Wednesday, October 31, 2012

மறதிக்கு என்ன மாற்று வழி?

                                                                                                                               - எஸ். ரவீந்திரன்

எல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல'' என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் "அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.

மெத்தப் படித்தவர்களாகட்டும்,படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொது இடம், பள்ளி, அலுவலகம் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளர் பொது அறிவுக் கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட சாதாரண கேள்விக்குக் கூட பலர் சரியான பதிலைக் கூற முடியாமல் தவித்ததைக் காண நேர்ந்தது. உண்மையாகவே அப்படி இருந்தார்களா அல்லது நடித்தார்களா என்று புரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற கேள்விக்கு, நன்கு படித்தவர்கள் கூட பதில் அளிக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இது ஓர் உதாரணத்துக்காக மட்டுமே.

மற்றபடி நிஜமாகவே இன்று பலரும் போலி முகமூடிகளை அணிந்துகொண்டுதான் நடமாடுகின்றனர். பல்கலைக்கழகம், கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள், அரசு வேலைகளில் படிப்பறிவும், பொதுஅறிவும் குறைந்தவர்கள், தகுதியற்றவர்கள் பலர் பணிகளில் இருக்கின்றனர்.

வங்கிகளில் படிவங்களைத் தயக்கம் இல்லாமல் நிரப்புபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பணவிடைத்தாள் (மணியார்டர்) படிவத்தை நிரப்ப இன்றும் அஞ்சலகங்களில் தடுமாறுபவர்களைப் பார்க்கலாம்.

சாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்று பலர் வாழ்ந்துவருகின்றனர். அன்றாடச் செய்திகளை வாசிக்காமலும், பிற விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமலும் இருக்கின்றனர்.

மேலும் சிலர், வீடுகளில் மின்தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை எப்படி சரிசெய்வது என்பதைக் கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு சோம்பலால் அவதியடைகின்றனர்.

பொது அறிவில் இன்று இளம் தலைமுறையினர் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை "எப்படியாவது' படித்து தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு தொழில் கல்வி, கணினி சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் போதும் என்றே கருதுகின்றனர்.

கல்லூரிகளில் சேர்ந்து பயில்வோரில் பெரும்பாலானோர் தமிழ், வரலாறு, ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைத் தவிர்ப்பதைக் காணமுடிகிறது. அனைவரும் கணிதம், அறிவியல், தொழில்கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பாடங்களை மட்டுமே பயின்றால் போதும் எனக் கருதுகின்றனர்.

இப்படி கறிவேப்பிலை போல பாடங்களைத் தெரிவு செய்யும்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, இலக்கணம், இலக்கியம் ஓராண்டுக்கு மட்டும் பெயரளவுக்கு துணைப் பாடமாக வைக்கப்படுகிறது. மற்றபடி அந்தப் பாடங்களை அவர்கள் வாழ்நாளில் தொட்டே பார்ப்பதில்லை. இப்படி இருப்பதால் இந்திய, உலக வரலாறு, சுதந்திரப் போராட்டம், தமிழின் பெருமை, மொழியின் முக்கியத்துவம், அறிஞர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் போன்ற அடிப்படை விவரங்களை அறவே அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மறந்துபோன விஷயங்களை மறுபடியும் வாசிப்பது, தெரிந்துகொள்வது இன்று அவசியமானதொன்றாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் எத்தனை இளைய தலைமுறையினருக்குத் தெரியும். இதைத் தவிர்க்க பழைய செய்திகள், சம்பவங்கள், வரலாறுகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நிறைய நூல்கள், செய்திகள், பொதுஅறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களைத் தெரியாதவர்கள் உண்மையில் மறதியால் அல்லல்பட நேரிடுகிறது. முன்பெல்லாம் நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் குறைந்தபட்சம் அன்றாட விஷயங்கள், பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்துகொண்டு செல்வார்கள். இன்று இணையதளம், அலைபேசி இருப்பதால் தகவல் தெரிந்துகொள்ளலாமே என்ற மெத்தனப் போக்கும், அலட்சியமும் காணப்படுகிறது.

அரசு வேலைக்கான தேர்வு நடைபெறும்போது மட்டும் அவசர அவசரமாக கையேடுகளை வாங்கி அதை வாசிப்பவர்கள்தான் இன்று அதிகம். தாங்கள் படித்தவற்றை நினைவுபடுத்துவதோ, அதைத் தொடர்ச்சியாக மனதில் வைத்திருப்பதோ காணமுடியாத ஒன்றாகி விட்டது. அதனால் மறதியை விரட்ட மாற்று வழியை நாமே உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. நிறைய நூல்களை வாசிப்பதும், பழைய சம்பவங்களை நினைவில் கொள்வதும் இன்று அனைவருக்கும் அவசியம்.

(தினமணி)

No comments: