1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன। உடனடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்। மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர்। அந்த இரு நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப்பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசுவதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு இடையே குண்டுவீச்சுக்கு முன் நடந்த விவாதங்கள் பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்பட்ட விதம் குறித்தும் சில சுவாரசியமான விவரங்களைத் தற்போது பார்க்கலாம்.
அணுகுண்டை மக்கள் மீது போடக்கூடாது என்ற விஞ்ஞானிகளில் லியோ ஸிலார்ட் (Leந் Szilநூrd), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Albert Einstein) (ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்। இந்த இருவரும் அணுகுண்டின் ரகசியத்தைக் கண்டுபிடித்ததில் பிரதான பங்கினை வகித்தவர்கள். அதனால் அவர்களால் அது விளைவிக்கக்கூடிய மிகப்பெரிய நாசத்தையும் முன்கூட்டியே நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
அணுகுண்டு வீச்சின் பின்னணியைப் புரிந்துகொள்ள 1945-க்கு ஆறாண்டுகள் பின்னே போகவேண்டியுள்ளது। இங்கே சில கற்பனையான உரையாடல்கள் கொடுக்கப்படுகின்றன. உரையாடல்கள் கற்பனையாக இருந்தாலும் உண்மையில் நடந்த விஷயங்கள் அடிப்படையிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
நமது கதை 1939 கோடையில் தொடங்குகிறது। அணுப்பிளவு வினைகள் பற்றிய ஆய்வுகள் பிரான்சில் ஃப்ரெடெரிக் ஜோலியோட், ஐரீன் க்யூரி ஆகியோராலும் அமெரிக்காவில் ஸிலார்ட், என்ரிக்கோ ஃபெர்மி ஆகியோராலும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அணு ஆயுதங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை ஸிலார்டினால் உடனே உணர முடிந்தது. மற்ற நாடுகளுக்கு முன் ஜெர்மனி அணுகுண்டைக் கண்டுபிடித்து உலகை ஆட்டி வைக்கும் தன் நோக்கத்திற்கு அதைப் பயன் படுத்திவிடக் கூடாதே என்ற கவலை அவரை வாட்டியெடுத்தது. அவரும் யூஜின் விக்னர் என்ற மற்றொரு விஞ்ஞானியும் ஐன்ஸ்டீனைச் சந்தித்தனர்.
விக்னர் : பெர்லினிலிருந்து உங்களது பழைய நண்பரை அழைத்து வந்திருக்கிறேன்। அணுவிலிருந்து ஆற்றலைப் பெறுவது சம்பந்தமாக உங்களுடன் அவர் விவாதிக்க விரும்புகிறார்।ஐன்ஸ்டீன் : சரி॥ அங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?ஸிலார்ட் : யுரேனியம் அணுவைப் பிளந்தால் ஏராளமான சக்தி வெளிப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கேயும் பிரான்சிலும் அது பற்றி சில சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.ஐன்ஸ்டீன் : நானும் அது பற்றிப் படித்தேன். பொருள் சக்தியாக மாறுவதால் அது நிகழ்கிறது.ஸிலார்ட் : அணுப்பிளவு வினைகளை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடர்போல குறுகிய காலத்தில் நடத்த முடியுமானால் அது கட்டுப்படுத்த முடியாத ஏராளமான சக்தியை வெளிப்படுத்தும். அது மனிதகுலம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய ஆயுதமாக ஆக முடியும் ! ஐன்ஸ்டீன் : ஆம், அது நிச்சயம் நடக்கக் கூடியதே. முனைந்து ஆய்வுகள் நடத்தினால் அப்படி ஓர் ஆயுதத்தை சில ஆண்டுகளிலேயே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அது மனிதகுலத்திற்கு மிக ஆபத்தானது !ஸிலார்ட் : அதுதான் என்னுடைய கவலை. செக்கோஸ்லாவாக்கியாவிலுள்ள யுரேனியம் சுரங்கங்களை ஜெர்மனி ஏற்றுக் கொண்டிருக்கிறது. யுரேனியம் விற்பனையை அது நிறுத்தி யுள்ளது. நமது பழைய நண்பர் வெர்னர் ஹைசன்பர்க் அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைக்கிறேன்.ஐன்ஸ்டீன் : உண்மை. நான் முற்றிலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் என்ன செய்யலாம்? நான் எந்தவித குண்டுகளும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.ஸிலார்ட் : கனடா, பெல்ஜியன் காங்கோ போன்று உலகத்தின் சில இடங்களில் யுரேனியம் கிடைக்கிறது. பெல்ஜியன் காங்கோவிலிருந்து யுரேனியம் ஜெர்மனிக்குக் கிடைக்காமலிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல, சங்கிலித் தொடர்வினைகள் பற்றி நாம் இங்கே ஆய்வுகள் செய்ய வேண்டும். என்ரிகோ பெர்மி இந்த விஷயத்தில் நம்மோடு இல்லை. நாம் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுத வேண்டும்.ஐன்ஸ்டீன் : அது நல்ல யோசனை। அந்த கடிதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏன் தயாரிக்கக் கூடாது? அக் கடிதத்தை நான் அனுப்புகிறேன்।அணுகுண்டு நோக்கி ஓட்டம் தொடங்கி விட்டது !ஐன்ஸ்டீனும், ஸிலார்டும் முடிவு செய்தபடி ஒரு கடிதம் 1939 ஆகஸ்ட் 2 அன்று அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்பட்டது। அந்த ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்தது. இரண்டாவது உலக யுத்தம் அதிகாரபூர்வமாக அதிலிருந்து தொடங்கிவிட்டது. ஐன்ஸ்டீன்-ஸிலார்ட் கடிதத்தின் விளைவாக ஒரு `யுரேனியம் குழு’ அமைக்கப்பட்டது. ஆனால் அணு விஞ்ஞானிகள் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வு எதையும் செய்யவில்லை. 1941 டிசம்பரில்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பெரிய அணு ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதுதான் பின்னாளில் `மான்ஹட்டன் சோதனைத் திட்டம் (Manhattan Project)’ என்ற பெயரைப் பெற்றது. அது ஒரு ராணுவத் திட்டம் என்பதால் ஜெனரல் குரோவ்ஸ் அதற்குத் தலைமை ஏற்றார். அகில உலகப்புகழ் வாய்ந்த ஆயிரக் கணக்கான இயற்பியல், வேதியியல் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் திட்டமாக அது உருவெடுத்தது. சில விஞ்ஞானிகளைக் குறிப்பிட வேண்டுமென்றால் என்ரிக்கோ பெர்மி, லியோ ஸிலார்ட், ஓப்பன்ஹீமர், வான் நியூமன், டோல்மன் போன்றோரைக் கூறலாம். திட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலோருக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது கூடப் பெரிதாக எதுவும் தெரியாது. ஜெர்மனியில் நடைபெற்ற ஆய்வுக்கு ஆட்டோ ஹான், வைசாக்கர், வெர்னர் ஹைசன்பர்க் போன்ற விஞ்ஞானிகள் தலைமையேற்றனர். சோவியத் யூனியனிலும் கூட குர்சடாவ் தலைமை யில் ஒரு சிறிய திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பிரான்ஸ் நடத்திய எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் தலைவர் ஃப்ரெடரிக் ஜோலியோட் க்யூரி தன்னுடைய ஆய்வு அறிக்கைகளுடன் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார். அணுகுண்டை நோக்கிய ஓட்டம் தொடங்கிவிட்டது !மேலே கூறப்பட்ட அனைத்துக் குழுக்களும் கட்டுப்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் வினைகளை நடத்துவது குறித்த ஆய்வுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த பந்தயத்தில் 1943 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மான்ஹட்டன் சோதனைத் திட்டமே வெற்றியடைந்தது. 1942-க்குப் பிறகு சோவியத் யூனியன் மீது ஜெர்மனி நடத்திய தாக்குதலும், பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலும் இரண்டாவது உலகப் போரின் திசையையே மாற்றிவிட்டன. ஆனால் 1944 இறுதியில் ஜெர்மனி எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவத் தொடங்கியது. ரோமில் முசோலினி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார். கிழக்கே ஜப்பான் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. நேச நாடுகளின் ராணுவம் பிரான்சை விடுவிப்பதில் வெற்றியடைந்தது. 1945 மே மாத மத்தியில் சோவியத் யூனியனின் செஞ்சேனை பெர்லினை நெருங்கிவிட்டது. ஹிட்லருக்கு எங்கும் தோல்வி.மீண்டும் அமெரிக்க சோதனைச்சாலை லாஸ் அலமாசுக்கு வருவோம். குண்டுவீச்சு சோதனைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் முக்கியமானவை.இலக்கு நிர்ணயிக்கும் குழு 1945 மே மாதம் இலக்கு நிர்ணயிக்கும் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஓப்பன்ஹீமர் தான் குழுத் தலைவர். ராணுவத் தலைவர்களுடன் வான் நியூமன், டோல்மன், பெதே போன்ற விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இலக்கைத் தேர்ந்தெடுப்பது, குண்டு வீசப்படும் இடத்தின் உயரம், பருவநிலை, புதிய குண்டு விளைவிக்கப் போகும் கதிர்வீச்சு மற்றும் உளவியல் பிரச்சனைகள் ஆகியவை பற்றி விவாதித்தனர். அந்த நேரத்தில் சிறிய பையன், குண்டு மனிதன் என்று பெயரிடப்பட்ட இரண்டு குண்டுகளே கைவசம் இருந்தன.ஓப்பன்ஹீமர் : குண்டுகளை எந்த இடத்தில் வெடிக்கச் செய்யலாம்?பெதே : `சிறிய பையன்’ குண்டிலிருந்து அதிக அளவு சக்தியான 15000 டன் டிஎன்டி யைப் பெற உயரம் 2400 அடி இருக்கலாம். `குண்டு மனிதனி’டமிருந்து 5000 டன் சக்தியைப் பெற 1500 அடி உயரம் தேவை.ஓப்பன்ஹீமர் : இந்த குண்டுகளை எங்கே போடலாம்?ஸ்டேன்ஸ் (ராணுவம்) : நாம் குண்டு வீசும் இடம் 3 மைல்கள் ஆரம் உள்ள நகரமாக இருக்க வேண்டும். நிறைய மக்கள் தொகை உடைய நகரமாக அது இருக்க வேண்டும். (அடடா, எவ்வளவு நல்ல மனசு ! ) ஆகஸ்ட் வரை இதுதான் இலக்கு என நிர்ணயிக்கப்படாத இடமாக அது இருக்க வேண்டும் ! கியோட்டோ, ஹிரோஷிமா, யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல், நிகாட்டா போன்ற இடங்களைப் பரிசீலிக்கலாம். கியோட்டோ, ஹிரோஷிமா இரண்டும் ஹஹ இலக்குகள். யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய வை ஹ இலக்குகள். கடைசியாகக் குறிப்பிட்டது க்ஷ இலக்கு. சக்கரவர்த்தியின் அரண்மனை இலக்காக இருக்கக் கூடாது ! (சாதாரண மக்கள்தான் சாகவேண்டும் என்பதில் அத்தனை குறியாக அமெரிக்க ராணுவம் இருந்திருக்கிறது!) இறுதிப் பரிந்துரை ராணுவத் தலைமையிலிருந்து வரவேண்டும்.குண்டை எங்கே போடுவது?இந்த விவாதத்தை அடிப்படையாக வைத்து ஹிரோஷிமா, கியோட்டோ, யோக் கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய நான் கும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன. கடைசி நேரத்தில் கியோட்டோவை எடுத்து விட்டு அந்த இடத்தில் நாகசாகி சேர்க்கப்பட்டது. இந்த எல்லா முயற்சிகளையும் தொடங்கி வைத்த லியோ ஸிலார்ட் இந்தக் கட்டத்தில் முற்றிலும் அணுகுண்டுகள் பற்றிய பிரமைகள் நீங்கிய மனிதராக ஆகிவிட்டார். அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை அறிந்ததும் அவர் கலங்கிப் போனார். அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்தார். ஐன்ஸ்டீன் மூலமாக அதிபர் ரூஸ்வெல்ட்டை முதலிலும் பின்னர் ட்ரூமனையும் அவர் சந்திக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. அவரோடு சேர்ந்து மான் ஹட்டன் சோதனைத் திட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கையெழுத்திட்ட ஒரு மனு மூலம் அணு ஆயுதத்தை தார்மீக ரீதியிலும் மனித நேய அடிப்படையிலும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று அதிபரை கிட்டத்தட்டக் கெஞ்சினார் என்றே சொல்ல வேண்டும்.விஞ்ஞானிகளின் மனு“கீழே கையெழுத்திட்டுள்ள விஞ்ஞானிகள் அணு சக்தித் துறையில் பணிபுரிந்து வருகிறோம். அண்மைக் காலம் வரை இந்தப் போரில் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக் கூடும் என்பது எங்களது அச்சமாக இருந்தது. அதனால் திருப்பித் தாக்கும் வகையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஒன்றே நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்பினோம். இன்று, ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில், அந்த ஆபத்து நீங்கி விட்டது. எனவே நாம் கீழ்க்கண்டவாறு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் :“போரை விரைவிலேயே வெற்றிகரமான ஒரு முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்துவது மிகச் சிறந்த ஒரு போர்முறையாக இருக்கலாம். ஆனால் ஜப்பான் மீது இத்தகைய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என நாங்கள் கருதுகிறோம்.”-லியோ ஸிலார்ட் மற்றும் 69 பேர் அணுகுண்டு வீசப்படுவதை எதிர்த்த ஸிலார்ட் ஒரு கடுமையான கருத்துப் போரையே நடத்தினார். நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க் என்பவர் பெயரில் இயங்கிய ஃபிராங்க் குழுவில் மற்றவர்களுடன் அவர் இணைந்து அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான விவாதங்களில் ஈடுபட்டார். ஜப்பானைச் சரணடையச் செய்வதற்கு அணுகுண்டின் வல்லமையை நிரூபிக்கும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு சோதனையைச் செய்தாலே போதுமானது என்று அக்குழுவினர் யோசனை தெரிவித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றவில்லையெனில் உலகில் பயங்கரமான ஆயுதப் போட்டியே நிகழும் என்று அவர்கள் வலிமையாக வாதிட்டனர். அது எவ்வளவு தீர்க்கதரிசனமானது !“நாஜிக்களுடைய அக்கிரமங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்காத ஜெர்மானியர்களின் மவுனம் உலகெங்கிலும் பரவலாகக் கண்டிக் கப்பட்டது. மான்ஹட்டன் சோதனைத் திட்டத்தில் உள்ள விஞ்ஞானிகளாகிய நாம் அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேசத் தவறினால், ஜெர்மானியர்களுக்குக் கிடைத்த மன்னிப்பு கூட நமக்குக் கிடைக்காது” என்றார் ஸிலார்ட்.இதற்காகவெல்லாம் ஜெனரல் குரோவ்ஸினால் உளவாளி என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகவேண்டிய ஆபத்தினை அவர் எதிர் கொண்டார். ஸிலார்டினுடைய முயற்சிகள் அமெரிக்க அதிபர், ராணுவத் தலைமை மற்றும் இதர விஞ்ஞானிகளிடம் எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. (புதிய ஆயுதத்தைக் கண்டுபிடிக்கும்வரைதான் ஆட்சியாளர்களுக்கு விஞ்ஞானிகளின் உதவி தேவை. ஆயுதத்தைக் கண்டுபிடித்த பிறகு, அதை யார் மீது பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அரசியல் முடிவுகள். அதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் அணுகுண்டு வீச்சுதான்) ஓப்பன்ஹீமர், காம்ப்டன், ஃபெர்மி மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவும் ஸிலார்ட் முன்வைத்த வாதங்களை நிராகரித்தது. அணு ஆயுதத்தை உடனே பயன்படுத்த வேண்டுமென அது பரிந்துரைத்தது ! இவர்களெல்லாம் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் என்பதில் சந்தேகம் இல்லை. நோபல் பரிசு பெற்றவர்கள். மேதைமைத்தனமும் மனித நேயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.ஜூலை 16 அன்று டிரினிட்டி சோதனைடிரினிட்டி அணுகுண்டு சோதனை பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றது. 6 கிலோ கிராம் புளூட்டோனியம் 20,000 டிஎன்டி சக்தியுடன் நியூ மெக்சிக்கோவின் பாலைவனங்களின் மேல் வெடித்துச் சிதறியது. கதிர்வீச்சினால் 20 மைல் தூரம் தள்ளியிருந்த குடும்பங்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின. கதிர்வீச்சின் விளைவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 20 மைல்களுக்கு அப்பால் இருந்த என்ரிக்கோ ஃபெர்மி அணுகுண்டின் வலிமையைக் கையில் சில தாள்களை வைத்துக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருந்தார். தாள்கள் 9 அடி தூரத்திற்கு தூக்கியெறியப்பட்டன. தரைமட்டத்தில் குண்டின் சக்தி 10,000 டன் டிஎன்டிக்குச் சமமாக இருக்கும் என அவர் மதிப்பிட்டார்.“அணுகுண்டு வேலை செய்யும் எனத் தெரிந்துவிட்டது... உலகம் இதுவரை இருந்த மாதிரி இனி இருக்காது. சிலர் சிரித்தனர், சிலர் அழுதனர், பெரும்பாலான மக்கள் அமைதியாக இருந்தனர். இந்துமதப் புனித நூலான பகவத்கீதையின் `தற்போது நான் உலகங்களை அழிக்கக் கூடிய மரணமாக இருக்கிறேன்’ என்ற வரி நினைவுக்கு வருகிறது” என்றார் ஓப்பன்ஹீமர்.ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன் சந்திப்புஜோசஃப் ஸ்டாலினைச் சந்திப்பதற்கான தேதியை டிரினிட்டி சோதனைக்குப் பின்னர் இருக்குமாறு தேர்வு செய்கிறார் ட்ரூமன். அந்த சந்திப்பு ஜூலை 24 அன்று பெர்லின் அருகே உள்ள போட்ஸ்டாமில் ஹேவல் நதிக்கரையில் இருந்த செசி லிநாஃப் அரண்மனையில் நிகழ்ந்தது.இந்த செய்தியை ஸ்டாலினிடம் தெரிவித்த விதமே ஒரு சுவாரசியமான நாடகம் போல் நடந்தது. தன்னுடைய வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் பைர்னஸிடமும் வின்ஸ்டன் சர்ச்சிலிடமும் செய்தியைக் கேட்டபிறகு ஸ்டாலினுடைய முகபாவங்கiளைப் பார்த்து அவர் புதிய ஆயுதத்தின் பயங்கரத்தன்மையைப் புரிந்து கொண்டாரா என்பதைக் கவனிக்குமாறு ட்ரூமன் கேட்டுக் கொண்டாராம்!ட்ரூமன் : ஜோசஃப், என்னிடம் உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. மிக அதிக சக்தி வாய்ந்த ஒரு புதிய ஆயுதம் எங்களிடம் இருக்கிறது.ஸ்டாலின் (முகபாவத்தில் பெரிய மாற்ற மில்லை) : அப்படியா? ஜப்பானியர்களுக்கு எதிராக அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஸ்டாலினுடைய முகத்தைக் கவனித்த பிறகு, அவர் புதிய ஆயுதத்தைப் பற்றி ஒன்று பெரிதாக நினைக்கவில்லை, அல்லது அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவில்லையென்று பைர்னஸும் சர்ச்சிலும் நினைத்தனர். (ஆனால் ஸ்டாலினா ஏமாறுவார்? தன்னுடைய பதட்டத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்! ) சோவியத் மார்ஷல் ஷுகாவ் தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் “உண்மையில் தன்னுடைய அறைக்குத் திரும்பிய பிறகு அணுஆய்வுத் திட்டத் திற்குப் பொறுப்பான விஞ்ஞானி குர்சடாவிடம் விரைந்து செயலாற்றி அணு ஆயுதத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்” என்று குறிப்பிடுகிறார்.ஏகாதிபத்திய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள...பனிப்போரில் வலிமையான நிலையில் தன்னை வைத்துக்கொள்ள அணுகுண்டு உதவும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது. அதனால் தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க அரசு விரும்புவது தெளிவாகத் தெரிந்தது என்கிறார் ஷுகாவ்.அதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் உலகிற்குத் தெளிவாகியது. ராணுவ நோக்கிலிருந்து எந்தத் தேவையும் இல்லாமலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட அமைதியான ஜப் பான் நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கர்கள் அணுகுண்டைப் போட்டனர். (இந்த மாபாதகச் செயலுக்காக உலகெங் கிலுமிருந்து எழுந்த கண்டனங்கள் நிச்சயம் போதுமானவையல்ல. இன்றுவரை அமெரிக்கா தன் வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியே வருகிறது).போர்ச் செயலாளர் ஸ்டிம்ஸனிடம் “ராணுவ நோக்கங்களுக்கே அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டும், ராணுவ வீரர்களே நமது இலக்கு-பெண்களும் குழந்தைகளும் அல்ல॥ ஜப்பானியர்கள் காட்டுமிராண்டிக ளாக, ஈவிரக்க மில்லாத வெறிபிடித்தவர்களாக இருந்தாலும் கூட, பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களான நாம் (இவர்கள் பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களாம் ! அந்தப் பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வதில்தான் அமெரிக்கர்கள் வல்லவர்களாயிற்றே॥?) அந்த பயங்கரமான குண்டை போடமுடியாது॥” என்று கூறியதாக ட்ரூமன் தன் டயரியில் குறிப்பிடுகிறார். ஆனால் அணுகுண்டு பற்றிய ஆணையில் இந்த மாதிரி யார் மீது போட வேண்டும், யார் மீது கூடாது என்ற விவரங்களெல்லாம் இல்லை. ஹிரோஷிமாவும் கோக்குராவும் இறுதியில் தேர்வு செய்யப்பட்டன.1945 ஆகஸ்ட் 6 அன்று காலையில் 8 மணிக்கு ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டது. இதை ஜெனரல் குரோவ்ஸ் பிற்பகல் 2 மணிக்கு ஓப்பன்ஹீமரிடம் இப்படித் தெரிவிக்கிறார் :குரோவ்ஸ் : உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள் ! அணுகுண்டு வேலை செய்தது.ஓப்பன்ஹீமர் : அது நன்றாக வெடித்ததா?குரோவ்ஸ் : மிக அருமையாக, பெரிய சத்தத்துடன் வெடித்தது ! உங்களை இயக்குநராக நான் தேர்ந்தெடுத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.ஓப்பன்ஹீமர் : எனக்கு அதைப் பற்றி சந்தேகம் உண்டு, ஜெனரல் !ஆகஸ்ட் 9 அன்று கோக்குராவுக்கு விமான ஓட்டிகள் சென்றபோது நகரைப் புகை சூழ்ந்திருந்தது. குண்டைப் போட இயலவில்லை. எனவே, இரண்டாவது தேர்வான நாகசாகியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். பாவம், நாகசாகி மக்கள் !ட்ரூமனின் பொய்யுரைட்ரூமன் ரேடியோவில் உரையாற்றினார் : “முதல் அணுகுண்டு ராணுவத்தளமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது... நாங்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க விரும்பினோம்... ஜப்பான் சரணடைய வில்லையெனில் அழிவிலிருந்து யாருமே அவர்களைக் காப்பாற்ற முடியாது॥”அவர் கூறியது உண்மையல்ல. முழுப் பொய். ஹிரோஷிமாவும் நாகசாகியும் ராணுவத் தளங்கள் அல்ல. ராணுவ நோக்கங்களுக்காக அவை தேர்வு செய்யப்படவும் இல்லை. உண்மையில் மக்களை எச்சரிக்கை செய்யும் துண்டுப் பிரசுரங்களை நாகசாகி மீது ஆகஸ்ட் 10 அன்று (அதாவது குண்டுவீச் சிற்கு மறுநாள்) வீச அமெரிக்கா ஏற்பாடு செய்தது ! (ஜனநாயக காவலர்கள் அல்லவா, நாங்கள் மக்களை முன்கூட்டியே எச்சரிக் கை செய்தோம் என்று காட்டிக் கொள்வதற்காக இதைச் செய்தார்கள். ஆனாலும் உண்மை வெளிவந்துவிட்டது)ஜப்பானின் தோல்வியை அணுகுண்டு தீர்மானிக்கவில்லைஐன்ஸ்டீன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரால் எதையும் எழுத முடியவில்லை. ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸில் அவர் “அதிபர் ரூஸ்வெல்ட் உயிருடன் இருந்திருந்தால் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடுவதைத் தடுத்திருப்பார். ரஷ்யா பங்கெடுப்பதற்கு முன்னதாக போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு வேளை அது போடப்பட்டிருக்கலாம்... ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்துவதை நான் எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறேன்...எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், ஜப்பானின் தோல்வியை அணுகுண்டா நிர்ணயித்தது? இல்லவே இல்லை...அமெரிக்காவின் அணுகுண்டு பற்றிய ஆய்வறிக்கை அணுகுண்டுகள் ஜப்பானைத் தோற்கடிக்கவில்லை..1945 மே மாதத் திலேயே ஜப்பானிய சக்கரவர்த்தி எந்த நிபந்தனைகளானாலும் அவற்றை ஏற்று சரணடைவது என்று முடிவு செய்து விட்டார். ஜூலை மாதத்தில் ரஷ்யா மூலமாக சமரச முடிவைத் துரிதப்படுத்தும்படி வலியுறுத்தி னார். ஆனால் அவர் போட்ஸ்டாம் மாநாட்டிற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது... அணுகுண்டுகளைப் போட்டிருக்காவிட்டாலும் ஜப்பான் சரணடைந்திருக்கும்” என்று எழுதினார்.பத்து வருடங்களுக்குப் பிறகு1954 -ல் வேதியியல், சமாதானம் ஆகியவற்றுக்காக இரு முறை நோபல் பரிசு பெற்ற லைனஸ் பாலிங்கைச் சந்தித்த போது ஐன்ஸ்டீன் அவரிடம் “என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டேன்... அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டும் என்று அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதினேன்..அது தவறுதான். ஆனால் ஜெர் மானியர்கள் அவற்றைத் தயாரித்துவிடுவார்கள் என்ற ஆபத்து அப்போது இருந்ததால் என்னுடைய கடிதத்திற்கு ஒரு நியாயம் இருந்தது..” என்றார்.ஓப்பன்ஹீமர், ஸிலார்ட் உட்பட மான்ஹட்டன் சோதனைத் திட்டத்தில் இருந்த பலர் செனட்டர் மெக்கார்த்தியினால் `அமெரிக் காவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளி’ல் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தின் பேரில் பின்னர் பழிவாங்கப் பட்டார்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும் சோவியத் யூனிய னோடு அணுஆயுத ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட வர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.வரலாறு நமக்கிட்டிருக்கும் கடமைஒரு மர்மநாவலில் வருவது போன்ற திருப்பங்கள், குற்றப் பின்னணி, மனிதநேயம் சிறிதுமற்ற ஏகாதிபத்திய செயல்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து வரலாறு சந்தித்திராத மிகப் பெரிய கொடுமை 1945 ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் நடந்தேறியது. ஹிரோஷிமா-நாகசாகி மக்கள் அனுபவித்த நரக வேதனை கற்பனைக்கெட்டாதது. இந்தக் கொடுமை யைச் செய்த அமெரிக்க வல்லரசு இன்றளவும் உலகத்தில் பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக் கிறது. இராக், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து வடகொரியா, ஈரான், கியூபா என அது குறி வைக்கும் பட்டியல் நீளமானது. உலக மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டிய மாபெரும் கடமை முற்போக்காளர்களுக்கும் மனிதநேயர்களுக்கும் இருக்கிறது.வரலாறு நமக்கிட்டிருக்கும் இந்தக் கடமையை நிறைவேற்ற உறுதி பூணுவோம் !ஆதாரங்கள் : லியோ ஸிலார்ட், ஐன்ஸ்டீன் பற்றிய இணையதளங்கள்- இதில் உள்ள பல தகவல்கள் நமது தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பெறப்பட்டவை.
No comments:
Post a Comment