Sunday, January 2, 2011

முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாக கல்வி மாறியுள்ளது

கல்வி இன்று முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாகப் போயுள்ளது. அதனைத் தேடியெடுத்து சமூகமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த கல்வி முன்னேற்றத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது என பபுவா நியுகினி இஸ்லாமிய அமைப்பின்; தலைவரும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதியுமான தொழிலதிபர் ஏ.எம் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை மாலை கொழும்பில் இஸ்லாமிய ஆய்வு அமைப்பு (IRO) ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்।

இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபத்தில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது। நாட்டில் 8வீதம் வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 21வீதமானோர் சிறைச்சாலைகளில் இருக்கின்ற அதேவேளை இறுதியாக வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின்படி 2.8வீதமான முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்ற அவல நிலையிலேயே எமது கல்வி நிலையுள்ளது.

நாட்டிலுள்ள 823 முஸ்லிம் பாடசாலைகளில் 30 முஸ்லிம் பாடசாலைகள் மிகக்குறைவான அடிப்படை வசதிகள்தானும் இல்லாத நிலையில் காணப்படுவதாகவும் இதில் பெரும்பாலான பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் காணப்படுவதாகவும் அண்மைய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது। நாட்டின் தலைநகரில் உள்ள பாடசாலைகளுக்கே இந்நிலை என்றால் முஸ்லிம்களின் கல்வி நிலை எந்தளவு பாதிக்கப்படும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சாதாரண தரம் வரையோ 10ம் தரம் வரையோ படித்து விட்டால் பாடசாலையில் இருந்து விலகி பணம் சம்பதிக்கும் அவசர நிலை இன்று ஆரோக்கியமற்ற ஒரு இளைய சமூகத்;தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பெண்களின் கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் எமது பின்னடைவுக்குப் பெரும் காரணமாகும்। ஒரு பெண் கல்வி கற்றவளாக உருவாகும்போது முழுக் குடும்பமுமே கல்வி கற்ற பிரயோசனத்தை அடைந்து கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் IRO வின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் மற்றும் சஊதி அரேபிய துதுவராலயத்தின் உதவிக் கணக்காளர் அஷ்ஷெய்க் எஸ்।ஏ. அப்துல் அஸீஸ் (நளீமி) பிரபல வர்த்தகர் இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோரும் உரையாற்றினர்.

- தமிழ்மிரர் (http://www.thenee.com/html/020111-6.html)

No comments: