Thursday, April 24, 2008

இராக் மக்களின் இன்னல் துடைப்போம்

இராக் மக்களின் துயரம் துடைக்க போராட வேண்டியவர்கள் அவர்களின் சூட்டில் குளிர்காய நினைப்பது மனிதாபிமானத்தை இழந்து விட்ட செயலாய் நினைக்கத் தோன்றுகின்றது!

பிறந்த நாட்டில், வளர்ந்த மண்ணில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த மண்ணில் உயிருக்கு ஆபத்து புடை சூழ, புகுந்த மண்ணில் கற்புக்கு ஆபத்து சிகப்புக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.

மீளாத் துன்பமும் அகலாத் துயரமும் அவர்களைத் தேடிவந்த புதிய உறவுகளாய் மாறிப் போயின. அவர்கள் செய்த தவறுதான் என்ன? கத்தை கத்தையாய் அறுபட்ட வேளான்மை வைக்கோலாய் மாறியது போன்று அவர்களும் கத்தை கத்தையாய் அறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

காட்டுமிராண்டித் தனத்தின் தத்ரூபக் காட்சி இராக்கிய மண்ணில் அரங்கேர, மக்கள் மன்றத்தில் மங்கா வடுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

பன்பட்ட உள்ளங்கள் இன்று புன்பட்ட உள்ளங்களாக மாறியதேன்? மனிதர்களின் உள்ளங்களில் மிருகத்தை விதைக்கலாமா? ஒரு சமூகம் இதனைச் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் கவளையை தினம் தினம் உள்மனதில் ஊன்றிக் கொண்டிருக்கின்றது!

பசுத்தோல் போர்த்திய புலிகளின் தோரனையில் மனிதம் வேட்டையாடப்படும் கோரக் காட்சிதான் இராக்கின் இன்றைய செய்தி!

என்னைப் போலவே நீங்களும் மன அழுத்தத்தை மென்று கொண்டிருப்பீர்கள். ஓயாப் புயல் ஓய்வதற்கு ஒரு வினாடியாவது சிந்தித்ததுண்டா? புயலில் சாய்ந்த மரங்களாய் அந்த மக்களின் பரிதவிப்புக்கள் தொடர்கின்றன. அவர்களின் இன்னல்கள் நீங்க எம்மால் என்னதான் செய்ய முடியும்?

எம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும். எவருக்கு என்ன முடியும் என்பது யானறியேன். ஆனால் இரு கரமேந்தி அழுதழுது பிரார்த்தனை மட்டும் நம் எல்லோராலும் செய்ய முடியும். செய்வீர்களா?
- ஆக்கம்: நிர்வாகி

No comments: