Wednesday, September 24, 2008

இறையச்சம் ரமழான் மாதத்திலும், பிறமாதங்களிலும், ஒரு பார்வை

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இறைநம்பிக்கையாளர்களே! இறையச்சமுடையவர்களாவீர்கள் என்ற ஆதரவுடன் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது நானே நேரடியாக கூலி வழங்குவதாக சொல்லும் இறைவன்; இங்கு நோன்பு கடமையாக்கப்பட்டதின் முழு நோக்கமுமே இறையச்சம் ஏற்படுவதேயாகும் என்கிறான். அப்படியென்ன இறையச்சத்திற்கு முக்கியத்துவம் என நாம் சிந்தித்ததுண்டா?
1) சஹர் உணவு ஹலாலாக இருக்கவேண்டும் என்பதிலிருந்து ஓவ்வொரு நாளின் ஆரம்ப உணவும், ஹலாலான உணவைக்கொண்டு நோன்பு திற என்பதிலிருந்து ஓவ்வொரு நாளின் இறுதி உணவும் ஹலாலாக அனுமதிக்கப்பட்ட விதத்திலேயே இருக்கவேண்டும் என்பதையும், இடைப்பட்ட நேரங்களில் தடுக்கப்பட்ட விஷயங்களை விட்டு ஒதுங்கியிருப்பதைப் போல் வாழ்நாள் முழுதும் அதையே பேணி நடக்கவேண்டும் என்பதையும், இம்மாதத்தில் தொழுகையைப் பாதுகாத்து வருவது போல் மற்ற மாதங்களிலும் பாதுகாக்க வேண்டும் என்பதையும், ஏழைஎளியோர் மீது இம்மாதத்தில் ஒரு கவனம் இருப்பதுபோல் மற்றமாதங்களிலும் இருக்கவேண்டும் என்பதையும், குர் ஆனின் பக்கம் தொடர்பு இருப்பது போல் எல்லா மாதங்களிலும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ளவே இறைவன் ஆண்டு தோறும் இப்பயிற்சி பெறுவதை கடமையாக்கியிருக்கிறான்.
2) உன்னை ஏசியவனுக்கு நீ கைநீட்டி அடிப்பது இறையச்சத்திற்கு முரணாகும், அவனை மன்னித்துவிடுவது உன் இறையச்சத்தை அதிகரிக்கும்.
3) உன்னை ஒரு அடி அடித்தவனுக்கு அவனது அடியைவிட பலமாக அடிப்பதும், இரு அடி அடிப்பதும் இறையச்சத்திற்கு முரணாகும்.
4) உன் அலுவலகப் பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தொலைபேசியை, கைபேசியை, ஊர்திகளை, இன்னும் அதுபோன்றவைகளை சொந்த உபயோகங்களுக்கு பயன்படுத்துவது இறையச்சத்திற்கு முரணாகும். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் அரசுப்பப்பணிகளுக்கு ஒரு மெழுகுவர்த்தியும், தன் சொந்தப்பணிகளுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
5)ஹராமா? ஹலாலா என சந்தேகத்திற்குரிய உணவை உண்ணுவது இறையச்சத்திற்கு முரணாகும்.
6) பிறரிடமிருந்து புகழையோ, பெயரையோ எதிர்பார்த்து செய்யும் அனைத்து காரியங்களும் இறையச்சத்திற்கு முரணானதாகும்.
7) குர்ஆன் போன்றவற்றை சுத்தமின்றி தொடுவதும் இறையச்சத்திற்கு முரணாகும், ஒருநாட்டு தலைவனின் உருவபொம்மைகளை எரிப்பதில் அத்தலைவனுக்கு ஏதாவது வலிக்கிறதா? பின்னர் ஏன் அம்மக்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். உனது, அல்லது நி வசிக்கின்ற நாட்டின் ஒரு ரூபாய் நாணயத்தைகூட பொது இடங்களில் கிழித்து வீசு பார்ப்போம், அங்குள்ள காவல்துறை உன்னையும் கைது செய்து தக்க சன்மானங்களை தாராள மனசோடு தரும், ஏன் ? அதில் அந்நாட்டையோ, அந்நாட்டின் தலைவனையோ அவமானப்படுத்துவதாக கருதப்படுகிறது, இறைவார்த்தைகள் எழுதப்பட்டுள்ள காகிதங்கள் அதை விட எத்தனையெத்தனையோ மடங்குகள் மதிக்கத்தக்கவையென நமக்கு தெரியாதா?
8) அந்நிய ஆடவர்களின் பக்கம் பெண்கள், அந்நிய பெண்களின் பக்கம் ஆண்கள் தன் பார்வைகளை செலுத்துவதும் கூட இறையச்சத்திற்கு முரணானதாகும்.
9) ஒருவனுக்கு கடனுதவி செய்துவிட்டு, அதைகாரணமாக வைத்து தனக்கு சாதகமாக அவனது பதவி, மதிப்பைவைத்து பல பணிகளை கடன் பெற்றவனிடமிருந்து வாங்கிக்கொள்வதும் கூட இறையச்சத்திற்கு முரணானதாகும். இமாம் அபூஹனிபா அவர்கள் கடன் பெற்றவனின் வீட்டு நிழலில் கூட நிற்கமாட்டார்கள் ஏனெனில் அது வட்டிக்கு சமமாக கருதியதாக வரலாறு கூறுகிறது.
10) இன்னும் சற்று மேலே சென்றால்: கணவனின் பொருளை மனைவியும், மனைவியுன் பொருளை கணவனும் அவர்களுக்குள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அவர்கள் உபயோகிப்பதும், பிறருக்கு சன்மானமாக வழங்குவதும் இறையச்சத்திற்கு முரணானதாகும். இதில் ஒரு சிலவற்றையே கூறப்பட்டுள்ளது, ஆனால் முழு வாழ்க்கையும் இறையச்சத்தோடு ஒருங்கிணைந்ததாகும் ஏனெனில் குர்ஆன் இறையச்ச முடையவர்களுக்குத்தான் வழிகாட்டும் என குறிப்பிடுகிறது, இறையச்சமுடையவர்களுக்கே பல உயர்தர சுவர்க்கங்கள் இருப்பதாக குர் ஆன் கூறுகிறது. மறுமைநாளின் பயங்ககரத்தை விட்டு காப்பாற்றுவதாக இறையச்சமுடையவர்களுக்கே குர் ஆன் குறிப்பிடுகிறது, ஒருசில இடங்களில்தான் ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களுக்கு சுவர்க்கங்கள் இருப்பதாக குர் ஆன் சொல்கிறது அதுவும் இறையச்சத்துடன் கூடிய அமல்கள்தான் எனப்பொருள்படும், எனவேதான் குர்ஆன் ஹஜ்ஜின் விஷயத்தின் குறிப்பிடும்போது “கட்டிச்சாதம் கட்டிக் கொள்ளுங்கள், கட்டிச்சாதங்களில் சிறந்தது இறையச்சமாகும்” என்கிறது, எனவே இறையச்சம் என்பது நோன்பு காலத்தில் மட்டும் தேவையானது அல்ல, மாறாக மரணவாயிலை தன்னுயிர் அடையும் வரை அனைவருக்கும் தேவையான முதலீடாகும். அப்பொழுதுதான் வெற்றி.
Thanks: மௌலவி முஹம்மது இப்ராஹீம்

No comments: