Saturday, January 12, 2013

ரிசானா நாபிக் விடயத்தில் நாம் ஷரீஅத் சட்டத்தில் குறை காணவில்லை !

 

இஸ்லாமியர்கள் ஒருபோதும் ஷரீஅத் சட்டங்களை குறை காண முடியாது.!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அனாதரவான பிரதிவாதி ஒருவருக்கு தன்பக்க நியாயங்களை முன்வைத்து வாதாட ஷரீஆ சட்டம் அமுலிலுள்ள ஒரு நாடு சட்ட உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

ரிசானா நாபிக் விடயத்தில் நாம் ஷரீஅத் சட்டத்தில் குறை காணவில்லை

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை,தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை ஒருவர் காட்டு மிராண்டித் தனமாக படுகொலை செய்வதிலிருந்து தடுக்கும், மனிதர்களை வேட்டையாட சுதந்திரம் கேட்பவர்களுக்கு அது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாக இருக்கலாம்.

சகோதரி ரிசானா நாபிக் அவர்களுடைய விடயத்தில் நாம் கவலை கொள்வது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அல்ல, றிசான நாபிக் அவர்கள் மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றம் ஷரீஅத் நீதி மன்றில் கையாளப் பட்ட விதம் மற்றும் அவர் பக்க நியாயங்களை முன்வைத்து வாதாட அவருக்கு சட்ட உதவி கிடைக்காமை போன்ற விடயங்களாகும்.

ஷரீஅத் சட்ட வல்லுனர்களின் உதவி ரிசானாவுக்கு கிடைக்கவில்லை!

ரிஸானா நாபிக் குழந்தைக்கு பாலூட்டும் பொழுதோ அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறும் பொழுதோ அருகில் எவரும் உதவிக்கோ சாட்சிக்கோ இருக்க வில்லை.

வீட்டிலும் பொலிஸிலும் பலமாக தாக்கப்பட்டு அச்சுறுத்தலின் பேரிலேயே ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவித்திருந்தார், இவ்வாறான ஒரு நிலையில் நிலவும் சந்தேகத்தின் பயன் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப் படி ரிசானாவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர் கேரள தேச மலையாள மொழி பேசும் ஒருவர்.

வைத்திய சான்றிதல் குறித்த சந்தேகங்கள் சட்ட வைத்திய நிபுணர்களால் எழுப்பப் பட்டிருந்தன.

ரிசானாவின் அல்லது குறித்த குழந்தையின் தாயின் மன நிலை பாதிக்கப் பட்டிருந்ததா என்பதற்கான வைத்திய சான்றிதழும் பெறப்படவில்லை.

ரிசானாவின் உண்மையான வயதினை நிரூபிக்கும் சட்ட வலுவுள்ள ஆவணங்கள் நீதி மன்ற நடவடிக்கைகளின் போது எந்த தரப்பினாலும் முன் வைக்கப் படவில்லை. அவ்வாறான சந்தேகங்கள் நிலவுகின்ற நிலைமையில் ஷரீஅத் நீதி மன்றம் அதனை ஊர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சவூதி அறேபியா 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில்லை எனும் சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுள்ளது. இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது, சவூதிஅரேபியாவில் பருவ வயதெல்லை பதினைந்தா அல்லது பதினெட்டா என்ற சர்ச்சைகள் தொடரும் நிலையில் சந்தேகத்தின் பயனை ஷரீஅத் சட்டப்படி சகோதரி றிசான நாபிக் அவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும்.


இலங்கை அரசின் வகிபாகம்!

ரிசானா நாபிக் அவர்களது தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதாட சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திடம் நிதி ஒதுக்கீடுகள் இருக்க வில்லை.

அவ்வாறு சட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளோ ஒரு காப்புறுதியோ அல்லது ஒரு நிதியமோ இலங்கை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் இது வரை உருவாக்கப் பட வில்லை.


நாட்டில் இருந்த சட்டங்களை வைத்தே இலங்கை அரசு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது, தீர்ப்பு வழங்கப் பட்ட பின்னர் இலங்கை அரசின் முன்னிருந்த ஒரே மாற்று வழி ஜனாதிபதி மன்னரிடம் ஒரு கருணை கோரும் மனுவை சமர்ப்பிப்பது தான்.

என்னைப் பொறுத்த வரை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தனது மொழி பெயர்ப்பாளர்களை மாத்திரம் நம்பியும் , வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் வெளி விவகார அமைச்சும் சவூதி அரேபியாவுக்கான முன்னால் தூதுவர் ஒருவரை மாத்திரம் நம்பியும் ரிஸானா விடயத்தில் உறுப்படியான நகர்வுகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமை கண்டிக்கப் பட வேண்டிய விடயங்களாகும்.

22/05/2005 முதல் 25/10/ 2010 வரை அதாவது சகோதரி ரிசானா நாபிக் அவர்கள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப் பட்டு அவருக்கான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினால் உறுதிப் போடுத்தப் படும் அவரது விவகாரம் உரிய முறையில் இலங்கைத் தூதுவராலயத்தினாலும் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினாலும் வெளிவிவகார அமைச்சினாலும் கையாளப் படவில்லை என்பதே உண்மையாகும்.

குறிப்பாக 26/06/2007 மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தாவத்மீ நீதி மன்றில் ரிசானாவுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் அவரது தண்டனைக்கு ஒரே ஆதாரமாக இருந்த குற்ற ஒப்புதல் பலவந்தமாக பெறப்பட்டது என்பதனை உறுதிப்படுத்த தூதரகம் தவறிவிட்டது. அதன் பிறகு 2010/10/25 அன்று உச்ச நீதி மன்றில் மரண தண்டனை தீர்ப்பு ஊர்ஜிதப் படுத்தும் வரை இலங்கை தூதுவராலயம் தீவிரமாக செயற்பட்டிருக்க வேண்டும்.

ரிஸானா நாபிக் அவர்களுடைய மரண தண்டனைத் தீர்ப்பு ஊர்ஜிதமாகியவுடனே இலங்கை ஜனாதிபதியவர்கள் கவனத்திற்கு விடயம் கொண்டு வரப்பட்டு 26/10/2010 அன்று ஜனாதிபதியவர்கள் சவூதி மன்னர்ருக்கு ஒரு கருணை கோரும் மனுவை அனுப்பி வைத்ததும் அதனைத் தொடர்ந்து றிசான மீது கொலைப்பலி சுமத்திய குடும்பத்தினருடன் சமரச நடவடிக்கைகள் மேற்கொள்ள இறுதிக்கட்டம் வரை அரசு முயற்சித்தமையும் மறுக்க முடியாத விடயங்களாகும்.


முஸ்லிம் அரசியல் தலைமைகள்.!

அதே போன்று றிசான நாபிக் விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவ்வப்போது சில அறிக்கைகள் விட்டாலும் அவருக்கு உரிய நேரத்தில் சட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்க வோ சிவில் தலைமைகளுடன் இணைந்து அதற்கான ஒரு நிதியத்தை தொற்றுவிக்கவோ ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதே உண்மையுமாகும் !


மனித உரிமைகள் அமைப்புகள் ஷரீஅத் சட்டத்தை விமர்சிப்பது என்பது புதிரான விடயமும் அல்ல, அதேவேளை இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி அவர்களை குறை கூறுவதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதனை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.!

இஸ்லாமிய நாடொன்றில் அனாதரவான பிரதிவாதிக்கு சட்ட உதவிகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும் !

இஸ்லாமிய ஷரீஅத் நீதிமன்றின் முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தரப்பிற்கு சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ் நிலை வசதி வாய்ப்பு , நிதியின்மை ஆகிய காரணங்கள் இருப்பின் குறிப்பாக கடல் கடந்து சென்றுள்ள நிலைமையில் அவருக்குத் தேவையான சட்ட வல்லுனர்களின் உதவியை இஸ்லாமிய ஷரீஆவை அமுல் படுத்தும் ஒரு நாடு செய்து கொடுக்க வேண்டும். இன மத மொழி தேச பேதங்களுக்கு அப்பால் நீதி நிலை நிறுத்தப் படுவதனை சவூதி அறேபியா போன்ற நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

குற்றம் சுமத்திய தரப்பு பலம் வாய்ந்த பின் புலத்துடன் சொந்த நாட்டைச் சேர்ந்தவராய் இருந்த நிலையில் அவர்களது சொந்த மொழியில் கர்மமாற்றும் போலிஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவை இருக்கின்ற நிலைமையிலும் இலங்கையிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காய் அரபு மொழியோ அடிப்படை அறிவு ஞானமோ இல்லது இஸ்லாமிய மண்ணுக்கு வந்த ஒரு அபலைப் பெண்ணுக்கு தனது தரப்பு நியாயங்களை முன் வைத்து வாதாட தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்த சூழ் நிலையில் இஸ்லாமிய நீதி நிலை நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன்னால் ரிஸானா இலங்கைப் பிரஜை அவருக்குரிய சட்ட உதவிகளை இலங்கை தான் செய்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இல்லாதவிடத்து தீர்ப்பைக் கூறுவது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு முரணான ஒரு அமசமாகும், இனி வரும் காலங்களில் சவூதி அரசு இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ஒரு இஸ்லாமியனாக வேண்டிக் கொள்கின்றேன்.

இலங்கை அரசு ஏன் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் ஒத்துழைக்கவில்லை?

பொதுவாக ரிசானா நாபிக் விடயத்தில் தலையிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நவீன யுகத்தில் மரண தண்டனை கூடாது தடை செய்யப்படல் வேண்டும் என குரல் கொடுப்பதோடு இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையும் விமர்சிக்கின்ற அமைப்புக்களாகும். அவாறான சக்திகளோடு ஒத்துழைப்பது நட்பு நாடான சவூதி அரேபியா உடனான இரு தரப்பு நலன்களை பாதிக்கின்ற விடயம் என்பதனை இலங்கை அரசு உணர்ந்திருந்தது.

பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் தனது பல இலட்சக் கணக்கான குடிமக்கள் தொழிலுக்காக சென்றிருக்கின்ற ஒரு நாட்டில் அமுலிலுள்ள சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை விமர்சிப்பதனை அல்லது அதனை விமர்சிக்கின்ற சக்திகளுடன் கைகோர்ப்பதனை இலங்கை அரசு தவிர்ந்து கொண்டது அதனை முஸ்லிம்களும் புரிந்து கொண்டார்கள் !

No comments: