Monday, September 8, 2008

இறைவனுக்காக இழப்போம் கொஞ்சம்!

மதீனாவெங்கும் ஒரே விழாக்கோலம்.
இறைத்தூதர் வரப்போகிறார்கள் அல்லவா?
தலஅல் பத்ரு அலைனா
மின் ஸனிய்யதில் வதாஇ
வ ஜபஷ் ஷூக்ரு அலைனா
மா தஆ லில்லாஹி தாஇ
என்று சிறுமிகள் எல்லாம் பாடிக் கொண்டுள்ளார்கள்.

உக்பா இப்னு ஆமிர் இதைப் பற்றி எதனையும் தெரிந்துகொள்ளாமல் அவர் பாட்டுக்கு மலைச் சாரலில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

தங்களுடைய ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் உடனே மதீனாவுக்கு ஓடோடி வந்தார். இறைவனின் தூதரிடம் பைஅத் செய்துகொண்டார். ஆனாலும் அவரால் அல்லாஹ்வின் தூதருக்குப் பக்கத்திலேயே இருக்கமுடியவில்லை.

என்ன செய்வது?
வாழவேண்டுமென்றால் சம்பாதிக்க வேண்டும்!

அவரிடம் இருக்கும் கொஞ்சம் ஆடுகளை மலைப் பள்ளத்தாக்குகளில் சென்று மேய்த்தால் தான் சாப்பாட்டுக்கே வழிபிறக்கும்.
சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது இஸ்லாமைப் பற்றி சிந்திக்க முடியுமா?
வேறுவழி இல்லாததால் அவர் இரண்டுநாட்களில் ஆடு மேய்க்கக் கிளம்பிவிட்டார்.

அங்கே அவர் மாதிரியே பன்னிரண்டு பேர் ஆடுமேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அனைவருக்குமே ஒரே கவலையாக இருந்தது கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள் தினந்தோறும் ஓர் ஆள் மதீனாவுக்குப் போவது
அல்லாஹ்வின் தூhருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவர் சொல்லதை எல்லாம் கேட்டுக்கொள்வது
அதை மாலையில் தோழர்களிடம் வந்து கூறிவிடுவது.
இதுதான் அவர்களுடைய திட்டம்!
இந்தத்திட்டத்தில் உக்பாவும் உடன்பாடில்லை.

தன்னுடைய ஆடுகளை நண்பர்களிடம் விட்டுவிட்டுப்போக அவர் மனது இடம் தரவில்லை.
நீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆடுகளை என்னிடம் விட்டுச் செல்லுங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் நான் போக மாட்டேன்!
என்று கூறிவிட்டார்.

இப்படி தினமும் ஒரு சகோதர் மதீனா போவார். அல்லாஹ்வின் தூதர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கெண்டுவருவார். உக்பா மட்டும் போகவே மாட்டார். மலையிலேயே உட்கார்ந்திருப்பார்.

ஒருநாள் தனியாக தன்னுடைய ஆடுகளை உக்பா மேய்த்துக் கொண்டு இருந்தார். தன்னுடைய மனதைப் பார்த்து கேள்வி கேட்டார்:
ஏன் நீ மட்டும் இஸ்லாமைக் கற்றுக் கொள்ள போகவே மாட்டேன் என்கிறாய்?
இப்படியே ஆடுகளை மேய்த்து சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டால்
நாளை மறுமையில் என்ன செய்வாய்?
அங்கே உன்னை யார் காப்பாற்றுவார்கள்?
உன்னுடைய இந்த ஆடுகளா?
இல்லை நீ சம்பாதிக்கும் பணமா?
வருக்கு மிகவும் பயமாக இருந்தது.
அப்போதே அவர் தீர்மானித்துவிட்டார்.
நான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திப்பேன்
அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இஸ்லாமைப் படித்துக் கொள்வேன்.
அல்லாஹ்வின் அன்பைச் சம்பாதிக்க முயற்சி பண்ணுவேன்!
இன்ஷா அல்லாஹ்!

மதீனாவுக்குச் செல்லும் பாதையில் அவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பின்னால் நடக்கப் போவது அவருக்கு எதுவும் தெரியாது.

ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞராக தாம் மாற போகிறோம்!
குர்ஆனை ஓதும் காரியாக மாறப் போகிறோம்!
மிகப் பெரிய இஸ்லாமிய வெற்றி வீரராக மாறப் போகிறோம்!
உலக்தின் மிகப்பெரிய பண்பாட்டுச் சிகரமான டமாஸ்கஸ் நகரையே தாம் வெற்றிக் கொள்ளப் போகிறோம்!
வரலாற்றில் என்றென்றும் இடம் பிடிக்கப் போகிறோம்!
எதுவுமே அவருக்குத் தெரியாது.
இஸ்லாமை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் மதீனா நகரை நோக்கி போய் கொண்டிருந்தார்.
தனக்காக தியாகம் செய்து வரும் உக்பாவை அல்லாஹ் கைவிட்டு விடவில்லை.
அவர் பெயரை பொன் எழுத்துகளால் எழுதினான் வரலாற்றில்!!
அல்ஹம்துலில்லாஹ்!

ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும்.
சொர்க்கம் வேண்டுமென்றால்
அல்லாஹ்வின் அன்பு வேண்டுமென்றால்
நாமும் கொஞ்சம் இழக்க வெண்டும்!
Thanks: /islamiyappaarvai.blogspot.com

No comments: