Thursday, March 29, 2012

‘அஸதின்’ சீற்றம்

பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் - எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!

காலைப் பொழுதில் - நம்
கண்ணத்தை அறைந்து செல்லும்
மெல்லிய தென்றலின் நீங்காத சுகம் - நம்மை
மெய்மறக்கச் செய்யும் ''மெகா கிப்ட்''.

சிட்டுக் குருவியின்
சின்னச் சின்ன கீதங்களும்
மழலைச் செல்வங்களின்
மறக்கமுடியா அறுந்த கவிதைகளும்
மாமறை தந்தோனின் மற்றுமொரு அருள்!

இவற்றையெல்லாம் இன்புற்றிருக்க நாமனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வேலாவேளைக்கு விரும்பிய உணவு, விதம் விதமாய் வாழ்க்கையின் அலங்காரங்கள் என்று எத்துனை கொடைகளை நாம் அனுபவிக்கின்றோம்! அனைத்தும் அல்லாஹ்வின் கொடைகள் என்பதில் சந்தேகமில்லை. உலக இன்பங்களில் நாம் மிதந்து கொண்டிருக்க அங்கோ ஒரு சமூகம்........?!!

ஆம், சிறியா மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்க்கையில் இவையனைத்தும் தொலைந்து போனதை நினைக்கும் போதே கண்கள் கசிகின்றன. உள்ளத்தின் ஆழத்தில் கவளையின் வேதனை.

காட்டையாளும் 'அஸதின்' சீற்றம் தேவைக்கேற்பத்தான்! ஆனால் சிறியாவையாளும் 'அஸதின்' இரத்த வெறி நாட்டின் மைந்தர்களை நாளாந்தம் மடியச் செய்து கொண்டிருக்கின்றன. நடப்புலகத்தின் பக்கங்களில் பதிவு செய்யப்படும் கதைகளில் 'அஸதின்' அட்டூழியங்கன் நிச்சயம் முதலிடம் பெரும். நீங்காத வடுக்களாய் முஸ்லீம்களின் உள்ளத்தில் மாறிப் போன ஒரு வரலாறு! இன்று சிறியா தேசத்தில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

ஈன்ற செல்வங்களை கழுத்து நெறித்து கொல்வதைவிட கொடூரமான ஈனவெறியாட்டம் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சொந்த நாட்டு மக்களின் உயிரைக் குடித்து தனது ஆட்சி பீடத்தை தக்காத்துக் கொள்ளும் ஒரு சுயநலவாதியின் வெறியாட்டம்!

லெனின், முஸோலினி, ஹிட்லர்..... போன்றவர்களின் சிகப்பு வரலாற்றில் இன்றளவும் இரத்தவாடை அகலவில்லை. இவர்களின் வரலாறுகள் கடந்த காலத்தின் சோகவரலாறு! ஆனால் நிகழ்காலத்தின் காட்டுமிரான்டி கதாநாயகனாய் உருவெடுத்த அஸதின் எதிர்காலம் அவஸ்தைப்படும் அந்த நாட்களைக் காண நாட்கள் இன்னும் தொலைவில் இல்லை என்பதை மட்டும் நன்றாய் உணர முடிகின்றது.

No comments: