Sunday, July 1, 2012

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-04)

எழுதியவர்: மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

சுவனவாதிகளின் ஆடை அணிகலன்கள்மனிதனர்கள் நிர்வாணிகளாக எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவர் என அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. அது நபிமார்கள் உட்பட அனைவருக்கும் பொதுவானது என்பதைத்தான் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.

கண்ணியமிக்க மனிதர்களான நபிமார்கள் உலகில் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டு, விமர்சனம் செய்யப்படுவதை இன்றும் பார்க்கின்றோம். மறுமையில் இஸ்லாத்தின் எதிரிகள் எல்லாவகையிலும் கேவலப்படுத்தப்படுவார்கள், ஆனால் நபிமார்கள் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ்வால் கண்ணியப் படுத்தப்படுவார்கள். அதில் ஆடை அணிவிப்பதும் ஒன்றாகும்.

சுவனவாதிகளில் முதலாவதாக மஹ்ஷர் மன்றத்தில் ஆடை அணிவிக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களாகும். அவர்களைப் போன்று அனைத்து நபிமார்களும் அணிவிக்கப்படுவார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

எங்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்கள். அப்போது, நிச்சயமாக நீங்கள் பாதணி (காலணி) அணியாதவர்களாகவும், நிர்வாணிகளாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்வின் பக்கம் மறுமையில் எழுப்பப்படுவீர்கள் எனக் குறிப்பிட்ட பின்னர், “நாம் ஆரம்பமாக படைத்ததைப் போன்றதொரு நிலைக்கு (உங்களை) மீட்டுவோம்” என்ற திருமறை வசனத்தைக் கூறினார்கள். பின்னர், படைப்புக்களில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல நூறு கோடி வருடங்கள் மனிதன் மண்ணறையில் வாழ்ந்தாலும் அவன் மறுமை விசாரணைக்காக எழுப்பப்படுவது என்பது உண்மையாகும். அப்படி எழுகின்றபோது அவன் ஆடை, விருத்த சேதனம்- கத்னா- காலணி என எதுவும் இல்லாமல்தான் எழுப்பப்படுகின்றான்.

அந்த வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருக்குமா என்ற கேள்விக்குத்தான் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் இந்த உயர்தரமிக்க ஏற்பாடுகள் அமையப் பெற்றுள்ளன. தடித்த, மென்மையான பட்டாடைகள் சுவனவாதிகளின் ஆடைகளாகக் கூறப்பட்டுள்ளன. பச்சை நிறமான பட்டுக்கள் என்று நிறம் அடையாளம் காட்டப்பட்டிருப்பதையும் பார்க்கின்றோம். அதில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும். (ஃபாதிர்: வசனம்: 33).

அவர்களின் மேல் மேனியின் மீது மென்மையான பட்டும், (வெளி உடம்பில்) தடிப்பமானதும் இருக்கும். (அத்தஹ்ர்: 21)

அவர்கள் தடித்த, மற்றும் மென்மையான பட்டுக்களை அணிந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி இருப்பார்கள். (அத்துஹ்ஹான். வசனம்: 53),

அவர்கள் மெல்லிய, மற்றும் தடித்த பச்சை நிறப்பட்டுக்களை அணிந்து, உயர்ந்த ஆசனங்கள் மீது அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31). எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு சுவனச்சோலைகள் உண்டு. அதன் கீழால் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (அல்ஹஜ்: வசனம்: 22)

(நன்மை செய்தவருக்குரிய கூலி) அத்ன் என்ற சுவனச் சோலைகளாகும். அதில் அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (ஃபாதிர்: வசனம்: 33).

(சுவனவாதிகளான) அவர்கள் வெள்ளியிலான காப்புக்கள் அணிவிக்கப்படுவார்கள். (அத்தஹ்ர்: 21)

பட்டாடை அணிவது, தங்க வெள்ளித்தட்டுக்களில் உணவு பரிமாறுவதும் இஸ்லாத்தில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள அம்சமாகும். அவை மறுமையில் சுவனவாதிகளுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆடை, அணிகலன்களை விரும்புவது மனித இயல்பாகும். இவ்வுலகில் வாழும்போது அதில் சில வரையறைகைள் கொண்டுவரப்படுவது தவிர்க்க முடியாததுதான். அதனைப் பொறுமையுடன் பேணிக்கொண்ட முஸ்லிம்களுக்கு அவர்கள் பூரண திருப்தி பெறும் அளவு ஆடை அணிகலன்கள் மூலமும் கண்ணியப் படுத்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியைப் பாரக்கின்றோம்.

நீங்கள் (உலகில்) மென்மையான, மற்றும் தடித்த பட்டுக்களை அணியாதீர்கள். தங்கம், வெள்ளிப்பாத்திரத்தில் பருகாதீர்கள். அதன் தட்டுக்களில் உண்ணாதீர்கள். நிச்சயமாக அவை உலகில் அவர்களுக்குரியதாகும். (இறை நிராகரிப்பாளர்களுக்கு உரியதாகும்) மறுமையில் நமக்குரியதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சுவனவாதிகளின் கட்டில்கள்அல்குர்ஆனில் கட்டில்கள் என்ற சொற்பிரயோகம் ஆறு இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஐந்து இடங்கள் சுவனவாதிகளின் கட்டில்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. சாய்மானக்கட்டில்கள் என்ற சொற்பிரயோகம் ஐந்து இடங்களிலும் அல்குர்ஆனில் பன்மையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ
(சுவனவாதிகளான) அவர்களின் இதயங்களில் காணப்படும் குரோதத்தை நாம் பிடுங்கி விட்டோம். கட்டில்கள் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி (இருப்பார்கள்). (அல்ஹிஜ்ர்: வசனம்: 47).

فِي جَنَّاتِ النَّعِيمِ
عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ الصافات
(சுவனவாதிகளான அவர்கள்) சுவனச் சோலைகளில் கட்டடில்கள் மீது (சாய்ந்தவாறு) ஒருவரை முன்னோக்கியவர்களாக இருப்பார்கள்.(அஸ்ஸாஃப்பாத் : வசனம்: 43-44).

مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ
அடுக்கப்பட்ட கட்டில்கள் மீது சாய்ந்தவாறு இருப்பார்கள். அவர்களுக்கு நாம் “”ஹுரூல் ஈன்” என்ற பெண்களை மணமுடித்து வைப்போம். (அத்தூர்: 20)
عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
அவர்கள் தங்கத்தினால் தயார் செய்யப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக, ஒருவரை ஒருவர் முன்னோக்கியவாறு இருப்பார்கள். (அல்வாகிஆ. வசனம்: 15-16).

فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ
அங்கு உயரமான கட்டில்கள் இருக்கின்றன. (அல்காஷியா. வசனம்: 13).
உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31).

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ
அவர்களும், அவர்களது மனைவியரும் உயர்ந்த சாய்மானக் கட்டில்கள் மேல் நிழல்களில் வீற்றிருப்பார்கள். (யாசீன்: 56)
அவர்கள் உயர்ந்த சாய்மானக் கட்டில் மேல் இருப்பார்கள், அங்கு அவர்கள் சூரியனையோ (கடுமையான உஷ்ணம்) கடும் குளிரையோ பார்க்கமாட்டார்கள்.(அத்தஹ்ர்: 31)

இவை மனிதன் உலகில் மனம் விரும்பும் பொருட்களாகும். அதனை மறு உலகில் நிரந்தரமாக வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். அவை பெயர்களில் கட்டில்கள் என்றிருப்பினும் உலகில் நமது கட்டில்கள் போன்றது என்ற சிந்தனைய நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் இவை தரத்தால் உயர்ந்தவையாகவும், குறைபாடுகள் அற்றவையாகவும் மனம் திருப்திப்படும் விதத்திலும் இருக்கும்.

சுவனவாதிகளின் அறைகள்.
சுவனவாதிகளுக்கு வழங்கப்படும் அறைகள் பற்றி அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தாராளமாகக் காணமுடியும்.
அவர்கள் பச்சை நிற தலையணைகள் மீதும், அழகிய விரிப்புக்களிலும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (அர்ரஹ்மான்: 76).

أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا
அவர்கள் பொறுமை காத்ததற்காக அறைகள் வழங்கப்படுவார்கள். மேலும், அங்கு தஹிய்யாவும், ஸலாமும் கொண்டு
வரவேற்கப்படுவார்கள். (அல்புர்கான். வசனம்:75).

وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ
அவர்கள் (சுவனத்து) அறைகளில் அச்சமற்றவர்களாக இருப்பார்கள். (ஸபஃ: வசனம்: 37).

لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا
நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவனத்தில் அறைகளை தயார்படுத்தி வைப்போம். (அல்அன்கபூத்; வசனம்: 58).

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرْفَةَ فِي الْجَنَّةِ كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ
நிச்சயமாக சுவனவாசிகள், நீங்கள் வானத்தில் சந்திரனைப் பார்ப்பது போன்று சுவனத்தில் தமது அறைகளை பார்ப்பார்கள். (முஸ்லிம்).

சுவன மாளிகை
அரபியில் அறைகள் என்பதைக் குறிக்கப்பயன்படும் சொற்கள் வரும் இடங்களில் அறைகள் என்றே நாம் மொழியாக்கம் செய்துள்ளோம். இருந்தாலும் அவை பெரும் மாளிகைகளைக் கூட குறிக்கின்ற சொல்லாகவும் இருக்கலாம். (அல்லாஹ்வே அது பற்றி அறிந்தவன்)

ஆனால் சுவனத்து மாளிகை பற்றி பல ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன அவற்றில் பின்வரும் செய்தியைக் கவனியுங்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُنِي دَخَلْتُ الْجَنَّةَ فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ امْرَأَةِ أَبِي طَلْحَةَ وَسَمِعْتُ خَشَفَةً فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا بِلَالٌ وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ فَقُلْتُ لِمَنْ هَذَا فَقَالَ لِعُمَرَ فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ فَذَكَرْتُ غَيْرَتَكَ فَقَالَ عُمَرُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ صحيح البخاري

நான் ஒரு போது சுவனத்தில் நுழைந்து பார்த்தேன். அப்போது அபூதல்ஹாவின் மனைவி நுமைஸா அங்கிருந்தார். ஒரு செருப்பினுடைய ஓசையையும் செவியுற்றேன். இது யாருக்குரியது என்று வினவினேன். அது பிலாலுக்குரியது என்றார் (வானவர்). ஒரு மாளிகையைக் கண்டேன், அங்கிருக்கும் முற்றவெளிக்கு அருகாமையில் ஒரு இளம் யுவதி நின்று கொண்டிருந்தார். இது யாருக்குரியது என்றேன். அது உமருக்குரியது என்றார் (வானவர்). உமர் (ரழி) அவர்களிடம் எடுத்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள், நான் அதற்குள் பிரவேசித்து அதைப் பார்க்க விரும்பினேன். உமது ரோஷம் எனக்கு நினைவிற்கு வந்தது. அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும். நானா உங்கள் மீது ரோஷப்படுவேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

No comments: