Showing posts with label நபிமொழி. Show all posts
Showing posts with label நபிமொழி. Show all posts

Monday, August 5, 2013

புன்முறுவலின் மகத்துவம் - படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ‘அஷ்ஷைக் நபீலுல் அவலி’ தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:
நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.
அதற்கவர் அளித்த பதில்: “நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்; பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன்; உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை; ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர்; அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது. நான் மிகப் பெரிய செல்வந்தன்; ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை; ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?
ஒரு நாள் அவரிடம் சென்று, “நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே! அதெப்படி உன்னால் முடிகிறது?”
அதற்கவர் சொன்னது: “நான் ஒரு முஸ்லிம். ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்”.
அதற்கு நான் அவரிடம், “அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா?” எனக் கேட்டேன்.
அதற்கவர், “ஆம்” என்று பதிலளித்தார்.
நான், “அதெப்படி?” என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.
அதற்கவர், “நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: ‘இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும்; நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான்; அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது; அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை’. எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது; துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம்; இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும்; ஈடேற்றமாகும்; இன்பமாகும்” என அவர் பதிலளித்தார். இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது.”
‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்
இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?
சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே! எனக்கு எழுத முடியாதே! என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.
புன்முறுவல் பூப்பதற்கு மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே! இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். ‘முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்’. எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.
எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
‘நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை’ என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).
‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை’ என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).
தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Thursday, July 19, 2012

ஏன் இந்த எளிய வாழ்க்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.
மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.
அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.
இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள். நூல் : புகாரி 1485, 1491, 3072

'
தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது நூல் : புகாரி 1485

'
பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்'என்றார்கள். நூல் : புகாரி 851, 1221, 1430
மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 2055, 2431, 2433
நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.
இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

'
நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்' என்பதே அந்தப் பிரகடனம்.
இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்பவர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.
தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.
தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.
மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள். நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

'
அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர் தான் அபூ ராஃபிவு.இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.
அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.
எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.) நூல் : புகாரி 2776, 3096, 6729
நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.
நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார்.தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்...

'
எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார். நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார். நூல் : புகாரி 6730
 
By: பீ.ஜைனுல்ஆபிதீன்