Sunday, December 14, 2008

மனிதனையோ, கால் நடைகளையோ சபிப்பது கூடாது!

நபிமொழி
அபூஸைத் என்ற ஸாபித் இப்னு ழஹ்ஹாக் அன்சாரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் பெயரால் வேண்டுமென்றே பொய்யாக ஒருவன் சத்தியம் செய்தால், அவன் அது போலேவே ஆவான். ஒருவன் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ, அதன் மூலமே மறுமையில் வேதனை செய்யப்படுவான். தனக்கு இயலாத ஒன்றில் நேர்ச்சை செய்வது ஒருவனுக்கு கூடாது. ஒரு மூஃமினை சபிப்பது என்பது, அவனைக் கொல்வது போலாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: '' உண்மையாளனுக்கு மற்றவரை சாபமிட தேவையிருக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதர்தாஉ (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''(பிறரை) சாபமிடுபவர்கள் மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி கூறுபவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்வின் சாபம் மூலமோ, அவனது கோபம் மூலமோ, நரகத்தின் மூலமோ நீங்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மூஃமின் குத்திக்காட்டி பேசுபவனாக, சாபமிடுபவனாக, கெட்டவார்த்தை பேசுபவனாக, (அருவருப்பான) பேச்சு பேசுபவனாக இருக்க மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதர்தாஉ (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஓர் அடியான் ஒருவன் ஒன்றை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அங்கு வானத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும். பின்பு பூமியை – நோக்கித் தாழ்ந்து வரும். அங்கும் அதன் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும். பின்பு வலது பக்கமும், இடது பக்கமும் செல்லும். அங்கும் தான் அடையும் இடத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், சபிக்கப்பட்டவரின் பக்கமே திரும்பி விடும். அவன் அதற்கு தகுதியானவனாக இருப்பின், அவனைச் சேரும். (தகுதி வாய்ந்தவனாக அவன்) இல்லையென்றால், அது சொன்னவனிடையே வந்து சேரும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூத்) (ரியாளுஸ்ஸாலிஹீன் )

No comments: