இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை வேறு யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வே திருமறையில் சிலாகித்துக் கூறும் அளவுக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் மார்க்கத்தை நிறுவினார்கள்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். அல்குர்ஆன். 2:130.

வீட்டிலும் பகை, வெளியிலும் பகை.
இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டி ஏகத்துவத்தை நிலைநாட்ட வந்தவர்கள் அவர்களுடைய தந்தையோ சிலை வணக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதில் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த சிலைகளுக்கு சக்தி கிடையாது என்பதை பலமுறை தந்தை அவர்களுக்கு விளக்கிக் கூறி வந்ததால் தந்தையின் மூலம் வீட்டில் பகைஉருவானது, இனி ஏகத்துவத்தைப் பேசினால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும், ஏகத்துவத்தைப் பேசுவதாக இருந்தால் என்னை விட்டு விலகிப் போய் விடு என்று விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா ?. நீ விலகிக்கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார். அல்குர்ஆன் 19:46.

பெற்ற தந்தையின் மூலம் வீட்டுக்குள் இந்த நிலை என்றால் வெளியில் சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு நாடாளும் மன்னன் முதல் சாதாரன குடி மக்கள் வரை இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது கடும் பகை கொண்டிருந்தனர். எத்தனை பகை கொண்டிருந்தாலும், ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதிலிருந்து பின் வாங்குவதில்லை எனும் முடிவில் மன்னன் நம்ரூதுக்கும்  சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

ஒருநாள் நம்ரூதின் அரன்மனையில் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், மன்னன் நம்ரூதுக்கும் இடையில் அனல் பறந்தது விவாதம் இறுதியில் வாயடைத்துப் போனான் மன்னன் நம்ரூது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரதுஇறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன்உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை)மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன். 2: 258.

அறிவுப் பூர்வமான கருத்துக்களைக்கொண்டு ஏகத்துவ எதிர்ப்பாளர்களை, திணறச் செய்வதற்கும், திக்குமுக்காடச் செய்வதற்கும் பதில் பேச முடியாமல் வாயடைக்கச் செய்வதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களே.

மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள் ஒரு கிராமத்தில் சிறிய சிலைகள் உடைக்கப்பட்டு பெரிய சிலை ஒன்றின் கழுத்தில் கோடாரி மாட்டி விடப்பட்டிருந்தது.

அங்கே மக்கள் திரண்டனர் இப்ராஹீம்(அலை) அவர்களும் வரவழைக்கப்பட்டனர் குழுமி இருந்த மக்கள் ஆளாளுக்கும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டனர். தனி ஒரு நபராக இருந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில்களை அசராமல் அளித்துக் கொண்டே இருந்தார்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள்.

திருப்பி அவர்களை நோக்கி இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசத்தியத்தில் இருந்த காரணத்தால் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைவரும் தலைகளை தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆன் 21:58 முதல், 21:68 வரை.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இந்த யுக்தியால் மக்களுடைய மனங்களில் மாற்றம் எற்படுவதை அறிந்த ஊர் தலைமை கூடி அவர்களுக்கு நெருப்பில் பொசுக்கி தண்டனை கொடுப்பது என்ற மோசமான முடிவை எடுத்து தாமதமின்றி செயல்படவும் தொடங்கினர்.

இவ்வாறான தண்டனை கொடுப்பதன் மூலமாக இதுவரை செய்து வந்த பிரச்சாரம் உண்மை இல்லை என்றுக்கூறி நெருப்பிலிருந்து தப்பிக்க முயலலாம்.

அல்லது துணிந்து நெருப்பை ஏற்று எரிந்து பொசுங்கி விட்டால் அவரால் பிரச்சாரம் செய்யப்பட்ட கடவுள் அவரை காப்பாற்ற முடிய வில்லை. என்றுக் கூறி சிந்திக்க முனைந்த மக்களுடைய மூளையைக் கழுவி அதே இடத்தில் வைத்து விடலாம்.

இரண்டில் எது நடந்தாலும் நமக்கு லாபமே என்ற நரித்தனம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்றால் இந்த காலத்தில் உள்ள ஏகத்துவ எதிர்ப்பாளர்களுக்கு அவர்களை விட பல மடங்கு இருக்கத் தானே செய்யும்.

இந்த தண்டனை மூலமாக பல கடவுள் கொள்கையை நிலை நாட்ட இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த எண்ணினர்.

நெருப்பின் அருகே நிருத்தப்பட்ட இப்ராஹீம் நபி (அலை) அவர்கள மனம் தளரவில்லை, தைரியத்தை விட்டு விட வில்லை, ஏகத்துவத்தை மறுத்து உயிரைக் காப்பாற்ற எண்ணவில்லை, மாறாக  ஏக இறைவன் என்னை காப்பாற்றப் போதுமானவன் என்ற நம்பிக்கையில் திடமாக இருந்தார்கள் ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் (என் இறைவன் எனக்குப்போதுமானவன்) '' என்ற பிரார்த்தனையை ஓதுவதைத் தவிர வேறு மாதிரியான வார்த்தைகளை கூற மறுத்து விட்டது இறை நம்பிக்கையின் பிறப்பிடமாகிய இப்ராஹீம் (அலை) அவர்களுடைய நாவு. 

உலகம் முடியும் காலம்வரை முஸ்லீம்களுக்கு பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் சடைவடையாமல் துஆ கேட்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். 

இப்ராஹீம்(அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' 

(ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின்கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி. 4564.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய உறுதியான இறைநம்பிக்கையையும், நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டிய உயர் பண்பையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பைக் குளிர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிட நெருப்புக்கு உத்தரவிட்டு அவர்களைக் காப்பாற்றினான். ''நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம். திருக்குர்ஆன் 21:69.

இறை நம்பிக்கையாளர்களை வல்ல அல்லாஹ் ஒருபோதும் கை விட மாட்டான் என்பதற்கும், பிரார்த்தனையை செவிமடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொடுப்பான் என்பதற்கும் இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதும் அவர்களில் வாழ்வில் நடந்த படிப்பினை மிக்க எடுத்துக்காட்டாகும்.
 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Wednesday, February 4, 2009

இன்ஷா அல்லாஹ்

'நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!' (அல்குர்ஆன்)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான். நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் 'அல்லாஹ் நாடினால்' என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் அன்புக்கு அதிகம் உரித்தானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளோம். இவ்வளவு உயர்ந்த தகுதியில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயானாலும் 'நாளை இதைச் செய்வேன்' என்று கூறக் கூடாது. அது மிகவும் அற்பமான காரியமானாலும் கூட அவ்வாறு கூறக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் நினைத்ததைச் செய்து விட முடியாது. ஏகத்துவக் கொள்கையின் இரத்தினச் சுருக்கமான சான்றாக இது அமைகின்றது.

திருக்குர்ஆனைப் பற்றியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் பற்றியோ எந்த அறிவும் இல்லாத ஒரு முஸ்லிம் இந்தச் சொற்றொடரை மட்டும் அறிந்திருந்தால் கூட அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வார். அல்லாஹ் நாடினால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) கூற வேண்டுமென்று கட்டளையிடப்பட்டு அவ்வாறு அவர்கள் கூறியும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் கால் தூசுக்குச் சமமாகாத மகான்கள் மற்றும் பெரியவர்களுக்கு எள்ளளவும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி முந்தைய நபிமார்களுக்கும் வழிமுறையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த அத்தியாயத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா நபியவர்களின் சம்பவம் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறும் போது அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள், என்று மூஸா நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். முந்தைய நபிமார்களிடம் இந்த வழிமுறை இருந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூறப்பட்ட கட்டளையாக இது இருந்தாலும் இதை நாமும் கடைபிடித்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் நாட்டமின்றி எதையும் செய்ய முடியாது எனும் போது மற்றவர்கள் நிச்சயமாக செய்ய முடியாது என்பதிலிருந்து இதை அறியலாம்.
இதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் இது பற்றி அவர்களிடம் சில அறியாமைகளும் நிலவுகின்றன. 'இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதைச் செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ் சாப்பிடுங்கள்' என்பது போல் சிலர் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். ஏனெனில் 'நான் செய்வேன்' என்று தன்னைப் பற்றிக் கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். கட்டளையிடும் போதோ பிறர் குறித்துப் பேசும் போதோ இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவது பொருளற்றதாகும்.
இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் மிகப் பெரிய காரியங்களுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள். சிறிய காரியங்களுக்குக் கூற மாட்டார்கள். 'நாளை பத்தாயிரம் தருகிறேன்' என்று கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறும் இவர்கள் 'நாளை பத்து ரூபாய் தருகிறேன்' எனக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவதில்லை. இது அடிப்படைக் கொள்கையைப் பாதிக்கின்ற மிகவும் மோசமான போக்காகும். பத்தாயிரம் தருவதற்குத் தான் அல்லாஹ்வின் நாட்டம் தேவை. பத்து ரூபாய் தருவதற்கு அவன் நாட்டம் தேவையில்லை. அவன் நாட்டமின்றியே என்னால் தந்து விட முடியும் என்ற எண்ணம் ஊடுறுவி இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றனர். இவ்வசனத்தில் இந்தப் போக்கு தடுக்கப்பட்டுள்ளது.

'லிஷையின்' 'எந்த காரியம் பற்றியும்' நாளை செய்வேன் எனக் கூறாதே என்ற கட்டளையில் பெரிய காரியம் மட்டுமின்றி சிறிய காரியமும் அடங்கும். அற்பமான காரியங்களும் இதனுள் அடங்க வேண்டும் என்பதற்காகவே இச்செயல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்றாவதாக அறிந்து கொள்ள வேண்டியதாகும். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறு கூற நாம் மறந்து விடலாம். பொதுவாகவே மறதிக்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஆயினும் நாம் மறதியாக இன்ஷா அல்லாஹ்வைக் கூறாதிருந்து விட்டோமே என்று நினைவுக்கு வந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்காக வழிமுறையையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஆனால் நமக்குத் தெரிந்து உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த வழிமுறையைக் கடைப் பிடிப்பதில்லை. 'ஒரு வாரத்தில் கடனைத் திருப்பித் தருகிறேன்' என்று நாம் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூற நாம் மறந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். சற்று நேரத்திலோ மறுநாளோ இது நமக்கு நினைவுக்கு வருகிறது. உடனே இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் ஒரு வாரத்தை விடக் குறைவான காலத்திலேயே கொடுக்கச் செய்யக் கூடும் என்று கூற வேண்டும். ஒரு நாளில் தருவதாகக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறத் தவறிவிட்டு சற்று நேரத்தில் நினைவுக்கு வந்தால் உடனே அல்லாஹ்வை மனதில் நினைத்து 'என் இறைவன் ஒருநாளை விடவும் குறைவாகவே இதை நிறைவேற்றித் தரக் கூடும்' என்று கூற வேண்டும். இதை 24 வது வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூற வேண்டும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தாலும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் கூட இதை நடைமுறைப் படுத்தாமல் இருக்கிறார்கள். இது நான்காவதாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
மறதிக்குப் பரிகாரமாக அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் வார்த்தையில் கூட அவன் நம்மீது கருணை மழை பொழிந்திருப்பது ஐந்தாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஒரு வாரத்தில் செய்வதாக ஒரு காரியத்தைப் பற்றி நாம் பேசி விட்டோம். இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். நாம் வாக்களித்த அந்த நேரத்துக்குள் கொடுக்கலாம். அல்லது அந்த நேரம் கடந்த பின் கொடுக்கலாம். அல்லது அறவே கொடுக்க முடியாமல் போகலாம். அல்லது வாக்களித்ததை விடக் குறைவான நேரத்திலேயே அதைக் கொடுக்கலாம். இந்த நான்கில் ஒவ்வொருவரும் நான்காவதையே விரும்புவோம். தேர்வு செய்வோம். மறதியின் காரணமாக இன்ஷா அல்லாஹ் கூறாதவரை மற்ற மூன்று விஷயங்களைக் கூறுமாறு கட்டளையிடாமல் 'நான் வாக்களித்ததை விட குறைவான காலத்திலேயே என் இறைவனால் முடிக்க முடியும்' என்று கூறச் செய்கிறான். இதன் மூலம் அடியார்கள் மீது அவன் காட்டும் அளப்பரிய கருணையை அறியலாம்.

Tuesday, March 25, 2008

இறைவனுக்கும் உண்டோ இலக்கணம்!?

வல்லோனின் திருநாமம் போற்றி..

மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர். இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்பகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமைதான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அதேநேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுறித்துக் காட்டிவிடுவர்.

இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புறியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெரும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!. அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குறிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்:
(நபியே!) நீர் கூறுவீராக: அவன் – "அல்லாஹ்" ஒருவனே!
அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புறிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது.

மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. "(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – 'அல்லாஹ்' ஒருவனே!"

ஒரு விடயத்தை நாம் நன்கு தெறிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் 'அல்லாஹ்' என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் 'அல்லாஹ்' என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர 'அல்லாஹ்' முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாழ ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளன் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. "அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)".
இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோற முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோறிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. "அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை".
இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெறிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!
அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.
இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. "மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை".
இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும்.
இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பண்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு(touch stone) உராய் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்..

Friday, March 14, 2008

மனிதப்படைப்பின் நோக்கம்


மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.

உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் 'கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட' என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

قال تعالى : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.
ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.

இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.

அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.
இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான். எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.

ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.

நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள 'ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை' (51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?

அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
- ஆக்கம்: நிர்வாகி