Wednesday, February 25, 2009

நபிமொழி

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மூஃமின், மற்றொரு மூஃமினுக்கு சகோதரர் ஆவார். ஒரு மூஃமினுக்கு, தன் சகோதரனின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் செய்திடவோ, தன் சகோதரன் பேசிய பெண்ணைப் பேசிடவோ அந்த சகோதரன் விட்டுத்தரும் வரை கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ் மூன்று காரியங்களை உங்களிடம் விரும்புகிறான். மூன்று காரியங்களை உங்களிடம் வெறுக்கிறான். அவனை நீங்கள் வணங்குவதையும், எதையும் அவனுக்கு நீங்கள் இணை வைக்காமல் இருப்பதையும், அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து பற்றிக் கொண்டு, நீங்கள் பிரிந்து விடாமல் இருப்பதையும் உங்களிடம் விரும்புகிறான். இவரால் கூறப்பட்டது, இவர் கூறினார் என்பதையும், அதிகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் உங்களிடம் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் தன் சகோதரரை ஆயுதம் மூலம் (மிரட்டிக்) காட்ட வேண்டாம். ஏன் எனில், ஷைத்தான் அவரின் கையை விட்டு நழுவி (வெட்டி) விடக் கூடும். இதனால் நரகின் படுகுழியில் அவர் விழ நேரிடும் என்பதை அவர் அறிய மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள் நறுமணப் பொருட்களை பெற்றுக் கொள்ள மறுக்கமாட்டார்கள்". (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதர், இன்னொரு மனிதரை புகழ்வதையும், புகழ்வதில் அவர் வரம்பு மீறுவதையும் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''(அவரை) நீங்கள் அழித்து விட்டீர்கள் அல்லது அந்த மனிதரின் முதுகை ஒடித்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூபக்கர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள் முன் ஒரு மனிதர் பற்றி கூறப்பட்டது. அப்போது அவரை ஒருவர் புகழ்ந்து கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் உமக்கு கேடு உண்டாகட்டும்! உம் நண்பரின் கழுத்தை ஒடித்து விட்டீரே! என்று பலமுறை கூறிவிட்டு ஒருவர் ஒருவரைப் புகழத்தான் வேண்டும் என்றிருந்தால், ''இவ்வாறு, இவ்வாறு அவரை நான் கருதுகிறேன்'' என்று கூறட்டும். அவர் அவ்விதம் இருப்பதாகக் கருதினால், அவரை அல்லாஹ் கேள்வி கேட்பான். அல்லாஹ்விடம் எவரையும் தூய்மைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லலை. (அவர் பற்றி அல்லாஹ் அறிவான்) என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர், உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ ஆரம்பித்தார். அப்போது மிக்தாத்(ரலி) அவர்கள் முழங்காலிட்டு அமர்ந்து, பொடிக்கற்களை (எடுத்து) அவரின் முகத்தில் வீசிட ஆரம்பித்தார்கள். என்ன காரியம் செய்கிறாய், என்று உஸ்மான் (ரலி) கேட்டார்கள். அப்போது மிக்தாத் (ரலி) அவர்கள் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வீசுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
Thanks: TAFAREG

No comments: