Wednesday, October 22, 2008

தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை

ஹுதைபா (ரலி), அபூஃதர் ( ரலி ) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், தான் படுக்கைக்கு வந்தால், ''பிஸ்மிக்கல்லாஹும்ம அமூது வஅஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்தால், ''அல்ஹம்துலில்லாஹில்லஃதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலய்ஹின் னுஷூர்'' என்று கூறுவார்கள். (புகாரி)

பொருள்: இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்றேன்.
பொருள்: எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்)

காலையிலும், மாலையும் அல்லாஹ்வை நினைவு கொள்வது!
அல்லாஹ் கூறுகிறான்: உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன்)
(நபியே) சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக! (அல்குர்ஆன்)

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ, அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காலையிலும், மாலையிலும், '' சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி '' என 100 தடவை ஒருவர் கூறினால், இது போன்று கூறியவர், அல்லது இதைவிட அதிகம் கூறியவர் தவிர, மறுமை நாளில் எவரும் இவர் கொண்டு வந்ததை விட மிகச் சிறந்ததை கொண்டு வரமாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இரவில் தேள் ஒன்று என்னைக் கொட்டி விட்டது'' என்று கூறினார். ''அறிந்து கொள்! மாலை நேரம் வந்ததும், ''அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின்ஷர்ரி மா கலக'' என்று கூறினால், அது உமக்கு இடையூறு தராது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)

பொருள்: அல்லாஹ்வின் படைப்புகளின் தீமைகளை விட்டும் முழுமையான அவனது சொற்களால் பாதுகாப்புத் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1452)

அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: காலையிலும், மாலையிலும் ''குல்ஹுவல்லாஹுஅஹது'' அத்தியாயம், மற்றும் (குல்அஊது பிரப்பில் ஃபலக், குல்அஊது பிரப்பின்னாஸ் என்ற) இரண்டு முஅவ்விததய்ன் அத்தியாயத்தையும் மூன்று தடவை நீர் கூறுவீராக! அனைத்துப் பொருட்களின் தீமையை விட்டும் (உம்மை பாதுகாத்திட) உமக்கு அது போதும்'' என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)

Thanks: Alauddeen

No comments: