Wednesday, May 23, 2012

இளசுகளைக் காப்பாற்றும் ஈஸியான சூத்திரங்கள்

                                                                                                                            - ம.மோகன்

"அன்பு என்பதே
காண அரிதான உலகில்
கொடூரம் அளப்பரியதாக உள்ளது!"
இன்று தற்கொலை, உதவி கேட்கும் ஓர் கூக்குரலாகவே மாறியிருக்கிறது. வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொந்தரவு, குடும்பத் தகராறு போன்ற காரணங்களையே பிரதானமாக வைத்து பெண்களை சூழ்ந்துவிடும் தற்கொலை, இன்றைக்கு வாழ்வின் முதல்பகுதியைக்கூட கடக்காத இளம் வயதினர்களின் பக்கம் சாய்ந்திருக்கிறது. அதிலும், அண்மை வாரங்களில் தமிழகத்தை ஆட்டிப் போட்டிருக்கிறது... பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க 7,379 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தென்னிந்தியாவில் மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இளம் வயதினரின் தற்கொலை நிகழ்வதாகவும் அறிக்கைகள் சொல்கின்றன.

இதில், சென்னையில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டில் 84 மாணவ, மாணவிகள் உயிரை விட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் மாணவிகள். இதே சென்னைக்குள்... 2012 ஜனவரி ஆரம்பித்து மார்ச் முடிவதற்குள் 16 இளம் வயது தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.

'வீட்டில் கஷ்டமான சூழலில் என்னைப் படிக்க வைக்கிறார்கள். என்னால் சரிவர படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வியைச் சந்திக்க நேரிடுவேனோ என்பதாலேயே பிரிந்து செல்கிறேன்...’

- கடந்த வாரத்தில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமியின் தற்கொலைக்கான காரணம், நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.

'என் உயிர்த் தோழி என்னிடம் பேசவில்லை’, 'வயிற்று வலியைப் பொறுக்க முடிய            வில்லை’, 'பெற்றோர்கள் திட்டித் தீர்க்காத நாளே இல்லை’, 'காதலன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான்’, 'படிப்பு சரியாக வரவில்லை’

- இப்படி இளம் வயதுப் பெண்கள் அடுக்கிக்கொண்டே போகிற காரணங்களுக்குப் பின் இருக்கும் சமூக உண்மை, தவறுதான் என்ன?! அவற்றையெல்லாம் களைந்து, தற்கொலைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் சூத்திரங்கள்தான் என்னென்ன?

மிகுந்த சமூக அக்கறையோடு அவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்... சமுதாயத்தின் பல தளங்களில் பல்வேறு பரிமாணங்களோடு பணியாற்றிவரும் சிலர்...

பலவீனப்படுத்தாதீர்... பயமுறுத்தாதீர் !

சங்கர் (சமூக ஆர்வலர்- சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம்): ''வாழ வேண்டும் என்பதற்குப் பத்துக் காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டால், மனம் அந்த ஒற்றை முடிவைத்தான் நோக்கும். இரட்டை மனநிலை, நொடிப்பொழுது முடிவு, வழி தேடாத குறுகிய பார்வை... இப்படியான சூழல்கள்தான் இந்த ஒற்றை முடிவைத் தீர்மானிக்கின்றன. இவற்றை இளம் பருவத்தினர் கடந்து போகக்கூடிய வாய்ப்பை, அவர்களைச் சார்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.

ஆண்களில் 30 - 45 வயதுக்குள்ளானவர்கள்தான் அதிகமாக தற்கொலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வருமானம், வேலை மாற்றம், குடும்பம், கடன் என தற்கொலைத் தூண்டுதலுக்கான சில பொதுவான காரணங்கள் அமைகின்றன. அதுவே, பெண்களில் 15 - 29 வயது வரையிலானவர்களே அதிகம். பருவ மாற்றம், படிப்பு, காதல், திருமணம், உறவுமுறை, குடும்பப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என்று அந்த இடைப்பட்ட வயதுக்குள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் ஏராளம். தொடர் பரிணாமங்களால் அந்தச் சூழலில் ஒரு பெண் பகிர்வையும், அதன் வழியே தன்னை பலப்படுத்திக் கொள்ளவுமே முயற்சிக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில்... அவர்களைப் பலவீனப்படுத்துவது, பயத்துக்கு ஆளாக்குவது போன்ற செய்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.''

பெற்றோர் - ஆசிரியர் உறுதிமொழி ஏற்க வேண்டும் !
இந்திரா ஜெயச்சந்திரன், (தமிழாசிரியை, பழனியப்பா உயர்நிலை பள்ளி, சோழபுரம், விருதுநகர் மாவட்டம்): ''பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வயதினர் பெற்றோர்களை விடவும், ஆசிரியர்களை விடவும், ஏன், கடவுளை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது... உடன் படிக்கும், பழகும் நண்பர்களுக்குத்தான். நண்பர்களுக்கு முன் தனக்கு எந்த அவமானமும் நிகழ்ந்து விடக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு சூழலில் அந்த சிநேகிதர்களுக்கு முன்பாகவே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ... ஏதோ ஒன்று குறித்து கண்டிக்கும்போது, அது அவமானம் என்கிற உச்சத்தைத் தொடும்போது, அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தில் பெற்றோரும், ஆசிரியரும் மிக மிக கவனமாக இருந்தாலே, பெரும்பாலான தற்கொலைகளை தடுத்துவிடலாம். இதற்கான உறுதிமொழியை அவர்கள் ஏற்க வேண்டும்.

ஞான உபதேச படிப்பு முறைகள் கைவிடப்பட்டு, முழுவதுமே வேல்யூ படிப்பாக மாறிவிட்டதும் இத்தகைய நிலைக்கு ஒரு காரணம். இந்த விஷயத்தில் அவர்களுக்கான கவுன்சிலிங்கை பள்ளிகள் பரவலாக செய்யத் தொடங்கியாகிவிட்டது. இதன் பலனாக அவர்களிடம் மாறுதல்களைப் பார்க்க முடிகிறதா என்பதை, காலப்போக்கில்தான் கவனிக்க முடியும்.''

நரகமாக்கும் நகரமயம் !

நக்கீரன் (கவிஞர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்): ''உலகமயமாதலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்ட இந்த காலகட்டத்தில், முதலீடு செய்யும் நுகர்பொருளாகவே பிள்ளைகளை மாற்றிவிட்டோம். சிறு வயது முதல் பிள்ளைகளின் மீது செலுத்தப்படும் ஒவ்வொரு முதலீடும், பிற்காலத்தில் நமக்கு ஆதாயம் சேர்க்கும் என்கிற நம்பிக்கையே இதற்குப் பிரதான காரணம். அது படிப்பில் இருந்தே தொடங்குகிறது என்றும் சொல்லலாம்.

இப்படிப் பெற்றோர்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்குப் பிழைப்புக்காக புறப்படும் இளைஞர்களில் 90 சதவிகிதத்தினர் தங்களை நகரமயமாதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் சூழலே நிலவுகிறது. 'குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொண்டு முதலாளிகளை திருப்திபடுத்தும் வேலையைத்தான் செய்கிறோம்' என்பதை கிராமம் சார்ந்த சூழலில் இருந்து நகரம் நோக்கி வருபவர்கள் உணர்வதில்லை. இதனால், முழு மனநிம்மதியையும் இழக்கிறார்கள். ஆகவே, தங்களின் எதிர்கால பயணத்தில் இருந்து விலகி நிற்கிற இந்த நிர்ப்பந்தம், ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவாகவும் மாறுகிறது.''

தேவை... நம்பிக்கை பயிற்சிகள் !

ஷெரின் (நிறுவனர் - 'வெளிச்சம்’ அமைப்பு): ''சமீபத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது, கிராமத்தில் இருந்து வந்த ஒரு மாணவி... ஆடை மற்றும் தலைப்பின்னல் ஆகியவற்றை சக மாணவிகள் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன். ரூரல் ஏரியா மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பில் இருந்தே தன்னம்பிக்கை, தனித்துவம், ஆங்கிலம், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று ஒவ்வொன்றிலும் நம்பிக்கை அளிக்கும் பயிற்சியை அளிக்க வேண்டும்.

ஒரு மாணவர் தனக்கான படிப்பை மதிப்பெண்களை மட்டுமே வைத்துத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைதான் இங்கு உள்ளது. அவரது ஆசை, விருப்பம், குறிப்பிட்ட துறையில் கொண்டுள்ள திறமை எல்லாம் புதைக்கப்படுகிறது. 1,085 மதிப்பெண்களோட தேர்ச்சி பெற்ற ஒரு பிளஸ் டூ மாணவிக்கு தமிழ்க் கவிதை புலமை அதிகமாக இருக்கிறது என்றால், அவரை தமிழ் சார்ந்த துறையில் சேர்த்து விடுவதுதானே நல்லது. 'இவ்ளோ மார்க் இருக்கே... இன்ஜினீயரிங் படி’ என்று நம் ஆசையை அவளிடம் திணிக்கிறோம்.

இன்னொரு பக்கம், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவரையும் எப்படியாவது பணத்தைக் கட்டி பொறியியல் படிப்பில் சேர்த்துவிடும் பெற்றோர்கள் அறிவதில்லை... அவர்களின் விஷ§வல் மீடியா படிப்பு ஆசையை அவர்கள் கசக்கி எறிவதை! இதனால், ஆண்டொன்றில் வெளிவரும் சுமார் 2,50,000 பொறியியல் மாணவர்களில் ஒருவராக தானும் வெளிவந்து, வேலை தேடி நாளைக் கழிப்பவர்களில் ஒருவராக அவரும் இருக்கத்தானே செய்வார்?

'எனக்கு படிப்பு வேண்டாம். நான் ஒரு லேத் தொழிலாளியாக இருக்க விரும்புகிறேன்!’ என்று ஒரு பையனோ, தையல் தொழிலை பிரதானமாக்கிக் கொள்ள விரும்புகிற ஒரு பெண் பிள்ளையோ, வாழ்வில் ஜெயிக்கவே முடியாது என்கிற மனநிலையை அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு யார் கொடுத்தது?!''

தற்கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில், பல தளங்களில் சேவையாற்றி வருவோர் தந்த கருத்துக்கள் மொத்தத்தையும் கேட்டுக் கொண்ட 'ஸ்கார்ஃப்’ மனநல மையத்தின், மனநல மருத்துவர் மங்களா, ''அனைவரும் மிக அற்புதமாக விஷயத்தை வலியுறுத்துயுள்ளனர். இனி தற்கொலைகள் இல்லை என்று சொல்வதற்கு இவையெல்லாம்தான் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சூத்திரங்கள்'' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டவர்.

ப்ளீஸ், 30 நிமிடம் ஒதுக்குங்கள் !

''நாம் நம் தலைமுறைகளில் 5 வயதில் கற்றுக்கொண்ட படிப்பை, இப்போது குழந்தைகளிடம் இரண்டரை வயதிலேயே திணிக்கிறோம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற ரியாலிட்டி ஷோக்களின் தாக்கத்தால், குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ... பாட்டு, டான்ஸ் கிளாஸ் என அவர்களின் பால்யத்தைப் பறிக்கிறோம். சக குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமல், சின்ன வயதிலிருந்து அவர்களை டி.வி-க்கு பலிகொடுத்துவிட்டு, பப்ளிக் எக்ஸாம் என திடீரென்று அவர்களை டி.வி-யில் இருந்து பிரிக்கிறோம். பிள்ளைகள் முன்பாக பேரிரைச்சலுடன் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்கிறோம்.

வாழ்வின் அறங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நாமே, சிக்னலில் நிற்காமல், பிளாக்கில் டிக்கெட் வாங்கி சினிமா பார்த்து, உறவினர்களைப் புறம் பேசி என தவறுகளையே செய்து காட்டுகிறோம். அதையே அவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். 'என் ரோல் மாடல் என் பேரன்ட்ஸ்’ என்று நம் குழந்தைகள் சொல்லும்படியான வாழ்க்கையை இங்கே எத்தனை பேர் வாழ்கிறோம்?

தினசரிப் பொழுதுகளில் குழந்தைகளுக்காக குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குங்கள். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். பள்ளி, படிப்பு, நண்பர்கள், காதல், ஃபேஸ்புக் என்று எங்காவது அவர்கள் பிரச்னையில் சிக்கியிருக்கிறார்களா என்பதை கவனித்து உணருங்கள். அதிலிருந்து பக்குவமாக மீட்டெடுங்கள். 'என்ன பிரச்னைனே தெரியலையே... இப்படிப் பண்ணிக்கிட்டாளே...’ என்று தன் பிள்ளை தற்கொலை எனும் மிகப்பெரிய முடிவெடுத்ததற்கான காரணம்கூட அறியமுடியாமல் அழும் பெற்றோரின் கதறல், நமக்கு எச்சரிக்கை ஒலியே'' என்று தானும் எச்சரிக்கை செய்தார் மருத்துவர் மங்களா!

இனியாவது, விழித்துக் கொள்வோம்!

No comments: