அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான். ''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)
அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)
ஸவ்பான் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898) ''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )
No comments:
Post a Comment