புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.
உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.
புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.
உண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.
காய்ந்த குடல்களை, காலியான வயிறுகளை, பசியின் அகோரத்தை தணித்துக் கொள்ளத் துடிக்கும் ஜீவன்களை அனைவரும் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நோன்பு உள்ளம் உருகி, மனம் கசிந்து, ஏழைகளின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் பிரவாகம் எடுக்க புனித நோன்பு வழி அமைக்கின்றது.
நபி யூஸுப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டின் வளங்களுக்கும் நிதித்துறைக்கும் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிகம் நோன்பு நோற்று வந்தார்கள். இதற்கான காரணம் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.'நான் சாப்பிட்டு பசியாறிய நிலையில் இருந்தால் ஏழையின் பசியை மறந்து விடுவேனோ என்று பயப்படுகின்றேன். அதனால் அதிகம் நோன்பு நோற்று வருகின்றேன்' என்றார்கள்.
புனித ரமழானில் நாங்கள் அனுஷ்டிக்கும் நோன்பு சமூகத்தில் உள்ள ஏழைகள், அநாதைகள், அகதிகள் போன்றோர் மீது எங்களில் கருணை பிறக்க வழியமைக்க வேண்டும். அது எங்களில் ஈகையை வளர்க்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும் ஏனைய காலங்களை விட ரமழானில் அதிகமாக தானதர்மங்களை செய்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொடை கொடுப்பதில் மனிதர்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக அன்னார் ரமழானில் மிகக் கூடுதலாக வாரி வழங்கும் தன்மை படைத்தவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கின்றார்கள் நபித்தோழர்கள்.
'தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்' என்றும் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சமூகத்தில் அனாதரவற்றோரின் அவலங்களை நினைத்துப் பார்ப்பது, அவர்களின் துயர் துடைக்க முடியுமான வழிகளில் முனைப்புடன் செயற்படுவது ஒரு பொறுப்பான சன்மார்க்கக் கடமையாகும் என்பதனை நாம் உணராமல் இருக்கக் கூடாது.
வறுமை மிகவும் கொடியது. அதனால் விளையும் ஆபத்துக்கள் பயங்கரமானவை.
வறுமையானது ஈமானுக்கே சவால் விடக்கூடியதாகும். பயங்கர வறுமையானது ஒருவனின் ஈமானையே பறித்து விடாது என்று கூறுவதற்கில்லை. இதனால்தான்
'வறுமையானது குப்ரையும் ஏற்படுத்திவிடக் கூடியது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள் அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையில் இருந்தும் பாதுகாப்புத் தேடியமை அவையிரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பையே எடுத்துக் காட்டுகின்றது.
வறுமையானது மனிதனின் ஈமானுக்கு மாத்திரமன்றி அவனது நடத்தைக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்தாக அமைவதுண்டு.
வறுமை ஒருவனை இழிசெயல்களுக்குத் தூண்டலாம். பண்பாடற்ற துர்நடத்தைகளுக்குத் தூண்டலாம். முறைகேடான விடயங்களில் ஈடுபடத் தூண்டலாம்.
'ஒருவன் கடன்காரனாகி விட்டால் பேசினால் பொய் சொல்லக் கூடும், வாக்களித்தால் மாறு செய்யக் கூடும்' என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்.
கொடிய வறுமையானது மனிதனின் சிந்தனையையும் அறிவையும் கூட பாதிக்க முடியும். இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 'வீட்டில் உண்பதற்கு கோதுமை மா இல்லாத நிலையில் இருப்பவனிடம் சென்று ஆலோசனை கேட்காதே'
ஏனெனில் வீட்டில் உண்ண உணவின்றி இருப்பவன் சிந்தனை சிதறி அறிவு கெட்ட நிலையில்தான் இருப்பான். இந்த அடிப்படையில்தான் ஒரு நீதிபதி பசியுடன் இருக்கும் போது தீர்ப்புகள் வழங்கக் கூடாது என இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கும் வறுமையானது பல வழிகளிலும் காரணமாக அமைவதுண்டு. ஆரம்பமாக திருமணத்திற்கே தடையாக அமையும் வறுமை பின்னர் குடும்பங்கள் சிதறுவதற்கும் சீரழிவதற்கும் எவ்வளவு தூரம் வழி கோலுகின்றது என்பதனை நாம் அறிவோம்.
இத்தகைய பேராபத்துக்களை விளைவிக்கக் கூடிய வறுமை, ஒரு சமூகத்தில் நிலவுவது எவ்வளவு பயங்கரமானது? என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாரதூரமான ஆபத்தை நீக்க முயல்வது எத்தகைய மகத்தான பணியாக, நன்மையைத் தரக் கூடிய அமலாக அமையுமென்பதை நாம் உணரத் தவறக்கூடாது.
சமூகத்தில் உள்ள அநாதரவானவர்களை அரவணைக்காதவர்கள் அநாதைகளைப் பராமரிக்காதவர்கள் மார்க்கத்தையே பொய்ப்படுத்துபவர்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இத்தகையவர்கள் தொழுபவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் இருந்தாலும் சரியே.
இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் கூடிய கரிசனை காட்டுகின்றது. ஸூறதுல் அன்பியாவின் 41 வது வசனம், ஸூறதுல் ஹஷ்ரின் 7வது வசனம், ஸூறதுல் பகராவின் 177, 215, 82, ஸூறதுன்னிஸாவின் 36வது வசனம் போன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் அநாதைப் பராமரிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன.
தீனைப் பொய்ப்பிக்கின்றவன் யார்? என்பதனை விளக்க வந்த ஸூறா அல்மாஊன்:
''அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்'' என்று கூறுகின்றது.
ஏழைகளை ஆதரிக்காதவனும் வறுமையை ஒழித்துக் கட்டத் தனது பங்களிப்பைச் செலுத்தாதவனும் தீனை உண்மைப்படுத்தாதவனாகவே கொள்ளப்படுகின்றான். மார்க்கத்தைப் பொய்ப்பிக்கின்றவனைப் பற்றி குறிப்பிடும் ஸூறா அல்மாஊன்:
''அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான்'' என்று கூறுகின்றது.
இங்கு, அல்லாஹுத்தஆலா தானும் ஏழைகளுக்கு உணவளித்து பிறரையும் அதன் பால் தூண்டி வறுமையை ஒழித்து பசியை விரட்டும் பணியில் ஈடுபடாதவரைப் பற்றியே குறிப்பிடுகின்றான். தனிப்பட்ட முறையில் தானும் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் பிறரையும் அதற்காகத் தூண்டி வறுமை ஒழிப்பு முயற்சியை ஓர் அமைப்பாக கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் ஒருவர் தனது பங்களிப்பை செலுத்தாத வரை மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார்.
அல்குர்ஆன் மற்றும் பல இடங்களிலும் இதே கருத்தை வலியுறுத்துகின்றமையைக் காண முடிகின்றது.
''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்''
''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்து வதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கும் படி தூண்டுவதும் இல்லை. பிறருடைய வாரிசுப் பொருளைப் பேராசையுடன் விழுங்குகின்றீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்''என்றெல்லாம் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
தான் தனிப்பட்ட முறையில் தனி மனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது, சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை என நினைத்துச் செயற்படுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடி கொடுக்கின்றன.
உண்மையில் அநாதைகளை அரவணைக்கத் தூண்டாத வணக்கங்கள், ஏழைகளை ஆதரிக்கத் தூண்டாத இபாதத்கள் போலியானவையும் பகட்டானவையுமாகும். இத்தகைய வணக்கங்களால் நன்மையன்றி கேடே விளையும் எனக் கூறுகின்றது அல்குர்ஆன்.
நாம் நிறைவேற்றும் தொழுகையும் அனுஷ்டிக்கும் நோன்பும் பிற வணக்கவழிபாடுகளும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி சகோதர மனிதர்களுக்கு நன்மை செய்ய, நல்லது செய்ய தூண்டுபவையாக அமைய வேண்டும். அப்போதுதான் இபாதத்துகள் அர்த்தமுள்ளவையாக, நன்மை பயக்கக் கூடியவையாக அமையும்.
'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்'
ஈகையினதும் கருணையினதும் மாதமான இந்த புனித ரமழானில் சமூகத்தில் உள்ள வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி இந்த நபிமொழி குறிப்பிடும் ஈருலக பாக்கியங்களை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயல்வோமாக.
sorce: http://www.sheikhagar.net
No comments:
Post a Comment