Showing posts with label இல்லறம். Show all posts
Showing posts with label இல்லறம். Show all posts

Sunday, November 11, 2012

SEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்குமாம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...
 
அனுமதிக்கப்பட்ட (கணன்-மனைவி) (உடல்)உறவு உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது என்று நிபணர்கள் கூறுகின்றனர்.
உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம். இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர்
ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் உணர்வுகளினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.
இதயநோய்கள் குணமடையும்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார் இந்த பாலியல் நிபுணர்.
உற்சாகம் அதிகரிக்கும்
ஆர்கஸத்தின் போது எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும்.
சீரான உறக்கம்
உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்ககுறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாகஉறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
புத்திக்கூர்மை அதிகமாகும்
தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார். ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடு, அவர்களின் முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை போன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.
மூளையின் ஆரோக்கியம்
ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப்பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை வலி நிவாரணி
உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ். ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள்ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்.



கள்ள உறவு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வருமாம்!
அனுமதிக்கப்படாத (கணவன்-மனைவி அல்லாத) (கள்ள)உறவு உடலுக்கு பெரும் கேடு விளைவித்து இதயத்துடிப்பை நிருத்தி அகால மரணத்திற்கு இட்டுச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆபத்தானது
துணைக்குத் தெரியாமல் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கள்ள உறவானது முதலில் சுவாரஸ்யமாகஇருந்தாலும் நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தானதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொலைகளுக்குக் காரணமாகிறது.
இன்றைக்கு ஊடகங்களில் சிறப்பு செய்திகளாக இடம்பெறுபவை கள்ளக்காதல் செய்திகள்தான். இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, குழந்தைகளை கொல்வது என பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் மரணத்தில்தான் முடிகின்றன. இந்த கள்ளத் தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்பதுதான் அது.
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனைவி யை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு மரணங்கள்
மனைவி க்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் காரணமாக 3 மடங்கு அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கள்ளக் காதல் செய்பவர்கள் எதற்கும் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நல்லது என்கின்றனர்ஆய்வாளர்கள்.



இறைவன் இருக்கிறான் அவனே இப்பிரபஞ்சத்தை படைத்து அவனே இயக்குகிறான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை நாம் வாழும் காலங்களிலேயேக் கண்டு வருகிறோம்.
அதற்கு இதுவும் ஒரு உதராணமாகத் திகழ்கிறது ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது மற்றொன்று ஆரோக்கியத்தை அழித்து விபரீதத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் உலகம் முழுவதும் பரவிய எய்ட்ஸ் கிருமிகளை அழிக்க முடியாமல் மனித சமுதாயம் திணறுவதிலிருந்து இறைவனை மறுப்பவர்களும், மறப்பவர்களும் புரிந்து கொள்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள்இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்: புகாரி 1905, 5065, 5066
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணமும் அதன் மூலம் ஏற்படும் நல்ல உறவும், ஆரோக்கியமும் நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.


-சமூக சேவகன்.
Note:
Islam prohibited Prostitution all the way,
Islam give Heavy punishment(Throw stone until Die) for both Male & Female who involve wrong sex(without Marriage). After death life, Punishment is Hell Fire.
Islam ordered women dress should be covered body & head fully. If women correctly covered her body & head, 95% sex problem solved.
Islam prohibitted co-education system.
You can cheat your wife or parents, but you can't cheat God, God is always with you, 24hrs watching you.
Always you've double tention, one is God is known about ur wrong sex, another one is wife/parents known about that.....so two tentions kill ur heart.....

Wednesday, May 16, 2012

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்


உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.

நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும்.

அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.

அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.

“கேபிள் டீவி மூலமும், Dish மூலமும் நூற்றுக்கணக்கான “செனல்கள்” காண்பிக்கப்படு வருவதால் ஒவ்வொரு செனல்களிலும் எந்தெந்த நேரங்களில் என்னவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை மனனமிட்டுவைத்திருக்கிறார்கள் மூலம் வௌ;வேறு விதமான நிகழ்;ச்சிகளை பார்த்து வணக்கத்திற்கான நேரத்தை தொலைத்து விடுகிறார்கள்.

பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய அதிகமான நேரங்களை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைககள் அரட்டையடிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கோட்டை விடுவதற்கும் கணவன் மனைவிக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். திசைமாறும் பயணங்களுக்கு இசைவான வழிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.

குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன. அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.

“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)

குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது.

குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும். நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு அவன் தூண்டி விடுவான். தீமைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் வரண்ட பூமியாக மாறிவிடும்.

“இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி)

அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார். ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது. துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.

ஒரு மனிதர் ஸூறதுல் கஹ்பை (இரவில்) ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இரு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியம் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்ன ஹாஸிப் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

குர்ஆன் ஓதும் வீட்டுக்கு அல்லாஹ்-விடமிருந்து அமைதி (ஸகீனத்) இறங்குகின்றபோது அந்த வீடு பாக்கியம் பொருந்திய வீடாக மாறிவிடுகிறது. குர்ஆன் ஓதுவதற்கு மாற்றமாக சினிமா, நாடகங்கள், ஆடல்-பாடல்கள் ஒலிக்கின்றபோது ஷைத்தானின் ஊசலாட்டங்களும் ஊடுருவல்களும் அந்த வீட்டில் நுழைய ஆரம்பிக்கின்றன.
“நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (20:14)
அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும். தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படி அமைதிக்குரிய இடமாக அமையப் பெறும்?

உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த வீடுகளை (தொழுகை இல்லாத) மண்ணறைகளை (மையவாடி களை)ப் போன்று ஆக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம்)

மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். துஹஜ்ஜூத் மற்றும் சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா?

வீட்டுக்குள் நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும்
சாப்பிடும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்வதும்
தூங்கும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும் ஷைத்தான் வீட்டுக்குள் நுழைவதையும் தங்குவதையும் தடுக்கும் என நபியவர்கள் கூறிய நபிமொழிகள் பல காணப்படுகின்றன.

ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக வரறே;றுகின்ற நிகழ்வுகள் நடைப்பெறும் போது “முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும்.

ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆ அவ்ராதுகள் மற்றும் தொழு கைகளின் நேரங்களை நினைவில்கொள்ள முடியாத அவலங்களை பார்க்க முடிகிறது. பெண்களும் தொழுவதில்லை. பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை. பொறுப்க்குரிய கணவனும் ஏவுவதில்லை.

முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?
அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.(அல்குர்ஆன்:13:28)
என அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும். வாழ்வு நிம்மதியாக இருக்கும். வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும்.

உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும். ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போமாக.

Monday, March 21, 2011

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும்। இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது।

இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது."நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது। முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்।" (பைஹகி).இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது।துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது।இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை। மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை। அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது।

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும்। ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்।தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும்.

அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பதுஉங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும்.

குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும்.

உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.கவனிப்பு அல்லது அக்கறைஉங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பதுதம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா? ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும். அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்॥! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்॥! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்॥!எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்.

Saturday, December 4, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.

(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)

2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.

பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.

3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?

உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.

சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.

திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.

சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.

எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.

5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.

ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.
எனவே, மணப் பெண்களே! உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!

7. அறிந்துகொள்ளுங்கள்!
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!

திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.

எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!
தேங்க்ஸ்: http://www.islamkalvi.com/portal/

Monday, May 3, 2010

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3

أحكام الغسل في الإسلام
கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை:

சென்ற தொடரில்... குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.
1) நிய்யத்:
கடமையான குளிப்பை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதியாக எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும். நிய்யத் இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
( إنما الأعمال بالنيات وإنما لكل امرىء ما نوى )
‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி) , நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நிய்யத் இல்லாமல் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட சில அரபு வாசகங்களைப் பாடமிட்டு ‘நிய்யத்’ என்ற பெயரில் ஓதி வருகின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித முன்மாதிரியும் கிடையாது. எனவே, உள்ளத்தால் கொள்ள வேண்டிய நிய்யத்தை வாயால் மொழிவது ‘பித்அத்’ என்ற பாவமாகும்.

2) குளிக்கும் போது உடல் முழுவதும் நனைய வேண்டும்:
ஏனெனில் குளித்தல் எனும் போது அது உடல் முழுவதும் நனைவதையே குறிக்கும். குளிக்கும் போது உடலில் ஒரு சில பகுதிகள் நனையாமல் விட்டாலும் கடமையான குளிப்பு நிறைவேறமாட்டாது.

மேற்படி இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பின்வரும் அமைப்பில் குளிப்பது சன்னத்தானது:
முதலில் கைகள் இரண்டையும் மூன்று முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மர்மஸ்தானத்தைக் கழுவுவது.
பின்னர் தொழுகைக்காக வுழூச் செய்வது போன்று வுழூச் செய்து கொள்வது. வுழூவின் நிறைவில் கால்களைக் கழுவுவதைப் பொறுத்தவரை உடனே கழுவிக் கொள்ளவும் முடியும். அல்லது குளித்து முடிந்ததும் இறுதியாகக் கழுவிக் கொள்ளவும் முடியும்.
வுழூச் செய்து முடிந்ததும் தண்ணீரைத் தலையில் மூன்று முறை ஊற்றுவது. அப்போது முடியைத் தேய்த்து குடைந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் குளிப்பது. அப்போது வலதைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். குளிக்கும் போது அக்குள், காதுகள், தொப்புள், கால் விரல்கள் போன்ற தேய்க்க முடியமான பகுதிகளைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பார்க்க: புகாரி (265), (முஸ்லிம் (744) பாடம்: கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை).

பெண்களும் இவ்வாறு தான் தமது கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். குளிக்கும் போது அவர்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டி அவசியமில்லை.

ஒரு பெண்மணி நபியவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூந்தல் கட்டும் பழக்கத்தையுடையவள். கடமையான குளிப்பின் போது அதை அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ‘அதன்மீது மூன்று அள்ளு நீரை ஊற்றினால் போதமானது….’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி), நூல்: இப்னு மாஜாஹ் (603))

பெண்கள் தமது கூந்தலை அவிழ்க்க வேண்டியதில்லை என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும் கூறியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் (773))

கடமையான குளிப்புடன் தொடர்பான சில நடைமுறைப் பிரச்சினைகள்:
A) ஜனாபத், ஹைழ் போன்ற பல காரணிகளால் குளிப்புக் கடமையாகி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமா?

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக நிய்யத்தை வைத்துக் கொண்டு ஒரு முறை குளித்தால் போதுமானது என்பதே மிகப் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இமாம் இப்னு ஹஸ்ம், ஷேய்க் அல்பானீ போன்றோர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குளிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்’ என்ற ஹதீஸின் அடிப்படையில் முதல் கருத்தே மிகச் சரியானது. அல்லாஹு அஃலம்.

B) கடமையான குளிப்பை நிறைவேற்றிய ஒருவர் தொழுகைக்காக மீண்டும் வுழூச் செய்யவேண்டிய அவசியமில்ல:
عَنْ عَائِشَةَ قَالَتْ :كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
‘நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்கள்: அஹ்மத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)

C) ஆண் குளித்து எஞ்சிய நீரில் பெண்ணும், பெண் குளித்து எஞ்சிய நீரில் ஆணும் குளிக்க முடியும்:
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى جَفْنَةٍ فَجَاءَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لِيَتَوَضَّأَ مِنْهَا – أَوْ يَغْتَسِلَ – فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى كُنْتُ جُنُبًا. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ الْمَاءَ لاَ يَجْنُبُ ».

நபியவர்களின் மனைவியொருவர் ஒரு பாத்திரத்தில் குளித்து விட்டுச் சென்றார். அதில் (எஞ்சியிருந்த நீரில்) வுழூச் செய்வதற்கு அல்து குளிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்க்ள. அப்போது அம்மனைவி, அல்லாஹ்வுடைய தூதரே! நான் பெருந் தொடக்குடன் இருந்தேன் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ‘ நிச்சயமாக தண்ணீர் தொடக்காவதில்லை’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்க்ள்: அபூதாவுத், திர்மிதீ. இப்னு ஹிப்பான்)

D) நிர்வாணமாகக் குளித்தல்:
அடுத்தவர்களின் பார்வைக்குப்படாத விதமாக மறைவான இடங்களில் நிர்வாணமாகக் குளிப்பதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் கிடையாது. மாறாக, நிர்வாணமாகக் குளிப்பதற்கு அனுமதி உண்டு என்பதைச் சுட்டிக்காட்டக் கூடிய வகையில் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. உதாரணமாக நபி அய்யூப் (அலை ) அவர்கள் நிர்வாணமாகக் குளித்தார்கள். (புகாரி (275)) , மூஸா (அலை) அவர்களும் நிர்வாணமாகக் குளித்துள்ளார்கள். (புகாரி (274) , முஸ்லிம் (339)) போன்ற ஹதீஸ்கள் இதை உறுதி செய்கின்றன.

E) குளித்து முடிந்த பின்னர் ஓதுவதற்கென்று பிரத்தியேகமான எந்த துஆவும் ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

F) குளிப்புக் கடமையானவர்கள் நோய், கடும் குளிர், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் குளிக்க முடியாவிட்டால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும். 4:43, 5:6 ஆகிய வசனங்கள் இதை வலியுறுத்துகின்றன.

தயம்மும் செய்யும் முறை:
நிய்யத் வைத்துக் கொண்டு தனது இரு கைகளையும் பிஸ்மில்லாஹ்ச் சொல்லி புழுதி கலந்த மண்ணில் அல்லது சுவர் போன்றவற்றில் அடித்து, பின்னர் கையின் உள் பகுதியை வாயால் ஊத வேண்டும். அதன் பின்னர் அக்கைகளால் முகத்தையும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் தடவ வேண்டும். (புகாரி, முஸ்லிம் , தாரகுத்னீ)

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது அனைத்து வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் செய்வதற்கு அருள் புரிவானாக!

எம்.எல். முபாரக் ஸலபி M.A,
mubarakml @ g m a i l . c o m