Monday, April 21, 2008

காதலர் தினம்

அல்லாஹ்வின் திருநாமம் போற்றி
காதலும் கல்யாணமும் போராட்டக் குணத்தைப் பாதிக்கும் விடயம் என ரோமானிய சக்கரவர்த்தியான இரண்டாம் குலோடியஸ் கருதினான். எனவே பாதிரியார்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதை அவன் தடை செய்தான். ஆனால் வலன்டைன் பாதிரியார் இதற்கெதிராக போராடி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தமையினால் இரண்டாம் குலோடியஸினால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
மூன்றாம் நூற்றாண்டில் காதலர்களுக்காக உயிர்துறந்த வலன்டைன் பாதிரியாரின் இறப்பு இன்று வலன்டைன் டே எனக் கொண்டாடப்படுகிறது!
வாழ்க்கையின் வரம்புகள் பேனப்படாத ஒரு சமூகத்தினால் இந்த காதலர் தினம் கொண்டாடப்படுவது ஆச்சரியமன்று. ஆனால் முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் இதில் ஆர்வம் காட்டுவது நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
காதல் என்பது ஒவ்வொரு நபரைப் பொருத்து அவர்களது உணர்வு மற்றும் தேவைக்கேற்ப வித்தியாசப்படும். சிலர் காதலிப்பது திருமணம் செய்து கொள்வதற்காக. இன்னும் சிலர் எல்லோருக்கும் ஒரு காதலர் இருப்பது போல் தனக்கும் இருக்க வேண்டும் இல்லையென்றால் சகாக்களின் நச்சரிப்புக்கள் தாங்க முடியவில்லை என்பதால் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால்...ஆனால், பலர் காதலிப்பது அவர்களது ஆசைகளையும், இச்சைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தான் என்பதை நான் கூறி நீங்கள் தெறிய வேண்டியதில்லை!
  • காதல் என்ற பெயரால் சமூக விழுமியங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
  • காதல் என்ற பெயரால் ஒதுக்குப் புறங்களில் அரங்கேரும் அசிங்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
  • இறையச்சமுடைய குடும்பங்கள் உருவாக்கபடுவது தவிர்க்கபடுவது இந்த பாலாய்ப் போன காதலால்தான்.
  • கண்மூடித்தனமான காதலால் நடந்தேரிய திருமணங்கள் பல இறுதியில் அவஸ்தைப்படுவதை கண்டும் கானாதது போல் எம்மால் இருக்க முடியவில்லை.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை விட காதல் திருமணங்களில்தான் அதிக சச்சரவுகளும், பிரச்சினைகளும் நடக்கின்றன. அதிகம் விவாகரத்தாகும் தம்பதிகளில் காதல் திருமணத் தம்பதிகள்தான் விகிதாசார அடிப்படையில் அதிகம் என்பது கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் என்னவென்றால், காதலிக்கும் போது இருவரும் அபரிமிதமான அன்பை வெளிக்காட்டித்தான் களத்தில் இறங்குவார்கள். உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன் என காதல் அரங்கேரும். அதேபோன்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அன்பை உறுதிப்படுத்த பல பொய்களைக் கூறுகிறார்கள். இப்படி பல போலித் தன்மைகளால் உண்டாகும் காதலில் இருவரிடமிருந்தும் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. திருமணத்தின் பின் இருவரது நிஜமும் அம்பலமாகின்றது!

பெரும்பாலான காதலர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படுவதற்கு இதுதான் காரணமாகும். திருமணத்திற்கு முன்பிருந்த அதே அம்சங்களை திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்புகள் குறைகின்ற வேளையில் காதலிக்கும் போது இருந்த பாசம், அன்பு, காதல், விட்டுக் கொடக்கும் தன்மை போன்ற அனைத்தும் போலி என எண்ண ஆரம்பிக்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட!

ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடாத்தி வைக்கப்படும் திருமணத்தம்பதியர் மத்தியில் எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்படும், நினைத்ததை விட நல்லவர்களாக இருவருமோ இருவரில் ஒருவரோ இருக்கும் பொழுது இறுக்கம், பற்று, பாசம், நேசம் போன்ற அம்சங்கள் அதிகமாகி அவர்களுக்கு மத்தியில் உண்மைக் காதல் வழுப்பெருகின்றது!

எனவேதான் இஸ்லாம் மார்க்கமானது இப்படிப்பட்ட போலிகளை மையமாக வைத்து கட்டியெழுப்பப்படும் தாம்பத்திய உறவுகளை நேர்த்தியாக்க விரும்புகிறது. ஒரு குடும்பம் இறையச்சத்தை மையமாக வைத்து கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் காதலானது இவை அனைத்தையும் கடந்து காமத்தையும், இச்சையையும் மையமாக வைத்து உருவாகுவதால் இருவரும் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது கூட கவணத்திற் கொள்ளப்படுவதில்லை. அதனால் சிறந்த குடும்பம் உருவாகுவதற்குப் பதிலாக சிதைந்த குடும்பமே உருவாக வாய்ப்புகள் அதிகமுள்ளன!!

பிறிதொரு கோணத்தில் நோக்கினால், வருடாவருடம் உலகெங்கும் கொண்டாடப்படும் இந்த காதலர் தின விழாவிற்கென பெருந்தொகைப் பணம் வீண்விரயமாக்கப் படுகின்றன. இந்த காதலர் தினமானது காதலர்களை ஊக்கு விக்கின்றது. புதிய புதிய காதலர்களை உருவாக்குகின்றது. போலிக் காதலர்கள் இத்தினத்தை முன்வைத்து அவர்களது நோக்கத்தை அடைந்து கொள்கிறார்கள்.

சில வர்த்தக முகவர்கள் இத்தினத்தை முன்னிட்டு அதிக இலாபமீட்டும் புதிய அசத்தலான உக்திகளை அறிமுகப்படுத்தி பணம் ஈட்ட முனைகின்றர். உதாரணமாகச் சொல்வதென்றால் 14-02-2008 அன்று வீரகேசரியில் வெளியான 'வர்த்தகமாகும் காதலர் தினம்' என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று காதலர் தின கொண்டாட்டத்திற்காக 2000 அமெரிக்க டாலர் (214000 ரூபா) என விலை குறிப்பிட்டு புதியதொரு பெக்கேஜை விளம்பரப்படுத்தியிருந்தது. காதலர் தினத்தை வர்த்தக மயப்படுத்தியது அமெரிக்காவின் உத்திகளில் ஒன்று என்பதை எம்மவர்கள் புறிந்து கொள்ளட்டும்.

தனது காதலியுடன் ஒரு இரவைக் கழிப்பதற்காக இத்தனை பெரும் தொகைப் பணத்தை வீணடிக்க சில பணம் படைத்தவர்கள் தயங்குவதில்லை என்பதனை இது காட்டுகின்றது! ஒரு வாய்க் கஞ்சிக்குக் கூட திண்டாடும் பலர் இருக்க இப்படி ஒரே இரவில் பெருந் தொகைப்பணத்தை நாசமாக்கும் விதம் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கையில் மட்டும் 90 சதவிகிதமானவர்கள் நாளாந்த வாழ்க்கைச் செலவீனங்களுக்கு கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவணத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். பிறர் நலம் பேனும் விடயத்தில் கிஞ்சிற்றும் கவலையில்லாத போது சுயநலவாதிகளாக மட்டும் மனிதன் வாழ்கிறான்.

எனவே காதலர் தினமானது வரவேற்கப்பட வேண்டியதன்று நிச்சயம் பல சமூக இலாபங்களை கவணத்திற் கொண்டு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!

- ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி

No comments: