Saturday, December 4, 2010

உணர்வோமாக!

அளவற்ற அருளாளன் திருநாமம் போற்றி....
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
இஸ்லாத்தின் எதிரிகள் வேற்றுமைக்குள் ஒற்றுமையைப் புனைந்து கொண்டு இந்த ஏகத்துவச் சமூகத்தைக் குதறிக்கொண்டிருக்கின்றன. நாமோ இன்னும் ஒற்றுமைக்குள் வேற்றுமையத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இது ஆரோக்கியமான நம் சமூகத்தின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கவல்லது என்பதை ஏனோ நாம் மறந்து விட்டோம்.

குழுவாதங்களில் குதறப்படும் - ஓர் அப்பாவிச் சமூகம்
குற்றுயிரும் குறையுயிருமாய் துடிதுடிக்கும் துக்கம் நிறை காட்சி!?

இயக்கங்கள் இன்று நோக்கம் மறந்த நிலையில் பரிதாபமாக பயணிப்பதாய் உணரவேண்டியுள்ளது. நல்ல எண்ணத்துடன் களமிறங்கும் எந்த அமைப்பும் குழுவாதம், இயக்கவாதம் போன்றவற்றை கண்டிப்பாக களைந்து தங்களை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் 'குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டவர்க'ளைப் போன்றாகிவிடும்!

இலக்கு மறந்த இயக்கங்கள் ஒருபுறம்
இயங்க மறந்த இயக்கங்கள் மறுபுறம்!

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
ஒரு சமூகத்தின் வெற்றிப்பயணத்தில் அதன் 'தடுமாற்றமில்லா கொள்கையும்', 'ஸ்திரமிக்க ஐக்கியமும்' மிக முக்கியமான இரு காரணிகளாகும். இந்த இரண்டிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்ததன் காரணத்தால் தான் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்குள் ஒரு அரசை நிருவ முடிந்தது. இன்றளவிலும் மேற்கத்தேய ஆராய்ச்சியாளர்கள் அதற்கான இரகசியத்தைத் தேடி வருகிறார்கள்.

எமது சமூகத்தின் வெற்றியானது எமது ஐக்கியத்திலும், சகோரத்துவத்திலும் தங்கியிருக்கின்ற அதே நேரம் இஸ்லாத்தின் அச்சானியாகத் திகழ்கின்ற அதன் கொள்கையை சரியாகப் புரிந்து கொள்வதிலும்தான் கானப்படுகின்றது என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

ஏகத்துவமுண்டு, ஏகன் தந்த வான்மறையுமுண்டு - அதேநேரம்
ஏக்கம் தனைச் சூழ, ஏளனங்களையும் சுமத்தல் தகுமா?!

நேற்று இருந்ததைவிட இன்றைய இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சியானது கொடூரமானதாகும். இன்றைய கெடுபிடிகளை விட நாளைய நடவடிக்கைகள் நம்மை இலகுவாக ஆக்கிரமிக்கவல்லது. எதிர்வரக் கூடிய நவீன யுகத்தின் நாளைய நடப்புக்கள் நம் சமூகத்தை சுக்கு நூறாக உடைக்கவள்ளது! எனவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.

குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்தவரை, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் இச்சமூகத்தின் ஐக்கியத்திற்காகவும் செயற்படுவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மாறாக அரசியலமைப்புக்களைப் போன்று தங்களை வளர்த்துக் கொண்டு சமூகத்தைத் துண்டாடும் தீய சக்கியாக விஸ்வரூபம் எடுக்காமல் தம்மைக் காத்தக் கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதனை நாம் கவணத்திற் கொள்வோம்.

அதேபோன்று கீழ்வரும் சில விடயங்களை நாம் கவணத்திற் கொண்டு செயலாற்றினால் எமது சமூகத்தின் விடிவுக்கு காரணமாக அவை அமையும் என்பது அடியேனின் எதிர்பார்ப்பாகும்:
1- ஒரே கொள்கையின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அல்லாஹ்வுக்காகவென விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயற்படல்.
2- சாத்தியக் கூறுகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக (இரு இயக்கங்கள் அல்லது அமைப்புக்கள்) இனைந்து செயற்படுதல்.
3- அடிப்படை அம்சங்கள் தவிர்ந்த கிளை அம்சங்களில் நெகிழ்வு மனப்பான்மையோடு தம் கருத்தக்களை முன்வைத்தல்.
4- பிரர்கருத்தை தரவறாக கருதும் பட்சத்தில் லாவகமாகவும், ஹிக்மத்தாகவும் ஆதாரத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டல்.
5- முடியுமானவரை நமக்குள் தோன்றும் வாத-பிரதிவாதங்களை அம்பலமாக்கி அந்நிய மதத்தினர் எள்ளி நகைக்குமளவிற்கு கொண்டு செல்லாது பக்குவமாக தீர்வு காண முற்படுதல்.
6- எந்த இயக்கத்தினரும் சகோதர இயத்தினரை சாடாது தமது அடக்கத்தையும், பெருந்தன்மையையும் காத்துக் கொள்ளல்.
7- முஸ்லீம்களுக்கென ஓங்கி குரல் எழுப்பக் கூடிய ஊடகங்களை உருவாக்குதல், நிறுவுதல்.
8- ஊடகத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் ஊடகவியளாலர்களை ஊக்குவித்தல், வளர்த்தல்.
9- நமது சமூகத்திலுள்ள கல்வித்தாகமுள்ள இளைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைசார்ந்த கல்வி மேம்பாட்டிற்காக உதவுதல்.
10- சமூக எழுச்சிக்கான முன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு செயற்திட்ட அமுலாக்களை நடைமுறைப்படுத்தல்.
11- சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், ஊக்குவிப்பு முகாம்கள், சிறு சிறு சீர்திருத்த மற்றும் புத்துனர்ச்சி மையங்களை நிறுவி தொடர்ந்தேர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள் வீழ்ந்து கிடக்கும் நம் சமூகத்தை எழுப்பி நிறுத்த வல்லவைகளாகும். எனவே இவ்வாறான செயற்திட்டங்களில் படித்தவர்கள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் மற்றும் உலமாக்களின் பங்கானது இன்றியமையாததாகும்.

எனவே நம் எதிர்காலத்தை செப்பனிட்டு செம்மையாக்குவதற்கு நம் ஒவ்வொருவரினாலும் இயலுமான பங்களிப்பை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
யா அல்லாஹ்! இந்த சமூகத்தை ஈமானிலும், ஐக்கியத்திலும் உறுதிப்படுத்தி ஈருலக வெற்றியை அடையக் கூடிய ஒரு தன்னிகரற்ற சமூகமாக மாற்றியருள்வாயாக!
- ஆக்கம்: அபூ அரீஜ்

No comments: