எழுதியவர்:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி
أحكام الغسل في الإسلام
இஸ்லாத்தைத் தழுவுதல்:
இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.
أحكام الغسل في الإسلام
இஸ்லாத்தைத் தழுவுதல்:
இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.
‘கைஸ் பின் ஆஸிம் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தபோது அவரைக் குளித்துவிட்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்’ (அபூதாவுத், திர்மிதீ, நஸாஈ)
அத்துடன் துமாமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னர் குளித்த நிகழ்ச்சியையும் தமது கருத்துக்கு ஆதாரமாக் குறிப்பிடுகின்றனர்.
மற்றும் சில அறிஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வருகிறவர்கள் குளிப்பது கடமையல்ல. மாறாக அது சுன்னத்தாகவே அமையும் என்று கூறுகின்றனர். இஸ்லாத்தை ஏற்க வந்த அனைத்து ஸஹாபாக்களையும் குளிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை என்பதே இவர்களின் வாதமாகும். ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் நிலைப்பாடும் இதுவேயாகும்.
மரணித்த முஸ்லிமைக் குளிப்பாட்டுவது:
ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவரைக் குளிப்பாட்டுவது கடமையாகும். ஏனெனில் இதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் குளிப்பாட்டவும் செய்துள்ளார்கள்.
அதேவேளை மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளிப்பது கடமையா? இல்லையா? என்பதில் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பின்வரும் ஹதீஸைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணமாகும்.
‘மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளித்துக் கொள்ளட்டும். அதைச் சுமந்து செல்பவர் வுழூச் செய்யட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா)
இது ஒரு பலவீனமான ஹதீஸ் என்று இமாம் நவவீ போன்ற அறிஞர்கள் குறிப்பிட்ட போதிலும் இது ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்தான் என்று ஷேய்க் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
ஆரம்பகால அறிஞர்களில் பலர் மையித்தைக் குளிப்பாட்டுபவர் குளிப்பது சுன்னத்தானது என்ற கருத்தையே முன்வைத்துள்ளனர். ஷேய்க் அல்பானீ, யூசுப் அலகர்ழாவீ போன்றோரும் அது சுன்னத் என்ற கருத்தையே ஆதாரிக்கின்றனர்.
மாதவிடாயிலிருந்து (Menses) சுத்தமாகுதல்:
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிலிருந்து சுத்தமாகும்போது அவர்கள் குளிப்பது கடமையாகும்.
‘மாதவிடாய் ஏற்பட்டால் தொழுகையை விட்டுவிடு. அது நின்று விட்டால் சுத்தமாகிக் கொண்டு தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி), நூல் : புகாரி)
இந்த ஹதீஸையும் சூரத்துல் பகராவின் 222-ம் வசனத்தையும் ஆதாரமாகக் கொண்டு மாதவிடயாயிலிருந்து சுத்தமாகும்போது பெண்கள் குளிப்பது கடமையாகும் என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாக நோக்குவது பொருத்தமானதாகும்.
தொழக்கூடாது
நோன்பு நோற்கக் கூடாது
தவாப் செய்யக் கூடாது
இம்மூன்றும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
அல்குர்ஆனை ஓதுவதும் தொடுவதும்
இவ்விஷயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மாதவிடாய் உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாம் தொடக்கூடாது என்பது வேறு சில அறிஞர்களின் கருத்தாகும். இவர்களுக்கு குர்ஆனை ஓதுவதும் தொடுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் சில அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
மேற்படி கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுஅவற்றில் மூன்றாவது கருத்தே பலமானதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் கூடாது என்று சொல்வோர் முன்வைக்கும் அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவையாகக் காணப்படுகின்றன. (அல்லாஹு அஃலம்)
பள்ளிவாசலில் தரிப்பது:
இதுவும் கருத்து வேறுபாட்டுக்குரிய ஒரு விஷயமாகும். மாதவிடாயுள்ள பெண்கள் பள்ளிவாசலில் தரிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஒரு சில அறிஞர்கள் கூறுகின்ற அதேவேளை வேறு சிலர், அவர்கள் பள்ளிவாசலினுள் தாராளமாகத் தங்கலாம் என்று கூறுகின்றனர். இமாம் இப்னு தைமிய்யா போன்ற சில அறிஞர்கள் நிர்ப்பந்தம் மற்றும் தேவைகள் ஏற்படும்போது அவர்கள் பள்ளியில் தரிக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இக்கருத்துக்குச் சான்றாக மேறகூறப்பட்ட இரு சாராரின் ஆதாரங்களையும் ஒன்று சேர்த்து அவற்றுக்கிடையில் இணக்கம் காண்பதுடன் மஸ்ஜிதுன் நபவியில் கூடாரம் அமைத்து அதில் ஒரு பெண்ணை நபியவர்கள் தங்க வைத்த ஹதீஸையும் முன்வைக்கின்றனர். இது ஸஹீஹுல் புகரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் முன்வைக்கின்ற கருத்தே நடுநிலையானதாகக் காணப்படுகின்றது. (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்வது:
மாதவிடாயுடன் உள்ள பெண்ணை அனுபவிப்பது அவளது கணவனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவளது பெண் உறுப்பில் உறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும்வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!’ (2:222)
‘யார் மாதவிடாயிலுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்கிறானோ அல்லது பெண்ணை அவளது பின் துவாரத்தில் புணர்கிறானோ அல்லது ஒரு ஜோஷியனிடம் சென்று அவன் சொல்வதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்டதை நிராகரித்தவனாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதீ, இப்னு மாஜா)
‘பெண்ணுறுப்பில் உறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் (மாதவிடாயுள்ள பெண்களுடன்) நீங்கள் செய்யுங்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மாதவிடாயுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதாக இருந்தால் அவள் அதிலிருந்து சுத்தமாகி குளித்த பின்னரே அனுமதிக்கப்படும்.
தலாக் சொல்வது:
மாதவிடாயுடனுள்ள பெண்ணைத் தலாக் சொல்வதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சொல்லப்படக்கூடிய தலாக் ‘பத்அத்தான தலாக்’ ஆகும்.
பிரசவ ருது வெளியாகக்கூடிய பெண்களுக்கும் மாதவிடாயுள்ள பெண்களுக்குரிய அனைத்து சட்டங்களும் பொருந்தும்.
மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் குளிப்பது கடமையாகும்.
சுன்னத்தான குளிப்பு:
பொதுவாகக் குளிப்பது சுன்னத்தாக்கப்பட்ட சில சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
- வெள்ளிக்கிழமை குளிப்பது. (புகாரி, முஸ்லிம்)
- மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிப்பது. (அஹ்மத்)
- இரு பெருநாளைக்காகக் குளிப்பது. (இது தொடர்பாக ஸஹீஹான ஹதீஸ்கள் எதுவும் காணப்படாத போதிலும் ஸஹாபாக்கள் குளித்திருப்பதற்கான ஆதாரங்க்ள காணப்படுகின்றன)
- இஹ்ராம் அணிவதற்கு முன்னர் குளிப்பது. (தாரகுத்னீ, பைஹகீ , திர்மதீ)
-ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொள்ள விரும்புகிறவர் ஒவ்வொரு முறைக்கும் இடையில் குளிப்பது. (அபூதாவுத்)
- ‘முஸ்தஹாழா’ ஒவ்வொரு தொழுகைக்கும் முன்னர் குளிப்பது (அபூதாவுத்)
- மயக்கமுற்றவர் மயக்கத்தில் இருந்து எழுந்ததும் குளிப்பது. (புகாரி , முஸ்லிம்)
- முஷ்ரிக்குகளின் பிரேதங்களைப் புதைத்தவர் குளிப்பது. (நஸாஈ)
- மக்காவில் நுழைவதற்காகக் குளிப்பது. (புகாரி, முஸ்லிம்)
- ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் அரபாவில் தரிப்பதற்காகக் குளிப்பது. (இப்னு உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஆதார பூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.)
(இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் குளிக்கும் முறை பற்றிப் பார்ப்போம்.)
எம்.எல். முபாரக் ஸலபி M.A.
No comments:
Post a Comment