நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல்குர்ஆன் : 33:41,42)
அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கின்றார்கள்: ''என் அடியான் என்னை நினைவு கூரும் இடத்தில் நான் உள்ளேன். என்னை அவன் நினைவு கூர்ந்தால், நான் அவனுடன் உள்ளேன். தன் மனதிற்குள் என்னை அவன் நினைவு கூர்ந்தால், என் மனதிற்குள் நான் அவனை நினைவு கூர்வேன். ஒரு கூட்டத்தில் என்னை அவன் நினைவு கூர்ந்தால் அவர்களையும் விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நினைவு கூர்வேன் என்று அல்லாஹ் கூறினான்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அப்துல்லா இப்னு புஸ்ரு (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இறைத்தூதர் அவர்களே! இஸ்லாமிய செயல்கள் என் மீது அதிகம் உள்ளன. தொடர்ந்து செய்யும் ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என, ஒருவர் கேட்டார். ''அல்லாஹ்வை நினைவு கூர்வதில் (திக்ரு செய்வதில்) உனது நாக்கு தொடர்ந்து திளைத்து இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1438)
அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்: சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் பற்றி உமக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி ''என்றேன். ''(அது) லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூருதல்:
அல்லாஹ் கூறுகிறான்: வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்)
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை, நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்). (அல்குர்ஆன்)
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாகவே இருந்தார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவில்) ஈடுபட வந்து ''பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னி ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா'' என்று கூறினால், அதில் அவ்விருவரிடையே குழந்தை ஏற்பட விதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்வித இடைஞ்சலும் செய்ய மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (இதில் ஈடுபடுகிறேன்). இறைவா! ஷைத்தானை எங்களை விட்டும் நீக்குவாயாக. மேலும் எங்களுக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானை நீக்குவாயாக! (ரியாளுஸ்ஸாலிஹீன்)
Thanks: Alauddeen
No comments:
Post a Comment