Thursday, June 27, 2013

இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறை எதிர்நோக்கும் சவால்கள் – அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி

yoosuf-mufthi[1]
இஸ்லாமி வங்கி முறை குறித்துப் பேசும்போது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் இந்த உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இன்றைய உலகில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் யதார்த்தத்தை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மீள்பார்வை ஊடக மையத்தினால் வெளியிடப்பட்ட "இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்றைய உலகில் வேலையில்லாப் பிரச்சினை நிலவுகிறது. இதனை நிவர்த்திக்க வேண்டுமாக இருந்தால் உலகம் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பணப்புழக்கம், கொடுக்கல் வாங்கல் குறித்து அல்குர்ஆன் பேசியிருக்கிறது. நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. யூசுப் (அலை) அவர்களை பல திர்ஹம்களுக்கு விற்றது குறித்தும் குகைவாசிகள் பணத்தைக் கொண்டு பொருள் வாங்கியது குறித்தும் அது கூறுகின்றது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் உலகம் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறது. அழிவிலிருந்து மீள வேண்டிய தேவை உலகத்தில் ஏற்பட்டது. இதற்கு பலரது உதவியும் தேவைப்பட்டது. இந்த அடிப்படையில் 1940 – 1970 வரையில் இஸ்லாமிய பொருளாதாரம் குறித்த ஆய்வுகள் ஆங்காங்கே தனிநபர் முயற்சிகளாக நடை பெற்றன. 1970 களில்தான் முதன்முறையாக இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்த ஒரு மாநாடு கராச்சியில் நடைபெற்றிருக்கிறது. 70 வரைக்குமான காலத்தில் தனிநபர்கள் மூலம் இந்த சிந்தனை உலகிற்கு முன்வைக்கப் பட்டிருக்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும்.
இஸ்லாமிய பிக்ஹ் நூல்களை எடுத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கிமுறை, பொருளாதாரம் என்பன குறித்து விரிவாகப் பேசா விட்டாலும் அதனுயை பகுதிகள் குறித்துப் பேசியிருப்பதனை நாம் காணலாம். ஆனால் இரண்டு உலமாக்கள் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.
அப்பாஸியர் காலத்திலே இஸ்லாமிய பொருளாதாரம் எப்படி இருந்தது. எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் வழங்கினார்கள். மற்றவர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள். இவர் ஒரு சூபியாக இருந்தாலும் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து விரிவாகவும் அழகாகவும் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் எமக்கு அது பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. எமது நாட்டிலும் இஸ்லாமிய வங்கி முயற்சியின் வரலாறு சுமார் 25 வருடங்களாக இருந்து வருகின்றது. இதனால் பல சாதனைகள் அடையப் பெற்றிருக்கின்றன. ஆனால் இதில் நாம் பல தவறுகளை விட்டிருக்கிறோம். விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனை நாம் இப்படி நோக்கலாம் இஸ்லாமிய வங்கி 4 முறைகளுக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது, சுருக்கப்பட்டிருக்கிறது. இது விரிவாக்கப்பட வேண்டும். இங்கு எந்த இஸ்லாமிய வங்கி அலகை நோக்கினாலும் அங்கு முழாரபா. இஜாரா முராபஹா முஷாரகா காணப்பகிறது. இந்த நான்கையும்தவிர வேறு எதனையும் இங்கு நாம் காண முடியாது. மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண்கடன் திட்டம் எங்கே போனது? மைக்ரோ தகாபுல் எங்கே போனது? ஏழைகளுக்கு, வங்கிக்குப் போக முடியாதவர்களுக்கு இஸ்லாமிய வங்கியினூடாக என்ன செய்யலாம்? நுண் கடன் குறித்து அவசியம் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நுண்கடன் திட்டத்தை எப்படி இந்த நாட்டிலே அறி முகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
பங்கலாதேஷைச் சார்ந்த கலாநிதி யூனுஸ் அவர்கள் பாரம்பரிய வங்கி முறையில் நுண்கடனை அறிமுகப்பத்தியதற்காக நோபல் பரிசு பெற்றார். நாம் இதனை இலங்கைக்கு அறிமுகப்பத்த வேண்டும். எமது வங்கிகளிடம் நான் இதனை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். ஏழைகளுக்கு எப்படி உதவலாம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் கரை சேர்க்கத்தான் இந்த வங்கி இருக்கின்றது என்ற உணர்விலே இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டும். அப்படி இருக்கின்றதா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
எனவே எமது நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் சுருக்கப் பட்டிருக்கின்றன. பணக்காரர்களுக்கு மட்டுமான ஒன்றாகவே இஸ்லாமிய வங்கித்துறை இந்த நாட்டிலே இன்று உருவெடுத்து வருகின்றது. இதனை யாரும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. ஹராமான முறையிலிருந்து ஹலாலுக்கு வந்திருக்கிருக்கிறோம் என்று திருப்திப்பட முடியும். ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு, ஏனையவர்களுக்கு ஏழைகளுக்கு ஏதும் இலாபம் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். இது இஸ்லாமிய வங்கித்துறையில் உள்ள முதலா வது சவாலாகும்.
இரண்டாவது சவால் என்ன வென்றால் இஸ்லாமிய வங்கித் துறையானது ஒரு குழப்பமாக மாறியிருக்கின்றது. இதைப்பற்றி வங்கியில் பணிபுரிகின்ற நிறையப் பேர் அறியாதவர்களாக இருக்கிறார்கள். நேற்று பாரம்பரிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணிபுரிந்தவர் இன்று காலையில் இஸ்லாமிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக மாறுகிறார். எப்படி மாறலாம்.?
இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடு வஹியின் பின்புலத்திலிருந்து தோன்றுகின்றது. இதற்கு ஒரு ஆன்மீகம் இருக்கிறது. இது அல்லாஹ்வின் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் நோக்கிலே செய்யப்பட வேண்டிய ஒன்று. எனவே இது குறித்த அறிவு முக்கியமானதாகும்.
மூன்றாவது சவால் வங்கிக்கு வெளியே இருக்கின்றவர்களும் இதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து உலமாக்களிடம் கேட்கின்ற போது கூட இதைப் பற்றி அவரிடம் கேளுங்கள். இவரிடம் கேளுங்கள் எனச் சொல்கிறார்கள்.
எனவே நாம் அனைவரையும் அறிவூட்டவேண்டிய தேவை இருக்கிறது. ஹலால் பிரச்சினையில் என்ன நடந்தது? நாங்கள் அறிவூட்டவில்லை. பிரச்சினை வந்த பிறகு அறிவூட்டிப் பயனில்லை. ஹலால் தொடர்பாக பிரச்சினை வந்த பிறகு செய்த மாநாடுகளையும், பத்திரிகை அறிக்கைகளையும் நாம் என்றோ செய்திருக்க வேண்டும். வங்கித் துறையும் இது குறித்து முஸ்லிம்களையும் பெரும்பான்மையினரையும் அறிவூட்ட தமது வருடாந்த நிதி ஒதுக்கீட்டிலே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த நாட்டின் தலைவர்களிடத்திலே சொல்ல வேண்டும். வட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வாருங்கள் என அழைக்க வேண்டும். வட்டி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 600 பேருடைய பைல்கள் எமது வங்கியிலே இருக்கின்றன என ஒரு வங்கியின் உரிமையாளரான கிறிஸ்தவர் ஒருவரை நாம் சந்தித்த பொழுது கவலையோடு சொன்னார்.
நாங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எதனையோ செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய வங்கி என்ற எண்ணக்கருவை நாம் சரியாக மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இன்று அது கொச்சையாகப் பேசப்படுகிறது.
நான்காவது சவால்தான் இத்துறை வர்த்தகம் செய்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாயத்துறையினருக்கு இங்கு எதுவும் இல்லை. ஆனால் இஸ்லாமிய வங்கிமுறை சூடானிலிருந்துதான் உலகுக்கு அறிமுகமானது. முஸாரஆ, முஹாபரா, முஸாகாத் போன்றவற்றை வைத்துத்தான் அது உருவானது. ஆனால் எங்கள் வங்கிகள் எங்கு பணம் அதிகம் இருக்கிறதோ அங்குதான் தமது கிளைகளை நிறுவுகின்றன.
எனவே இஸ்லாமியப் பொருளாதாரம், வங்கித்துறை குறித்து ஒவ்வொருவரும் அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு ஆரம்ப எட்டாக இந்த நூல் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளிவருவதும் கட்டாயமானது என்ற கருத்தோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்.
-Meelparvai-

No comments: