Thursday, April 17, 2008

உங்கள் சிந்தனைக்கு

வல்லோனின் திருநாமம் போற்றி

இறைவனின் படைப்பில் அதிசயிக்கத்தக்க ஒரு படைப்புதான் மனித மூளையாகும். மிருகங்களுக்கும் மூளை இருக்கின்றன ஆனால் அவற்றினால் இவ்வுலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. மனிதனது மூளை மட்டுமே தொடர்ந்தும் காலத்தைக் கடைந்து கச்சிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உலகைக் கடைந்து உருவகப்படுத்தும் திறமையும் அதற்குண்டு, அதேநேரம் உலகை உருக்கி உருக்குலைக்கும் அபாய சக்தியும் அதற்குண்டு! எதிர்கால சமுதாயத்தைக் காக்க வல்ல றஹ்மானே போதுமானவன்.
மனித மூளையின் முழுமையான அவுட்புட் இன்னும் இவ்வுலக அரங்கிற்கு வராத போதே அதன் அட்டகாசம் இப்படி எனும் பொழுது எதிர்காலம் குறித்த அமைதியான அச்சம் நம்மைக் கவ்விக் கொள்கின்றது!
இன்றைய நவீன உலகத்தின் விஞ்ஞானப் புரட்சியானது வெறுமனே 'கண்டுபிடிப்பு' எனும் வேட்கையோடு மட்டும் சுருங்கியிருப்பதால், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் அவ்வளவாக கவணத்தில் கொள்ளப் படுவதில்லை என்றே கூற வேண்டும். இக்கூற்றின் உண்மைத் தன்மையை இன்றைய உலக நடப்பு நமக்கு படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிப்புக்கள் இவ்வுலக முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதேநேரம் குறிப்பிட்ட அக்கண்டு பிடிப்புக்களால் தோற்றமெடுக்கும் அபாயகரமான தீமைகளும் அகற்றப்பட வேண்டும்.
அப்படியானால் அதற்கான தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு இஸ்லாம் இருவிதமான அடிப்படைகளைக் கூறுகின்றது.
1- எவ்வகையான கண்டுபிடிப்பாகவிருந்தாலும் நன்மையை விடத் தீமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட விடயத்தில் முயற்சியைக் கைவிடல்.
2- கண்டுபிடித்த விடயத்தை உலக சந்தையில் அறிமுகப்படுத்த முன்பு இலகுவில் மனித அழிவிற்கு காரணமாயிருக்கும் பாதைகளை அடைத்துவிட்டு சந்தைப்படுத்துதல்.

இவ்வகையான எதிர்காலம் குறித்த ஒரு நல்ல முன்னோக்கும் தன்மை வெறுமனே தோன்றுவதில்லை. மாறாக நாம் எதனைச் செய்தாலும் அதில் இறைதிருப்தியை மட்டும் கவணத்தில் கொண்டால் மட்டுமே அது சீராக அமையும். அமைதிக்கு வழி வகுக்கும்.
இந்த சிந்தனைப் புரட்சியின் பக்கவாட்டில் அல்-குர்ஆன் நம்மை அழைக்கின்றது. சிந்தனைக்கு விருந்து படைக்க சின்னச் சின்ன அல்-குர்ஆனிய வரிகள் சில்லரைகளாக சிதரிக்கிடக்கின்றன. நாளைய விஞ்ஞான யுக வியாபாரத்திற்கு அவைதான் இஸ்லாத்தின் மூலதனம்.
விஞ்ஞானம் வளர்ந்து உலகெங்கும் கடைவிரிக்கும் போது நிச்சயம் அல்-குர்ஆன் மட்டுமே அதனுடன் ஈடுகொடுக்கும் வல்லமையுடன் இருப்பதை மீதமிருக்கும் உலகும் கண்டுகொள்ளும். இப்போதே அல்-குர்ஆனை படிக்க ஆரம்பியுங்கள். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் நோக்குங்கள்.
- ஆக்கம்: நிர்வாகி

No comments: